Friday, February 10, 2017

தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது யார்? - மறுமொழி



தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது யார்? - 
மறுமொழி


இன்னம்பூரான்
10 02 2017

பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=74976 10 12 2017

வல்லமை இதழாசிரியரின், ‘தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது யார்?  என்ற கட்டுரை சிந்தனையை தூண்டுவது மட்டுமல்லாமல், கடந்த கால நினைவுகளை அசை போட செய்கிறது. நிகழ்காலத்தைக் கண்டு கலங்க வைக்கிறது. வருங்காலத்து பற்றிய கவலைகளை அதிகரிக்க வைக்கிறது. ஒரு வரி பதில் எளிது. தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது தமிழர்கள் மட்டுமே என்று முரசு கொட்டலாம்; அல்லது பிலாக்கணம் பாடலாம். இரண்டுமே தவறான அணுகுமுறை. முதற்கண்ணாக, பவள சங்கரி, 

’எந்த அரசியல் கட்சியையும் சாராத என் போன்று பொது மக்கள் பலருக்கும் ஒரு கட்சித் தலைவராக ஜெயலலிதா மீது பல வகையான கருத்து வேறுபாடுகளும், வருத்தங்களும் இருந்தாலும், ஒரு நாட்டின் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் சாமான்ய மக்களின் நிலை குறித்த அச்சம் ஏற்படுவதில் ஆச்சரியமென்ன?’ 

என்று எழுப்பும் வினாவை பற்றி சற்றே விலாவாரியாக அலசுவோம். ‘கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? என்று வரும் திங்களுக்குள் தெரியபடுத்தவேண்டும் என்று உயர் நீதி மன்றம் இப்போது (காலை 11 மணி: 10 2 2017) கேட்பதே சாமான்ய மக்களின் அச்சத்தை பிரதிபலிக்கிறது. நேற்று என் தொலைக்காட்சி இயந்திரம் பழுது பட்டு இருந்ததால், நிம்மதியாக இருந்தேன். பின்னர் பல அவலக்காட்சிகளை கண்டு மனம் வெதும்பினேன். நான் கட்சி சாராதவன் மட்டுமல்ல; பிரகாசம் காரு முதல் ஜெயலலிதா வரை நடந்த அரசியல் காட்சிகளை நேரில் கண்டவன். 1969ம் வருடம் வீழ்த்தப்பட்ட தமிழனின் நற்பண்பு இன்றும் மிதிபட்டுத்தான் கிடக்கிறது. மூலகாரணம், தமிழனின் தரம் குறைந்தது தான்.

“.. மக்களின் மன நிலை எப்படியிருக்கும் என்று சம்பந்தப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவரவர் தாங்கள் பிழைக்கும் வழியை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே!...”

சட்டை போடாத சா.கணேசன் என்ற தேசபக்தன் ஒருவர் இருந்தார். ‘பணம் கொடுத்து வாக்கு வாங்கும் பணநெறியை இந்தியா கண்டதன்று’ என்ற அந்த சான்றோனின் வாக்கு பொய்த்து விட்டதே! இரண்டு திராவிடகட்சிகளும் செல்லாத நோட்டும் செல்லும் நோட்டுமாக அள்ளிக்கொடுப்பதை ஏற்கும், ‘திரு அமங்கலம் புகழ்’ தமிழன் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த சட்ட மன்ற உறுப்பினர் மக்களின் மனநிலையை பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? அவரவர் பிழைக்கும் வழியை இலக்காக வைத்துத்தானே மக்கள் முதலீடு நடந்தது. எனவே, இதழாசிரியரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது!

‘இந்த நாடு எப்படி விளங்கும்? ‘

மெத்த கடினம். ஜனம் நாயக பொறுப்பை தாமதமானால் கூட, கல்லும், முள்ளும் ஆன பாதையில் நடந்து, லஞ்சம் வாங்காமல் நிறைவேற்ற முயன்றால் கூட போதும். வெற்றி நமதே.

மனித உரிமை கமிஷன் என்று ஒன்று இருக்கிறதே? அதுகூட விலைபோய் விட்டதோ என்று அஞ்சும் அளவிற்கு அமைதியாக இருக்கிறதே!

மனித உரிமை கமிஷன் தலையிட வாய்ப்பில்லை. அது விலை போனதாக தோற்றமில்லை.

‘பிச்சைக்காரர்கள் போல துச்சமாக எண்ணி நம்மைக் கூறு போடத் துடிக்கும் இந்த அரசியல் வியாதிகளின் சுயரூபங்களை புரிந்து கொள்ளவேண்டிய கடைசி வாய்ப்பு. இதிலும் ஏமாந்து போனால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.’

இதழாசிரியரின் இந்த கருத்தை பிட் நோட்டீஸ் அடித்து, பட்டி,தொட்டி எங்கும் பரப்பவேண்டும். ஃப்ளெக்ஸ் பதாகைகள் கூட வைக்கலாம். தலைப்பு: ஏமாறதே! ஏமாறாதே!

‘இன்று நாட்டின் நிலை என்ன என்று எந்த அரசியல் தலைவர்களும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.’

கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக, இந்த அவல நிலை, தமிழ்நாட்டில்.

அவரவர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள போராடுவதே முக்கியப்பணியாக கொண்டிருக்கிறார்கள். 

ஆம். அவர்கள் நிழல் யுத்த மன்னர்கள்.

விவசாயிகளின் தற்கொலைகள் கூட இன்று சாதாரண செய்தியாகிவிட்டது. 

இங்கு ஒரு ஐயம் எழுகிறது. இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்கோலத்தை பொதிகையில் காண்பித்தார். அது வேளாண்மை பிராந்தியம்; கிராமீயம். ஆனால் ஜல்லிக்கட்டு வரவு செலவு லக்ஷக்கணக்கில். எங்கிருந்து அந்த பணம் வந்தது? விவசாயம் நன்கு நடைபெற்றால், தரகு ஒழிந்தால், விவசாயிகள் செல்வந்தர் ஆகலாம். அப்படியா, ஜல்லிக்கட்டார் திரவியம் சேகரித்தனர்? அப்படியானால், விவசாயிகள் ( ப.சிதம்பரம் போன்ற காஃபி எஸ்டேட்டார்) வருமான வரி கட்டலாமே! 
இந்த ஏறு தழுவதல் மற்ற ஜாபிதாவுக்கு சால்ஜாப்பு. வாடிவாசலில் மிரட்டப்படும் காளைகள் பீதியில் ஓடி வர, இளந்தாரி ‘வீரர்கள்’ கும்பலாகப் பாய்ந்து அவற்றை துன்புறுத்துகின்றனர். இது சங்க கால பண்பாடு என்றால், அக நானூற்று பகற்குறியும், சங்க கால பண்பாடு தான். நம் வீராதி வீர, சூராதி சூர, தீராதி தீரர்கள் ஒரு வெம்புலியுடன் சண்டைப்போட்டு, ஒரு பெண்புலியை சம்பாதிக்கட்டுமே. 

பக்கத்து ஊரான பள்ளிபாளையத்தில் தண்ணீர் குழாய்கள் சரியாக கவனிக்கப்படாமல் தெருவில் கீழே போய்க்கொண்டிருக்கிறது. இதை நான் நேற்று நேரில் கண்ட நிலவரம். நாட்டின் நிர்வாகம் இந்த இலட்சணத்தில் இருந்தால் மக்களின் எதிர்காலம் என்னவாகப் போகிறது? 

இது மக்களின் உதாசீனம் கலந்த நிர்வாக அலட்சியம்.

இதையெல்லாம் பற்றி எந்த கவலையும் இல்லாமல் சசிகலா அம்மையார் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று பேராசை கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது? 

கேள்வி சசிகலாவுடனேயோ, பன்னீர்செல்வத்துடனோ, இந்த இழை நிற்கவில்லை. சிண்டு, கூடு விட்டு கூடு பாயும் நிலை. பின்ணணி வினா: அரசு மேலாண்மையை நிர்ணயிக்கும் தகுதியுடனா, மக்களின் பிரிதிநிதிகள் இருக்கிறார்கள்? அவர்கள் தன்னிச்சையாக இயங்குகிறார்களா? மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறார்களா? என்பதே.   இன்றைய தமிழ்நாட்டு அரசியலின் தன்மை வெட்கத்தால் தலை குனிய வைக்கிறது. தற்காலம், அது தொங்கலில் இருப்பதாலும், அசாதாரணமான தாமதத்திற்கு பின், சசிகலா சம்பந்தப்பட்ட வழக்கை உச்ச நீத் மன்றம் எடுத்துக்கொள்ளப்போவதாக சுட்டியதாலும், மவுனம் காக்கவேண்டியிருக்கிறது. எந்த கட்சி பதவியிலிருந்தாலும் வன்முறைக்கு பஞ்சமில்லை என்பதும் உண்மை.

ஒரு இறுதி வரி: தமிழா! உன் விதி உன் கையில் மட்டும் தான் இருக்கிறது.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

















இன்னம்பூரான 

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, February 8, 2017

இதுவும் காதல் தானோ!

இதுவும் காதல் தானோ!

