Monday, March 11, 2013

விடாது கருப்பு!




விடாது கருப்பு!
1 message

Innamburan S.Soundararajan Mon, Mar 11, 2013 at 9:57 PM
To: mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , vallamai@googlegroups.com


விடாது கருப்பு!

‘நீதியிடமிருந்து, உயர்பதவியினாலும், அரசியல் ஆதிக்கத்தினாலும் தப்பிக்க முடியாது.’
~ பிரதமர்: 11 03 2013 
விதி வலியது என்பர் சிலர். மதியிழந்தோர் ‘தொப்’ என்று விழுவர் என்பர் சிலர். கதி இது தான், பொய்யும், புனைசுருட்டுமாக வாழ்வோருக்கு, என்பர் சிலர். எது எப்படி இருந்தாலும் நீதி வழுவாது என்பதற்கு ஒரு சான்று, இங்கே.

அவன் (58) அரசியல்வாதி; மக்களிடையே நன்மதிப்பு. தன் கட்சியின் தலைமை தாங்கும் வாய்ப்பு கிட்டக்கூடும். அது மட்டுமல்ல. மின்சக்தித் துறையின் திறன்மிகுந்த அமைச்சர். அவள் (60) பிரபல பொருளியல் நிபுணர். இருபது வருட இல்லற வாழ்க்கையில் ஐந்து குழந்தைகள். ஒளிமயமான வாழ்க்கை எனலாம். எல்லாம் இன்று குப்புறக்கவிழ்ந்தன. குழந்தைகள் பாவம்.

நீதியின் ராஜபாட்டையை, கல்லும், முள்ளுமாக, சிதைத்ததற்காக, இன்று எட்டு மாத சிறை தண்டனை அவர்கள் இருவருக்கும் விதிக்கப்பட்டது. உடனே பிரசுரமும் ஆகி விட்டது. முதலில் இழைத்த குற்றம்: அவன் 2003ல்  வேகத்தடையை மீறி காரை ஓட்டினான். அது பெரிய குற்றம். உரிமத்தில் பதிவு செய்து விடுவார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் காரோட்டும் உரிமம் ரத்து செய்யப்படும். ஏற்கனவே, மூன்று முறை பிடிபட்டதால், இந்த தடவை கேமராவிடமிருந்து தப்ப முடியாத அவன், அந்த நிமிட சூழ்நிலையை (கேமராவுக்குக் கிடைத்த பிரகாசம் கம்மி.) குறுக்குப் புத்தியுடன் கணித்து, குற்றத்தை மனைவியை ஒத்துக்கொள்ள வைத்தான். அந்த பினாமி பேத்து மாத்து பெரிய குற்றம். அவள் அதை ஒத்துக்கொண்டதும் குற்றம். நீதியின் ராஜபாட்டையை, கல்லும், முள்ளுமாக, சிதைத்தக் குற்றம்.  பல வருடங்கள் ஓடோடி போயின. இருவரும் மேலும், மேலும் பிரபலமாயினர்.

கனம் ஸெளத்வார்க் கோர்ட் ஜட்ஜ் ஸ்வீனி அவர்களின் தீர்வு 5 பக்கம் தான். எளிய ஆங்கிலம். சுற்றி வளைத்து ஒன்றும் பேசப்படவில்லை. அதை இணைத்திருக்கிறேன். அவனை (Chris Huhne) பார்த்து அவர் சொன்னது, அவனுக்கு, நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல இருந்திருக்கும்.

~ ‘நீ குறுக்கு புத்தியுடன் மற்றவர்களை ஆட்டிப்படைக்கும் கொடியவன்.’

~ ‘நல்லது என்ன நடந்தது என்றால், உங்கள் இருவரின் மாயாஜாலம் வெட்ட வெளிச்சத்தில் வந்து விட்டது.’

~’ எத்தனை பொய்கள்! ‘

~ ‘துர்பாக்கியம் தான். நீங்கள் இருவரும் நெறி தவறாமல் வாழ்ந்திருந்தால் புகழேணியின் உச்சியில் இருந்திருப்பீர்கள். என் செய்வது? நீங்களே தலையில் மண் வாரி போட்டுக்கொண்டீர்கள்.’
~ ‘நீ உச்சாணிக்கிளைலிருந்து வீழ்ந்து விட்டாய். ஆனால், நீ உன் குற்றத்தை மறைக்காமல் இருந்தால், இந்த நிலைக்கு வந்து இருக்கமுடியாது.’ (நீ அதற்கு லாயக்கு இல்லை.)

