Sunday, March 3, 2013

அன்றொரு நாள்: டிசம்பர் 5 நாகரீக கோமாளி




அன்றொரு நாள்: டிசம்பர் 5 நாகரீக கோமாளி
2 messages

Innamburan Innamburan Mon, Dec 5, 2011 at 4:37 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: டிசம்பர் 5
நாகரீக கோமாளி

இன்று கடும்போட்டி! உலகப்புகழ் புரட்சி சொற்பொழிவாளர் சிசிரோவா? மன மகிழ் மன்னன் வால்ட் டிஸ்னேயா?  டிஸ்னே தான் ஜெயிக்கிறார். ஒரு விஷயத்தில் காந்திஜி மாதிரி. பதவி யாதுமில்லை. ஆனால், யாதுமே அவர் தான். டோட்டல் கண்ட்ரோல். எங்கிருந்தோ வந்த நிழலுலக மார்க்கண்டேயர்களை கண்டு களியுங்கள் ~ மிக்கி மெளஸ், டொனால்ட் டக், ஸ்னோ ஒயிட்டும் ஏழு குள்ளர்களும், ப்ளூட்டோ, கூஃபி, டம்போ, பாம்பி, பீட்டர் பான், ஃபெர்டிணாண்ட் என்ற காளை, சிண்ட்ரல்லா பொண்ணு, முயல் தம்பி, பினாச்சியோ. எல்லாருமே சிரஞ்சீவிகள். ஆளுக்கொருவிதம் என்றாலும், இந்த சூதுவாது அறியாத கதாபாத்திரங்களை நேசிக்காமல் இருக்கமுடியாது. மிக்கி மெளஸ்ஸுக்கு என்ன மவுசு என்கிறீர்கள்! ஃபிரான்ஸில் மிஷல் ஸெளரிஸ், இத்தாலியில் டாப்போலினோ, ஜப்பானில் மிகி குச்சி, ஸ்பெயினில் மைகேல் ராடோசிடோ, தென்னமெரிக்காவில் எல் ராட்டோன் மைகெலிடோ, ஸ்வீடனில் ம்யூஸ் பிக், ரஷ்யாவில் மிக்கி மவுசு. சரியான காரணப்பெயர்! உச்சகட்டமாக, இரண்டாவது உலக யுத்தத்தின் அதி முக்கிய தினத்தில் நேசப்படை தலைமை செயலகத்தின் ரகசிய கடவுச்சொல்! 

வால்ட் டிஸ்னே தன்னுடைய படங்களை சின்னத்திரைக்கு தரமாட்டார். பாயிண்ட் மேட். சிறார்களிலிருந்து தாத்தா பாட்டி வரை, உலகாபிமானச்சின்னம். வாழையடி வாழையாக, எவெர் க்ரீன். எல்லா தலைமுறைக்கும் நல்வரவு.உலகமெங்கும் அவ்வப்பொழுது அற்ப மானிடர்கள் சந்தோஷ கப்பலில் மிதக்கிறார்கள் என்றால், வால்ட் டிஸ்னே அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவருடைய கற்பனை வெள்ளத்தின் ஊற்று என்றுமே வற்றாதது. அதற்கு மக்களும் தாராளமாகவே கப்பம் கட்டினார்கள். அமெரிக்காவும், சோவியத் ரஷ்யாவும் அவரை கெளரவித்ததே, அவர் உலகமயமானதற்கு சாக்ஷியம். திரைப்பட தயாரிப்பாளர்களும் நடிகர்களும் ஏங்குவது ஒரு ஆஸ்கார் விருது பெற. ஐயாவுக்கு 29 ஆஸ்கர்கள் கிடைத்தன. கார்ட்டூன், அனிமேஷன், நடிப்பு எல்லா வகை திரைப்படங்களும் வாகை சூடியவண்ணம். ஜாதகம் அப்படி. சாதனை அப்படி. சொல்லி மாளாது போங்கள். அவர் ஒரு ஏடுபடாக்கூடர். பள்ளி தாண்டா பண்டாரகர். ஹார்வார்டும் யேலும் ஓடொடி வந்து விருதுகள் அளித்தன. 29 பக்க பயோடாட்டா; 700 விருதுகள், பரிசில்கள், பட்டியலில். சர்வதேசங்களிலும் கீர்த்திமான். மேரி பாப்பின்ஸ் சினிமா தடபுடல். 50 மிலியன் டாலர் வரவு. அவருடைய லாஸ் ஏஞ்செலஸ் டிஸ்னே லாண்ட் மாயாலோகம். அதே மாதிரி ஃப்ளோரிடாவில், ஃப்ரான்ஸில்.

‘நாட்டுப்புறக்கலை படைப்பதில் மன்னன்;வாழ்வியலை கருணையுடன் பார்க்கும் ஸ்வபாவம்; அதன் மூலம் வால்ட் டிஸ்னே நம் சிறார்களுக்கு மனித நேயம் நோக்கி நல்வழி நடக்க வழி வகுத்தார்.’ இது ஜனதிபதி ஐஸன்ஹோவரிடமிருந்து. யேல் பல்கலைக்கழகம்,‘விலங்கியல், இயற்கையியல் பரிசோதனை சாலைகள் செய்யமுடியாததை, இவர் செய்தார்; விலங்கினத்துக்கு ஆத்ம தானம் செய்தார்.’.
சரி. அவருடைய பொன்மொழிகள்:
‘நான் நல்ல கால கனவு காண்பவன். அழுகைப்படங்களில் எனக்கு ஆர்வமில்லை. உலக அதிசயங்களை கண்டு நான் வியக்காத நாள் கிடையாது.  மிக்கி மவுசை பாருங்கள். அருமையான பிருகிருதி. யாருக்கும் தீங்கு நினையா நல்லவன். தப்பு ஒன்றும் செய்யாமலே மாட்டிக்கொள்ளும் அசடு மாதிரி. ஆனால், சிரித்துக்கொண்டே தப்பித்து விடுவான். அவனை நேசிக்காமல் இருக்கமுடியுமோ?’
வாகை சூடி அதனுடைய லாகிரியில் திளைத்தபோது கூட, உழைப்பதை குறைக்க விரும்பாத அவர் சொன்னது நமக்கெல்லாம் என்றும் பாடமே, ‘... கற்பனை ஊற்றெடுக்கும் வரை டிஸ்னேலண்ட் வளர்ந்து கொண்டே இருக்கும்...’.

என்றோ படித்தது. ரீடர்ஸ் டைஜெஸ்ட் என்று நினைக்கிறேன். ஆரம்பகாலத்தில், கார் வைக்கும் லாயத்தில் ஸ்டூடியோ. பணக்கஷ்டம். கடன். ஆனால், மாதம் ஒரு காசோலை செல்லுபடி செய்யப்படவில்லை. அது அவரது காரியதரிசி லிலியனின் சம்பளம். அவளது உண்மையான ஒத்துழைப்புக்கேற்ற பரிசில் கொடுத்தார், வால்ட் டிஸ்னே ~ திருமணம். ஆனால், இன்று அந்த ஆதாரம் கிடைக்கவில்லை. எது எப்படியோ? மிக்கி மெளசுக்கு நாமகரணம் செய்தது, லிலியன். அது போதாதோ!
நான் இந்தியன். அதனாலே விட்லாச்சாரியாருக்கும் ஒரு கும்பிடு. அடடா! மறந்து போச்சே. அவருடைய பிறந்த நாள், இன்று: டிசம்பர் 5. 1901ல் ஜனனம்.  டிசம்பர் 15,1966ல் மறைவு.

இன்னம்பூரான்
05 12 2011
walt-disney-stamp-1968-202x300.jpg

multiple-disney.jpg

உசாத்துணை:


Innamburan Innamburan Mon, Dec 5, 2011 at 5:06 PM
To: mintamil , thamizhvaasal
திருத்தம்: 'அவருடைய' எடுத்து 'வால்ட் டிஸ்னேயின்' என்று போடவும்.
[Quoted text hidden]

No comments:

Post a Comment