Wednesday, September 25, 2013

அண்ணல் காந்தியின் சாயலும், விபரீத விளைவுகளும். [3வது பகுதி]

அண்ணல் காந்தியின் சாயலும், விபரீத விளைவுகளும். [3வது பகுதி]


சில நாட்கள் முன்னால் புதுச்சேரியில் ஒரு திரைப்படம் காண நேர்ந்தது. எனக்கு அது ஒரு அதிர்ச்சி வைத்யமாகத்தான் தென்பட்டது. தாங்கொண்ணா விசனத்துடன் தான் அந்த தலைகீழ் தலைப்பு தன்னை அமைத்துக்கொண்டது. அதை மாற்றியமைத்துவிட்டேன்.
பாரதநாட்டின் தந்தை மஹாத்மா காந்தியின் சாயல் ஒருவருக்கு. அவர் பெயர் ராவுஜி என்போம். அவரொரு அரசு ஊழியர். கருமமே கண் அவருக்கு. மற்ற எல்லாம் அவருக்கு தள்ளுபடி, குடும்பம் உள்பட. தருமத்துக்கும், நியமத்திற்கும் கட்டுப்பட்ட அவரை, காந்திஜியாக நடிக்க அழைக்கிறார், ஒரு சினிமா டைரக்டர். இவர் மறுத்துவிடுகிறார். ஆனால், அவருடைய மகனும், மருமகளும், பேரனின் மேல்படிப்புக்கு சினிமா வருமானம் உதவும் என்று அவரை தொணத்தொணக்கிறார்கள். ராவுஜியும், நம்முடைய ஸ்பெஷல் ட் ராஃபிக் ராமசாமி, ஆம் ஆத்மி அர்விந்த் கெஜ்ரிவால், அவரது குருநாதர், யோகா டீச்சர் ஆகியோர் போல, தகவல் உருவும் சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தட்டிக்கேட்கும் மனப்பான்மையுடையவர். இந்த நடிப்பினால் கிடைத்த கீர்த்தி, ராவுஜியை ஊரறிந்த சில்லறை காந்தியாக ஆக்கி, அவரை பஞ்சாயத்து வீரர் ஆக்குகிறது. அந்த லாகிரியில் அவர் மிதக்கும்போது, ஒரு சில்லறைக்கடைக்காரர், அதிகாரி லைசன்ஸ் தரமறுக்கிறார் என்று அவரிடம் புகாரித்தார். இலை மறைவு காய் மறைவாக, அதிகாரி மீது லஞ்சக்குற்றம் சொல்வது போல சொல்லாமல் சொன்னார். நம் 'அண்ணல்' காந்தியும் விரைந்து சென்று அதிகாரியை தட்டிக்கேட்க, அவர் சமாதானமாக, 'பள்ளிக்கூடம் அருகே புகையிலை விற்பது சட்ட விரோதம்' என்றார். நம்மடவர் பலமாகவே தட்டிக்கேட்கவே, பயந்த அதிகாரி உரிமத்தைக் கொடுத்து விட்டார். இவரை வீட்டில் கொண்டு வந்த கடைக்காரர், கை குவித்து நன்றி கூறி பழங்களும், மிட்டாயும் நிறைந்தக் கூடையை, வலுக்கட்டாயமாகக்கொடுத்தார், ஆவலுடன் பழங்களை அடுக்கி வைத்த மருமகள் கையில் ஒரு மணி பர்ஸ் கிடைத்தது; உள்ளே சலவை நோட்டு ரூபாய் 500/-. புளகாங்கிதம் அடைந்த அவள் புடவை வாங்க ரூபாய் 300 ஐ ரவிக்கைக்குள் நுழைத்துக்கொண்டு, ஹெல்மெட் வாங்கிக்கொள்ள சகதர்மிஷ்டனிடம் ரூபாய் 200 கொடுத்து, பையனிடன் பத்து ரூபாய் கொடுத்தாள், மிட்டாய் வாங்க. அதற்குள் வந்த மிட்டாய்களை அவன் ஸ்வாஹா பண்ணி விட்டான். அவளும் மாமனாருக்கு கும்பகோணம் டிகிரி காஃபி கொடுத்து பலமாகவே அவரை உபசரித்தாள். இரவு வேளையா! அவர் பாயை விரித்துப்படுத்தார். உறக்கம் வருமோ? அவரோ கடமையே கண்ணாயினார் ஆவர். வாய்மையின் சுபுத்திரன். அந்த வீட்டில் அசுப ஜெனனம் மூன்று, அன்று ~ 
லஞ்சமும், வம்ச பேராசையும், நாட்டின் சீரழிவும். 
அமுதத்தை ஒரு துளி நச்சு கெடுப்பதைப் போல, ராவுஜியின் குடும்பம் பணத்தாசை கண்டது. அந்த ரூபாய் தாளிலிருந்து அண்ணல் காந்தி புன்னகைத்தார், ஆண்டவனைப்போல. இந்தியாவில் லஞ்சத்தின், வம்ச பேராசையின், நாட்டின் சீரழிவின் ஊற்று, இது தான். ராவுஜி, நல்ல மனிதராகையால், அவ்வப்பொழுது போலி நடிப்பில் ஈடுபடாமல், முரண்டு பிடிக்கிறார். குடும்பமோ செழிப்புடன் இருப்பதால், வீடு கட்டுவது போன்ற மேலும் பல வம்சபேராசையில் மூழ்கிவிட்டதால், அவரை படாதபாடு படுத்துகிறார்கள். சவுக்கடி சாந்தாவாகவே மாறிவிட்டாள், சமத்து மருமகள். வளர்த்த கடாவோ மார்பில் பாய்கிறது. இது தான் மக்களின் சீரழிவுக்கு அடிக்கல்.
படிப்பினை: 
சராசரி மனிதர்கள் தான் இந்தியாவில் லஞ்சத்தின், வம்ச பேராசையின், நாட்டின் சீரழிவின் காரணகர்த்தாக்கள். அரசியல் வாதிகள் அல்ல. சேவல் கோழியை வளர்ப்பது போல், கிஸ்தியை குறைக்க, பட்டா கொடுக்க, பத்திரம் பதிவு செய்ய, ஓட்டுனர் உரிமம் பெற, ரயில் டிக்கெட் வாங்க, சினிமா டிக்கெட்டை ப்ளேக்கில் வாங்க, மாமூல் கொடுத்துக் கெடுத்து, லஞ்சலாவண்ய நடைமுறையை அமல்படுத்தியது நாம் தான். இது முதல் கட்டம். அதன் பைசாச வளர்ச்சியில், விரல் சூப்பியவர்கள், பின்னர் புறங்கை நக்கினர்; பின்னர், கலசத்திலிருந்து தேன் குடித்தனர். பின்னர் தேன்கூடுகளில் தீ மூட்டினர். லஞ்சலாவண்ய நடைமுறையில் குறை காண்பவர்கள் மறைந்து போயினர். இப்போது சொல்லுங்கள், அண்ணல் காந்தியை கொன்றது யார் என்று.
திரைப்படத்தின் பெயர் கூர்மாவதாரம்.எடுத்துவர் பிரபல கன்னடடைரக்டர் கிரீஷ் கஸரவல்லி.
இன்னம்பூரான்
26 09 2013

No comments:

Post a Comment