இன்னம்பூரான்
28 06 2014/07 02 2017
பிரசுரம்:http://www.vallamai.com/?p=74937

வனமாலி மஹாபாத்ரா பூரி ஜகந்நாத் கோயில் பண்டா (பூசாரி) ஒருவரின் மூத்தமகன். படிப்பெல்லாம் சொற்பம் தான். கோயில் மணி அடிக்க படிப்பு எதற்கு என்று அவருடைய தந்தை ஜகந்நாத் பண்டா, வனமாலியின் படிப்பை எட்டாங்கிளாஸ்ஸுடன் நிறுத்தி விட்டார். அது வரை விட்டுப்பிடித்ததே பெரிது. ஆனால், அவர் இவனை படிக்கவே விடமாட்டார். அதிகாலையில் தொடங்கும் பகவத் கைங்கர்யம் நடு நிசி வரை நீடிக்கும், பகவத் கைங்கர்யம் ‘கல கல’ என்று கனகதாரை பொழியும் என்பதால். எல்லா கோயில்களிலும் நாம் சம்பிரதாயமான பூஜை புனஸ்காரம் காண்கிறோம். சாமரம் வீசுவதிலிருந்து சடாரி சாதிக்கும் வரை, அபிஷேகம் செய்வதிலிருந்து ஆராதனை செய்யும் வரை, எல்லாமே சாஸ்திரோக்தமாக. இம்மி பிசகக்கூடாது. பிசகினால், பக்தியை மறந்த ஆயிரம் பிராமணோத்தமர்கள் ‘பிலு பிலு’ வென்று சண்டைக்கு வருவார்கள். பகவானை திரஸ்கரித்து கோயிலிலிருந்து வெளி நடப்பு செய்வார்கள். பரங்கி துரைத்தனத்தாருக்கு அநாமதேய புகார் மனு அனுப்புவார்கள். சார்! இது பழங்கதை. நூறாண்டுகள் ஆகப்போகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதான் பரங்கி துரைத்தனத்தார். இத்தனைக்கும், அவன் மிலேச்சன்; கிருஸ்துவன்; குடிகாரன்.

திருப்பதி ‘மிராசு’ போல இங்கும் உரிமை பாராட்டும் பண்டா பிரமுகர்கள் உண்டு. பல ஆண்டுகளாக, பக்தகோடிகளின் அனுக்ரஹத்தால், இவர்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது. மயிலிறகு வைக்காமலே இவர்களது வங்கி சேமிப்பு புத்தகம் குட்டி போடுகிறது. அபரிமிதமான பொன்மாரி பெய்வதால், இவர்களது லேவாதேவி வியாபாரம் கந்து வட்டி அசுரகுட்டிகளை ஈன்றெடுக்கிறது. பகவான் ஜெகந்நாத் இந்த ஈனச்செயல்களை கண்டிக்கிறான். அவனை யார் கேட்டது? விவாஹ சுபமுஹூர்த்தில், அந்த பிள்ளையாண்டான் பெண்ணுக்கு மாங்கல்ய தாரணம் செய்யும்போது கெட்டி மேளம் கொட்டச்சொல்வதே, அமங்கல சொற்கள் காதில் விழாக்கூடது என்பதற்கு. இங்கே பகவானின் சொற்களை கேட்கக்கூடாது என்று தான் பயங்கர ஒலி தரும் கண்டாமணிகளை அடிக்கிறார்கள் போலும்!

இந்த சம்பிரதாயமான பூஜை புனஸ்காரம்,சாஸ்திரோக்தம் மட்டும் தான் பூரி ஜகந்நாத் கோயிலில் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். சொல்லப்போனால், அந்த பிராந்தியத்துக்கே எஜமானன்  ஜகன்னாதர் தான். எல்லார் வீட்டிலும் தவழும் குழந்தையும் அவரே. ஊழியம் நிமித்தமாக, நான் பூரி செல்ல நேரிடும் என்றாலும், அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு ஜகன்னாதன் தரிசனத்துக்கு செல்வது உண்டு. இரவு கொடுக்கும் மஹா பிரசாதம் ஒரு படி சாதம். அங்கு விளையும் நெல்லை போரடிக்க யானை வேண்டும். அத்தனை அபரிமிதமான விளைச்சல் பூமி. அந்த பிரசாதத்தை இரண்டு நாள் சாப்பிடலாம். ஊரே சில நாட்கள் பொலிவு இழந்து கிடக்கும். கேட்டால், வருத்தத்துடன் அவனுக்கு ஜலதோஷம் என்பார்கள். காலையில் பல் தேய்த்து விட்டு, முகம் அலம்பின பின் கஷாயம் கொடுப்பார்கள். குழந்தை ஜகன்னாதன் குடிப்பதாக பாவனை செய்வதால், பண்டா மனது வைத்தால், நமக்கு அருமருந்து பிரசாதமாகவும் கிடைக்கும். கறாராக தக்ஷிணையும் வாங்கி விடுவான். கோயிலுக்கு எதிரே மிகவும் அகலமான கிராண்ட் ரோடு. திருவிழா அன்று லக்ஷோபலக்ஷம் மக்கள் வடம் பிடிக்க, அண்ணன் பலபத்ரன், ஜகன்னாதன், தங்கை சுபத்ரா மூவருக்கும் தனித்தனி தேர். சாலையின் அடுத்த முனையில் இருக்கும் அத்தை வீட்டுக்கு போகும் காட்சி அபாரமாக இருக்கும். கண்டாமணி சத்தம் வானை பிளக்கும். பூரி மாஜி மகராஜா தங்க விளக்குமாறால், தேரின் தளத்தை சுத்தம் செய்த பின், கலெக்டர், மந்திரிமார், முதல்வர் எல்லாரும் கும்பிட்ட பின். ஆடி , அசைந்து, அந்த மூன்று தேர்களும் செல்வது கண்கொள்ளா காட்சி. அத்தை வீட்டில் கொம்மாளம் அடிக்கப் போராங்களாம்!

தொடரப்போவது: நான் கடவுளை பார்க்கப்போன படலம்.

சித்திரத்துக்கு நன்றி: 



Sunday, January 29, 2017

பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890 - அக்டோபர் 1, 1973)

நண்பர் கணேசனுக்கு என் வாழ்த்துக்கள். பூமியின் ஒரு கோடியில் நீங்கள்; மற்றொரு கோடியில் நான்.
இருவருக்கும் ஒரே வினாடியில் பாபநாசம் சிவன் அவர்களின் கடாக்ஷத்தை பெறுகிறோம். அதிகாலை பஜனைகளில், நானும் அவர்களுடன்,சில நாட்களில்,பஜனைகளில் கலந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிட்டியிருந்தது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு, 'அன்றொரு நாள்' தொடரில் அவரை பற்றி நான் எழுதிய கட்டுரையை, இங்கு பதிவு செய்கிறேன்.
அன்புடன்,
இன்னம்பூரான் 
ஜனவரி 29, 2017
********************
அன்றொரு நாள்: அக்டோபர் 10,
பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890 - அக்டோபர் 1, 1973)

கையேந்தி பவன்களில் உணவருந்தி, மச்சு, குச்சுக்களில் குடக்கூலி இருந்து, காலேஜில் படியாமல் இருந்து வந்த காலகட்டத்தில், கபாலி கோயில் சுத்து வட்டாரத்தில் அஞ்ஞாத வாசம் செய்ததுண்டு. மார்கழி மாதம் அதிகாலையில் குளத்தாண்டே ஜிலு ஜிலு மாருதம் வீச,படா படா பெட்டி ஆர்மோனியம் ஒலிக்க பஜனை இசைத்து வரும் பாபநாசம் சிவன் அவர்களுக்கு, ஜால்ரா போட்டதுண்டு. அது அந்தக்காலம். திரு. கிருஷ்ணன் வெங்கடாசலம் பெரியவரை பற்றி நேர்த்தியாக எழுதியிருக்கிறார். அவற்றிலிருந்து சில துளிகள். முழுதையும் படிக்க உதவியாக, உசாத்துணை.

