இன்னம்பூரான்
அன்பே, ஆரமுதே, ஆயிரம் அடைமொழி மணிமொழியே, பிரியமானவளே, காதலியே, தலைவியே, செல்லமே, என் கண்ணின் கருமணியே, ஸலபஞ்சிகே! கழுதே !
உன் கண்ணசைவில் மதி மயங்கி, கொலுசு ஒலியில் மனதை பறி கொடுத்து, கூந்தலழகில் லயித்துப்போய்,உன் ஒயில் நடையில் மயங்கிப்போய், நாடி வந்தேன் உன்னை. நீ ஓடிப்போனாய். அது வெறும் பாசாங்கு தான், நான் உன்னை துரத்தி வரவேண்டும், வந்துன் அடிப்பொடியாக நின் காலடியில் தவமிருக்கவேண்டும் என்ற ஆசையை நீ குறிப்பால் உணர்த்தினாய் என்று என் அக்காவும், உன் சிநேகிதியும் ஆன சுந்தரி அடித்துச் சொன்னதை, புரிந்துகொள்ளும் வயது அப்போது எனக்கில்லை. நான் துடித் துடித்துப்போனேன். மனம் நொந்தது. உடல் வெந்தது, அர்ஜுனனைப்போல (‘…என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது. … உடம்பில் எரிச்சலுண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது. -அம்மா! தாயே! பரதேவதையே ! இது மகாகவி பாரதியாரின் மொழியாக்கமாக்கும். ஹுக்கும்!) அவனுக்கு ஒரு விதமான விரக தாபம். எனக்கு உன்னை விழையும் விரகதாபம்.
உன்னை தேடி குழாயடிக்குப்போனேன். பொண்டுகள் கூடும் இடம் அது தானே. என் வயது அப்படி. அறியாப்பருவம். குழாயடிப்பெண்கள் எல்லாருமே என் கண்ணுக்கு அழகாக இருந்தார்கள். எல்லாரையும் வெறித்துப்பார்த்த சேக்காளி மனோஹரன் உன்னையும் விழுங்குவது போல் பார்த்தான். அது எனக்கு பிடிக்கவில்லை. ஒரு தட்டுத் தட்டினேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா? ‘உன் கண்ணுக்கு அவளழகு. என் கண்ணுக்கு இவள் அழகு’ என்றான். வனஜா தான் அவனுடைய ஆள். நான் வனஜாவை பாதாதி கேசம் அளவெடுத்தேன் என்று அவன் கோபப்பட்டான். நீயே சொல். எல்லாப்பெண்களும் அழகாக இருப்பதால் தானே, எங்கள் கண்கள் அலை பாய்ந்து, நொந்து போகின்றன. நான் இப்படி எழுதுவது உனக்குப்பிடிக்காது. இந்த பொம்பளை வர்க்கத்துக்கே பொஸெஷன் ஒரு கவசம், கேடயம், கத்தி, கபடா எல்லாம். பிடிச்சுப்போன ஆம்பிளையை கடிச்சக்கணும். கசக்கணும். அந்தடை, இந்தண்டை போக விடக்கூடாது. நமக்குள் அந்தரங்கமாக இருந்த போது, உன் பாதங்களை நீவி விட்டுக்கொண்டிருந்தேன். அப்போது, நீ முனகிக்கொண்டே சொன்னது என்ன தெரியுமா? : ‘ஆம்பளைக்கு பெண்குட்டி கால்கட்டு இல்லை; அவன் தான் இவளுடைய தொண்டரடிப்பொடி ஆழ்வார்!’.
நான் ஒரு அசடு. எப்போதும் சங்ககாலக்காதலை நுகர்ந்து, நுகர்ந்து, மனஸா, வாசா, அனுபவித்தவன். உனக்கு சங்கத மொழியின் இங்கிதமான அங்கதம் தெரியும். ரகுவம்சத்தில் ஶ்ரீராமனும் சீதையும் ‘தாமங்கம் ஆரோப்ய…’ என்று காளிதாஸன் எழுதிய சிற்றின்ப இலக்கியத்தை நான் அனுபவித்து உரக்கப்படித்த போது என்னை கட்டித்தழுவி என்னனம்மோ செய்தாய். லாகிரி தலைக்கேறி விட்டது. அப்போது செல்லமாக நீ கேட்டாய், ‘இந்த ரஸாபாசம் காளிதாஸன் ஏன் ஸீதாதேவியின் தொடையை ‘ரம்போரு’ (வாழைத்தண்டு) என்று உருவகித்தான் என்று. வாழைத்தண்டு வளைந்து கொடுக்காதே, என்று சொல்லி ‘கல கலவென்று சலங்கொலி போல் சிரித்தாய். இத்தனைக்கும் ‘சுட்றது‘ என்று சொல்லி என் கைக்கு அழுத்தம் கொடுத்தாய். காளிதாஸன் சொன்னது குளிர்ச்சி என்றேன். என் வாயை பொத்தினாய், கைகளிரண்டும் சில்மிஷத்திலிருந்தாலும் ! இத்தனைக்கும் நாம் ஆம்படையான் -பொண்டாட்டி இல்லை என்பதை மறந்தே விட்டோம். அதுவல்லவோ காதல். அளவு கடந்த காதல். வரை மீறிய காதல். பகற்குறியல்லவா. ‘லவ் இன் த ஆஃப்டர்நூன்’ சினிமா பார்த்தோமே, அந்த ஞாபகம் வந்தது. என்னிடம் குறும்பு செய்த நீ, நான் சில்மிஷம் செய்வதாக சொல்லி மோஹன சிரிப்பு ஒன்று உதிர்த்தாய். என்னை கிள்ளி விட்டு, ‘சினிமா பார்க்க விளக்கை அணைக்கிறான் பாருடா. அதை மெச்சிக்கணும்.’ என்றாய். அந்த ‘டா’ மோஹத்திலிருந்து நான் இன்னும் விடுபடவில்லை ! அதை சொல்லத்தான் இந்த கடுதாசி.
