Saturday, April 26, 2014

தமிழர் யார்


தமிழர் யார்?

தமிழர் என்றால் யார். அவர் கொண்டிருந்த பண்பு நலன்கள் என்பன பற்றி முதலில் ஒரு டெஃபினிஷன் தந்து அதனோடு இத்தகைய கேள்வியை வைத்தால் இந்த தேடல் சரியான வகையில் செல்லும் என்பது என் எண்ணம்.
~ மின் தமிழ் நண்பர்

~ இது பற்றி துறையூர் சொற்பொழிவில்,'தமிழர் யார்?' என்ற தலைப்பில் திரு.விக. சில கருத்துக்களை கூறினார். அவையாவன:
1. தமிழ் தொன்மை வாய்த்தது. தமிழரின் வாய்மையை ஒரு எல்லைக்குள் அடக்குவது இயலாத காரியம்;
2. நந்தமிழின் மெல்லோசை வெளிப்படை. மொழியோசையின் வளர்ச்சியிம் பால பருவமிது; தமிழ்மொழியின் தொன்மைக்கு அதன் இயலும், இதுவும் சான்றுகள்;
3. மூவாயிரம் ஆண்டுகளுக்கு தொன்மையான தொல்காப்பியம் பல திறக்கருத்துக்களை உள்ளடக்கியது. அது வேதகாலத்துக்கும் முந்தியது என்று நச்சினார்க்கினியாரின் கூற்று. அது, தனக்கும் முந்திய படைப்புகளை குறிப்பிடுகிறது;
4. தொல்காப்பியத்தின் மொழிநடையும், உள்ளுறையும், ஒலிநுட்பம், ஒலி திரிந்து எழுத்தாதல், அளபடை, திணை, ஆகுபெயர், அன்மொழித்தொகை, அகம், புறம், அவற்றுக்குள்ள தொடர்பு, அரசு, போர்முறை, காதல் நுட்பம், உள் நிகழ்ச்சி, மெய்ப்பாடு, இறைச்சி, கூர்தல் முதலியவை கையாளும் திறன் வியக்கத்தக்கது. அது தொன்மையை சுட்டுகிறது; தமிழன் கை குறி, ஒலிக்குறி முதலியவற்றை புரிந்து கொண்டு, எழுத்து, சொல், பொருள் என்று மொழியை செப்பனிட்டு வளம் படுத்தியதற்கு ஆயிரம் ஆண்டுகள் பிடித்திருக்கலாம். தமிழனின் தொன்மைக்கு வேறு விரிவுரை தேவையில்லை;
5. தூய தமிழ் என்பது ஒரு மாயை (அய்யா மறைமலை அடிகளாரின் மாணாக்கர்.). இனக்கலப்பு என்பது இயற்கை வரலாறு குடி புகந்து நிலைத்தவர்களை தமிழினத்தில் இணைத்துக்கொண்டதும், அவர்கள் இணைந்து கொண்டதையும் கூறுகிறது. எனவே,அவர்களின் பழக்க வழக்கங்களையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது. உலகில் எவ்வினமும் கலப்பற்றதாக இல்லை என்பது கருதற்பாலது. கலப்பால் வளர்ச்சியே உண்டு;
6. தமிழை தாய்மொழியாக கொண்டவர்களும், குடி புகந்து நிலைத்தவர்களும், அவர்களின் இனம், மதம், யாதாயினும், தமிழரே. தமிழ்நாட்டாரின் சமய கொள்கைகளின் வேற்றுமை இதற்கு ஒரு பொருட்டல்ல;
7. ஆரியர்/தமிழர் பிரிவு விதண்டாவாதம். தூய ஆரியராதல், தூய தமிழாரதல் தற்காலம் இல்லை என்று வற்புறுத்தும் அய்யா அவர்கள் இந்த பிரிவினை வாதத்தையும், அதன் பகைமையையும் கண்டிக்கிறார்கள்;
8. பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் பூசல், வடமொழி தென்மொழி பிணக்கு எல்லாம் திருவிளையாடல். வடமொழி பாரத நாட்டுக்கு பொது மொழி; தமிழ் நாட்டு பார்ப்பனர்களின் தமிழ் தொண்டு போற்றத்தக்கது;
9. தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும், தமிழராகப்பார்க்கும் நெஞ்சம் அரும்பி மலர்வதாக, என்று அய்யா அவர்கள் 1932 ல் அறிவுரை அளித்தார். எண்பது வருடங்கள் கழித்து விடை தேடிக்கொண்டிருக்கிறோம்!
அன்புடன்,
இன்னம்பூரான்
26 04 2014
Image Credit: http://nerudal.com/images/2009/10/worldtamilsangam.JPG

No comments:

Post a Comment