“...பாபநாசம் சிவன்: அவரைத் தமிழ்த் தியாகய்யர் எனக் கூறுவார்கள். சினிமாவுக்காக அல்லாமல் ஏராளமான தமிழ்ப்பாடல்களை எழுதி, அவைகள் சினிமாவில் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன... தெலுங்கில் எழுதிய தியாகய்யர் போல் தமிழில் ஏராளமான பக்திப்பாடல்களை இயற்றி இன்றளவும் அவைகள் கச்சேரி மேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.பாடல்களை எழுதும்போதே அவற்றிற்கான மெட்டுக்களையும் அமைத்துவிடும் திறன் இவருக்கு உண்டு. அவைகள் யாவும் கர்நாடக சங்கீத மெட்டில் அமைந்திருந்ததால் சினிமா இசையமைப்பாளர்களுக்கு எவ்வித சிரமமும் இருந்ததில்லை...தஞ்சை மாவட்டம் போலகம் எனும் ஊரில் 1890-ல் பிறந்த இவரது இயற்பெயர் ராமய்யா. சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். இவரது இளமைக் காலம் திருவனந்தபுரத்தில் கழிந்திருக்கிறது...் ஏழை பிராமணர்கள் இலவசமாகச் சாப்பிட முடியும். அப்படி அன்னதானம் அளிக்கப்படும் இடங்களுக்கு ஊட்டுப்புரை என்கிற பெயர் உண்டு. இங்கு தான் ராமய்யாவுக்கு சாப்பாடு... பாலக்காடு அருகே நூருணி என்கிற ஒரு ஊர். இந்த ஊரைச் சேர்ந்த பாகவதர் ஒருவரின் நட்பு இங்கே கிடைத்தது. அது இவரது இசை ஞானத்தை வளர்க்க உதவியாக இருந்தது...1939 ஆம் ஆண்டு சென்னையில் குடியேறினார். வீணை எஸ் பாலச்சந்தரின் தகப்பனார் சுந்தரம் அய்யரின் நட்பு கிடைத்தது. சுந்தரம் அய்யரின் மூத்தமகன் எஸ் ராஜம் (ஓவியர்) எஸ் பாலச்சந்தர், மகள் எஸ் ஜெயலட்சுமி மற்றும் சுந்தரம் அய்யர் ஆகியோர் நடித்த 'சீதா கல்யாணம்' என்கிற திரைப்படத்திற்கு தன் முதல் பாடல் இயற்றினார் பாபநாசம் சிவன். மைலாப்பூரில் வாசம். ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் நடைபெறும் பஜனை கோஷ்டியில் பிரதான பாடகர். மாட வீதியைச் சுற்றி வரும் இந்த பஜனை கோஷ்டி, கற்பகாம்பாள் பேரில் பல பாடல்களை இயற்றிப் பாடியிருக்கிறார்...பாபநாசம் சிவன் தனது குருவாக பிரபல சங்கீத வித்வான் கோனேரிராஜபுரம் வைத்யநாதய்யரையே கருதி வந்திருப்பதாக ஒரு பேட்டியில் அவரது மகள் திருமதி ருக்மணி ரமணி அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சிவனின் சகோதரன் ராஜகோபாலய்யரின் புதல்வி மறைந்த எம்ஜியாரின் துணைவியார் வி.என். ஜானகி என்கிற பதிவுகள் உள்ளன. ..இவரது கீர்த்தனைகள் பலவும் புத்தக உருவில் வெளிவந்திருக்கிறது. சிந்து பைரவி ராகத்தில் இவர் இயற்றி, ஆலத்தூர் சகோதர்களால் பாடப்பட்டு, இசைத்தட்டாக வெளிவந்த பாடப் 'சந்திரசேகரா ஈசா', இப்பாடல் இன்றும் கூட பல மேடைகளில் கர்நாடக இசை வித்வான்களால் பாடப்படுகிறது. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் கண்களிலிருந்து கண்ணீர் பெருகுவதைத் தவிர்க்கவே முடிவதில்லை...இவைகள் தவிர தமிழின் முக்கியமான சில படங்களில் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. 1939ல் சேவாசதனம். 1943ல் குபேரகுசேலா. இதில் குசேலராக மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். காலத்தால் அழிக்க முடியாத திரைக்காவியம் 'தியாகபூமி'. இப்படத்தில் நடித்த பாபநாசம் சிவன் அவர்களைத் திரையுலகம் மறக்க இயலாது...1961 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது அளித்து கௌரவித்தது. காமகோடி பீடம் இவருக்கு 'சிவபுண்ணியகானமணி' என்கிற பட்டத்தை வழங்கியது. தமிழ் சினிமா உள்ள காலம் முழுவதம் பாபநாசம் சிவனின் பெருமை திரையுலகில் நிரந்தரமாக இருந்து வரும்.
மிகவும் சிறப்பான சில திரைப்படப்பாடல்களை இப்போது நினைவு கூரலாம்.

உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ - அசோக்குமார்
பூமியில் மானிட ஜென்மம் அடைந்தும் ஓர் - அசோக்குமார்
மன்மத லீலையை வென்றார் உண்டோ - ஹரிதாஸ்
அன்னையும் தந்தையும் தானே - ஹரிதாஸ்
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி - சிந்தாமணி
மனமே கணமும் மறவாதே - சாவித்திரி
வதனமே சந்திரபிம்பமோ - சிவகவி
மறைவாய் புதைத்த ஓடு - திருநீலகண்டர்

பாபநாசம் சிவனின் பாடல்கள் இடம் பெற்ற சில முக்கியமான படங்கள்:அசோக்குமார் - 1941லிருந்து செஞ்சுலட்சுமி - 1958 வரை.

திரு. தி. ரா. ச ஒரு நிகழ்வை நினைவுறுத்துகிறார்~ ‘... அவருக்கு சதாபிஷேக விழா நடந்தது.சென்னையில் கிருஷ்ணகான சபாவின் சார்பில் அது 1971வில் நடைபெற்றது... அந்த கொட்டும் மழையிலும் ஒரு சைக்கிள்ரிக்ஷாக்காரன் வண்டியை ஓட்டிகொண்டு வந்துகொண்டிருந்தான். கிட்டே வந்தவுடன் "ஐய்யா போலாமுங்களா" என்றான்.எனக்கு ஒன்றும் புரியவில்லை."என்ன மாமா கார் வரவில்லயா" என்றேன்."இல்லை அம்பி இவன்தான் எனக்கு எங்கே போனாலும் வந்து இருந்து பத்திரமாக கூட்டிக்கொண்டு போகிறான்.
காருக்கு 50ரூபாய் குடுத்தால் 5 நிமிஷத்தில் மயிலை கொண்டு விட்டுவிடுவான்.
ஆனால் அதே 50 ரூபாயை இவனுக்குக் கொடுத்தால் அரைமணியாகும்.
இவன் குடும்பமே ஒரு வாரத்துக்கு வயிறாறச்சாப்பிடும்" என்றார்...  அந்த இழையில் திரு. தி. ரா. ச.வுடன் நம் மின் தமிழ் முன்னணி கீதா சாம்பசிவம் 2007லியே அரட்டை அடிக்கிறார். நான் புதிசா சொல்றதுக்கு என்ன இருக்கு?
இன்னம்பூரான்
10 10 2011

pastedGraphic.pdf

உசாத்துணை:

‘அம்பா நீ இரங்காயெனில்...’ எம்.எஸ். பாடியது.

Friday, January 27, 2017

மாரியாத்தா செத்துப்போனாள்



pastedGraphic.pdf
Denied proper funeral, Tamil Nadu ragpicker cremates grandmother in public place
TNN | Jan 27, 2017, 08.25 AM IST
மாரியாத்தா செத்துப்போனாள்pastedGraphic_1.pdf
TRICHY: In a stark display of indifference to the plight of the wretched, villagers of Nerusalakudi, near Vaaladi, refused to allow a ragpicker to bury his grandmother's body on the local church premises or cremate it on the cremation ground. The distraught man had no option but to cremate the body in a public place using dry leaves. Murugesan, a 45-year-old toy seller who also picked rags, found Mariammal, 75, dead on Wednesday morning in the tent where they lived. She had been ailing for the past few days and the chilly weather had worsened her condition.

Murugesan, who could not afford to take the body to Velankanni, his native place, first contacted the local church administration.The authorities refused to allow the body to be buried on the premises.


pastedGraphic_2.pdf
Murugesan with his pushcart (Photo: R Baskar)
His next choice was the village cremation ground, but the villagers too rejected his plea to perform the funeral. Murugesan decided to cremate the body in an open place near the village using dried leaves. Soon after he lit the pyre, villagers informed the Lalgudi police. They rushed to the spot and found the body partly burned.They doused the fire, recovered the body and arranged for a proper funeral.
"It was a natural death.Since he didn't get permission to bury or cremate the body in the village, he cremated the body in an open place. We stopped it and arranged for a proper funeral," said SI Rajeswari.

Police ruled out foul play in the woman's death and arranged for a certificate from the village administrative officer. Trichy superintendent of police T Senthilkumar told TOI that he was not aware of the incident. "But the police always explore all avenues to help the people.Today's incident is one such case," he said.



வாய்பேச்சு வீரர்களும், எருது பாய்ச்சல் தீரர்களும், திராவிட செம்மல்களும், மரீனா புரட்சியாளர்களும்,
ஆரியத்தை கொளுத்தும் வரலாற்று பெட்டகங்களும்,எந்த இழவு நடந்தாலும் பார்ப்பனரை தூஷிப்பவர்களும் ஆன தமிழர்கள் செத்தாலும் ஏழைக்கு கொள்ளி வைக்க இடம் தரமாட்டார்கள். மாரியாத்தாவும் அவர்களை விட்டு வைக்கமாட்டாள்.

சித்திரத்துக்கு நன்றி: http://keetru.com/literature/poems/images/Sorrow_lady_500.jpg

Tuesday, January 24, 2017

ஜல்லிக்கட்டு/ இருவர் மரணம்/ இழப்பீடு

ஜல்லிக்கட்டு/ இருவர் மரணம்/ இழப்பீடு

Innamburan S.Soundararajan Wed, Jan 25, 2017 at 11:03 AM

Bcc: 

ராப்பூசல் ஜல்லிக்கட்டில்  நடந்த இந்த துர்மரண நிகழ்வை உள்ளது உள்ளபடியே தொலைக்காட்சியில் கண்ட போது மனம் பதைபதைத்தது. தமிழ் பண்பும் அங்கு சிதைக்கப்படுவதை கண்டு கவலை மிகுந்தது. இன்றைய சூழ்நிலையில் ட்றம்ப் கூட ஜல்லிக்கட்டை ஆதரிக்காமல் பேசினால், மெரினா கடற்கரையில், 'மாணவர்களால்'உதைப்பட்டு சாவார். ஆகவே, கலித்தொகை ஏறுதழுவலுக்கு ஒவ்வாத வகையில் தற்காலம் நடத்தப்படும் பந்தய சூதாட்டம், இளைஞர்கள் சாவு, காளையில் பீதி, அவசர சட்டம், போராட்டம், பொது மக்கள் அவதி ஆகியவற்றை பற்றி பேச காந்திஜியும், பாரதியாரும் நடுங்கக்கூடிய நன்னாள், இது.

