Google+ Followers

Thursday, April 25, 2013

அன்றொரு நாள்: ஏப்ரல் 27 காலணா காப்புரிமை!
அன்றொரு நாள்: ஏப்ரல் 27 காலணா காப்புரிமை!

Innamburan Innamburan Fri, Apr 27, 2012 at 9:04 PM
அன்றொரு நாள்: ஏப்ரல் 27
காலணா காப்புரிமை!

காப்புரிமை என்றால் சிலிர்சிலிர்த்துக்கொண்டு சண்டைக்கோழிகள் முட்டிக்கொள்கின்றன. காப்புரிமையை காப்பாற்ற சட்டம், அதை வீழ்த்த மரபு, அடங்கிப்போன படைப்பாளர்கள், பிழைத்தும், செழித்தும் வரும் கர்த்தாக்கள், ஐ மீன், பிரசுர கர்த்தாக்கள், சந்தடி சாக்கில் புகுந்து, வம்சாவளியெனப்படுவோர்க்கு மான்யமளித்து அரசு படைப்புகளை ‘நாட்டுடமையாக்குவது’ (அதென்ன நாட்டுமையோ?), அத்தருணம், ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளும்’ அச்சகமாசாமிகள், நடுவில் புகுந்து இடைச்செருகும்  உடைப்பாளர்கள், ராயல்டி கிடைக்காமல் முழிக்கும் படைப்பாளர்கள்(உயிருடன் இருந்தால்), போதாக்குறைக்கு, படைப்பாளரின் நன்கொடையில் பிரசுரம், அவருக்கு ஓட்டைக்குடை என்றெல்லாம் காட்சி நம் தமிழ்நாட்டிலே என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், அஷோக் பேங்கர் என்றொருவர் நவீன ராமாயணம் எழுதினார், லக்ஷக்கணக்கில் திரவியம். சொந்தக்கடையே பரப்பி, பழங்கதைகளை புது குடுக்கையில் அளித்து, ஜமாய்க்கிறார். வெளி நாடுகளிலிருந்து கணிசமான அச்சாரம் பற்றி செய்திகள் வந்த வண்ணம். 
நம்மூரில் தாரித்ரியம். புதுமை பித்தனோ, கு.அழகிரிசாமியோ, நினவில் இல்லை, பிராட்வே செட்டியார் ஒருவர் எது எழுதிக்கொடுத்தாலும், காலணா கொடுத்து காப்புரிமை வாங்கிக்கொள்வார் என்று சொன்னதாக ஞாபகம். அன்றாடங்காய்ச்சிகள் வேறு என்ன செய்ய முடியும்?
படைப்பாளர்களுக்கு சட்டரீதியான தற்காப்புக் கவசமிது; பிரசுரிக்கப்பட்ட/படாத படைப்புகளுக்கு இது உண்டு. இது அறிவுபூர்வமான இலக்கிய,இசை,இயல்,நாடக, கணினி மென்பொருள், கட்டிடக்கலை இத்யாதிக்கு உண்டு. தகவல்கள், கருத்து, தளம் ஆகியவைக்கு இல்லை, ஆனால், ஒரு விதத்தில் உண்டு. 1999ல் வந்த ஒரு அரசு ஆய்வுப்படி, காப்புரிமை கொள்ளை, இந்தியாவில் கணக்கில் அடங்கா.
ஏப்ரல் 27, 1667 அன்று ஒரு சம்பவம். மில்டன் ஆன்மிகவாதி (“கோடிக்கணக்கான ஆவியுலகவாசிகள், தரணியில் நடமாடிய வண்ணம்; நாம் தூங்கினாலும் சரி. கொட்டக்கொட்ட முழித்திருந்தாலும் சரி..”), கவிஞர், அச்சுச்சித்திரக்கலை வல்லுனர். வறுமையின் காரணமாக, தன்னுடைய அமரகாவியமான ‘இழந்த சுவர்க்கம்‘ என்ற நூலை, அன்றைய தினம் அவர் சாமுவேல் சிமன்ஸ் என்பவரிடம் ஐந்து வராகனுக்கு விற்றார். அம்மாதிரி எத்தனையோ? சில சமயம் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்து விடுவார்கள், முனைவர் ராஜத்தின் நூலுக்கு ஏற்பட்டது போல.
இன்னம்பூரான்
27 04 2012
Image Credit: http://oelindieflammen.files.wordpress.com/2011/02/guttenbergs_copypaste.jpg

உசாத்துணை: