Google+ Followers

Sunday, April 20, 2014

வோட்டு சுரைக்காய்! : வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 12

வோட்டு சுரைக்காய்! : வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 12இன்னம்பூரான்
20/21 4 2014

‘வோட்டு சுரைக்காய் சபைக்கு உதவாது’ என்று நான் முரண்கருத்து ஒன்றை முன்வைக்கும்போது, தந்தி டி.வி.யில் திரு. ஞானி அவர்கள் ‘காசு வாங்குவது குறைந்து வருவதற்கு தேர்தல் கமிஷனின் கறார் தான்’ என்று சொல்கிறார். உண்மை தான்.

தற்பொழுது தொலைக்காட்சியில் எலெக்க்ஷன் நீக்கமற நிறைந்து இருப்பதால், அது ஒரு நிழல் கடவுளாக நடமாடுகிறது. சற்று முன், தலைமுறை தலைமுறையாக, அன்றாட வாழ்க்கை போராட்டத்தில் உழலும் சில பெண்களின் பேட்டி ஒன்றை கண்டு விட்டு, அவர்கள் காசு வாங்கினால், அதை புதுமை பித்தனின் ‘அம்மாளு’ வின் பிரதிபிம்பமாகக் காண்கிறேன். அவர்களை குறை காண தயங்குகிறேன். இது முரண்கருத்து என்பதில் ஐயமில்லை. ஆனாலும் எத்தனை நாட்கள் தான் சால்ஜாப்புக்களுக்கும், ‘பொலிடிக்கலி கரெக்ட்’ தர்ம அடிகளை பொறுத்துக்கொள்ள முடியும்? சென்னை வந்ததற்கு, எல்லா வேடிக்கைக்களையும், கேளிக்கைக்களையும், பாமர தமிழனின் கணிப்புக்களையும் புரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆதங்கமும் ஒன்று.

நான் எழுப்பும் சில வினாக்களுக்கு, உங்கள் மனசாக்ஷியை கலந்து பதில் அளியுங்கள்.

  1. அரசு ஆதரிக்கும் சாராயம், நம் கண்முன், சில தலைமுறைகளாக, பெண்களை கொடுமை படுத்துகிறது. ராஜாஜி அவர்களின் கெஞ்சலை புறக்கணித்ததின் விளைவு, ஏழை வயிற்றில் தீ. என்ன தைரியத்தில் அவர்களின் வாக்குக் கேட்கிறார்கள்? அதான் காசு நடமாட்டம். மாற்றுப்புடவை வாங்கி மானம் காத்துக்கொள்ளலாம். குழந்தைக்கு ஊதல் வாங்கிக்கொடுக்கலாம். குடிகார புருஷனுக்கு பணியாரம் சுடலாம்.

  1. பொருளியல் மான்யத்தை ஒதுக்கவில்லை. ஆனால் எல்லா கட்சிகளும் மான்யத்தை துஷ்பிரயோகம் செய்தன. துணை போயின. 1947லிருந்து இன்று வரை மான்ய கபளீகரம் பற்றி யாரும் குரல் எழுப்பவில்லை. எல்லாரும் உள்கை. தணிக்கை ரிப்போர்ட்கள் அலக்ஷ்யம் செய்யப்பட்டன. அந்த தவறுக்கு, பொது மக்கள் துணை. மான்யங்கள் ஏழைகளை அணுகவில்லை. ரேஷன் ஒரு பணங்காய்ச்சி மரம். 
  2. இலவசங்கள் லஞ்சமே. தொலைக்காட்சிப்பெட்டியும், மடிக்கணினியும், தங்கத்தாலியும், தெருவில் வாழும் பெண்களுக்கு ஒரு வேளை சோறு போடாது. எனினும், அம்மாக்கடை இட்லியை என்னால் குறை சொல்லமுடியவில்லை. உயிர் தக்கவைத்துக்கொள்ளும் பிரச்னைக்கு அது ஒரு ஆறுதல். அதை உண்டு பார்க்க எனக்கு ஆசை உண்டு. எனக்கு அதற்கான ஏழ்மை தகுதி இல்லாததால், ஆசையை அடக்கி வைத்துள்ளேன். திருமங்கல அமங்கலத்தை விட அது யோக்யமானது.
  3. என் கண் முன்னால் ஒரு பெண் அழுகிறாள். இலவசக்கல்வி தான் அவரை உயிர் வாழ வைக்கிறதாம். அந்த கல்வியை, பேருக்கு ஆதரித்து, நடைமுறையில் மறுத்து வரும் ஆட்சிகள் எல்லாவற்றையும், அரசியல் சாஸனம் உள்பட, கல்வித்தந்தைகள் உள்பட, கண்டு என் மனம் பதைபதைக்கிறது.
  4. விபத்தில் யாராவது அடிப்பட்டால்/செத்தால், அரசு கொடையளிக்கிறது, வரிப்பணத்திலிருந்து. இந்த ‘கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதை’ கட்டுப்படுத்தி, விபத்துக்குக்காரணமானவர்களின் சொத்தை ஜப்தி செய்து, டார்ட் சட்டப்படி கொடுக்காமல் இருப்பது, மான்ய துஷ்பிரயோகமே. விபத்துக்குக்காரணமானவர்களுக்கு அளித்த மான்யம் என்பதால்.
  5. வோட்டுக்கு துட்டு கொடுப்பதை எல்லாக்கட்சிகளும் செய்வதாகத்தான், தென்படுகிறது. அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் மக்களுக்கு பிரதிகூலமாகத்தான் செயல்படுவார்கள்; அது தான் நமது வரலாறு என்பதில் என்ன ஐயம் இருக்கிறது?
  6. ஈற்றடி: பிரதிகூலமாக செயல்படும் மக்கள் துரோகிகளை இனம் கண்டு, அவர்களை வீட்டுக்கு அனுப்பும் சக்தி மக்களுக்கு வரும் வரை, ஜனநாயகம் என்ற அமிர்தத்தில், பிரதிகூலம் என்ற சொட்டு நச்சு உளது.

என்னுடைய வியாகூலம் கிஞ்சித்தேனும் குறைய வில்லை.