அம்மா சொல்படி ராஜூ:(சிறகுகள் முளைக்க ...): பகுதி 25: 9 11 2009
(அடுத்த படியாக...)
(...ரொம்ப நாள் புதுக்கோட்டையில் இருந்தோம்...) ...அப்போது என் பென்ணுக்கோ, பிள்ளைக்கோ கல்யாணம் ஆகவில்லை. ஆனால், என் புருஷனை தர்மபுரியிலிருந்து திருச்சி மாத்தினார்கள். அவர் உடனே என் பிள்ளை இரண்டாவது பிள்ளையை (ரகு) தானே வைத்துக்கொண்டு பி.எஸ்.சியில் சேர்த்து விட்டார். ஜெஞ்ஜோஸஃப் காலேஜில் அவன் படித்தான். அவன் செலவுக்கு என் புருஷன் பாத்துக்கொண்டார். அதனால் எங்களுக்கு பணம் அனுப்பமாட்டார். 93 நாங்கள் வீட்டு வாடகையை வைத்துக்கொண்டு தான் குடும்பம் நடத்தினோம். ஆனால் பெரிய பையன் மெட்றாஸில் விவேகானந்தா காலேஜில் படித்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நாள் அவன் நாத்தனார் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதே சமயத்தில் எனக்கு ஒரு சோதனை. 8வது உண்டாகியிருக்கிறேன். அப்போது தான் என் மாமனார் போய் ஒரு வருஷம் ஆகவில்லை. அதற்குள் எனக்கு பெண் பிறந்து விட்டாள். அதற்குள் என் அம்மாவும் போய் விட்டாள். 94 அப்போது என் தம்பிக்கு 5வது பெண் பிறந்தது. அதுவும் என் அப்பா தான் வைத்துக் கொண்டார். ஆனால் என் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டார். அப்போது என் புருஷன் சேலத்தில் இருந்தார். ஒரு வருஷம் ஆனதும் என் புருஷனை திருச்சிக்கு மாத்தி விட்டார் (கள்). அதனால் எங்களுக்கு கொஞ்சம் செளகரியமாக இருந்தது.
இப்படியிருக்கும்போது என் அப்பாவிற்கு கொஞ்சம் பணம் கஷ்டமாகயிருந்தது. ஏனென்றால், அந்த சமயம் நாதன் கம்பெனியை வித்து விட்டார். அதனால் கஷ்டம் வந்து விட்டது? அதற்காக, என் பிள்ளை ஸ்ரீகாரத்தில் ஏதோ கொஞ்சம் நிலம் இருந்தது. அதை என் அப்பா விற்று என் கடனைக்கொடுத்தால் நல்லது என்று சொன்னதின் பேரில் என் புருஷன் அந்த நிலத்தை விற்றுக் கொடுத்தார். ஆனால் என் அப்பாவிற்கு கொடுக்க வேண்டியது 4000 ரூபாய். அதைக் கொடுத்து விட்டோம். அந்த நிலம் 5000 ரூபாய்க்கு போயிற்று. அதனால் என் அப்பாவிற்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு, பாக்கி 1000 ரூபாய் இருந்தது. அது எங்களிடம் கொடுத்தால் செலவு ஆகி விடும் என்று, என் அப்பாவிற்குத் தெரிந்தவர் புதுக்கோட்டையில் திவான் ஆக இருந்தார். ஆனால் அவர் இல்லை. அதனால் அவர் பிள்ளை கோபாலாச்சாரி. அவரிடம் கொடுத்தார். 95 அதுவும் என் பெரிய பிள்ளை படிப்புக்கு உதவியாக இருந்தது. அதனால் என் புருஷன் ஸ்ரீகாரம் போன பிள்ளையை தானே படிக்க வைத்துக் கொண்டார். இப்படியிருக்கும் (போது) என் பெரிய பெண்ணுடைய ஜாதகத்தை என் அப்பா கேட்டார். நான் நல்ல வரன் பார்க்கிறேன் என்று பார்த்துக் கொண்டிருந்தார். என் புருஷன் திருச்சியில் இருந்தபடி அவரும் பெண்ணுக்கு ஜாதகம் பார்த்துக் கொண்டிருந்தார். இப்படியே பெண்ணைப் பார்க்க நாலு ஐந்து பேர் பார்த்துப் போய் ஒன்றும் ஒத்து வரவில்லை. ஆனால் இந்த சமயம் என் பெரிய பிள்ளை மெட்றாசில் படிக்கிறான். இப்போது எனக்கு எட்டாவது பெண் பிறந்து 18வது நாள் என் பெரிய பிள்ளைக்கு மெட்றாஸில் ஏ.ஜீ ஆஃபீசில் வேலை கிடைத்தது. பிறகு எனக்கு குழந்தை பிற(ந்)து மூன்றாவது மாஸம்?
