Google+ Followers

Monday, May 13, 2013

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 9:1
அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 9:1
Innamburan Innamburan Fri, Sep 9, 2011 at 4:54 AM

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 9:1

“ ...தீர்க்கதரிசிகளின், முன்னோரின் ஞானத்தை நாடும் அறிவாளி, அன்னாரின் மேற்கோள்களையும், கதைகளையும் நன்கு ஆராய்ந்து அவற்றின் உட்பொருள் காண விழைவான். மர்மங்களை தேடுவான். நுட்பங்களை அனுபவிப்பான். தரணி முழுதும் அலைந்து, நல்லதும், கெட்டதும் காண்பான்...”
 ~ விவிலியம்
 ஜெனிவா நகரத்தில் CERN என்ற விஞ்ஞான மையம் இருக்கிறது. ஜூன் 18, 2004 அன்று அங்கு, இந்திய அரசு பரிசளித்த பொன்னம்பலவாணன் நடராஜரின் சிலை நிறுவப்பட்டது. அணுவின் உள்ள நுன்னணுக்களின் நடனத்திற்கு, சிவபெருமானின் ஆனந்தத்தாண்டவத்தின் ஆசி கூற. 
ஆசி & விளக்கம்: “இத்தனை தெளிவாக இறையாண்மையை சித்திரித்த சமயத்தையோ, நுண்கலையையோ, யாம் கண்டதில்லை.” ~ ஆனந்த குமாரஸ்வாமி
வம்சபரம்பரை மண்ணின் வாசனையை போல. இன்றைய தலைமாந்தனின் தாத்தா அந்தக்காலத்திலேயே அரசியல் பிரமுகர். கொழும்பு நாடாளுமன்றத்தின் நான்கு மூலை காவலர்களின் சிலைகள் இவரது மாமன்களின் அருமை சாற்றுகின்றன. தந்தையோ முதல் முதலாக ‘ஸர்’ விருது பெற்ற ஆசியர். பிரிட்டீஷ் பார்லிமெண்டில் அங்கத்தினராக இருந்த சிவக்கொழுந்து. அன்னையோ ராணி விக்டோரியாவின் பாங்கி;ஆங்கிலேயர். 

இவர் முதலில் பூமியை தான் தோண்டினார்; பின்னர் ககனத்தில் பறந்தார். 36 மொழிகளில் வித்தகர். கலையார்வமும், மரபின் மாண்பும், கலைப்பொருள் போற்றுதலும் இந்த கலை யோகியின் பரிமாணங்களில், சில. விளையும் பயிர் முளையிலே என்பார்கள். 12 வயதில் ஐஸ்லாந்திலிருந்து வந்தவருடன், அவரின் மொழியிலேயே பேசி, எல்லாரையும் வியப்பில் ஆழ்த்திய கலை யோகி ஆனந்த குமாரஸ்வாமி பிறந்த தினம், ஆகஸ்ட் 22, 1877. அவர் ஒரு விஞ்ஞானி.  பூமித்தாயின் மடியிலிருக்கும் தாதுப்பொருள்களை பற்றி ஆய்வு செய்து, தொரியோனைட், செரண்டபைட் என்று இரு தாதுப்பொருட்களை சிங்களத்தில் கண்டு பிடித்தவர். இந்த அலைச்சல்கள் ஹிந்து/பெளத்த கலாச்சாரங்களை மேற்கத்திய அணுகுமுறை புரிந்து கொள்ளவில்லை என்பதை இவருக்கு உணர்த்தின. தென்னிந்தியாவிலும், அதே அதோகதி! இவ்வாறு கலாச்சாரங்களில் நுட்பங்களை ஆராயத்தொடங்கிய இந்த விஞ்ஞானி இந்திய/இந்தோனேசிய/ சிங்கள கலை சார்ந்த ஆராய்ச்சி நூல்களை வெளியிடவே, இவருடைய புகழ் உலகெல்லாம் பரவியது. 

வட இந்தியா முழுதும் அலைந்து, திரிந்து, அரிதான அபூர்வமான கலைப்பொருட்களை சேகரித்து, இந்திய அரசிடம் கொடுத்து பொருட்காட்சி மையம் அமைக்க வேண்டினார். அவர்கள் ஆதுரமாக அதை புறக்கணிக்கவே, வேறு வழியில்லாமல், இங்கிலாந்துக்கு எடுத்து சென்றார். நம்மூர் ஆசாமிகள் கொள்ளையடித்துப் போனான் என்று கூசாமல் சூளுரைப்பர். நல்ல வேளை! இந்திரா காந்தி மரபு காக்கும் மையம் இவரை போற்றுகிறது.