எது எப்படியிருந்தாலும், அகாலமரணம் அடைந்த ராஜாவின்,மோஹனின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 

இரு வினாக்கள் எழுகின்றன:

1. திருமாவளவன் அவர்கள்,அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் சொந்த நிதியிலிருந்தோ/ கட்சி நிதியிலிருந்தோ, மற்ற ராப்பூசல் கிராமத்தில் அந்த காளையை பழக்கிய செல்வந்தரோ ஏதாவது உதவினார்களா?
2. இந்த துர்மரணங்கள் விபத்தினால் நிகழவில்லை. வரவழைத்துக்கொண்டவை, சுய விருப்பத்தின் அடிப்படையில். ராஜா ஏழை; குடும்பஸ்தர். மோஹன் படித்த மேதை. வரிப்பணத்தை மேற்படி இழப்பீடுகளில் செலவழிப்பது சரி தானா?
சிந்தனை செய்யுங்கள். காழ்ப்புணர்ச்சி தவிர்க்க வேண்டுகோள்.

இன்னம்பூரான்
*******************************
புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாகட்டிடத் தொழிலாளியான இவருக்கு மனைவி கலாமகன்கள் பொன்மணிநிதர்சன்உள்ளனர்.
ராப்பூசலில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றபோதுவாடிவாசலில் ராஜா நின்றுள்ளார்அங்கு சீறிப் பாய்ந்து வந்த காளைராஜாவின் இடுப்பில்முட்டியதால் காயம் அடைந்த ராஜா உயிஇழப்பீடுரிழந்தார்.இதேபோலகீரனூர் அருகே யுள்ள லெட்சுமணபட்டியைச் சேர்ந்த மோகன்எம்.., எம்.பில்படித்தவர்அதிமுக ஆதரவாள ரான மோகன்அமைச்சர் சி.விஜய பாஸ்கருடன் இருந்துராப்பூசல் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடு களைக்கவனித்துள்ளார்.
இந்நிலையில்நேற்று நடை பெற்ற ஜல்லிக்கட்டின்போது காளையை அடக்க மோகன் முயன்ற அவரது இடுப்பில் காளை முட்டியதால் இலுப்பூர் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்பின்னர்இருவரது சடலங்களும் புதுக்கோட்டை அரசுமருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை முடித்து ஊருக்கு கொண்டு செல்லப்பட்டன.
அவர்களையே நம்பி இருந்த அவர்களது குடும்பத்தினரை தவிக்கவிட்டுச் சென்றதாக இவர்களது உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.'
~ தி இந்து ஜனவரி 23, 2017

'ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசர சட்டம் நிறைவேற்றிவிட்டோம் என தமிழக அரசாங்கம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில்புதுக்கோட்டையில் தமிழக அமைச்சர் ஒருவரால் தொடங்கிவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் 2 பேர் பரிதாபமாகஉயிரிழந்துள்ளனர்சுமார் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர்உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பாதுகாப்பாக நடத்துவதில் அக்கறைகாட்டாமல் அவசர சட்டம் கொண்டுவந்ததற்கு சொந்தம் கொண்டாடுவதில் மட்டுமேஆர்வம் காட்டிய தமிழக அரசின் நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம்உயிரிழந்த இளைஞர்களது மரணத்துக்குதமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா 25 லட்சம் ரூபாய்இழப்பீடு வழங்கவேண்டும்காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியும்தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கவேண்டும் என விடுதலைசிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். '

~ தினத்தந்தி &  தி இந்து ஜனவரி 23, 2017


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, January 22, 2017

எங்கே தொலைந்து போனாள், வீரி?

எங்கே தொலைந்து போனாள், வீரி?

Innamburan S.Soundararajan Sun, Jan 22, 2017 at 9:49 PM



எங்கே தொலைந்து போனாள், வீரி?



Friday, September 4, 2015, 5:00
– இன்னம்பூரான்.
பிரசுரம்: வல்லமை மின்னிதழ்: செப்டம்பர் 4, 2015

என்றுமில்லாதத் திருநாளாக, இன்று பல வருடங்களுக்குப் பிறகு தமிழ்த்திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன்: ’36 வயதினிலே’. பெண்ணினம் படும் அவத்தைகளை மென்மையாகவும், அழுத்தம்திருத்தமாகவும் நடித்துக்காட்டினார், நடிகர் ஜோதிகா. நினைவுகள் நம்மைக் கேட்டுக்கொண்டு வந்து போவது இல்லை. அவற்றின் போக்கே அலாதி. இறைவனைத் துதிக்கும்போது காதலி தோன்றுவாள்; அவளுடன் அன்யோன்யமாக இருக்கும்போது, என்றோ நம்மிடம் வளர்ந்த பூனைக்குட்டி நினைவில் தோன்றுவான். அந்த மாதிரி, ஜோதிகாவின் நடிப்புத்திறனால், எனக்கு வீரியை பற்றிய கவலை பற்றிக்கொண்டது.

கதாபாத்திரங்கள் எல்லாம் சுத்த கற்பனையே என்று சத்தியப்பிரமாணம் செய்து விட்டுத்தான் உண்மையைப் பாயாய் சுருட்டிப் பதிவு செய்வார்கள். விமர்சனம் செய்பவரும், தன் பங்குக்கு, ‘இலக்கியம் வாழ்வியலின் கண்ணாடி’ என்று ஒத்துப்பாடுவார். வீரியின் பெயரை கூட, நான் மாற்றவில்லை. மாற்றினால், அது கதையின் வழுவாக அமையும். அவளுக்குத் தமிழ் தெரியாது என்றாலும், ‘உள்ளது உள்ளபடி’ ஊரையும், மற்ற விவரங்களையும் கொடுக்க நான் தயாராக இல்லை. அவள் பழங்குடி இனம் தான். லம்பாடி என்று பெயர். அதற்காக நான் வம்படிக்கப்போவதில்லை. சொல்வது எல்லாம் நிஜம்; ஆங்காங்கே பொருத்தமான மிகையும், கற்பனையும் துணை புரியும்.

நாங்கள் வடநாட்டின் ஒரு மாநிலத்துக்கு மாற்றப்பட்டுப் போனபோது, ஏற்கனவே நண்பராக இருந்த முன்னவரின் வீட்டிலேயே நாங்கள் வசிக்க நேரிட்டது. பல அன்றாட அலுவல்களைப் பற்றி பெண்ணரசிகள் பேசிக்கொண்டனர். அதன் பயனாக, கதவோரம் நின்று கொண்டிருந்த பேரழகி வீரி அவர்களின் சிபாரிசின் பேரில் எங்களுக்கும் ஏற்பாடு ஆனது. சில எச்சரிக்கைகளும் தமிழில் கொடுக்கப்பட்டன. அன்றிலிருந்து, வீரி ராஜ்யம் தான். சூது வாது அறியாத 16 வயது பதுமை போன்ற பெண். சிவப்புத்தோலுக்கு மதிப்பு கொடுக்கும் சமுதாயத்தில், அவளுடைய மாநிறம் தூக்கி அடித்தது. புயல் மாதிரி தான் உள்ளே நுழைவாள். கதவைத் திறந்து வைத்திருப்போம். இல்லையெனில் மணி அடித்து கலாட்டா செய்து விடுவாள். ஊரைக் கூட்டி விடுவாள். எதிர் வீடு உள்ளூர் கலெக்டரது. அவர் வீட்டில் மணி அடித்து விட்டு, எங்கள் திறந்த வீட்டில், ‘கை வீசம்மா! கை வீசம்மா’ என்று அட்டகாசமாக நுழைந்து விடுவாள். அந்த மாநிலத்தில் வீட்டுக்குக் கடைநிலை ஊழியர் கிடையாது. அவரே கதவை திறுந்து வந்து, ‘ஓ! வீரியா?’ என்று சிரித்து விட்டுப் போய்விடுவார். யாருமே அவளிடம் கடுஞ்சொல் சொல்லமாட்டார்கள். ஏனெனில் அவள் ஒரு குழந்தை.

எங்களுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் வியர்த்தமாயின. அறைகளில் கண நேரத்தில் கூட்டி, பெருக்கி, மெழுகும் வீரி, குளியல் அறையில் ஒரு மணி நேரம் இருப்பாள். அது முடிந்த பின் ஜொலிப்பாள்; சோப்பு கணிசமாகக் கரைந்திருக்கும். பவுடர் டப்பா காலி. கூந்தல் தைலம் காலி. வஸந்தா, அவளுக்கு வேண்டிய ஒப்பனைச் சாமான்கள் வாங்கித்தருவதாகவும், எங்கள் பிரத்தியேக சோப்பு வகையறாவை விட்டு வைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். எங்கிருந்து கிடைத்ததோ, அவளே பட்டியல் கொடுத்தாள்: பியர்ஸ் க்ளிசரைன் சோப்பு, பாண்ட்ஸ் பவுடர், ஹிமாலயா ஸ்னோ, குஸுமாஞ்சலி என்ற கூந்தல் எண்ணைய். எனக்கு சம்பளம் போதாது என்பதால், நாங்கள் அந்த உயர்தர அலங்கார பொருள்களுக்கு போகவில்லை என்றாலும், அவளுக்கு வாங்கிக்கொடுத்தோம், லாக்டோ காலமைன் உள்பட. நோ யூஸ். அவள் அவற்றுடன் மற்றதையும் உபயோகிப்பாள்; பேசிப்பயன் இல்லை. ஆனால், அவள் மாதிரி வஸந்தாவின் அடர்ந்த கூந்தலுக்கு அகில் புகை சாற்ற, வீரிக்கு இணை வீரியே. சமையல் அறை சூபர்விஷன் செய்யும்போது இரண்டு எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, ‘நன்றாயிருக்கிறது’ என்று சான்றிதழ் கொடுப்பாள். ஆகமொத்தம் வீட்டுக்குச் செல்லப்பெண்.
ஒரு நாள் தனக்கு கல்யாணம் என்று சொன்னாள். ஒரு நோஞ்சல் பையனை கொண்டு வந்து, அவன் தான் முறை மாப்பிள்ளை என்றாள். ஏதோ சொல்லி விட்டு, எங்கள் எதிரிலேயே ஒரு ஷொட்டு வாங்கிக்கொண்டான். நாங்கள் திருமணத்துக்கு சீர் எடுத்துச் சென்றிருந்தோம். சிறிது நேரம் தான் இருக்க முடிந்தது. ஒரே டான்ஸ். கொம்மாளம். வேலையை விட்டு விட்டாள். குலத்தொழிலாகிய கிருஷ்ணன், ராதை வகையறா களிமண் பொம்மைகளைச் செய்து தென்னாட்டில் கூவிக்கூவி விற்கப்போவதாகச் சொன்னாள். பல வருடங்கள் கடந்தன. ஒரு நாள் பல்லாவரம் பக்கம் காரில் சென்ற போது வீரி சாயலில் ஒரு பெண்ணைப்பார்த்து, வஸந்தா திரும்பவந்து கவனித்து, உறுதி செய்து கொண்டபின், இறங்கி குசலம் விசாரித்தோம். மூன்று குழந்தைகள்; வாடிய முகம்; மெலிந்து போன உடல். களைப்பு. ஒரு பாடாக, அருகாமையில் இருக்கும் அவர்கள் கூட்டத்தில் இவர்களது பொம்மைகளை ஒப்படைத்து விட்டு, அந்தக் குடும்பத்தை வீட்டுக்கு அழைத்து வந்தோம். முசுடாகவே இருந்த அவள் புருஷன் பீடி பிடிக்க வெளியில் போய்விட்டான். குழந்தைகள் புரண்டு விளையாடின. ஏழை வீட்டுக் குழந்தைகளுக்கு, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தெரியும் போலிருக்கிறது!

பெருங்குரல் எடுத்து அழுதாள். கணவன் சோற்றுக்குப் பணம் கொடுப்பதில்லை, குடிகாரன், அடிப்பவன் என்றாள். அவனுக்கு மேலும் இரு தாரங்களாம். பஞ்சாயத்தில் விவாகரத்து கேட்டாள், லம்பாடி இன வழக்கப்படி. அந்தக் கட்டப்பஞ்சாயத்து மறுத்து விட்டதாம். மேலும் பல இன்னல்கள் பற்றிச் சொல்லி தேம்பினாள். அதை உங்களிடம் சொல்லமாட்டேன். ஒரு கணிசமான தொகையைக் கொடுத்து விட்டு, அவர்களைக் கொண்டு போய் விட்டு வந்தாலும், நாங்கள் ஆவன செய்யவில்லை என்ற சோகம் எங்களை வீட்டு நீங்கவில்லை.
எங்கே தொலைந்து போனாள், வீரி?

சித்திரத்துக்கு நன்றி: 


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, January 20, 2017

ஐ ஏ எஸ் தேர்வு உறுதி: 1



ஐ ஏ எஸ் தேர்வு உறுதி: 1

Friday, January 13, 2017, 5:03

திரு. இன்னம்பூரான் அவர்கள் ஓய்வு பெற்ற அரசு வருவாய்த்துறை அதிகாரி. இவர் ஐ.ஏ.எஸ் சேர விரும்பாமல் சேர்ந்தவராயினும், தம்முடைய 22ஆம் வயதில், முதல் முறையே ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஓய்வு பெற்ற பின் இறுதிச் சுற்றில் ஐ.ஏ.எஸ் மாணவர்களை நேர்காணல் செய்து தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் குழுக்களில் பணியாற்றியுள்ளார். அழகப்பா பல்கலைகழகத்திலும், சென்னை திறந்த வெளி பல்கலைகழகத்திலும் இணை வேந்தர்கள் மூலம் அறிமுகம் செய்துள்ளார். லெக்ஸிஸ்-நெக்ஸிஸ் என்ற உலகப்புகழ் பெற்ற பதிப்பகம் இவரை அணுகி, அவர்கள் இதற்காக எழுதிய உரூ.40 ஆயிரம் பெறுமானமுள்ள நூல்களையும் மனமுவந்து அளித்துள்ளனர். ஐ.ஏ.எஸ். மாணவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய முக்கியமான தகவல்கள் குறித்த ஒரு கையேடையும் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திரு இன்னம்பூரான் அவர்களின் இத்தொடர் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும் என்று நம்புவோம்.
ஆசிரியர்


ஐ ஏ எஸ் தேர்வு உறுதி: 1
இன்னம்பூரான்

தைப்பொங்கல் தினம் ஒரு நுழைவாயில் என்க. வாழ்வியலின் நுழைவாயிலில் ஆவலுடன் நிற்பவர்கள் பள்ளி இறுதி வகுப்பு மாணவ மாணவிகள். அவரவரது வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பது ஒரு புதிராக இருக்கும் . அந்தப் பருவத்தில், மனதை ஆட்கொள்வது குழப்பம். பெண் குழந்தைகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா திகைப்பையும், இனம் தெரியாத அச்சத்தையும் தருகிறது. தோளுக்கு மிஞ்சிய தனயன், அரும்பு மீசையை கண்ணாடியில் பார்த்து, பார்த்து வியந்து போகிறான். ஆம். வயதுக்கு வரும்போது இருபாலாருக்கும் கலவரம் மிகுந்து வரும். உடல் வலிமையும் மனப்பாங்கும் புத்துணர்ச்சி பெறுவதால், ஆடல், பாடல், உடற்பயிற்சி, விளையாட்டு ஆகியவை மீது அதீத ஆர்வம் வரலாம். பாலியல் பற்றி கசமுசா தான். புரியாத மர்மாகிய அது சதா சர்வகாலமும் மனதை விட்டு அகலாது. படிப்பு வேம்பாக கசக்கலாம்.

அநேக பெற்றோர்களுக்கு இந்த மென்மையான சூழ்நிலையில், தான் அனுபவித்து வெளியேறிய உணர்வுகளை மறக்காமல், உரிய ஆலோசனையை, திறந்த மனதுடன், வழங்கும் திறன் இருப்பது கூட இல்லை. பொறுமையும் இருப்பதில்லை. ஆடிப்பாடி கறக்கவேண்டிய மாட்டை வசை பாடி, அடித்து, உதைத்துக் கறக்கப் பார்ப்பார்கள். பெரும்பாலும் விளைவு விபரீதமாக அமையும். கட்டாயப்படுத்தி பெண்ணை திருமணம் செய்து கொடுப்பார்கள். அவள் நடத்தும் இல்லறம் பாடாவதியாக அமையக்கூடும். தற்காலம், அசட்டுக்காதல் வயப்பட்டு பெண்கள் ஏமாற்றப்படுவதையும் காண்கிறோம். பையன் ஓடிப்போய் கெட்ட சகவாசம் செய்து கொள்ளலாம். அல்லது வீட்டிலேயே சப்பாணியாக அடைந்து கிடக்கலாம், ஒன்றுக்கும் உருப்படாமல்.

பள்ளிகளில் பலரை கட்டி மேய்க்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு ஒவ்வொருவரின் வளர்ச்சி மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்த முடிவதில்லை. எனக்குத் தெரிந்த சில தலைமை ஆசிரியர்கள் (திருவாளர்கள் குருவில்லா ஜேக்கப், சாரநாதன், கிருஷ்ணமூர்த்தி, பாஃதர் எர்ராட், டி.எஸ்.சர்மா போன்றோர்) உருவாக்கியவர்கள் உலகெங்கும் புகழ் எய்தினர். நான் படித்த கல்லூரியில் ஒரு வகுப்பில் 23 மாணவர்கள். அவர்களில் ஒருவர் தனியார் துறையில் பிரபலமான நிர்வாகி; செல்வந்தர்; எட்டு பேர்கள் அரசு ஐ.ஏ. ஏ. எஸ். வகையறா உயர்பதவி; நான்கு வழக்கறிஞர்கள், ஒரு கல்வி தந்தை. மற்றவர்களும் நல்ல பொறுப்பான உத்யோகம். தற்காலம் கல்வி நிலையங்களை வழி நடத்துபவர்கள் மாணவர்கள் மீது எங்களுக்குக் கிடைத்தமாதிரி அக்கறை எடுத்துக்கொள்வதில்லை என்பது நிதர்சனம். எனவே, மாணவ கண்மணிகளை கவனத்துடன் வழி நடத்த இவர்களுக்கு நேரம் போதாது; அக்கறையில்லை; திறனும் இல்லை. இது பெரும்பாலும் நிலவும் நிலை என்று கூறப்படுகிறது. விலக்குகள் இருக்கலாம். சில மாதங்கள் முன் ஒரு குக்கிராமத்தில் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கடமை ஆற்றியதை கண்டு களித்தேன். அது போதாது.

