Sunday, January 22, 2017

எங்கே தொலைந்து போனாள், வீரி?

எங்கே தொலைந்து போனாள், வீரி?

Innamburan S.Soundararajan Sun, Jan 22, 2017 at 9:49 PM



எங்கே தொலைந்து போனாள், வீரி?



Friday, September 4, 2015, 5:00
– இன்னம்பூரான்.
பிரசுரம்: வல்லமை மின்னிதழ்: செப்டம்பர் 4, 2015

என்றுமில்லாதத் திருநாளாக, இன்று பல வருடங்களுக்குப் பிறகு தமிழ்த்திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன்: ’36 வயதினிலே’. பெண்ணினம் படும் அவத்தைகளை மென்மையாகவும், அழுத்தம்திருத்தமாகவும் நடித்துக்காட்டினார், நடிகர் ஜோதிகா. நினைவுகள் நம்மைக் கேட்டுக்கொண்டு வந்து போவது இல்லை. அவற்றின் போக்கே அலாதி. இறைவனைத் துதிக்கும்போது காதலி தோன்றுவாள்; அவளுடன் அன்யோன்யமாக இருக்கும்போது, என்றோ நம்மிடம் வளர்ந்த பூனைக்குட்டி நினைவில் தோன்றுவான். அந்த மாதிரி, ஜோதிகாவின் நடிப்புத்திறனால், எனக்கு வீரியை பற்றிய கவலை பற்றிக்கொண்டது.

கதாபாத்திரங்கள் எல்லாம் சுத்த கற்பனையே என்று சத்தியப்பிரமாணம் செய்து விட்டுத்தான் உண்மையைப் பாயாய் சுருட்டிப் பதிவு செய்வார்கள். விமர்சனம் செய்பவரும், தன் பங்குக்கு, ‘இலக்கியம் வாழ்வியலின் கண்ணாடி’ என்று ஒத்துப்பாடுவார். வீரியின் பெயரை கூட, நான் மாற்றவில்லை. மாற்றினால், அது கதையின் வழுவாக அமையும். அவளுக்குத் தமிழ் தெரியாது என்றாலும், ‘உள்ளது உள்ளபடி’ ஊரையும், மற்ற விவரங்களையும் கொடுக்க நான் தயாராக இல்லை. அவள் பழங்குடி இனம் தான். லம்பாடி என்று பெயர். அதற்காக நான் வம்படிக்கப்போவதில்லை. சொல்வது எல்லாம் நிஜம்; ஆங்காங்கே பொருத்தமான மிகையும், கற்பனையும் துணை புரியும்.

நாங்கள் வடநாட்டின் ஒரு மாநிலத்துக்கு மாற்றப்பட்டுப் போனபோது, ஏற்கனவே நண்பராக இருந்த முன்னவரின் வீட்டிலேயே நாங்கள் வசிக்க நேரிட்டது. பல அன்றாட அலுவல்களைப் பற்றி பெண்ணரசிகள் பேசிக்கொண்டனர். அதன் பயனாக, கதவோரம் நின்று கொண்டிருந்த பேரழகி வீரி அவர்களின் சிபாரிசின் பேரில் எங்களுக்கும் ஏற்பாடு ஆனது. சில எச்சரிக்கைகளும் தமிழில் கொடுக்கப்பட்டன. அன்றிலிருந்து, வீரி ராஜ்யம் தான். சூது வாது அறியாத 16 வயது பதுமை போன்ற பெண். சிவப்புத்தோலுக்கு மதிப்பு கொடுக்கும் சமுதாயத்தில், அவளுடைய மாநிறம் தூக்கி அடித்தது. புயல் மாதிரி தான் உள்ளே நுழைவாள். கதவைத் திறந்து வைத்திருப்போம். இல்லையெனில் மணி அடித்து கலாட்டா செய்து விடுவாள். ஊரைக் கூட்டி விடுவாள். எதிர் வீடு உள்ளூர் கலெக்டரது. அவர் வீட்டில் மணி அடித்து விட்டு, எங்கள் திறந்த வீட்டில், ‘கை வீசம்மா! கை வீசம்மா’ என்று அட்டகாசமாக நுழைந்து விடுவாள். அந்த மாநிலத்தில் வீட்டுக்குக் கடைநிலை ஊழியர் கிடையாது. அவரே கதவை திறுந்து வந்து, ‘ஓ! வீரியா?’ என்று சிரித்து விட்டுப் போய்விடுவார். யாருமே அவளிடம் கடுஞ்சொல் சொல்லமாட்டார்கள். ஏனெனில் அவள் ஒரு குழந்தை.