என் பெரிய பெண்ணை பெண் பார்க்க பொன்மலை யிலிருந்து வருவதாக என் புருஷன் திருச்சியிலிருந்து வந்து சொன்னார். பெண்ணை எங்கு வைத்துப் பார்ப்பது என்று யோஜனையாக இருந்தது. பிறகு என் புருஷனுடன் ஒரு ஐய்யர் சந்திரமெளலி என் புருஷன் ஆஃபீஸ் சொட்ரியாக (செக்ரெட்டிரி) இருக்கிறார். அவர் தான் என் வீட்டில் உங்கள் பெண்ணை அழைத்து வாருங்கள். அவர்கள் பொன்மலையிருந்து அவர்கள் என் வீட்டிற்கு வரும்படி செய்வோம். பிறகு அவர்கள் பெண் பார்க்கட்டும். பெண் பார்த்த பிறகு அவர்களோடு நீங்களும் நானும் கல்யாண விஷயத்தை பேசுவோம் (என்றார்). அவர் சொன்னபடியே புதுக்கோட்டையிலிருந்து பெண்ணை அழைத்துக்கொண்டு சந்திரமெளலி வீட்டிற்கு என் புருஷன் அழைத்துப் போனார். அங்கு நல்லபடியாக பொன்மலையிலிருந்து பிள்ளை, பிள்ளையுடைய அப்பா, அம்மா எல்லாரும் வந்து பார்த்து விட்டுப் போனார்கள். உடனே என் பெண்ணை என் புருஷன் புதுக்கோட்டை கொண்டு வந்து விட்டார். மறுபடியும் சந்திரமெளலியும் என் புருஷனும் பொன்மலை போய் நிச்சயம் செய்து விட்டார்.
93. அவரும் அரைப்பட்டினி: ‘படிப்பு முக்யம்’.
94. மகராசி போய் சேர்ந்தாள். நான் ராஜாஸ் காலேஜ் சேர்ந்தவுடன் பேரன் காலேஜ் போகும் அழகைப் பார்க்க வந்தாள். நானோ காமராசர் யூனிஃபார்ம், சுயசம்பாத்தியம் வரையில்! குழாய் (ட்ரெளஸர்) போட்டுக்க மாட்டானோ என்று அங்களாய்த்தாளாம். அம்மா அவனை மாத்தமுடியாது என்று சொல்லிவிட்டாளாம். பிற்காலம், நான் கோட்டும், ஸூட்டும், பூட்ஸுமாக உலா வந்ததைப் பார்த்திருந்தால், மாய்ந்து போயிருப்பாள் ஆனந்தத்தில்! அன்பு, அன்பு என்கிறீர்களே, அதன் ஊற்று தான் இது.
ஒரு உரையாடல்:
தாத்தா ஆஃபீஸ் கிளம்பும் போது பீரோவைத் திறப்பார். பாட்டி ‘பிலு பிலு’ன்னு வந்து நிற்பாள், தோரணையோடு. ‘ருக்கு பிள்ளை இன்னிக்கு ஊருக்குப் போறான்’ ‘போகட்டும்’. ‘டேய்! இந்தா. (சில குடை மார்க் ஜப்பான் பென்சில் வரும்.) எல்லாருக்கும் கொடுக்கணும்’ ‘தாத்தா! மொஹைதீன் ஒன்னு கேட்டான்’. மேலும் ஒன்று. ‘அப்டி ஒரு ஃப்ரெண்டா!’ (அவனிடன் பண்டமாற்று செய்து உறங்கும் பம்பரம் வாங்கிக்கொண்டது தனிக்கதை.) ‘தேங்காய் பர்ஃபி பண்ணனும்; ஆறு தேங்காய் வாங்கணும்.’ ‘ஆராமுதுட்ட கொடுத்து அனுப்பறேன்’ ‘அவன் கண்டான்! மாங்காய்ன்னா வாங்கிண்டு வருவான்’ [ஆராமுது மாமா ‘உர்ர்’ என்று நிற்பார்.] வாய் கூசாமல் நாலு ரூபாய் கேப்பாள். அவரும் ஒரு ரூபாய் கொடுப்பார்.
[aside] ‘ இந்த பாவி பிராமணன் காசு காசு ன்னு அலயறது,’ முணுமுணுப்பு. மேலும் ஒரு எட்டணா பெயரும். தாத்தா புறப்பாடு. ‘இந்தா! சினிமாக்கு போய்ட்டு வா’ ‘பாட்டி! தாத்தா வாசல்லே பஞ்சாயத்து பண்ணிண்டிருப்பாளே?’
[ ரோட்டோரத்திலே நார் கட்டில்லில் தாத்தா படுத்திண்டிருப்பா. ஊர்க்காரா பிரச்னைகள் தீர்க்கப்படும்.] [சினிமால்லேர்ந்து வந்தாச்சு.] ‘எங்கடா போயிருந்தே? வேளாவேளைக்கு வரவேண்டாம்.’ பாட்டி ஓரமா, என் காவல் தெய்வமா நின்னுண்டுருப்பா. ‘ குழந்தை அலஞ்சுட்டு வரது. கேள்வியைப்பாரு, கேள்வியை. நீ சாப்ட வாடா’ [ஒரு பாடாக, அன்றிரவு கழிந்தது; மறு நாள் விஷமம் திட்டமிடவேண்டாமா?]
95. தாத்தா ஃபைனான்சியல் எக்ஸ்பெர்ட்..
(சிறகுகள் முளைக்க ...)
--
இன்னம்பூரான்
Reply | Reply to all | Forward |
show details 11/18/09 |
நல்லா இருக்கு விஷமம், மிச்சம் நாளைக்கு. ஓவர்டைம் போட்டு இல்லை படிக்க வேண்டி இருக்கு??
No comments:
Post a Comment