ஒன்பதாவது வகுப்பு முதல் மாணாக்கர்கள் மீது தனிப்பட்ட கவனத்துடன், அனுபவம் வாய்ந்தவர்கள் நல்லெண்ணத்துடன் பழகி வந்தாலே போதும். அவர்களின் நுழைவாயில் திறன் பன்மடங்கு பெருகும். அவர்கள் தாங்கள் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டாலே போதும். சூட்டிகையான மாணவ மாணவிகள் அனுபவப்பாடங்களை அமல் படுத்தக் கற்றுக்கொள்வார்கள். திருநின்றவூர் என்றொரு வைணவ தலம். தாயாரின் பெயர், ‘என்னைப் பெற்ற அம்மா’. கருணைக்கடல். அவரைப் போன்ற சான்றோர்கள் சிலர் என்னைக் கட்டிக் காப்பாற்றி, காபந்து பண்ணி, வாழ்க்கைப்பாடங்கள் சொல்லிக்கொடுத்து, நற்பண்புகளைக் கூட்டி, தீயவையை விலக்கியதால் தான், என்னால் இந்த கட்டுரை வரைய முடிகிறது. அவர்களில் முக்கியமானவர், மேன்யுவல் தாமஸ் பைக்கடை என்ற கேரளத்து வழக்கறிஞர். பள்ளி மாணவனாக நான் இருந்த போது எங்கிருந்தோ வந்த இந்த ரோமன் கத்தோலிக்கர் எனக்கு வழித்துணையாக அமைந்தார். ஆங்கிலத்தில் அதை mentor என்பார்கள். அவரை ஆலமரமாக பாவித்தால், நான் ஒரு விழுது. இன்றைய ஆலமரமாக துளிர்க்கும் அன்றைய விழுது. இது நிற்க.

வல்லமை ஒரு ஆக்கப்பூர்வமாக பயணிக்கும் மின் இதழ். இலவசமாகக் கிடைக்கிறது. மாணவர்களுக்கு வல்லமை இதழ் பயன் தருவதாக அமையவேண்டும் என்பது என் அவா. அதன் ஒவ்வொரு இதழும் மாணவ மாணவிகளை காந்தம் போல் பற்றி, இழுத்து வந்து, அவர்களின் விழிப்புணர்ச்சியை தட்டி எழுப்பி, அவர்களின் ஆர்வத்தைக் கூட்டி, படிப்படியாக அவர்களின் திறனை மேன்மை படுத்தி, ஐ ஏ எஸ் தேர்வு போன்ற சவால்களை திறம்படக் கையாண்டு, இந்த அரசியல் நிர்வாகத்தில், தகுதியின் அடிப்படையில் இடம் பிடித்து கோலோச்சவேண்டும் என்பது என் அவா. அதன் பொருட்டு வல்லமையின் வாயிலாக நமது மாணவ சமுதாயத்தை, ‘ஐ ஏ எஸ் தேர்வு உறுதி’ என்ற இந்த கட்டுரைத்தொடர் மூலம் வரவேற்கிறேன். படித்து வினா விடைகள் எழுப்பி, கருத்துக்கள் அளித்து, மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டால் தான், இந்த பணி பரிமளிக்கும். அத்தருணம், இந்த தொடர் ஐ ஏ எஸ் தேர்வில் மூன்று படி நிலைகளிலும் பங்கேற்று வெற்றிகாண வேண்டும் என்று விரும்பும் மாணவ மானவிகளுக்கு மட்டும் படைக்கப்பட்டிருக்கிறது, அவர்களுக்கு mentor ஆக தொண்டு செய்வது என் இலக்கு. மாணவ சமுதாயத்துக்கு இந்த செய்தியை சேர்ப்பது வல்லமை இதழின் பணி. ஒரு கட்டத்துக்கு மேல், இதை ஒரு வினா-விடை தொடராக அமைத்து, இதில் பங்கு பெறும் மாணவ மாணவிகளுக்கு எழுத்து மூலமாகவும், விழியம் மூலமாகவும், பள்ளி/கல்லூரி அமர்வுகளில் நேரில் சந்தித்து ‘ஐ ஏ எஸ் தேர்வு உறுதி’ என்பதை விளக்கி, அவர்களை ஈடுபடுத்தி வெற்றி காண வைப்பது தான் இந்த தொடரின் பின்னனி.

இன்றைய பாடங்கள்:

ஒன்பதாவது வகுப்பு படிக்கும் போது, நாட்தோறும் இதற்காக அரை மணி செலவழித்தால் போதும். வெற்றி உறுதி. பின்னர் உழைத்து பலன் பெறலாம்.

பெண்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நுழைவு கட்டணம் கிடையாது. மற்றவர்களுக்கு சொற்பம்.

கல்லூரி நுழையும் வரை படித்ததே கை கொடுக்கும். அதனால், எதை படிக்க வேண்டாம் என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும் அதற்கு mentorship உதவும்.

தமிழ் ஒரு பேப்பர். அதை எடுத்துக்கொண்டால், நிறைய மதிப்பெண் வாங்க உதவும். மிகவும் எளிய பாடங்கள்.

அன்றன்று சிறிதளவு ஆங்கிலம் கற்றுக்கொள்வது விவேகம். சுலபமான வழிகள் உளன.

இந்த வழிப்பயணத்தில் பங்கு கொள்ளும் சிலர் ஐ ஏ எஸ் தேர்வு நாடாவிடினும், இது வாழ்வியலுக்கு உதவும்.

இந்த தொடரின் அணுகுமுறை, மற்ற ஐ ஏ எஸ் பள்ளிகள் நடத்துவதிலிருந்து முற்றும் வேறுபட்டது.

ஐ ஏ எஸ் தேர்வில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எழுப்பும் வினாக்களுக்கு அடுத்த பதிவில் விடை அளிக்கப்படும். 

கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. இது ஒருவர் mentor ஆக பணி புரிவதால், திசை மாற்றம் வேண்டாம் என்று வேண்டுகோள்.

வல்லமை இதழ் மூலம் நடத்தப்படும் இப்பணி இலவசம்.

சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, December 11, 2016

தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச்சென்றது என்ன?-சமஸ்

தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச்சென்றது என்ன?-சமஸ்

Sun, Dec 11, 2016 at 5:43 PM


இது இந்து இதழில் வந்த கட்டுரை. நன்றி, காப்புரிமை அவர்களுக்கே. மேல் பிம்பம் மட்டும் நான் போட்டது.
சித்திரத்துக்கு நன்றி:http://sd.keepcalm-o-matic.co.uk/i/moving-on-and-leaving-the-past-behind-me.png

இன்னம்பூரான்
11 12 2016
தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச்சென்றது என்ன?
pastedGraphic.pdf

