Google+ Followers

Sunday, March 10, 2013
அன்றொரு நாள்: நவம்பர் 5 தர்மக்ஷேத் ரே குருக்ஷேத் ரே...
2 messages

Innamburan Innamburan Sat, Nov 5, 2011 at 5:06 PM
To: thamizhvaasal

அன்றொரு நாள்: நவம்பர் 5
தர்மக்ஷேத் ரே குருக்ஷேத் ரே...
அன்றொரு நாள் பிற்காலம் பானிபெட் என்று சொல்லப்படும் யுத்த பூமியில் கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமிடையே ஒரு தர்மயுத்தம் நடந்தது. அங்கு தத்துவபோதனையும் அருமையாக சாற்றியாயிற்று. கலி முற்ற, முற்ற, அங்கு பிற்காலம் நடந்த பானிபட் 1, 2 & 3 யுத்தங்கள் (1526 & 1556 & 1761) இந்தியாவின் வரலாற்றை முற்றிலும் மாற்றி அமைத்தவை. அவை திருப்பு முனைகள் அல்ல; திருப்பிய முனைகள். 55 வருடங்களுக்கு முன் ஒரு நாள் அங்கு சென்றிருந்த போது, அவை மூன்றும் கெளரவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே நிகழ்ந்த யுத்தங்கள் என்று தான் என் மனதில் பட்டது. முதல் பானிபட் யுத்தத்தில் இப்ராகிம் லோடியை முறியடித்து, பாபர் முகலாய சாம்ராஜ்யம் ஒன்றை நிறுவினார். இரண்டாவது பானிபட் யுத்தம் தான்: நவம்பர் 5, 1556 இன்றைய கதாநாயகம். விக்ரமாதித்ய சஹாப்தம் தொடங்கியிருக்கவேண்டும்; அது விதிக்கப்படவில்லை போலும். மூன்றாவது பானிபட் யுத்தமோ மராட்டா தேசாபிமானத்தின் ஏறுமுகத்தை பத்து வருடங்களுக்கு இறக்கி வைத்தது.
பாபரின் ஆளுமையில் ஒரு பின்னம் கூட பெறாத ஹுமாயூன் விரட்டியடிக்கப்பட்டார், ஷெர்ஷா சூரி என்ற ஆஃப்கானியரால். இந்தியாவில் நிர்வாகத்திறனுடன் ஆட்சி புரிந்த அவருடைய மரணம்(1545) அந்த வம்சத்தை ஆட்டிவைத்தது; ஓரளவு அவருக்கு இணையான அவருடைய மகன் இஸ்லாம் ஷா 1554ல் மறைந்தார். 12 வயதான அவருடைய மகன் ஃபிரூஸை கொன்று விட்டு, அரியணை ஏறிய அடில் ஷாவின் வஸீர் (திவான்/அமைச்சர்)  ஹேமச்சந்திரா (ஹேமு) என்ற வலிமை, ஆளுமை, துணிவு, தைரியம், நிர்வாஹத்திறன் உடையவர். அடில் ஷா போகத்தில் மூழ்கிவிட்டான். குறுநில மன்னர்களெல்லாம் ~ஆக்ரா, பஞ்சாப், வங்காளம் ~ போர்க்கொடி தூக்கினர். ஹேமுவும் திட்டமிட்டு அவர்களை ஒடுக்கி வந்தார். இது தான் தருணம் என்று ஹுமாயூன், தன்னுடைய விசுவாசமுள்ள தளபதி பைராம்கானின் தலைமையில், கலங்கிய குட்டையை மேலும் கலக்கி, வெற்றி பெற்று அரியணை ஏறினது தான் மிச்சம். மாடிப்படி தடுக்கி வீழ்ந்து மரணமடைந்தார். பைராம் கானும் அக்பரும் ராஜதந்திரத்தில் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. 17 நாட்களுக்கு இந்த மரணத்தை மறைத்து வைத்தனர். முல்லா பேகாசி என்பவரை வைத்து ஆள்மாறாட்டம் செய்து, தர்பார் நடத்தினர். ஃபெப்ரவரி 11, 1556 அன்று அதை அறிவித்து விட்டு, 14ம் தேதி சிறுவன் அக்பர் அரியணை ஏறினான்். ஆஃப்கன் குறுநிலமன்னர்களிடமிருந்து சண்டை மூளலாம் என்று பைராம்கான் படு உஷாராக இருந்தார். ஆபத்தோ, கிழக்கு திசையிலிருந்து பறந்து வந்தது, இடியும், மின்னல் போல. அது தான் ஹேமுவின் பிரமாண்டமான களிறுப்படை. ஆக்ராவிம் கவர்னர் இஸ்கிந்தார் கான் உஸ்பெக் ‘பொத்’ என்று வீழ்ந்தார். கருவூலமும், ராணுவ தளவாடங்களும் பறி போயின. ‘டில்லி சலோ’ என்றார், ஹேமு. டில்லி கவர்னர் தத்ரி பெக், கலனூர் முகாமிலிருந்த அக்பருக்கு ஆள் அனுப்பினான். இனி, பிரபல இந்திய வரலாற்று ஆசிரியர் ஜாதுநாத் சர்க்கார் அவர்கள் பேசுவார்:
‘...மொகலாய ராணுவத்தை பாரீர். வலது: ஹைதர் முகம்மது. இடது: இஸ்கிந்தார் பெக்.மையம்: தத்ரி பெக். பின்னால்: அப்துல்லா உஸ்பெக்.  இஸ்கிந்தாரும், அப்துல்லாவும் ஹேமுவின் படையை துரத்தினர். ஹேமுவின் 3000 ஆஃப்கன் வீரர்களை கொன்று, 400 யானைகளை பிடித்தனர். கெலித்தோம் என்று எண்ணிய முகலாய படையினர் கொள்ளையில் இறங்கினர். மையம் பலவீனம் அடைந்தது.  பொறுக்கியெடுத்த 300 யானைகளுடனும், மின்னல் புரவிப்படையுடனும், இத்தருணத்திற்கு காத்திருந்த ஹேமு,ஒரே பாய்ச்சல்!  1000 புரவிகள், 150 யானை, காவலிழந்த டில்லி எல்லாவற்றையும் விட்டு விட்டு மேற்கு பக்கம், அக்பரை நோக்கி ஓட்டம் பிடித்தான், தத்ரி பெக். டில்லி ஹேமு வசம். சம்ராட் ஹேமச்சந்திர விக்ரமாதித்யா என்று பட்டாபிஷேகம், அக்டோபர் 7, 1556 அன்று. பரிசில்கள் கொடுத்தாச்சு. காசு அடிச்சாச்சு. தர்பார் கூட்டியாச்சு. சம்ராட் விக்ரமாதித்யா அக்பரை தாக்க விரைந்தார். (அவர் காபூல் மீது படையெடுக்க விழைந்ததாக, அக்பர் நாமா சொல்கிறது.) முதல் பானிபட் யுத்தத்தில் தான்  பாபர் வெடிமருந்து பயன்படுத்தினார். அந்த தந்திரத்தை மனதில் வைத்துக்கொண்டு, பீரங்கிப்படையை முன்னால் அனுப்பி, அக்பரின் படைகளை பானிபட் சந்து பொந்துகளில் துவம்சம் செய்வதாக அருமையான திட்டம். பைராம்கான் அதற்கு மேல். தடாலடியாக ஒரு மின்னல் பாய்ச்சலில், ஹேமுவின் பீரங்கிப்படையை கைப்பற்றினார். ஹேமுவின் பலமோ யானை பலம்! களிறு தாக்குதலை தாக்குதலை தாங்க முடியாமல் தவித்தது, மொகலாயப்படை. 
இன்று தான் நவம்பர் 5, 1556. யானைப்படை என்றால், கவசமும், கத்தி, கபடா எல்லாம் பொருத்தப்பட்ட 1500 மெகா-எமன்கள். 50 ஆயிரம் குதிரை வீரர்கள். வலது பக்கம் தளபதி ஷாதிகான் கக்கர்; இடது பக்கம் ஹேமுவின் சகோதரி மகன் ரம்யா. மையத்தில் பட்டத்து யானை ‘ஹவாய்’ மீது ஹேமு. 25 ஆயிரம் புரவிப்படை கொண்ட அக்பரின் படை திட்டமிட்டு முன்னேறினாலும், ஹேமுவின் களிறுப்படை எப்படி தெரியுமோ? 
[‘...களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்...நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;..’ (புறநானூறு 4) அதில் பரணர் கூறிய மாதிரி கொன்று குவிக்கும் எமன் போல...]

ஹேமுவின் பயிற்சி அபரிமிதம். களிற்றுப்படையின் தாக்குதல் கடுமையாக இருந்தது. மொகாலயர்கள் ஒரு அம்புமழை பொழிந்தால், யானைகள் தடுமாறி ஹேமுவின் படையையே  மிதிக்கும் என்று எண்ணி அவ்வாறே செய்ய,ஒரு அம்பு ஹேமுவின் இடது கண்ணில் பாய,# அவர் மயக்கமுற்றார். இது தான் தேசத்தின் தலை விதி என்பதோ? 
அவரின் வீழ்ந்த நிலை கண்டு, அவருடைய அசட்டுப்படை கலைந்தோடியது. எண்சாண் உடலுக்கு சிரஸே பிரதானம் அல்லவா!  ஹேமு சிரச்சேதம் செய்யப்பட்டார். அவரது உடல் அலங்கோலப்படுத்தப்பட்டது. மொகாலாய சாம்ராஜ்யம் வலுத்தது. ஆனால், ஹேமுவின் பிராந்தியம் முழுதும் கைப்பற்ற எட்டு வருடங்கள் பிடித்தன.  ஹேமுவின் ஆதரவாளர்கள், அவர் சிரச்சேதம் செய்யப்பட்ட இடத்தில் (ஸெளத்பூர்) அவருக்கு ஒரு நினைவாலயம் எழுப்பினார்கள். அது இன்றும் இருக்கிறது.
இன்னம்பூரான்
05 11 2011

# ஒரு பெர்சனல் நோட். ஒன்பதாவது வகுப்பில் படித்த பாடமிது. பாடபுத்தகத்தை விட்டு விட்டு,'சிக்கா' என்ற செல்லப்பெயர் கொண்ட சி.எஸ். ஶ்ரீனிவாசாச்சாரியார் எழுதிய வரலாற்று நூலை படித்திருந்ததால், பரிக்ஷையில் ‘ஹவாய்’ என்ற யானையை பற்றியும், ஹேமுவின் கண்ணை பற்றியும், அம்பு திருப்பிய முனையை பற்றியும் எழுதியிருந்தேன். தலைமை ஆசிரியர் ஜனாப் யாகூப் கான் என்னை கூப்பிட்டு விசாரித்தார். நீ சொல்வது சரி என்றார். அப்பாவிடம் போய், இவனை வரலாறு படிக்க வையுங்கள் என்றார். அது நடக்கவில்லை. ஹிஸ்டரிக்கு மதிப்பு இல்லை, அக்காலம்.
vikramaditya.jpg


உசாத்துணை:

Geetha Sambasivam Sat, Nov 5, 2011 at 5:13 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
வரலாறு இல்லை எனில் இலக்கியம் இல்லை;  இலக்கியம் இல்லை எனில் எதுவுமே இல்லை;  நானும் பள்ளிப் பாடத்தில் படித்துப் பெருமூச்சு விட்ட பாடம்.  இப்படி நடந்திருந்தால்? அப்படி நடந்திருந்தால்? என நினைக்க வைத்த மறக்க முடியாத சரித்திர நிகழ்வுகளில் ஹேமு தோற்றதும் ஒன்று.  இதற்கு இணையாக ஹரிஹரபுக்கர்கள் அவசரப்பட்டுக்கொண்டு அடிக்கல் நாட்டிய சம்பவத்தைச் சொல்லலாம். சகுனியாக வந்து சேர்ந்தான் ஒரு மாட்டிடையன் அவர்களுக்கு.  ஆகக்கூடி தேசத்தின் தலைவிதி எப்போவோ நிர்ணயம் செய்யப்பட்டது மாறாது. இது இப்படித்தான் இவ்வாறே நடக்கவேண்டும்! :(

படிக்கப் படிக்க திகட்டாதது வரலாறே.  என்னைப் பொறுத்த மட்டில் வரலாற்றுப் பாடம் ருசிகரமானது; ஆனால் இன்றும் இதற்கு மதிப்புக் கிடையாது.


2011/11/5 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 5
தர்மக்ஷேத் ரே குருக்ஷேத் ரே...
# ஒரு பெர்சனல் நோட். ஒன்பதாவது வகுப்பில் படித்த பாடமிது. பாடபுத்தகத்தை விட்டு விட்டு,'சிக்கா' என்ற செல்லப்பெயர் கொண்ட சி.எஸ். ஶ்ரீனிவாசாச்சாரியார் எழுதிய வரலாற்று நூலை படித்திருந்ததால், பரிக்ஷையில்