இந்திய விடுதலை இயக்கங்களில் கலந்து கொண்டார், இந்த இங்கிலாந்து வாழும் சிங்களவர். முதல் உலக யுத்தத்தின் போது, இந்தியாவுக்கு விடுதலை கொடுக்கப்படவில்லை என்பதால், இங்கிலாந்தில் ராணுவத்தில் சேர மறுத்தார். அவருடைய வீட்டை பறிமுதல் செய்து, நாட்டை விட்டு துரத்தினர், இந்த மஹாராணியின் பாங்கி மைந்தனை. செல்வன்! குறிப்பு எடுத்துக்கொள்ளவும். ஆளை பிடிப்பதில் அமெரிக்கா கெட்டி. ஐன்ஸ்டீனை கவர்ந்தவர்கள், நீல்ஸ் போஹ்ர் அவர்களை கோட்டை விட்டாலும் (அது நிஜமாகவே கோட்டை சமாச்சாரம்! யாராவது கேட்டா பார்க்கலாம்,), அமெரிக்க காங்கிரஸ், பிரத்யேகமாக ஒரு சட்டமியற்றி, இவருக்கு ஸுஸ்வாகதம் கூறியது, கலைப்பொருள்களுடன் வருக என்ற ‘அன்புக்கட்டளையுடன்’. இங்கிலாந்து ஏமாந்த சோணகிரியாயிற்று. பாஸ்டன் ம்யூசியத்தின் பொறுப்பு ஏற்ற கலையோகி, அமெரிக்க கலையுலகில் பிரபலமானார். மெல்ல, மெல்ல, கலையின் உட்பொருள், ‘இறைச்சி’, ஒப்புமை தேடல் என்றெல்லாம் ஆய்வுகள் செய்யத்தொடங்கினார். 

அது அவரை ஆன்மிகப்பாதையில் கொண்டு சென்றது. தன்னுடைய பன்மொழி வித்தகத்தினாலே, வடமொழியின் மேன்மையை மேற்கத்திய உலகுக்கு உணர்த்தினார். கத்தோலிக கிருத்துவம் அறிந்த இவருக்கு, வேதங்களின் சாரம் எடுத்துரைக்க முடிந்தது. சமுதாய பிரச்னைகளயும், ஒரு விஞ்ஞானியாகவும், கலையார்வம் மிகுந்த தேடுபவராகவும், தத்துவஞானியாகவும், ஆன்மிகராகவும் அலசினார். அளவுக்கு மீறி செல்வம் குவிப்பதை அவர் ரசிக்கவில்லை. என்றுமே, அவர் தன்னை ஒரிஜினல் என்று அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை. சான்றோர் வாக்குகளை புரிந்து கொண்டால் போதாதோ என்பது அவருடைய அணுகுமுறை.

யாமொன்று நினைக்க அவன் ஒன்று நினைக்கிறான். 1947 இல் இந்தியா விடுதலை அடைந்தது அல்லவா! இங்கு வந்து தங்கி, துறவறம் நாடவேண்டும் என்று நினைத்தார். வேலையிலும் இருந்து ஓய்வு எடுத்தாகி விட்டது. ஆனால்,ஸெப்டம்பர் 9, 1947. கலையோகியின் ஆத்மா அன்று தேவருலகம் சென்று அடைந்து விட்டது. காத்திருந்தது பல வருடங்கள். கிடைக்க இருந்தது சில தினங்கள். எட்டியது கிட்டவில்லை. திருமதி அவருடைய அஸ்தியை கங்கை நதியில் கரைக்க வந்தார். கையோடு கையாக, அவருடைய சேகரங்களை இந்திரா காந்தி கலை மையத்திடம் அளித்து விட்டார். 

தாய்நாடு சிங்களம்; ஆளாக்கிய நாடு இங்கிலாந்து; அடைக்கலம் அருளியது அமெரிக்கா. ஆத்மாவின் உறைவிடம் இந்தியா. இவரது அபிமானத்தை எந்த அளவுகோலில் மதிப்பீடு செய்வது? சொல்லுங்கள். 

வாழ்க! அமரர் கலையோகி ஆனந்த குமாரஸ்வாமி அவர்களின் திருநாமம்.
இன்னம்பூரான்
09 09 2011


1977-Coomaraswamy.jpg
pastedGraphic.pdf

உசாத்துணை:

Geetha Sambasivam Fri, Sep 9, 2011 at 4:50 PM

நன்றி ஐயா.  சிதம்பர ரகசியம் தொடர் எழுதுகையில் தான் ஆனந்தகுமாரஸ்வாமி பற்றி முதன்முதல் கேள்விப் பட்டேன். ஆனாலும் இவ்வளவு பரிபூர்ணமாய்த் தெரியாது. 


தாய்நாடு சிங்களம்; ஆளாக்கிய நாடு இங்கிலாந்து; அடைக்கலம் அருளியது அமெரிக்கா. ஆத்மாவின் உறைவிடம் இந்தியா//

கடைசியில் இந்திய மண் அவரை ஏற்றுக்கொண்டு விட்டது ஏதோ ஒரு விதத்தில். .