எங்களுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் வியர்த்தமாயின. அறைகளில் கண நேரத்தில் கூட்டி, பெருக்கி, மெழுகும் வீரி, குளியல் அறையில் ஒரு மணி நேரம் இருப்பாள். அது முடிந்த பின் ஜொலிப்பாள்; சோப்பு கணிசமாகக் கரைந்திருக்கும். பவுடர் டப்பா காலி. கூந்தல் தைலம் காலி. வஸந்தா, அவளுக்கு வேண்டிய ஒப்பனைச் சாமான்கள் வாங்கித்தருவதாகவும், எங்கள் பிரத்தியேக சோப்பு வகையறாவை விட்டு வைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். எங்கிருந்து கிடைத்ததோ, அவளே பட்டியல் கொடுத்தாள்: பியர்ஸ் க்ளிசரைன் சோப்பு, பாண்ட்ஸ் பவுடர், ஹிமாலயா ஸ்னோ, குஸுமாஞ்சலி என்ற கூந்தல் எண்ணைய். எனக்கு சம்பளம் போதாது என்பதால், நாங்கள் அந்த உயர்தர அலங்கார பொருள்களுக்கு போகவில்லை என்றாலும், அவளுக்கு வாங்கிக்கொடுத்தோம், லாக்டோ காலமைன் உள்பட. நோ யூஸ். அவள் அவற்றுடன் மற்றதையும் உபயோகிப்பாள்; பேசிப்பயன் இல்லை. ஆனால், அவள் மாதிரி வஸந்தாவின் அடர்ந்த கூந்தலுக்கு அகில் புகை சாற்ற, வீரிக்கு இணை வீரியே. சமையல் அறை சூபர்விஷன் செய்யும்போது இரண்டு எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, ‘நன்றாயிருக்கிறது’ என்று சான்றிதழ் கொடுப்பாள். ஆகமொத்தம் வீட்டுக்குச் செல்லப்பெண்.
ஒரு நாள் தனக்கு கல்யாணம் என்று சொன்னாள். ஒரு நோஞ்சல் பையனை கொண்டு வந்து, அவன் தான் முறை மாப்பிள்ளை என்றாள். ஏதோ சொல்லி விட்டு, எங்கள் எதிரிலேயே ஒரு ஷொட்டு வாங்கிக்கொண்டான். நாங்கள் திருமணத்துக்கு சீர் எடுத்துச் சென்றிருந்தோம். சிறிது நேரம் தான் இருக்க முடிந்தது. ஒரே டான்ஸ். கொம்மாளம். வேலையை விட்டு விட்டாள். குலத்தொழிலாகிய கிருஷ்ணன், ராதை வகையறா களிமண் பொம்மைகளைச் செய்து தென்னாட்டில் கூவிக்கூவி விற்கப்போவதாகச் சொன்னாள். பல வருடங்கள் கடந்தன. ஒரு நாள் பல்லாவரம் பக்கம் காரில் சென்ற போது வீரி சாயலில் ஒரு பெண்ணைப்பார்த்து, வஸந்தா திரும்பவந்து கவனித்து, உறுதி செய்து கொண்டபின், இறங்கி குசலம் விசாரித்தோம். மூன்று குழந்தைகள்; வாடிய முகம்; மெலிந்து போன உடல். களைப்பு. ஒரு பாடாக, அருகாமையில் இருக்கும் அவர்கள் கூட்டத்தில் இவர்களது பொம்மைகளை ஒப்படைத்து விட்டு, அந்தக் குடும்பத்தை வீட்டுக்கு அழைத்து வந்தோம். முசுடாகவே இருந்த அவள் புருஷன் பீடி பிடிக்க வெளியில் போய்விட்டான். குழந்தைகள் புரண்டு விளையாடின. ஏழை வீட்டுக் குழந்தைகளுக்கு, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தெரியும் போலிருக்கிறது!

பெருங்குரல் எடுத்து அழுதாள். கணவன் சோற்றுக்குப் பணம் கொடுப்பதில்லை, குடிகாரன், அடிப்பவன் என்றாள். அவனுக்கு மேலும் இரு தாரங்களாம். பஞ்சாயத்தில் விவாகரத்து கேட்டாள், லம்பாடி இன வழக்கப்படி. அந்தக் கட்டப்பஞ்சாயத்து மறுத்து விட்டதாம். மேலும் பல இன்னல்கள் பற்றிச் சொல்லி தேம்பினாள். அதை உங்களிடம் சொல்லமாட்டேன். ஒரு கணிசமான தொகையைக் கொடுத்து விட்டு, அவர்களைக் கொண்டு போய் விட்டு வந்தாலும், நாங்கள் ஆவன செய்யவில்லை என்ற சோகம் எங்களை வீட்டு நீங்கவில்லை.
எங்கே தொலைந்து போனாள், வீரி?

சித்திரத்துக்கு நன்றி: 


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment