அன்றொரு நாள்: நவம்பர் 16
பாரிசில் க.கொ.சோ
கூடி வாழ்ந்தால் கோடி புண்ணியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்த ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) தோன்றிய தினம், நவம்பர் 16, 1945. 1995லிருந்து, தன் ஜன்மதினத்தை, அந்த உலக சகிப்புத் தன்மை தினமாக கொண்டாடுகிறது. பொறுத்தார் பூமியாள்வார் என்று தெரியாமலா சொன்னார்கள்! ஐ.நா. வின் சிறப்பு அவ்வப்பொழுது மங்கும். அதனுடைய சில அமைப்புக்கள் செலவு செய்வதில் தடபுடல். யுனெஸ்கோ, டபிள்யூ.ஹெச். ஓ. போன்றவையின் பணி போற்றத்தக்கது. யுனெஸ்கோ போன்ற நிறுவனத்தின் அவசியத்தை 1921 லியே உலக நாடுகள் உணர்ந்திருந்தன. ஸெப்டெம்பர் 21, 1921 அன்று எடுத்தத் தீர்மானமும், ஜனவரி 4, 1922 அன்று அமைக்கப்பட்ட சர்வதேசக்குழுவும், ஆகஸ்ட் 9, 1925 ல் பாரிசில் அமைக்கப்பட்ட முன்னோடி நிறுவனமும் அடித்தளம் என்க. இந்த பாழாப்போன யுத்தம் வந்ததில் எல்லாம் தடைபட்டது. அடுத்தபடியாக அட்லாண்டிக் ஒப்பந்தம், இது வளர வழி வகுத்தது. 1942லிருந்து மூன்று வருடங்களுக்கு இணைந்த கல்வி அமைச்சர்களின் மாநாடு ஆக்கப்பூர்வமாக, பல விஷயங்களை விவாதித்து, 1945ம் வருட நவம்பர் மாத முதல் இரு வாரங்களில் லண்டனில் நடந்த 44 நாடுகளின் கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் புனர்ஜன்மம் எடுத்தது எனலாம். புகழ்வாய்ந்த விஞ்ஞானி ஜூலியன் ஹக்ஸ்லி அவர்களின் தலைமையில், டிசெம்பர் 1946லிருந்து தீவிரமாகப் பணி துவக்கமாயிற்று. இந்த நிறுவனம் இனவெறியை எதிர்த்ததால், 1956ல் விலகிக்கொண்ட தென்னாஃப்பிரிக்கா, நெல்ஸன் மண்டேலா அவர்கள் தலைமையில் 1994ல் ‘பூ மணத்துடன் திரும்பி வந்த மச்சானாக’ வந்து சேர்ந்தது. 1968ல் உயிர்க்கோளத் திட்டம் கொணர்ந்ததும், 1989ல் உலகளாவிய வலைத்தளம் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கவை.தற்காலம் 193 நாடுகள் உறுப்பினர்களாகவும், மேலும் ஏழு நாடுகள் கலந்து கொள்ளும் தகுதியுடனும், இந்த நிறுவனத்தின் சேவையில் பங்களிக்கிறனர்.
நமக்கெல்லாருக்கும் மனநிறைவை தரும் செய்தி ஒன்றை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி. தஞ்சை மாவட்டம். ஒரு சிறிய வட்டம். தஞ்சை, தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம். புராதனக்கோயில்கள் மூன்று. அவற்றில் இரண்டில், பெருமானின் திருநாமம் ஒன்றே. அந்த மூன்று கோயில்களும் இந்தியாவின் மரபையும், பண்பையும், கலையார்வத்தையும், உலகமே வியக்கும் அளவில் பிரதிபலிப்பதால், அவற்றை போற்றி பாதுகாப்பதில், யுனெஸ்கோ அதிக கவனம் செலுத்து வருகிறது. அவற்றை இங்கு http://whc.unesco.org/en/list/250 கண்டு மகிழுங்கள்.
இந்தியன் என்று தலை நிமிர்ந்து கொண்டேன். தமிழன் என்று மார்தட்டிக்கொண்டேன். சோழநாட்டு இன்னம்பூரான் என்று காலரை தூக்கி விட்டுக்கொண்டேன்.
இன்னம்பூரான்
16 11 2011
உசாத்துணை:
|
|
No comments:
Post a Comment