சில தேடல்கள் வாழ்நாள் முழுதும் தொடர்கதையாக அமைந்து விடுகின்றன. அவற்றில் சில, கீற்று மின்னலை போல் ஒளி வீசி, குழந்தை இராமன் கையில் சிக்காத நிலாவை போல, மறைந்து விடுகின்றன. அமைச்சர் சுமந்திரன் நீரில் நிழலாக ஆடி வந்த நிலாவை காண்பித்து குழந்தையை சமாதானம் செய்ததாக சொல்வது உண்டு. அது போல, மூன்று கீற்று மின்னல்களை பல வருட இடைவெளிகளில் கண்டு களித்தேன். மன நிறைவு கண்டேன். ஏழு/ எட்டு வயதில் ஒரு கதையை படித்து நான் தேம்பியதாக அப்பா சொல்வார். சுருங்கச்சொல்லின், கதை மாந்தன் மீது பாய்ந்த குற்றச்சாட்டு பொய்யென நிரூபிக்கப்பட்டது, அவனை மாய்த்த பின். அது ஒரு டால்ஸ்டாய் கதையின் தமிழாக்கம். கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு பின் தான் அகஸ்மாத்தாகக் கைக்குக் கிட்டியது. என் கருவூலத்தில் உளது. அத்தனை வருடங்களும் தேடிக்களைத்தேன். கிடைக்கவில்லை. சற்றென்று கீற்று மின்னல்!
பத்து/பனிரெண்டு வயதில் ஒரு திரு.வி.க. நூல் ஒரு பொதுமேடையில் பரிசாகக்கிடைத்தது. ஒரு வரி கூட புரியவில்லை. கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு பின் அதுவும் அகஸ்மாத்தாகக் கைக்குக் கிட்டியது. எல்லாம் அப்போது தான் புரிந்தது. அதன் பின் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் என்னை ஆட்கொள்ளாத நாளில்லை.
தேதி, மாதம், வருடம் எல்லாம் தெளிவாக நினைவில் இருக்கிறது: அக்டோபர் 2, 1948. விடுமுறை நாள். காந்தி ஜயந்தி அல்லவா. மனமும் கனத்த தினம். பாளயங்கோட்டை முனிசிபல் கிளை நூலகம் வாசலில் நின்று கொண்டு ப்ராக் பார்த்துக்கொண்டிருந்தேன். என்னை கவனித்த ஒருவர், ‘என்ன பார்க்கிறாய்? நோஞ்சானாக இருக்கிறாயே.’ என்றார். டைஃபாய்ட் ஜுரத்தில் நான் சாகக்கிடந்ததையும், அன்று வரை தனியாக நடக்க முடியவில்லை என்பதையும் சொன்னேன். தன்னை அந்த நூலக பொறுப்பாளர் என்று சொல்லி. என்னை ஆசுவாசப்படுத்தி, மறு நாள் வரச்சொன்னார். மிகவும் சின்ன நூலகம். அங்கு ‘பார்வைக்கு மட்டும்’ என்று வைக்கப்பட்டிருந்த பல தடிமனான தொகுப்பு நூல்களை வீட்டுக்கு எடுத்துச்செல்ல அனுமதித்தார். சில மாதங்களுக்கு பிறகு இங்கு உள்ளதை எல்லாம் படித்து விட்டாய். மைய நூலகத்திலிருந்து உனக்கு வேண்டியதை கொணர்ந்து தருகிறேன் என்றார். செய்தார். ஆறு வருடங்கள் கடந்தன. ஐ,ஏ.எஸ் நேர்காணல்: பொது அறிவு பற்றி எப்படிப்படித்தாய் என்று கேட்டார்கள். இந்த சுயவரலாற்றை சொல்லி, எனக்கு கல்வி அளித்தவர் ஆர்தர் மீ என்றேன். அது பற்றி சில அளவளாவுதல் எனக்கு சாதகமாக அமைந்தது. 1954 -2014: மறுபடியும் ஒரு மணி விழா: இன்று தான் ஆர்தர் மீ என் கண்ணில் தென் பட்டார்.
பகிர்ந்து கொள்கிறேன்.
வயதானால் கண்ணில் நீர் பெருகலாகாதா என்ன? பெருகும். பெருகுகிறது.
No comments:
Post a Comment