சிதம்பரம் பக்கத்திலுள்ள கொடியம்பாளையம் ஒரு தீவு கிராமம். அரசுசார் எந்தத் தேவைக்கும் கொள்ளிடம் ஆற்றைக் கடக்க வேண்டும். தேர்தல் சமயத்தில் நானும் நண்பர் முருகேசனும் அங்கு சென்றிருந்தோம். நல்ல பசி. “டீ குடிக்கலாமா?” என்றார் முருகேசன். போனோம். ஒரு மூதாட்டி நடத்தும் டீக்கடை அது. அவருடைய தோழிகள்போல மேலும் ஐந்தாறு மூதாட்டிகள் அங்கு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வயது எண்பது, தொண்ணூறு இருக்கும். அரசாங்கத்தின் செயல்பாடு, அதிமுக ஆட்சியைப் பற்றி முருகேசன் மெல்ல அவர்கள் வாயைக் கிளறினார். கடும் அதிருப்தியான வார்த்தைகள் வெளி வந்தன. “சரி, இந்த முறை யாருக்கு ஓட்டுப் போடப்போகிறீர்கள்?” என்றார். “ரெட்டலைக்குத்தான்” என்றார்கள். முருகேசன் திகைத்துவிட்டார். “ஏம்மா, இந்நேரமும் அரசாங்கத்தை அவ்ளோ திட்டினீங்க; இப்போ திரும்பவும் அந்தம்மாவுக்கே ஓட்டுப்போடுறேன்றீங்க?” என்றவரிடம், “ஆயிரம் இருந்தாலும் அம்மா கட்சியில்ல?” என்றார்கள். வாக்கியத்துக்கு வாக்கியம் அம்மா, அம்மா, அம்மா. “ஏம்மா, உங்களுக்கெல்லாம் அந்தம்மாவோட அம்மா வயசு இருக்கும்போல இருக்கே, எப்படி அவங்களை நீங்க அம்மான்னு சொல்றீங்க?” என்றார் முருகேசன். ஒரு ஆயா சொன்னார், 
“நாங்கல்லாம் அம்மா அப்பா இல்லாத பிள்ளைகளா, அவோ அம்மான்னு இருக்காவோளா, ஏத்துக்கிட்டோம். தாய், தகப்பனில்லா எங்களுக்கு அவக அம்மாவா இருக்காங்க!”
ஜெயலலிதா இறந்த செய்தி அதிகாரபூர்வமாக வந்த இரவில் வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அந்நேரத்திற்குக் கணினியை இயக்க ஆரம்பித்த வெளிச்சத்தில் விழித்த என் மகள், “என்னப்பா?” என்றாள். செய்தியைச் சொன்னேன். அடுத்த கணம் ஓவென்று அழ ஆரம்பித்தாள். பள்ளிச் சிறுமி. இதுவரை ஜெயலலிதாவைப் பற்றி அவள் ஒரு வார்த்தை பேசி நான் பார்த்ததில்லை.
காலையில் ராஜாஜி மண்டபத்தில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த நின்ற நீண்ட வரிசையைக் கவனித்தேன். கணிசமாகக் கல்லூரி மாணவிகள் காத்திருந்தார்கள்.
மக்கள் எதன் பொருட்டெல்லாம் ஒரு தலைவரைத் தம்முடையவராக வரித்துக்கொள்கிறார்கள், எப்படியெல்லாம் ஒருவரைத் தமக்குள் உருவகித்துக் கொள்கிறார்கள் என்பதைப் பொதுவான ஒரு வரையறைக்குள் கொண்டுவந்துவிட முடிவதில்லை. ஜெயலலிதாவோடு சேர்ந்து அவர் இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் 203 பேர் இறந்திருக்கிறார்கள். ஜெயலலிதா இறந்த அடுத்தடுத்த நாட்களில் அவருடைய சமாதிக்கு முன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி வந்து மொட்டையடித்துக்கொண்டு அழுது, தங்கள் துயரம் தீர்த்துக்கொண்ட நூற்றுக்கணக்கானோரின் கதைகளையும் கேட்டுப் பாருங்கள், இறந்தது ஒரு ஜெயலலிதா அல்ல!
வாழ்வும் மர்மம், சாவும் மர்மம்
தனிப்பட்ட வகையில், ஒரு காவியத்தன்மை வாய்ந்த சர்வதேச சினிமாவுக்கான திரைக்கதைக்குத் தகுதியானது ஜெயலலிதாவின் வாழ்க்கை. செல்வாக்கான குடும்பம். அது நொடித்துப்போகும்போது பிறக்கும் குழந்தை. வெகு சீக்கிரம் தன் தந்தையையும் இழக்கும் அக்குழந்தையை வளர்ப்பதற்காக சினிமாவைத் தேர்ந்தெடுக்கும் தாய். சிறு வயதிலேயே தாயின் பிரிவும் தனிமையும். ஒருவித லட்சிய வேட்கையோடு வளரும் அந்தக் குழந்தையின் கனவு ஒரு சராசரி நடுத்தர வர்க்கப் பெண்ணின் கனவுகளிலிருந்து பெரிதும் மேம்பட்டதல்ல.
படிப்பு, வேலை, காதல், கணவர், குழந்தைகள், குடும்பம். எதுவும் எண்ணியபடி நிறைவேறவில்லை. மாறாக, அது சினிமாவில் கால் பதிக்கிறது. உச்சம் தொடுகிறது. அரசியலில் நுழைகிறது. தன்னைச் சுற்றி ஒரு பிம்பத்தை எழுப்புகிறது. பின், அந்தப் பிம்பமே அது என ஏனையோரையும் நம்பவைத்துத் தானும் நம்பலாகிறது. அதற்குள் அடைப்பட்டுக்கொள்கிறது. வழிபடலாகிறது. அந்தப் பிம்பத்துக்குள் சிறைப்பட்டிருந்த உயிர் என்ன நினைத்தது, எப்படி வாழ்ந்தது? தெரியாது. ஒருநாள் உயிர் பிரிகிறது. அப்போதும் சடலம் எனப் பிம்பமே மக்கள் முன் பார்வைக்கு வருகிறது, புதைகுழிக்குள் செல்கிறது. வாழ்வும் மர்மம், சாவும் மர்மம்!
ஜெயலலிதாவின் வாழ்க்கைக்குள் அவருடைய வார்த்தைகளின் வழியே சென்று பார்க்கும்போது பச்சாதாபம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால், இதற்கெல்லாம் யார் காரணம்? அவரே வரித்துக்கொண்ட வாழ்க்கை அல்லவா இது? சுயஆளுமை மிக்க பெண்களைக் கொன்று, அவர்களைக் கடவுளாக்கி, கோயில் கட்டி வழிபாடு நடத்தி, அவர்களிடமிருந்தே அருளையும் பெறும் தொன்றுதொட்ட ஆணாதிக்க பலிபீட மரபிலிருந்து ஜெயலலிதாவின் கதை எந்த வகையில் வேறுபட்டது? வாழ்க்கை முழுவதும் அதிகாரம் எனும் மாயக் கயிறு ஜெயலலிதாவின் கண்களை இறுகக் கட்டியிருந்தது. அதுவே அவர் கைகளால் அவருடைய சொந்த வீட்டையே வாழ்நாள் சிறையாகக் கட்டிக்கொள்ள வைத்தது.
பெண்ணரசியலின் அடையாளமா?
தமிழ்நாட்டுப் பெண்களில் கணிசமானோர் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, ஜெயலலிதாவைப் பெண் சக்தியின் ஒரு அடையாளமாக, தங்களின் பிரதிநிதியாகக் காண்பதைக் கண்டிருக்கிறேன். ஆணாதிக்கத்தின் கோட்டையான அரசியலில் ஒரு பெண்ணாக அவர் சென்ற உயரம் பிரமிக்கத்தக்கது. எனினும், பெண்களுக்காக அமைப்பைப் புரட்டியவர் அல்ல அவர். ஜெயலலிதா இறக்கும்போது அதிமுகவின் 50 மாவட்டச் செயலர்களில் ஒருவர்கூடப் பெண் இல்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களில் பெண்களின் எண்ணிக்கை ஏனையக் கட்சிகளோடு மேம்பட்டது அல்ல. வாச்சாத்தி தாக்குதலும் காவல் நிலையங்களிலேயே நடந்த சிதம்பரம் பத்மினி, அந்தியூர் விஜயா பாலியல் வன்முறைகளும் அவர் ஆட்சியில் நடந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கத்தில் அவருடைய அரசு நிற்கவில்லை; மாறாக எதிரே வன்முறையை நிகழ்த்திய அரசப் படையினர் தரப்பில் நின்று வாதிட்டது.
உண்மையில் ஜெயலலிதாவிடமிருந்து வெளிப்பட்டது பெண் அரசியல் அல்ல; ஆண் அரசியலின் பெண் வடிவப் பிரதிபலிப்பு. மறைமுகமாக இந்திராவிடமிருந்து வெளிப்பட்டதும் மாயாவதி, மம்தாவிடமிருந்து வெளிப்படுவதும்கூட அதுவே.
ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பாதிப்பு
ஜெயலலிதாவின் மரணத்தையொட்டி உருவாகியிருக்கும் வெற்றிடம் அவருடைய கட்சிக்காரர்களையும் ஆதரவாளர்களையும் காட்டிலும் தமிழ்நாட்டு மக்களையே பெரும் சிக்கலில் தள்ளியிருப்பதாக நான் எண்ணுகிறேன். ஜெயலலிதா இறந்த மறுகணம் இதுவரை அவரால் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்ததாக மக்களுக்குச் சொல்லப்பட்ட அவருடைய தோழி சசிகலா குடும்பத்தின் வட்டத்துக்குள் அவருடைய சடலம் கொண்டுவரப்பட்டது ஒரு குறியீடு.
இதுநாள் வரை அவர்கள் யாவரும் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தார்கள் என்றால், சில மணி நேரங்களில் எப்படி அவர்கள் அத்தனை பேரும் எவ்விதச் சிக்கலுமின்றி உடனடியாக இப்படி அப்பட்டமாக ஒருங்கிணைய முடியும்? கணத்தில் ஒருங்கிணைந்தவர்கள் கைகளில் அரசு இயந்திரமும் ஏனைய அதிகாரங்களும் எப்படி இவ்வளவு இயல்பாகப் பணிய முடியும்? ஜெயலலிதா இதைக்கூட அறிந்திருக்கும் திறனற்றவராக இருந்தாரா அல்லது அறிந்திருந்தும் தமிழக மக்களிடமிருந்து மறைத்தாரா? கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேல் திரைமறைவில் இருந்த சசிகலாவின் கணவர் நடராஜன் ஒரே நாளில் ராஜாஜி மண்டபத்தின் மையத்தில் வந்து நின்றதிலும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி அவருடன் உரையாடியதிலும் அதிசயிக்க ஏதுமில்லை!