கடுதாசி எழுதினால், ‘நலம். நலம் அறிய அவா’ என்று சம்பிரதாயமாக, அப்பாவுக்கும், அம்மாவுக்கும் எழுதுவேனே தவிர, உனக்கு எழுதுவதில், பொற்றாமரை பீடத்திலிருக்கும் தமிழரசியின் தேமதுர சொற்களை உதிர்ப்பேன். கட்டிப்பிடிக்க அதுவே ஏது. கேளடி கண்மணி! தொல்காப்பியத்தில் காம சூத்ரம். “… ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப்
பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர், தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்” . (தொல்.பொருள் அகத்திணையியல் முதல்நூற்பா உரை). அகத்தின் அழகு முகத்திலே என்பேன். முகத்தில் முதலிலே முத்தம், பின்னரே ஒலியும், உணவும் என்க. இது அனுபவத்தின் கூறு. உன் அனுபவத்தைச் சொல்கிறேன். மாட்டிக்கிணையா !
கடுதாசி நீளும். காதல் கடுதாசி சுற்றி சுற்றி அலையும். இங்கும் அங்கும் போகும். தேர் நிலைக்கு வந்தாலும், மார் லப்டப் தான். அதனால் நான் என்ன எழுதினாலும் நீ படிக்கணும். பிறகு, இருவரும் சேர்ந்து படிப்போம். அதற்கு நீ காமத்துப்பால் பதில் எழுத வேணும். எப்படி என்றா கேட்கிறாய்?
“வீழும் இருவருக்கு இனிதே வளிஇடை
போழப் படாஅ முயக்கு”
திருக்குறள் 88: காமத்துப்பால்
திருவள்ளுவரின் வாக்கு: காத்துக்கூட புக இடமெல்லாமல் கட்டித்தழுவி சுகிர்ப்பது தான் இருவருக்கும் இன்பம். சரி தான். இலக்கணம் வகுத்தோனும், அறம் வகுத்தோனும் கலவியின்பம் எடுத்தோதினர். நம் காமமிகுந்த காதலுக்கு இதுவே வேதபாடம்.
இளங்கோவடிகள் மாஜி ராஜகுமாரன். முற்றும் துறந்த சமண முனிவர். சிலப்பதிகாரத்தில் அவருடைய படைப்பாற்றிலில் முங்கி எழுந்து மங்கல வாழ்த்துக்கூறும் ‘…கோதையர் ஏந்துஇள முலையினர்…’ எல்லாரும் அழகு பிம்பங்களே. அதான் குழாயடியில் மருகினேன். மருகி ஜொள்ளு வழிந்தனன். ஆனாலும்,
‘… வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்
தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத்
தீராக் காதலின் திருமுகம் நோக்கிக்
கோவலன் கூறும்ஓர் குறியாக் கட்டுரையை..’
கேட்டு மகிழ்ந்து அருகே வாடியம்மா, மணிமொழி. நாமும் தாரும் மாலையுமாக மயங்கிக் கையற்று…ம்ம்ம்ம்ம்ம்ம்…..
கோவலன் காதல் மொழி தான் பேக் க்ரவுண்ட் ம்யூசிக்:
‘… மாசறு பொன்னே. வலம்புரி முத்தே.
காசறு விரையே. கரும்பே. தேனே.
அரும்பெறல் பாவாய். ஆர்உயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே.
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ்இருங் கூந்தல் தையால் நின்னைஎன்று
உலவாக் கட்டுரை பலபா ராட்டித்
தயங்குஇணர்க் கோதை தன்னொடு தருக்கி
மயங்குஇணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்,
வாரொலி கூந்தலைப் பேர்இயல் கிழத்தி…’
சமண முனிவரின் இந்த ‘யாழிடைப் பிறவா இசை’ கேட்டு நாமும் மோனத்தில் ஆழ்வோமாக.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் மஹாகவி பாரதி உண்மையை பதமறிந்து, பதம் பிரித்துச் சொன்னான்.
பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும்-இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும்-துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ திலலை,மன்மதக்கலை-முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ?
புரிஞ்சதா ? பெண்ணே! மானே ! மரகதமே! மணிமொழியே !
உன்னுடைய
இன்னம்பூரான்
22 02 2014
அடடா! பெண்களை பார்க்கவும் லஜ்ஜைப்படும் நானா இந்த கடுதாசு எழுதினேன் ! ஊஹூம்! கனவில் எழுதின கடிதம். சொப்பனத்தில் கிடைத்த சோபானம்.
மன்னித்து விடு, மணிமொழி. ஆமாம்! நீ அரு.ராமநாதன் எழுதியதை படித்திருக்கிறாயோ! அப்டின்னா, மன்னிக்க ஒன்றும் இல்லை.
No comments:
Post a Comment