அன்றொரு நாள்: அக்டோபர் 8.2
அமர காவியங்கள் ஒரு வரியிலும் இருக்கலாம்.
‘காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி! கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி!’
பிரபல சினிமா டைரக்டர் சி.வி. ஶ்ரீதர் மாதக்கணக்காக மனதில் சுமந்த ‘கல்யாண பரிசு’ கதையை சொல்கிறார். ஒரே வரியில் அதை முழுதும் குறிப்பால் உணர்த்திவிட்டார், கவிஞர். அதுவே சினிமாவின் ஊடுருவும் பாடலாயிற்று. முதலில் வந்தது; நடுவில் வந்தது; முடிவில் வந்தது. இன்றும் நினைவை விட்டு அகலவில்லை. கவிஞர் தான் அல்பாயுசில் போய்விட்டார். ஏதோ ஆபரேஷனாம். ஆள் காலி, 29 வயதில், அக்டோபர் 8, 1959. சார்! ஜீனியஸ்களுக்கு காலம் இல்லை. பாருங்களேன். குலை பட்டினியாக இருந்த போது அவர் இயற்றிய பாட்டு, ‘ஆரவல்லி’ சினிமாவில்:
'சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!'
‘டவுட் தனபாலுவுக்கு’ ஒரு அவுட்டுச்சிரிப்பு!
'ஆறறிவில் ஓரறிவு அவுட்டு- சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு - இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு!'
~ ‘நான் வளர்த்த தங்கை’
'பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே... ஹா... ஹா...
பசியும், சுண்டல் ருசியும் போனால்
பக்தியில்லை பஜனையில்லை'
ஆஷாடபூதிகள் மேல் ஒரு எள்ளல்:
~'நான் வளர்த்த தங்கை'
புதுமைப்பித்தன் கத்தற மாதிரி இல்லெ?
'சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
என்ன பண்ணி கிழிச்சீங்க!'
~ பாண்டித்தேவன்
முண்டாசுக்கவி எதிரொலி கொடுக்கிறானோ?
'வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்...
எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறு போடுறான்.
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன்
சோறு போடுறான் அவன்
~ 'கண்திறந்தது'
'வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடு கட்டும் தொழிலாளி!
ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும் தொழிலாளி!
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு
காரு ஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக் கதிரி விவரம் கண்ட
சர்.சி.வி.ராமனும் தொழிலாளி
எதற்கும் உழைப்பு தேவை!
~'சங்கிலித் தேவன்'
'நாடு முன்னேற பலர்
நல்ல தொண்டு செய்வதுண்டு
நல்லதை கெடுக்கச் சிலர்
நாச வேலையும் செய்வதுண்டு
ஓடெடுத்தாலும் சிலர்
ஒற்றுமையாய் இருப்பதில்லை - இந்த
உண்மையை தெரிந்தும், நீ
ஒருவரையும் வெறுப்பதில்லை!'
~‘பாண்டித்தேவன்'
'கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி
எடுக்கிற அவசியம் இருக்காது.
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது.
ஒதுக்கிற வேலையும் இருக்காது.
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
~ 'திருடாதே'
இவை உசாத்துணையில் சின்னராசு என்பவர் தேர்ந்து எடுத்தவை.
இன்னம்பூரான்
08 09 2011
̀ உசாத்துணை:
http://www.yarl.com/forum/index.php?showtopic=6598
பகிர்வுக்கு நன்றி திரு இ.சார்.
இரை போடும் மனிதர்க்கே இரையாகும் வெள்ளாடே! போன்ற வரிகள் உணர்த்துவது எவ்வளவோ.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
No comments:
Post a Comment