ஜெயலலிதா இறந்த இரவில் அடுத்த முதல்வராகவே நடராஜன் பதவிப் பிராமணம் ஏற்றிருந்தால்கூட திகைக்க ஒன்றுமில்லாத நிலையில் அல்லவா தமிழக மக்களைத் தள்ளிச் சென்றிருக்கிறார் ஜெயலலிதா? ஆட்சியில் இருக்கும் முதல்வர் உயிரிழப்பது தமிழகத்துக்குப் புதிது அல்ல. திராவிட இயக்கத்தின் முதல் முதல்வரான அண்ணாவும் ஜெயலலிதாவின் முன்னோடி எம்ஜிஆரும் ஆட்சியில் இருக்கும்போதே இறந்தனர். ஆயினும், அன்றைய நெருக்கடிகளுடன் ஒப்பிட முடியாத சூழல் இன்றைக்கு உருவாகியிருப்பதாகவே தோன்றுகிறது.
இதுவரை இல்லாத சூழலாக, அரசுப் பதவியில் இருந்தாலும், பொறுப்புகளையும் அதிகாரத்தையும் நேரடியாகக் கையாண்டிராத, எந்நேரமும் தலைமை மீதான அச்சத்திலும் பதற்றத்திலும் கட்டுண்டு கிடந்த ஒரு கூட்டம் கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறது; அவர்களுக்குள் உருவாகியிருக்கும் அதிகாரப் போட்டியின் விளைவு அவர்களில் ஒவ்வொருவரையும் மதிப்புக்கூட்டப்பட்டவர்களாக உருமாற்றியிருக்கிறது; அவர்கள் கையில் தமிழகத்தின் எதிர்காலம் சென்றிருக்கிறது. தலைமை மீதான அச்சம் காரணமாக, ஒப்பீட்டளவில் ஏனைய மாநிலங்களைக் காட்டிலும் இதுநாள் வரை அரசு இயந்திரச் செயல்பாடுகளில் மிகக் குறைந்த அளவிலேயே குறுக்கிட்டுவந்தவர்கள் இனி நேரடியாக அவரவர் எல்லைக்குட்பட்ட அளவில் ராஜாவாக மாறவிருக்கிறார்கள்.
ஜெயலலிதா மருத்துவனையில் போய்ப் படுத்த அடுத்த சில நாட்களிலேயே, பாஜகவின் சூட்சமக் கயிறுக்குள் அதிமுகவின் பொம்மை நிர்வாகம் வந்துவிட்டது என்ற குரல்கள் எழுந்தன. அது பொய் அல்ல என்பதைத்தானே வெளிப்பட்ட காட்சிகள் கூறுகின்றன? ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவருடைய மரணம், அடுத்தகட்ட ஆட்சி மாற்றம் வரை அரசாங்கத்தின் பிரதிநிதியென இதுவரை ஆளுநர் நீங்கலாக ஒருவர் பேசவில்லையே ஏன்? தமிழகத்தில் திடீரென எப்படி ஆளுநர் இப்படி ஒரு விஸ்வரூபம் எடுத்தார்? தமிழக மக்கள் வாக்களித்தது அதிமுகவினருக்கா, ஆளுநருக்கா?
நாட்டை ஒற்றையாட்சி முறையை நோக்கி உந்தும் ஒரு அரசு மத்தியில் இருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் முன் ஐம்புலன்களும் ஒடுங்க அடங்கி நின்ற முதல்வர் பன்னீர்செல்வமும், பல்லாயிரக்கணக்கானோர் பார்த்திருக்க ஜெயலலிதாவின் சடலத்தை வைத்துக்கொண்டே மோடியிடம் கை கொடுக்கப் போட்டியிட்ட - வாய்ப்பிருந்தால் தற்படமும் எடுத்திருக்கக்கூடிய - ஜெயலலிதாவின் அமைச்சர்களும் வெளிப்படுத்தும் செய்தி என்ன? இவர்களா தமிழகத்தின் தனித்துவத்துக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் இனி குரல் கொடுக்கப்போகிறார்கள்? ஜெயலலிதா சடலத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த அண்ணா கொடியைப் பின்னர் வந்த மூவர்ணக் கொடி கொண்டு மூடியது எனக்கென்னவோ நாளைய சூழலை விவரிக்கும் படிமமாகவே விரிந்தது.
எதிரணி வெற்றிட அபாயம்
மேலதிக அபாயம் எதிர் வரிசையின் வெற்றிடத்திலிருந்து வெளிப்படுகிறது. ஜெயலலிதாவின் அரசியல் கலாச்சாரம் அவருடைய கட்சியைத் தாண்டி இன்று ஏனைய கட்சிகளிலும் ஊடுருவியிருக்கிறது. இன்றைய திமுக அண்ணாவழி திமுக அல்ல; ஜெயலலிதாபிரதி திமுக. அண்ணா மறைந்தபோது, அவருக்கு அடுத்த நிலையில், திமுகவில் முதல்வராகும் தகுதியோடு குறைந்தது ஐந்து தலைவர்கள் இருந்தார்கள். எதிர் வரிசையில் காமராஜர், ராஜாஜி, சம்பத் போன்ற தொலைநோக்குள்ள காத்திரமான பல ஆளுமைகள் இருந்தார்கள்.
எம்ஜிஆர் மறைந்தபோது, அதிமுகவில் அடுத்த நிலையில் நெடுஞ்செழியன் முதல் ஜெயலலிதா உட்பட பண்ரூட்டி ராமச்சந்திரன் வரை ஒரு நீள்வரிசை இருந்தது. எதிர் வரிசையில் கருணாநிதி துடிப்பான நிலையில் இருந்தார். கூடவே மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி முதல் வி.பி.சிந்தன் வரை மக்கள் செல்வாக்கு மிக்க பல தலைவர்கள் இருந்தார்கள். இன்றைய நிலை என்ன?
தமிழ்நாட்டு அரசியல் பெருமளவில் இரு தலைவர்களின் துருவ அரசியலாகக் கடந்த கால் நூற்றாண்டிலேயே நிலைபெற்றதன் விளைவு, எதிரணியில் கருணாநிதி முதுமையின் தள்ளாமையில் சிக்குண்டிருக்கும் நிலையில், அவருக்கு அடுத்த நிலையில் - ஓரளவில் ஸ்டாலின் நீங்கலாக - ஒட்டுமொத்த அரசியல் களத்திலும் கோடிக்கணக்கான மக்களை ஈர்க்கக் கூடிய தலைவர்கள் இல்லை. இரண்டாம் நிலையில் சுயசெல்வாக்குள்ள தலைவர்களையும் எல்லாக் கட்சிகளிலுமே தேட வேண்டியிருக்கிறது.
சித்தாந்தம் தோற்று, தனிப்பட்ட ஆளுமையின் செல்வாக்கும் வியூகங்களும் அற்று உருவாகும் இந்த வெற்றிடம் இயல்பாக அரசியலில் யார் செல்வாக்குப் பெற வழிகோலும் என்றால், பெரும்பான்மைவாதத்துக்கு வழிகோலும். சாதிய, மதவாத சக்திகள் முழு ஆதிக்கம் பெற வழிகோலும். தமிழகத்தில் இதுவரை முதல்வர் பதவியைக் குறிவைக்கும் நிலையில் சாதிய சக்திகள் இல்லை. இப்போது எண்ணிக்கை பெரும்பான்மையும் பொருளாதார வலுவுமிக்க சாதிய சக்திகள் அதிமுகவுக்குள் அணிதிரள ஆரம்பித்திருப்பதன் விளைவு ஏனைய கட்சிகளையும் இது பீடிக்கும்; முக்குலத்தோர், கவுண்டர்கள், வன்னியர்கள், நாடார்கள், நாயுடுகள் எனத் தனித்தனியே அணிதிரளல்களும் பேரங்களும் நடக்கும். கூடவே மதவாதமும் தலை தூக்கும். இவற்றினூடாக டெல்லியின் கை ஓங்கும்.
திராவிட இயக்கம் தன்னுடைய நூற்றாண்டில் அதன் வரலாற்றிலேயே மிகச் சவாலான ஒரு காலகட்டத்துக்குள் நுழைவதாகவே கருதுகிறேன். பிராமணர் எதிர்ப்பு இயக்கமாகத் தொடங்கப்பட்ட ஒரு இயக்கத்தின் எதிர்காலம் இக்கட்டுக்குள்ளாவதை இன்று ஒரு பிராமணத் தலைவரின் மறைவு உந்தியிருப்பதை வெறுமனே வரலாற்று முரண் என்று கடப்பதற்கில்லை. அதைத் தாண்டிய ஒரு சமூக உளவியல் இங்கு வெளிப்படுகிறது. பிராமணரைப் பார்த்தொழுகும் இந்தியச் சாதிய கலாச்சாரத்திலிருந்து பிராமண எதிர்ப்பு இயக்கங்களாலும் வெளிப்பட இயலாததன் தோல்வியே அது. தன்னுடைய கட்சியைத் தாண்டி எதிரிகள் மீதும்கூட ஜெயலலிதாயிஸத்தைப் படரவிட்டுச் சென்றிருப்பதையே ஜெயலலிதா வாழ்வின் எச்சம் எனக் கருதுகிறேன்!
- தொடர்புக்கு:
Keywords: ஜெயலலிதா மறைவு, ஜெயலலிதா அரசியல், அதிமுக தலைமை, சசிகலா குடும்பம், நடராஜன், ஜெயலலிதா மர்மம், ஜெயலலிதா மரணம், ஜெயலலிதா குடும்பம்



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com
__._,_.___

Posted by: "Innamburan S.Soundararajan" <innamburan@gmail.com
Reply via web postReply to sender Reply to group Start a new topicMessages in this topic (1)
This Group is restricted to Invitees only for ensuring compliance with the Terms, Guidelines & Privacy conditions of Yahoo and this Group and to guard against phishing. Most members of this Group are from an Elder Community in Aalapaakkam.
Respecting their wishes, all may refrain from commenting upon the community and its administrations.
Yahoo! Groups
• Privacy • Unsubscribe • Terms of Use
.

__,_._,___