Google+ Followers

Monday, March 4, 2013

அன்றொரு நாள்: நவம்பர் 12 வல்லிக்கண்ணன் (12 11 1920 ~09 11 2006)
அன்றொரு நாள்: நவம்பர் 12 வல்லிக்கண்ணன் (12 11 1920 ~09 11 2006)
5 messages

Innamburan Innamburan Sat, Nov 12, 2011 at 1:22 PM
To: mintamil

அன்றொரு நாள்: நவம்பர் 12
வல்லிக்கண்ணன் (12 11 1920 ~09 11 2006)
நெல்லை மண்ணும் அரவணைக்கும் தமிழும் ஒன்றையொன்று அண்டி வாழ்பவை ~மஹாகவி பாரதியார்,புதுமை பித்தன், கு.அழகிரிசாமி, ரசிகமணி, வல்லிக்கண்ணன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசு. வாழ்க்கைக்குறிப்புகள் எழுதுவதில் ஒரு அலாதி பாணியை, வல்லிக்கண்ணன் அவர்களிடம் கண்டேன். சமயத்தில் நினைப்பது உண்டு, அவர் பேசுகிறாரா? எழுதுகிறாரா? என்று.
நிறைந்த வாழ்வு வாழ்ந்து தனது 86வது வயதில் மறைந்தார். அவர் மறைந்த உடனேயே திரு. நா.கண்ணன் அவரை பற்றி எழுத கேட்டுள்ளார், மின் தமிழில் (11 11 2006). எனக்கு தமிழ் இலக்கிய பரிச்சியம் மிகக்குறைவு. ஐந்து வருடம் கழித்து, தனது சதாபிஷேகக் காலகட்டத்தில், திரு. வல்லிக்கண்ணன் அவர்கள் அளித்த அருமையான நேர்காணல்  ஒன்றை ஆறாம் திணையிடமிருந்து, இரவல் வாங்கி அளித்து, என்னால் இயன்ற பணியை செய்கிறேன். அவருடைய நூல்களை நிரந்தரப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டால் நல்லது தான்.
நன்றி,வணக்கம்,
இன்னம்பூரான்
12 11 2011
nilaipetra.jpg