~’ செய்த குற்றம் பெரிது. உனக்கு சால்ஜாப்புச் சொல்ல ஒன்றுமே இல்லை.’

அவளை (Vicky Pryce) பார்த்து அவர் சொன்னது, அவளுக்கு இரட்டை தண்டனை. ஏனெனில், அவன் கோர்ட்டுக்கு தன்னுடைய புதிய சிநேகிதியுடன் (Carina Trimingham) வந்திருந்தான்!

~’ நீ சூதுவாது நிறைந்தவள். கணவனுக்கு ஆசைக்கிழத்தி ஒருவள் இருக்கிறாள் என்று தெரிந்தவுடன், அவனை பழி வாங்கத்துடித்தாய்.’

~’ஆனால், தன் குற்றத்தின் பரிமாணத்தைப் புரிந்து கொண்டு, தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள நினைத்து, நீ போலீசிடம் சொல்லாமல், ஊடகங்களிடம் போனாய்.’

~’ விடாது கருப்பு’ என்பதை அறிந்தும், பேத்து மாத்து செய்தாய்.’

~ முதலில், கணவனுக்காக சட்டவிரோதமாக உதவி செய்ததை நீ பொருட்படுத்த வில்லை. கணவனின் கட்டாயம் என்கிறாய். அது உண்மைக்கு ஒவ்வாத வாதம்.’ 

~’ ஆனால். அவனுடைய ஆசைக்கிழத்தி சமாச்சாரம் உன்னை பழி வாங்கும் பாதையில் இழுத்துச்செல்லும்போது, உன்னையும் மாட்டவைத்துக்கொண்டாய்.

உபரி சமாச்சாரங்கள்:
~ இந்த வழக்கில் அரசு செலவு: £117,558/- அதில் ஓரளவாவது குற்றவாளிகளிடம் வாங்கியிருப்பார்கள் போல. மேலும், £31,000 கேட்கப்போவதாக, போலீஸ் சொல்கிறது.
~ அவனின் கட்சித்தலைமை தண்டனை முடிந்த பின் அவர்களுக்கு நல்ல நேரம் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறது.
~ குடும்ப நண்பர் ஓக்ஷாட் பிரபு, ‘இது அவர்கள் இருவருக்கும் பிரத்யேக வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் ஒரு துக்ககரமான சம்பவம்...’ என்றார்.

கொசுறு செய்திகள்:
அவள் பசங்களையே தந்தையை நிந்திக்க வைத்தாள்;
அவனுடைய ஆசைக்கிழத்திக்கு பெண்பாலார் சம்பந்தமும் இருந்தது வெளி வந்தது.
*
சரி. இது இங்கிலாந்து சமாச்சாரம். பொய் சொன்னதுக்காக மற்றொரு பிரபல அமைச்சர் ஜெயிலுக்குப் போனார். தன் சிநேகிதியின் தாதியின் வீசாவை பற்றி தன்னுடைய துறையிலேயே மென்மையாக விசாரித்த அமைச்சருக்கு வேலை போய் விட்டது.

நம் நாட்டில் எழும் வினாக்கள்:

~ சிசுவதை சட்டவிரோதம். ஹரியானா செல்வந்தர்கள் முதல் உசிலம்பட்டி ஏழைகள் வரை இந்த குற்றம். நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

~ கொத்தடிமை சட்டவிரோதம். செங்கல் சூளைகளிலும், மற்ற வகைகளிலும் நடக்கிறது. நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

~ சிறாரிடம் வேலை வாங்குவது சட்டவிரோதம். உங்கள் தெருவில் டீக்கடைகளில் காண்பது என்ன?
நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?
~
 இரண்டாம் தாரம் சட்டவிரோதம். அரசு ஊழியம் என்றால் வேலை இழக்க நேரிடும். எத்தனை அரசியல் தலைவர்கள் இந்த சட்டத்தை மீறி, பதவியில் இருக்கிறார்கள்! நாம் எந்த சட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்?

கேட்கிறேன். சமுதாய பொறுப்பு உள்ள நீங்கள் பதில் சொல்லுங்கள்.

இன்னம்பூரான்
11 03 2013
உசாத்துணை:


1633204_efc43155.jpg
102K

No comments:

Post a Comment