Thursday, December 23, 2010

அம்மா சொல்படி ராஜூ:(அடுத்த படியாக...): பகுதி 23: 9 11 2009

அம்மா சொல்படி ராஜூ:(அடுத்த படியாக...): பகுதி 23: 9 11 2009

(ஒரு சகாப்தம் முடிய...)

(காலை 6 மணி அளவில் என் மாமனார் இறந்து விட்டார்...) ... நான் என்ன செய்யமுடியும். பெரிய பெண்ணும் ஆத்துக்கு வரக்கூடாது. என்ன செய்வது என்று தெரியவில்லை. சின்ன வீட்டில் குடியிருந்த பையனிடம் நான் ரூபாயைக் கொடுத்து மெட்றாஸ், கும்பகோணம், புனா, காரைக்குடி எல்லா இடத்திற்கும் தந்தி கொடுக்கச் சொன்னேன். பிறகு, தர்மபுரிக்கும் தந்தி கொடுத்தாச்சு. ஆனால் சமயத்திற்கு ஒருவரும் வர முடியவில்லை. ஆனால், காரைக்குடியிலிருந்து என் அப்பா வந்து விட்டார். 91 அவர் என்னம்மா செய்தே என்று கேட்டார். அதற்கு நான் கொடுக்க வேண்டியவர்களுக்கு தந்தி கொடுத்துவிட்டேன் என்று சொன்னேன். [ஆனால் என்னுடைய அப்பா உடனே வந்து விட்டார். என்ன செய்தாய் என்று கேட்டார். வேண்டியவர்களுக்குத் தந்தி கொடுத்தேன் என்று சொன்னேன்.] சரி என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு செய்யவேண்டியதை செய்வோம் என்று உடனே பணம் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார். உடனே என் மாமனாரை அடக்கம் செய்யும் இடத்திற்கு போய் தானே ஏற்பாடுகளை செய்து விட்டார். பிறகு வாத்தியார் தில்லைஸ்தான வாத்தியாரைக் கூப்பிட்டு ஆள் அனுப்பி வைத்தோம். அவரும் வந்து விட்டார். உடனே என் மாமனார் காரியத்தை என் அப்பா இருந்து நடத்தினார்? 92 பெரிய வீட்டில் வக்கீல் சுந்தரேசேய்யர் என்று ஒருவர் இருந்தார். அவரும் வாடகைக்கு ஆளை வைத்து என் மாமனாரை அடக்கம் செய்கிற இடத்திற்குக் கொண்டு போனார்கள். இதில் ஒரு விஷயம். என் புருஷன் உடனே வரமுடியவில்லை. மற்றவர்களும் வர வில்லை. மாமனாருக்குக் கருமம் செய்வது யார் என்று தெரியவில்லை எனக்கு கவலையாகப் போய்விட்டது. உடனே வாத்தியார் சொன்னார். புள்ளையுடைய புள்ளை செய்யலாம் என்று சொன்னார். உடனே என் அப்பா சொன்னார். என் ஏழாவது பிள்ளைக்கு நாலு வயது இருக்கும். அந்த பிள்ளையிடம் புல்லைக்கொடுத்து வாங்கி யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொன்னார். அதனால் என் அக்காவுடைய மைத்துனன் மாப்பிள்ளையை எங்களுக்கு தெரியும். அவருக்கு சொல்லி அனுப்பினோம். அவர் உடனே வந்தார். இது மாதுரி சமாச்சாரத்தைச் சொன்னோம். அவர் உடனே நான் செய்கிறேன். என் அப்பா மாதுரி தான் என்று சொல்லிவிட்டு அவரே செய்தார். ரொம்ப நல்ல மனுஷன். அவர் செய்து விட்டு வீட்டிற்குப் போய் எங்களுக்குச் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு நாங்கள் வீடு எல்லாம் அலம்பி சுத்தம் செய்து கொண்டிருக்கும் சமயத்தில், சாயந்திரம் கும்பகோனம் என் பெரிய நாத்தனார் அவர் புருஷன் எல்லாரும் வந்து விட்டார்கள். உடனே மத்றாஸ்ஸிலிருந்து மற்ற இரண்டு நாத்தனாரும் வந்து விட்டார்கள். அவர்கள் என்னை ஏன் நாங்கள் வரும் வரையில் அப்பாவை அடக்கம் பண்ணாமல் வைக்கப்படாதா என்று கோபமாகப் பேசினார்கள். அதற்கு நான் என்ன சொன்னேன் என்றால் அவரை வைக்கமுடியாது. வயறு எல்லாம் வீங்கியிருப்பதால் வைக்கக்கூடாது என்று வாத்தியார் சொல்லிவிட்டார். அதனால் தான் வைக்கவில்லை. தவிற, வி(யா)ழக்கிழமை போனதால். வாத்தியார் சொன்னதால் எல்லாம் நடந்து விட்டது. இனிமேல் உங்கள் முத்தா (அண்ணன்) வந்த பிறகு தான் எல்லாம் நடக்கவேண்டும். என்ன செய்வது. நானே தனியாக குடும்பம் நடத்துவதால் என்னால் என்ன செய்யமுடியும். காலையில் தான் என் அப்பா வந்து எல்லாக்காரியத்தையும் முடித்து விட்டுப் போனார். அவர் இருந்ததால் எனக்கு நல்லதாகப்போச்சு என்று நான் சொல்லிவிட்டேன். பிறகு வந்தவர்கள் எல்லாரும் பத்து நாள் இருந்தார்கள். அதற்குள் என் புருஷனை சேலத்திற்கு பக்கத்தில் தர்மபுரி என்ற ஊரில் மாத்தியிருந்தார்கள் அதனால் அவர் அப்பா இறந்தவுடனே வரமுடியவில்லை. வருவதற்கு இரண்டு நாள் ஆகிவிட்டது. பிறகு அவர் வந்த உடனே காரியங்கள் நடந்தது. ஆனால் நானும் உடனே (?) என் மைத்துனர் பூனாவில் இருந்தார். அவருக்கு தந்தி கொடுத்துவிட்டேன். அவரும் வந்து விட்டார். எல்லாம் நல்லபடியாக நடந்தது. அப்போது என் (அப்பா) பெரியவராக இருந்து நடத்தி வைத்தார். எல்லாம் நடந்த பிறகு எல்லாரும் அவரவர் ஊருக்குப் போய் விட்டார்கள். பிறகு நானும் என் குழந்தைகளும் ரொம்ப நாள் புதுக்கோட்டையில் இருந்தோம்.

91. ஆபத்பாந்தவன். காரைக்குடியில், இத்தகைய நேரங்களில் வருபவர்களுக்காக, பணமுடிச்சு வைத்திருப்பார். அவர் பீரோவைத் திறக்க, என்னை மட்டும் தான் அனுமத்திப்பார்.

92. கேள்விக்குறிக்கு பொருள் இல்லை.

(அடுத்த படியாக...)


--
இன்னம்பூரான்

No comments:

Post a Comment