*
வல்லிக்கண்ணன் நேர்காணல்ஆறாம் திணை
பிறந்த நாள் பவள விழா, தனது எழுத்து வாழ்க்கை மணி விழா என கொண்டாடத் தெரியாத எழுத்துலக மார்க்கண்டேயரான வல்லிக்கண்ணனுக்கு எண்பது வயது நடந்து கொண்டிருக்கிறது. தனது வாழ்நாளில் அறுபது ஆண்டுகளை எழுத்து – இலக்கியத்துக்காகவே செலவிட்டவர்.
உங்கள் பூர்வீகம்?
திருநெல்வேலியைச் சேர்ந்த ராஜவல்லிபுரம் என் சொந்த ஊர். நான்12.11.1920-ல் பிறந்தேன்.
எப்பொழுதிலிருந்து எழுத ஆரம்பித்தீர்கள்?
1939- முதல் எழுதத் தொடங்கினேன். 1940-ல் புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘திருமகள்’ பத்திரிகையில் ஆசிரியராகச் சேர்ந்தேன். அங்கு மூன்று மாதங்கள்தான் −ருந்தேன். அடுத்து ‘சினிமா உலகம்’ பத்திரிகையில் பணி. ‘சினிமா உலகம்’ மாதமிருமுறை வெளி வந்தது. அங்கு ஒன்பது மாதங்கள் பணியாற்றிவிட்டு, சென்னைக்கு வந்து ‘நவசக்தி’ பத்திரிகையில் சேர்ந்தேன். சக்திதாசன் சுப்பிரமணியம் என்பவர் ஆசிரியராக இருந்தார். நான் உதவி ஆசிரியர். நவசக்தி திரு.வி.க ஆரம்பித்த பத்திரிகை.
1944-ல் இருந்து 1947 வரை திருச்சியில் துறையூரில் இருந்து வெளிவந்த ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் பணி. இதற்கு கு.ப.ரா கெளரவ ஆசிரியராக இருந்தார். திருலோக சீதாராம் ஆசிரியர்.
1950, 1951-ல் ‘ஹநுமான்’ பத்திரிகையில் பணியாற்றிவிட்டுப் பின்னர் சுதந்திர எழுத்தாளனானேன். ‘ஹநுமான்’ பத்திரிகையில் ந. பிச்சமூர்த்தியும், சங்கு சுப்பிரமண்யமும் நிறைய எழுதினார்கள்....
‘சரஸ்வதி’, ‘தீபம்’, ‘தாமரை’ முதலிய பத்திரிகைகளில் நிறைய எழுதி இருக்கிறேன். ஈழம், சிங்கப்பூர் பத்திரிகைகளிலும் எழுதினேன்.
1960 வரை சுதந்திர எழுத்தாளனாக இருப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. அதற்கு அப்புறம்தான் கஷ்ட காலம். என் உடன்பிறந்த அண்ணன் ர.சு. கோமதி நாயகத்தின் உதவியும், அரவணைப்பும் இல்லாமல் இருந்தால் வாடிப் போயிருப்பேன்!
தமிழுக்கு உழைத்துக் கருகிப்போன எழுத்தாளர்கள் பலர்- புதுமைப்பித்தன், கு.ப.ரா., சுப்பிரமணிய பாரதியார், சாலிவாகனன்.... என்று அநேகர். இந்தப் பட்டியலில் நானும் சேர்ந்து விடாமல் இருக்க என் அண்ணனின் அன்பே காத்தது!
தமிழ் இலக்கியத்திற்கு உங்கள் பங்களிப்பு என்ன ?
சிறு கதைகள், நாவல்கள், கவிதைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், நாடகம், வரலாறு என்று என் பங்களிப்பு இன்றும் தொடர்கிறது...
‘பெரிய மனுஷி’ – ‘வஞ்சம்’ ‘ஆண் சிங்கம்’ – ‘சரியான துணை’, – ‘பயந்தவள்’ – ‘அலைகள்’.... முதலிய என் சிறு கதைகள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.
‘நினைவுச் சரம்’, ‘அலை மோதும் கடல் ஓரத்தில்’, ‘வீடும் வெளியும்’ – ‘இருட்டு ராஜா’ முதலிய எனது நாவல்கள் புகழ் பெற்றவை.
‘வீடும் வெளியும்’ – சுதந்திரப் போராட்ட காலத்தைச் சொல்லும் நாவல்.
‘நினைவுச் சரம்’ – ஒரு திருநெல்வேலி நபரின் கதையைச் சொல்கிறது. ஒரு சோதனையான காலகட்டத்தில் ஊரை விட்டு ஓடிச் சென்ற அவர் சுமார் நாற்பது ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார். புற நிலையில் மாற்றங்கள் இருந்தாலும், அக நிலையில் மக்களின் இழி குணங்கள் மாறாமல் இருப்பது கண்டு மனம் நோகிறார்.
‘அலை மோதும் கடல் ஓரத்தில்’ – ஒரே இரவில் நடக்கும் கதை. கடல் புரத்திற்குத் தற்கொலை செய்து கொள்ள வரும் ஒரு ஆணும், பெண்ணும் தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டுப் பேசிக் கொள்கிறார்கள். தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டுவிட்டுப் புது வாழ்வு தொடங்குகிறார்கள்.
அவன் – அவள் – அவர்கள் என்று மூன்று பகுதிகளைக் கொண்டது இந்த நூல்.
‘இருட்டு ராஜா’ – கதையின் நாயகன் காதல் தோல்வியால் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறான். ஆனால் ஊருக்கு நல்லது செய்யும் பரோபகாரியாக விளங்குகிறான்.
கு.ப.ராவும், ந. பிச்சமூர்த்தியும் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தபோதே நானும் புதுக்கவிதை எழுத ஆரம்பித்து விட்டேன். என் முதல் புதுக்கவிதை 1943-ல் வெளி வந்தது! ‘புத்த பக்தி’ – என்ற என் முதல் புதுக்கவிதைத் தொகுதி 1944-ல் வெளியானது.
‘அமர வேதனை’ என்ற புதுக்கவிதைத் தொகுதியை சி.சு. செல்லப்பா, தன் எழுத்துப் பிரசுரமாக வெளியிட்டார்.
‘பாரதி அடிச்சுவட்டில்’ என்று பாரதியின் ‘காட்சி’ – கவிதையின் பாணியில் ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் சுமார் ஐம்பது கவிதைகளை எழுதினேன். ந. பிச்சமூர்த்தி படித்துவிட்டு மிகவும் பாராட்டினார்.
1950-ல் நான் எழுதிய நாடகம் ‘விடியுமா?’.... ஓட்டல் தொழிலாளர்கள் இதை மேடையில் நடித்துக் காட்டினார்கள். சமூகப் பிரச்சினைகள் பலவற்றை அதில் சொல்லியிருந்தேன்.
‘நம் நேரு’, ‘விஜயலட்சுமி பண்டிட்’ முதலியவை நான் எழுதிய வரலாற்று நூல்கள். புதுமைப்பித்தன் வரலாற்றையும் எழுதி இருக்கிறேன்.
1. புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும்
2. சரஸ்வதி காலம்
3. பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை
4. தமிழில் சிறு பத்திரிகைகள்
5. எழுத்தாளர்கள் – பத்திரிகைகள் – அன்றும், இன்றும்
6. வாசகர்கள் – விமர்சகர்கள்
7. தீபம் யுகம்
.... முதலியவை எனது ஆராய்ச்சி நூல்கள்.
மேற்கண்ட முதல் நான்கு புத்தகங்களும் தீபத்தில் முதலில் தொடராக வெளிவந்து அப்புறம் புத்தக வடிவம் பெற்றவை.
புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும் – சாகித்ய அகாதமி விருது பெற்றது.
எழுத்தாளர்கள் – பத்திரிகைகள் அன்றும் இன்றும் – தமிழ் வளர்ச்சிக் கழகம் பரிசு பெற்றது.
நா. பார்த்தசாரதி இருபத்து மூன்று வருடங்கள் சிரமப்பட்டு நடத்திய ‘தீபம்’ பத்திரிகையின் இலக்கியப் பங்களிப்பைச் சொல்வது ‘தீபம் யுகம்’.
கார்க்கி கதைகள், கார்க்கி கட்டுரைகள், தாத்தாவும் பேரனும் (அமெரிக்க நாவல்) ராகுல சாங்கிருத்தியாயன், ஆர்மீனியச் சிறுகதைகள், சிறந்த பதிமூன்று கதைகள் – (இந்தியக் கதைகள்) .....இவையெல்லாம் என் மொழிபெயர்ப்பு நூல்கள்...
‘20-ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சி’ – என்ற நூலை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.
12.11.2000 அன்று எனக்கு எண்பது வயது பூர்த்தியானது. அதற்காக என் இலக்கிய ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க என் சுய சரிதையை எழுதி வருகிறேன்.
ஆனால் விமர்சனத்திற்காக எனக்கு நிறையப் பேர் புத்தகங்களை அனுப்புவதால் என் சொந்த எழுத்துப் பணி தடைபடுகிறது. ஆங்கில இலக்கிய நூல்கள் படிக்கவும் எனக்கு நேரம் கிடைப்பதில்லை.
ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்குக் குறையாமல் படிக்கிறேன். அப்படியிருந்தும் விமர்சனத்திற்காக நூல்கள் குவிந்து கிடக்கின்றன.
 இன்றைய தமிழ்க் கவிதை, சிறுகதை, நாவல் பற்றிச் சொல்லுங்கள்.
சராசரி வாசகன் புரிந்து கொள்ள முடியாதபடி பலர் எழுதி வருகிறார்கள். தமிழில் பின் நவீனத்துவ பாணியில் பலர் எழுதும் எழுத்து குழப்பமாக இருக்கிறது!
புதுமைப்பித்தன், கு.ப.ரா – இவர்களுக்கெல்லாம் தனித்துவம் வாய்ந்த நடை இருந்தது. இப்போது எழுதுவோர் பலர் நடை விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. தனித்துவத்திற்காக முயற்சி செய்வதில்லை!
சிறுகதை, நாவல், கவிதை எல்லாவற்றிலுமே புது விஷயங்கள் சொல்லப்படுகின்றன! களங்கள் விரிந்திருக்கின்றன.
இடைக் காலத்தில் 150 பக்கங்கள், 200 பக்கங்கள் என்று நாவல்களின் அளவு குறைவாகவே இருந்தது. இப்போது 700 பக்கங்கள் 1000 பக்கங்களுக்குக் கூட எழுதுகிறார்கள்.
புதுக்கவிதையில் உள் மன உளைச்சல், தனி நபர் பிரச்சினைகள் அதிகம் பேசப்படுகின்றன. இந்தக் கவிதைகளை எங்கோ ஆரம்பிக்கிறார்கள். எங்கோ முடிக்கிறார்கள். இவற்றைப் படித்துப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.
பழமலய் கிராமத்து மாந்தரைத் தன் கவிதைகளில் அருமையாகச் சித்திரிக்கிறார்.
ஹைகூ என்று மூன்று வரிக்கவிதைகள் நிறைய வருகின்றன. மு. முருகேஷ் எழுதும் மூன்று வரிக்கவிதைகள் நன்றாக −ருக்கின்றன. ஆனால் தமிழில் பலர் எழுதும் மூன்று வரிக் கவிதைகள் கவித்துவம் இல்லாமல் வெறும் உரைநடை வரிகளாக இருக்கின்றன...
தமிழ் நாவல் உலகை எடுத்துக் கொண்டால் அரவானிகளைப் பற்றி சு. சமுத்திரம் எழுதிய ‘வாடா மல்லி’ – எய்ட்ஸ் பற்றி அவர் எழுதிய ‘பாலைப் புறா’ முதலியன புதிய முயற்சிகள். சின்னப்ப பாரதி மலைவாழ் மக்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.
யதார்த்த பாணியிலேயே இன்றும் சிறந்த நாவல்களை எழுத முடியும் என்பதற்கு சுந்தர ராமசாமியின்-
குழந்தைகள், பெண்கள், ஆண்கள் – நாவலை உதாரணமாகச் சொல்லலாம்.
மரபுக் கவிஞர்களில் எனக்கு பாரதி, பாரதிதாசன், ச.து.சு. யோகி, தேசிய விநாயகம் பிள்ளை, கம்பதாசன் – இவர்களைப் பிடிக்கும். நாற்பதுகளில் க. அப்புலிங்கம் என்பவர் கலைவாணன் என்ற புனைப்பெயரில் விருத்தப் பாக்களை அருமையாக எழுதினார். தமிழ் ஒளி, கே.சி.எஸ். அருணாசலம் இவர்கள் கவிதைகளையும் ரசித்துப் படித்திருக்கிறேன்.
இன்றும் பலர் மரபுக்கவிதைகளை நன்றாக எழுதி வருகிறார்கள்...
வ.செ. குழந்தைசாமி, குலோத்துங்கன், நெல்லை. சு. முத்து... இவர்கள் சிறந்த மரபுக் கவிஞர்கள்.
இன்றைக்குள்ள வெகுஜனப் பத்திரிகைகள் எப்படி இருக்கின்றன?
அவர்களுக்கு லட்சியங்கள் முக்கியமில்லை. லட்சங்கள்தான் முக்கியம். தமிழ் சினிமாவும், வணிகப் பத்திரிகைகளும் தமிழரின் ரசனையைக் கெடுத்திருக்கின்றன. இன்றைய தமிழ் சினிமாக்களில் கதை அம்சமே இல்லை. தொழில் நுணுக்க அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.
தமிழில் நாடகங்கள் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றிச் சொல்லுங்கள்.
1930-களில் பள்ளி மாணவனாக இருந்தபோது கன்னையா பிள்ளை கம்பெனி நாடகங்களைப் பார்த்திருக்கிறேன்.
நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும், டி.கே.எஸ். சகோதரர்களும் எனது நெருங்கிய நண்பர்கள். எங்கெல்லாம் நவாப் கம்பெனி முகாமிட்டிருக்கிறதோ அங்கெல்லாம் என்னை வந்து தங்கி நாடகம் பார்க்கும்படி நவாப் பணம் கொடுத்து அனுப்புவார். கோட்டயம், திருவனந்தபுரம், கொல்லம், கல்லிடைக்குறிச்சி – இங்கெல்லாம் சென்று தங்கி, நாடகம் பார்த்து, நவாப் கம்பெனி நாடகங்களைப் பற்றி விமர்சனம் எழுதியிருக்கிறேன்.
‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் நான் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, டி.கே.எஸ். சகோதரர்கள் திருச்சியில் முகாமிட்டிருந்தனர். டி.கே.சண்முகம் பணம் அனுப்பி, அழைப்பு விடுத்தார். திருச்சி சென்று தங்கி, பல நாடகங்களைக் கண்டுகளித்தேன்.
வித்யாசாகர், ஒளவையார், சிவலீலா, ராஜா பத்ரஹரி, பில்ஹணன், உயிர் ஓவியம், முள்ளில் ரோஜா, தமிழ் முழக்கம் – முதலிய டி.கே.எஸ். நாடகங்கள் இன்றும் என் நெஞ்சில் பசுமையாக நிலைத்திருக்கின்றன.
கோமல் சுவாமிநாதன் என்னை அழைத்துச் சென்று, தன் நாடகங்கள் சிலவற்றைக் காட்டினார். தற்கால சபா நாடகங்கள் பலவற்றை நான் பார்க்கவில்லை.
தமிழிலக்கியத்திற்கு சிறு பத்திரிகைகளின் பங்களிப்பு எந்த அளவில் இருந்தது , இருக்கிறது ?
தமிழ் இலக்கியம் வளர்ச்சி அடைய சிறு பத்திரிகைகள்தான் பெரிதும் உதவியிருக்கின்றன.
பாரதியார் நடத்திய ‘இந்தியா’ வ.வே.சு. ஐயரின் ‘பால பாரதி’....
1933ல் இருந்து 34 வரை வந்த ‘மணிக்கொடி’ பத்திரிகை அளவில் வெளிவந்தது. அது தேச விடுதலைக்காகப் போராடியது. 1935, 36-ல் வெளிவந்த ‘மணிக்கொடி’ புத்தக வடிவில் வெளியாயிற்று. அப்போதுதான் தமிழுக்குப் பல அருமையான சிறுகதைகள் கிடைத்தன!
வீ.ர. ராஜகோபாலன் என்பவர் ‘கலா மோகினி’ என்ற பத்திரிகையை நடத்தினார். இவர் சாலிவாஹனன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுவார். 1942-ல் இருந்து 1948 வரை ‘கலா மோகினி’ வெளி வந்தது. ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களும் இதில் எழுதினார்கள். மாதம் இருமுறை வெளி வந்தது.
1942-ல் இருந்து 1947 மே முடிய ‘கிராம ஊழியன்’ பத்திரிகை வெளியாயிற்று. தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அமிர்தம்’ இதில்தான் வெளி வந்தது.
எம்.வி. வெங்கட்ராம் ‘தேனீ’ என்று ஒரு பத்திரிகை நடத்தினார். ‘சரஸ்வதி’ பத்திரிகை 1955-ல் ஆரம்பிக்கப்பட்டுத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் நடத்தப்பட்டது. தொ.மு.சி. ரகுநாதன் நடத்திய ‘சாந்தி’. சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ போன்ற பத்திரிகைகளும் −ருந்தன. செல்லப்பா சுமார் பனிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார் பல சிரமங்களுக்கிடையே! தீபம், நடை, கசடதபற, தாமரை, வானம்பாடி, ·, சதங்கை, காலச்சுவடு, நவீன விருட்சம், கனவு, சொல் புதிது, ஆரண்யா, புதிய விசை, கோடு, கணையாழி.... என்று இந்தப் பட்டியல் இன்று வரை நீள்கிறது!
சுப மங்களா, புதிய பார்வை – இவை இடைநிலைப் பத்திரிகைகளாக இருந்தன.
 தமிழில் சோதனை முயற்சிகள்....
டி.கே. துரைசாமி என்கிற ‘நகுலன்’ நிறையச் சோதனை முயற்சிகள் செய்திருக்கிறார். புதுமைப்பித்தனின் சிறுகதை- ‘கயிற்றரவு’. க.நா.சு.வின் ‘அசுர கணம்’ – ‘ஒரு நாள்’ முதலிய நாவல்கள். அசோகமித்திரனின் ‘ஒற்றன்’. நகுலனின் ‘நினைவுப் பாதை’ நாவல் போன்றவைகளெல்லாம் சோதனை முயற்சிகள்தான்.
அப்துல் ரகுமான், அபி, சிற்பி, சேலம் தமிழ்நாடன், பிரமிள், தரும சிவராம், ஆத்மாநாம் – இவர்கள் கவிதைகள் பல சோதனை முயற்சிகள். ஆத்மா நாம் தற்கொலை செய்து கொண்டது தமிழ் இலக்கியத்திற்குப் பேரிழப்பு!
வெளிநாட்டு சோதனை முயற்சிக் கவிதைகள் பலவற்றை பிரம்மராஜன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்!
 தமிழ் வாசகர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வாசகர்கள் வளரவில்லை. தரம் உயரவில்லை. சக்தி. வை. கோவிந்தன் குறைந்த விலையில், உயர்ந்த புத்தகங்களை வெளியிட்டார். எட்டணா விலையில் தந்தார்! தமிழில் மலிவுப் பதிப்புகளுக்கு அவர்தான் முன்னோடி. பாரதியார் கவிதைகள் ஒரு ரூபாய். திருக்குறள் ஒரு ரூபாய். மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி – இரண்டும் சேர்த்து ஒரு ரூபாய்க்கு – என்றெல்லாம் வெளியிட்டார்!
ஆயிரம் புத்தகங்கள் போட்டால் விற்க நான்கு ஆண்டுகள் ஆகின்றன என்று சக்தி கோவிந்தன் சொன்னார்.
இன்றும் அதையே இன்றைய புத்தக வெளியீட்டாளர்கள் சொல்கிறார்கள். இது தமிழின் துரதிர்ஷ்டம்!
க.நா.சு செத்துப் போவதற்கு முன்னால் என்னைச் சந்தித்துப் பேசியபோது சொன்னார்-
‘’ஒரு இலக்கியப் பத்திரிகை ஆரம்பித்தால் நூற்றைம்பது பேர்தான் சந்தாதாரர்களாகச் சேர்கிறார்கள். அன்றும் அப்படித்தான். இன்றும் அப்படித்தான்.’’
சந்திப்பு: எஸ்.குரு


உசாத்துணை
மீள்பதிவு: http://aim.blogsome.com/2006/11/10/p10/

Geetha Sambasivam Sat, Nov 12, 2011 at 3:46 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
வாசகர்கள் வளரவில்லை. தரம் உயரவில்லை//
 
எத்தனை உண்மை!  இது ஏற்கெனவே படிச்சாலும் மீண்டும் படித்தேன்.  நன்றி பகிர்வுக்கு.
2011/11/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 12
வல்லிக்கண்ணன் (12 11 1920 ~09 11 2006)


உசாத்துணை
மீள்பதிவு: http://aim.blogsome.com/2006/11/10/p10/

Subashini TremmelSat, Nov 12, 2011 at 5:23 PM
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
நல்ல பகிர்வு திரு.இன்னம்புரான்.
மேலும் சில தகவல்கள் இவர் படைப்புக்களின் பட்டியல் இங்குள்ளது. 
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9984:2010-07-16-01-45-02&catid=1149:10&Itemid=417


2011/11/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
..பணியை செய்கிறேன். அவருடைய நூல்களை நிரந்தரப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டால் நல்லது தான்.

ஆம்.  

சுபா


 
 
 

K R A Narasiah Sat, Nov 12, 2011 at 8:20 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com, "K.R.GOVINDAN"
நான் எழுதிய சாதாரணமனிதன் நூலை சமஸ்கிருத அறிவாளரும் மேநாள் IG யுமான சி. எல். ராமகிருஷ்ணா வெளியிட வல்லிக்கண்ணன் தான் பெற்றுக்கொண்டார்!
நரசய்யா
[Quoted text hidden]

Innamburan Innamburan Sun, Nov 13, 2011 at 10:00 AM
To: mintamil@googlegroups.com
நன்றி, ஸுபாஷிணி,

மேலும், 'காலச்சுவடு' இதழில் வல்லிக்கண்ணனை பற்றிய விமர்சனமும் , ஆறாம் திணையில் திருப்பூர் கிருஷ்ணன் கட்டுரையும் வந்துள்ளன. அவரே பேசட்டும் என்று, நேர்காணலை மட்டும் பதிவு செய்தேன்.

நன்றி, திரு.நரசய்யா,
அன்றொரு நாள்: ஜூன் 24 பார்க்கக்கிடைத்ததோ?
*
அன்றொரு நாள்: ஜூன் 24

‘...சிட்டிக்கு நரசையாவின் பெற்றோர் ஆதர்சம். நரசைய்யாவிற்கு
சிட்டி ஆதர்சம். சிட்டி பலருக்கு ஆதர்சம் ;-)...’
- நா. கண்ணன்: மின் தமிழ் (19 04 2009)

எதை எழுதுவது? எதை விடுவது? ‘சிட்டி’யை சிட்டிகையாக குறுக்கி அடைக்க முடியுமோ! இது ஒரு சிறிய அடி பணிந்து வணங்கும் முகாந்திரம் அவ்வளவு தான். அவருக்கு பிடித்திருக்கும் என்பதால், அவரது அபிமான நகைச்சுவை எழுத்தாளரும், பொருளியல் பேராசிரியரும், (எனக்கு இன்னம்பூர் போல, அவருக்கு,தற்காலம் நான் வசிக்கும் ஹாம்ஷையர்.) ஆன ஸ்டீஃபன் லீகாக் மேற்கோள்கள் மூன்றை சமர்ப்பிக்கிறேன். அவர் வங்கிக்கணக்கு திறந்த கதை பிரமாதமாக இருக்கும், நகைச்சுவை ததும்ப. அவரது படைப்புகள் எல்லாம் இணைய தளத்தில். நாம் எப்போது தமிழை அந்த நிலைக்கு உயர்த்துவோம்!  (நாம் எப்போது தமிழை அந்த நிலைக்கு உயர்த்துவோம்! => ஒரு முன்னுதாரணம்: http://www.tamilheritage.org/old/text/ebook/chitti_malar_2010.pdf]

ஸ்டீஃபன் லீகாக் :
1. [‘பொருளாதாரமா!] அதற்கு ‘அரசியல்-பொருளியல்’ (political economy) என்று பெயர், இரண்டும் அதில் இல்லையே!’. 
2. எழுதுவது பிரச்னையே இல்லை. தோன்றியதை எழுதி விடலாமே. ஆமாம்! தோன்றினால் தானே!
3. ‘முழுச்செங்கலை விட பாதி செங்கல் லேசு. பறக்கும், எறிந்தால். அது மாதிரி, அரை  குறை உண்மை தான் தேவலை.’
*****
“இன்று திரு. 'சிட்டி' சுந்தரராஜனின் நூற்றாண்டு விழா இனிது நிறைவேறியது, சாஸ்திரி நகர் மங்கையர் மன்றத்தில். திரு. நரசய்யா ஊக்குவிக்க, முனைவர் சதாசிவம் உறுதுணை அளிக்க, என் பழைய பேட்டை சாஸ்திரி நகருக்கு, க்ரோம்பேட்டையிலிருந்து பயணித்தேன். திரு. நரசய்யா பல சான்றோர்களையும், அறிஞர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். ஸத்யபாமா, சுப்ரமணியம், மோஹன் போன்ற பழைய நண்பர்களை கண்டு களித்தேன். 'சிட்டியின்' மகவுகள் பரிவுடன் தந்தையின் பெருமையை கொண்டாடினர். முனைவர். ஸீ.எல்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வாழ்த்துரைகள் வாசிக்கப்பட்டன். தமிழ் மரபு கட்டளையின் சார்பில் நமது நா. கண்ணன் அவர்களின் நீட்டொலை வாசிக்கப்பட்டபோது, அது மிகப்பொருத்தமாகவும், இலக்கிய நடையில் இருந்ததைக்கேட்ட யான் பெருமிதத்துடன், மற்றவர்கள் செவி சாய்த்ததை அனுபவித்தேன். பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி த்ன்னை 'சிட்டி' ஊக்குவித்ததைப் பற்றியும், அவரது (British understatement humour) நகைச்சுவையின் மேன்மையை பாராட்டிப்பேசினார். இதழாசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், தனக்கே உரிய நகைச்சுவையுடன், 'சிட்டியின்' நுட்பமான எள்ளல்களை, பகிர்ந்து கொண்டார். முனைவர் தமிழ்ச்செல்வி எவ்வாறு அவரது 'மணிக்கொடி' ஆய்வுகளுக்கு 'சிட்டி' யும் அனரது துணைவியாரும் ஊக்கம் அளித்தனர் என்பதைக்கூறி மகிழ்ந்தார். மகனுக்கு மேல் மருமான் அல்லவா! அந்த உரிமையுடன், திரு. நரசய்யா, 'சிட்டியை' பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இவர் கடலோடியாகப்போவதை 'சிட்டி' விரும்பாவிட்டலும், இவர் விடுமுறையில் வந்த போது 'சிட்டி' ரயில் நிலையத்து வந்து வரவேற்ற்தை கூறி மனம் நெகிழ்ந்தார். சிறார்களின் பங்கு மேலும் சிறப்பு சேர்த்தது. ஒரு மழலை எல்லாரின் மனத்தைக் கொள்ளை கொண்டாள்.

'சிட்டியின்' நாமம் என்றும் வாழ்க.”

இன்னம்பூரான்
18 04 2009
********
“சிட்டி என்னும் சிரிப்பாளி” – நரசய்யா:

“ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்த இவரை ஈர்த்த ஆங்கில எழுத்தாளர்கள் பி.ஜி. வுட்ஹௌவுசும் ஜி.கே. செஸ்டர்னும்தான். ஆங்கிலத்தில் ஹாஸ்யம் கலந்த கட்டுரைகளை 1930ல் பச்சையப்பன் கல்லூரி நாட்க்ளிலேயே எழுதியிருக்கிறார்.

தன்னை ‘சர்க்கஸில் வரும் கோமாளி‘ என்று வருணித்துக் கொள்ளும் சிட்டி, அப்படித்தான் வாழ்க்கையிலும் இருந்தார்.

சாலிவாஹனன் (வி.ரா. ராஜகோபாலன்) இவ்வாறு கலாமோஹினியில் குறிப்பிட்டிருந்தார்.

“இவர் ஒரு பொல்லாத பேர்வழி என்று இவரது தோற்றத்திலிருந்தே தெரிகிறதல்லவா? பார்வைக்கு பரம சாது போலிருந்தாலும் பரிகாசம் என்று வந்துவிட்டால், போதும். படாதபாடு படுத்திவிடுகிறார். ஆங்கில இலக்கியத்தில் செஸ்டர்டன் என்பவர் கையாண்டதைப் போன்று கண்ணியமான பரிகாசத்தை இவர் தமிழில் கையாள்வது நிச்சயமாக ஆறுதலளிக்கக் கூடிய ஒரு விஷயம்தான்” (கலாமோஹினி :: 1943)

ஆங்கில எழுத்தாளர் ஸ்டீஃபன் லீ காக் நகைச்சுவையைப் பற்றிச் சொல்லும்போது, ‘நகைச்சுவை எவரையும் புண்படுத்தக் கூடாது’ என்று கூறுவார். அவரைப் போலவே சரித்திர எழுத்தாளரும் நகைச்சுவை எழுத்தாளருமான சிட்டி இதை முற்றிலும் கடைபிடித்தவர்.

அவர் வாழ்க்கை சிரமம் இல்லாமல் இருக்கவிலை; ஆனால் எந்த சிரமம் வந்தாலும் அதை ஒரு புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளும் திறமை அவரிடம் இருந்தது. அதேபோல மற்றவர்களுக்கு ஏதாவது கஷ்டம் இருந்தபோதெல்லாம் அவர்கள் இவரிடம் வந்துப் பேசினாலே அவை தீர்ந்து விடுமெனவும் நம்பினார்கள்.

சமீபத்தில் அவர் ஒரு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனியில் இருந்தபோது கூட, இந்த வயதிலும், அவரது நகைச்சுவை சற்றும் குறையாத நிலையில் அவரைப் பார்த்த சிறந்த மருத்துவர்கள் அவரது “பாசிடிவ் அவுட்லுக்” என்பதைப் பற்றி என்னிடம் கூறினார்கள். அதில் ஒருவர், சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர், “இந்தப் பெரிய மனிதருக்கு சிகிச்சை வெற்றியடைந்ததற்குக் காரணம் அவரது சிறந்த மனோதிடம்தான்” என்றார். இந்த மனோதிடம் நகைச்சுவையாளர் அனைவருக்கும் உண்டென்பதுதான் உண்மை!”
(டிசம்பர் 2004)
*********
சிட்டி என்றொரு தகவல் பெட்டகம்:
இடைக்கால இலக்கியத்தில் இளம்சூரியர், முதுசூரியர் என்ற இரட்டைப் புலவர்களின் படைப்புகள் உண்டு...இருவர் சேர்ந்து இலக்கியம் படைக்க முடியுமா? முடியும் என்று, அன்றைய இரட்டைப் புலவர்கள் போல் பிற்காலத்தில் சாதித்துக் காட்டியவர் ஒருவர் உண்டு. அவர் சிட்டி என்கிற பி.ஜி. சுந்தரராஜன்... கு.ப.ராஜகோபாலனுடன் இணைந்து, "கண்ணன் என் கவி' என்ற பாரதி ஆய்வு நூல், தி.ஜானகிராமனுடன் இணைந்து, "நடந்தாய் வாழி காவேரி' என்ற பயண நூல், சிவபாதசுந்தரத்துடன் இணைந்து, தமிழ்ச் சிறுகதை, நாவல் வரலாறுகள், பெ.சு. மணியுடன் இணைந்து "அறிஞர் வ.ரா. வாழ்க்கை வரலாறு' என அவர் எழுதிய நூல்கள் ஒவ்வொன்றும் மணி மணியானவை... தற்கால இலக்கியத்தின் உ.வே.சா. என்று சிட்டியைச் சொல்லலாம்...அவரது படிப்பறிவு பிரமிக்கவைக்கும் அளவு அசாதாரணமானது...சிலப்பதிகாரக் காப்பியத்தை ஆய்வுசெய்து, "கண்டெடுத்த கருவூலம்' என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியுள்ளார். சிவபாதசுந்தரத்தின் உதவியோடு, முதல் கவிதை நாவலான "ஆதியூர் அவதானி' என்ற படைப்பை வெளிக்கொண்டு வந்தவர்...தி.ஜா. பற்பல சித்தர்களைத் தேடித் தேடி நடந்தவர்.சிட்டியோ சித்தர்களில் எல்லாம் பெரிய சித்தர் காஞ்சிப் பரமாச்சாரியார் என்று நிறைவடைந்து விட்டவர்...சிட்டி ஆங்கில எழுத்தாளர் உட்ஹவுசின் பரம ரசிகர்...
சிட்டியை ஒரு "தகவல் பெட்டகம்' என்று சொல்லலாம்..."சாதாரண' ஆண்டில் (தமிழ் வருடம்) பிறந்த சிட்டியின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழ் எழுத்தாளரும்சிட்டியின் உறவினருமான நரசய்யா "சாதாரண மனிதன்' என்ற தலைப்பில் நூலாக எழுதியுள்ளார்...சிட்டியின் அதிர்ஷ்டங்களில் ஒன்று அவரது குடும்பம்...சிட்டி2000-இல் தம் 96-ஆம் வயதில் நிறைவாழ்வு வாழ்ந்து காலமானார்... அமரர் சிட்டிக்கு இப்போதும் ஆண்டுக்கொரு முறை அவரது குடும்பத்தினர் விழா எடுக்கிறார்கள்...
- திருப்பூர் கிருஷ்ணன் 
23 01 2011
© Copyright 2008 Dinamani
[முழுக்கட்டுரையையும் நீங்கள் ஆர்வத்துடன் படிக்கவேண்டும் என்று, குறிப்பால் உணர்த்தத் தான், சில பகுதிகளை மட்டும் இங்கு பதிவு செய்ததுள்ளேன்.
இன்னம்பூரான்
24 06 2011]