Thursday, March 21, 2013

பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ {1}


பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ {1} 

தேசாபிமானமும், சமுதாயம் ஓங்கி வளர்வதும், சுய முன்னேற்றமும்  ஒன்றுக்கொன்று முரண் இல்லை என்பது உறுதி. அவை ஒட்டு -மாங்கனிகள். தற்கால இந்தியாவில் தேசாபிமானத்துக்குப் போட்டியாக பிரிவினை வாதங்கள் வலுத்து வருகின்றன, மொழி வாரியாகவும், மற்றபடியும் நாட்டை கூறு போட்ட பின்னும். சமுதாயம் மங்கி தேய்ந்து வருகிறது. துண்டாட்டம் கொண்டாட்டமாக நிகழ்ந்து வருகிறது. மாநிலங்கள் தோறும் ‘அன்னியர்கள்’ சிதற்தேங்காய். பொறுக்கி தின்பவர்கள் நிழல் மனிதர்கள். பினாமி-பேமானி, ரவுடி-கேடி ஆகியோர் பரிபாலனத்தின் மீது கை வைத்து விட்டனர். ஏழை-பாழை, தலித் போன்ற நசுக்கப்பட்டோர் சுயமுன்னேற்றம் நாடுவதிலிருந்து வழி மறிக்கப்படுகிறார்கள். இந்த சூழலும் நாட்டுப்பற்றை அடகு வைப்பதும், சமுதாய இழப்புகளும், சுயநலமும் ஒன்றுக்கொன்று முரண் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன. எனவே, பாரத தேசமென்று பெயர்சொல்லப்படும் நம் நாட்டை போற்றி, மனித நேயம் என்ற உரமிட்டு, மக்கள் நலனை காப்பாற்றி, அந்த அடித்தளங்களின் நல்வரவாக அவரவர் தனக்கு மேன்மை நாடமுடியும், அதற்கு மக்கள் தொகை முழுதும் மெனக்கடவேண்டும் என்று உரைக்கவே, இந்தத்தொடர்.

இப்போதெல்லாம் இந்தியா வெளிநாடு ஊடகங்களில் தினந்தோறும் இருவகையில் பேசப்படுகிறது. 1. பல துறைகளில் இந்திய தனிமனிதர்களின் அபார சாதனை. 2. போகிறப்போக்கைப்பார்த்தால் இந்தியா உருப்படுமா? என்ற ஐயம். அந்த அலசல்களை, குறிப்பாக நடுவுநிலையுடன் அக்கரையுடன் எழுதப்பட்டவை நாம் உன்னிப்பாக படிப்பது நலம் பயக்கும். மார்ச் 23, 2013 இதழில் லண்டன் எகானமிஸ்ட் இந்தியாவை பற்றி மூன்று கட்டுரைகள் உளன. அவற்றில் ஒன்றை பற்றி, இன்று பேச்சு.

ஆங்கிலேய கலோனிய ஆட்சி நம்மை சுரண்டுவதற்கு முன் பாரத வர்ஷத்தில் சுபிக்ஷம் நிலவியது என்பார்கள், ஒரு சாரார். தாதாபாய் நெளரோஜி அவர்கள் இந்திய ஏழ்மை பற்றி எழுதிய வியாசம் இன்றைக்கு அப்பட்டமாக பொருந்தும். அதிகப்படியாகவே. ஏனெனில், இங்கு தற்காலம் இரு ஆளுமைகள். அரசு பட்ஜெட்டுக்களும்,  நிழல் மனிதர்களின் கறுப்புப்பணமும். 2010 வருடம் உலக வங்கி செய்த 151 நாடுகளில் செய்த ஆய்வுப்படி, இந்தியாவின் கறுப்பு பட்ஜெட், வெள்ளை பட்ஜெட்டின் ஐந்தில் ஒரு பாகம். அரசின் வெள்ளை பட்ஜெட்டுக்கு எந்த அளவு கறுப்பின் பரிமாணம் தெரியும் என்பது மர்மமாக இருப்பதால், கறுப்பின் வியாபகம் மிக அதிகம் என்று தான் தோன்றுகிறது. செல்வம் கொழிக்கும் நாடுகளிலும் கறுப்பு விளையாடுகிறது. இந்த அளவு இல்லை. மற்ற பேத்துமாத்துகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், நிலைமை படு மோசம். 1980க்கு பிறகு லஞ்சலாவண்யம் பெருவாரி வியாதியாகிவிட்டது.

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 42,800 பேர்கள் தான் வருமானம் காட்டி வரி செலுத்துகிறார்கள் என்கிறார் நிதி அமைச்சர், கேலி செய்தவாறு. நாடு அழுகிறது, இந்தப் பித்தலாட்டத்தைக்கண்டு. வருமான வரி கட்டும் அசடுகள் 2.5%. வரவேண்டியதில் மூன்றில் ஒரு பங்கு கூட வரி வசூல் ஆவதில்லை என்கிறார்கள், ஆய்வாளர்கள். அடுத்தபடியாக, கோடானுகோடி ரூபாய்கள், வீடு, மனை, பொன் ஆகியவற்றில். வரவு/செலவு எல்லாம் காசு. அது முழுங்குவது நாட்டின் செல்வநிலையில் 14%. ‘ஸ்விஸ்’ என்ற சொல் வெளி நாடுகளில் நம் செல்வத்தை பதுக்குவதைப் பற்றி. கறுப்பப்பண ஓடை மாரிஷியஸ் வழியாக, பெருக்கெடுத்து ஓடுகிறது. கிட்டத்தட்ட பூண்டியாகி விட்ட அரசு, கறுப்புப்பணத்தை மீட்ட முஸ்தீபுகளை தொடுங்குகிறது என்று அந்த கட்டுரை சொல்கிறது. அரசியல் வாதிகளுக்குத்தான் கறுப்புப்பண மோகம் என்பதையும் சொல்ல, அது மறக்கவில்லை. இத்தனை எழுதுவதின் பின்னணி: மார்ச் 13 அன்று நாகபூஷணம் என்ற இதழ் ஒரு ஒற்றன் வேலை செய்து மூன்று பிரபல வங்கிகளில் சட்ட விரோதமான பணமாற்றம் நடப்பதை ஊதி விட்ட நிகழ்வு.
என் கருத்து:
“ அரவம் தீண்டியது கறுப்பையோ, அதன் நிழலையோ அல்ல. நிழலின் நிழலை படம் பிடித்தது. இதெல்லாம் பல நாள் கூத்து. தமிழில் ‘வேலியே பயிரை மேய்ந்தது’ என்ற உவமை உண்டு. இங்கு கொட்டை போட்டவர்கள் அதை செய்கிறார்களாம்.”.
இன்னம்பூரான்
21 03 2013.

படித்த கட்டுரை:
http://www.economist.com/news/finance-and-economics/21573979-banking-scandal-highlights-problem-black-money-india-evasive-action

No comments:

Post a Comment