Showing posts with label Callicles. Show all posts
Showing posts with label Callicles. Show all posts

Monday, July 1, 2013

இன்னம்பூரான் பக்கம் – 20




இன்னம்பூரான் பக்கம் – 20

Innamburan S.Soundararajan Mon, Jul 1, 2013 at 5:56 PM


பிரசுரம்: http://www.atheetham.com/?p=5300 : 01 07 2013
Inline image 1

மனிதர்களால் இயங்கும் அரசு இயந்திரத்தின் ஆயுதம் அதிகாரம்; அதிகாரமே அதற்குத் துரு. துருப்பிடித்த கத்தியால் அறுவை சிகிச்சை செய்தால், அது தான் துஷ்பிரயோகம். அதிகாரத்தின் அந்த ‘அன்பளிப்பு’ மக்களை வாட்டும். ஜனநாயகம் வாடி, அழுகி, துர்நாற்றம் வீசும். அதன் மரணம் சம்பவிக்கும். பேராசை பிடித்த யதேச்சதிகாரத்தின் தூள் பறக்கும்.   இம்மாதிரியான தொடர்கருத்துக்களைத் தொகுத்து, அலசி, விடை தேடுகிறது ‘த ரிபப்ளிக்’( ) என்ற அரசியல் இலக்கண நூல். அதை எழுதிய ப்ளேட்டோ, சாக்கிரடீஸ்ஸின் சிஷ்யர். குருவந்தனம் சொல்லிக்கொண்டே, முரணாயினும், தன் சுய சிந்தனையை முன் வைத்த ஞானி, அவர். அந்த நூலில்:
ஒரு வாசகர்,’ Callicles & Thrasymachus கவலைப்படாமல், அரசு இயந்திரம் மக்களை வாட்டுகிறது என்கிறார்கள்.’ என்று கூறியதை விளக்கி எழுதச் சொன்னார். Callicles & Thrasymachus  இருவரும் அந்த நூலில் வலம் வருகின்றனர். ஆங்கில பெயர்களே இருக்கட்டும். ஆள் அடையாளம் காட்ட உதவும். Thrasymachus  நிஜமனிதர். Callicles ப்ளேட்டோவின் கற்பனை பாத்திரம் என்று தான் ஊகிக்க வேண்டியிருக்கிறது. ‘சம்பிரதாயமாக போற்றப்படும் நன்னெறியை’ அவர்கள் இருவரும் உதறிவிட்டனர். சாக்கிரட்டீஸ்ஸால் பெரிதும் போற்றப்பட்ட ‘நியாயத்தை’ கவைக்கு உதவாது, இது; தற்காப்பு சுயநலத்துக்குக் கூட முட்டுக்கட்டை போடுகிறது, இது; புத்திமான்கள் எளிதில் இதை இனங்கண்டு கொள்வார்கள் என்று இவர்கள் கூறியதின் சுருக்கம்: ‘அரசு இயந்திரம் மக்களை வாட்டுகிறது.’
கில்பெர்ட் முர்ரே அவர்களின் நூலொன்று இணையதளத்தில் கிடைத்தாலும், நான் தேடியது கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக பேராசியர் ராஸ்சேல் பார்னி சொல்லும் நுட்பம் தான் இந்த இழையின் அடித்தளம். ‘…கிரேக்க சிந்தனைகளுக்கு நாம் யார் முத்திரை போட? ‘சம்பிரதாயமாக போற்றப்படும் நன்னெறிக்கு அடி பணிய’ காரணங்கள் வேண்டும். ‘இல்லையெனில், நம் போக்கில் செல்லலாம் என்று அவர்கள் கூறுவதாக எழுதப்பட்ட இந்த நூலுக்கு சாக்கிரட்டீஸ்ஸின் சிந்தனைகள் ஒத்திகை போல’ என்கிறார். பேராசியர் ராஸ்சேல் பார்னி. Callicles & Thrasymachus இரட்டை நாயனங்கள் அல்ல. ப்ளேட்டோவின் ஆழமான கருத்துக்களை புடம் போடுவதாக அமைகிறது இவர்களின் அளவளாவுதல். இருவருக்கும் இடையே கருத்து பரிமாற்றங்கள். எப்போதும் உடன்பாடு கிடையாது. அதாவது, குருமஹராஜ் ஸாக்கிரட்டீஸ், தத்துவ போதகர் ப்ளேட்டொ, Thrasymachus என்ற நிஜ மனிதர், Callicles என்ற கற்பனை தலைமாந்தர்,Glaucon, Antiphon என்ற பழமை வாதி ஆகி ஆறு சிந்தனையாளர்களின் தாக்கம், இந்த ஒரு வரியில் பிரகாசிக்கிறது.
முதலில் தர்மோபதேசத்தின் சுருக்கம் காண்போம். மற்றவை அடுத்த சில இழைகளில். Thrasymachus and Callicles எதை உதறினார்கள் என்ற வினாவே சிக்கலானது – dikaiosunê எனப்படும் நன்னெறியையா?/dikê எனப்படும் தர்மதேவதையையா?/dikaion எனப்படும் மனிதர்கள் இயற்றிய சட்டமளிக்கும் நியாயத்தையா? தற்காலம் போல கிரேக்கர் காலத்திலும் நன்னெறிகளை பற்றிய நிலைப்பாடுகள் தெளிவாக இல்லை. எதற்கும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாகிய ஹெஸியத் (c. 700 B.C.E.) நியாயம் என்ற சொல்லை விளக்காமலே, லஞ்சம், வாக்குத் தவறுதல், பொய்,புரட்டு, திருட்டு, சூது, மட்டமான தீர்ப்பு மாய்மாலங்களை அநியாயம் என்றார்.
இந்த பட்டியல் பொதுப்படையாக சொல்லப்படவில்லை. திட்டமிடப்பட்ட பட்டியல், அது. அவை ஒவ்வொன்றுக்கும் இரண்டு கால்கள். ஒன்று nomos ( இன்றைய Rule of Law  ); மற்றொன்று அதற்கு முரணான pleonexia (பேராசை). ஒன்று கிழக்கே போகும் ரயில் என்றால், மற்றது மேற்கே செல்லும் ஊர்தி. nomos தான் வேதபாடம். சில பகுதிகள் எழுதப்பட்டன. சில எழுத்தில் இல்லாவிடினும், முன்னுரிமை பெறும். அப்படியானால் அரசு ஆணைகளை திரஸ்கரிப்பது கடினம். அதை விட முக்கியம்.  பட்டியலில் உள்ள அநியாயங்கள், nomos இட்ட சட்டப்படி தான். காலப்போக்கில் இதன் பொருள், திரள் திரளாக வேறுபட்டது. அந்த பிரச்னைக்கு பிறகு வருவோம்.
இந்த pleonexia -பேராசை இருக்கிறதே, அதனுடைய அவலக்ஷணங்கள்:
  1. எனக்கு எல்லாம் அதிகமாக வேண்டும் [pleon echein];
  1. அண்டை வீட்டுக்காரனை விட அதிகம் வேண்டும்;
  2. எனக்கு எது தகுதியானது என்பதை விட அதிகம் வேண்டும்;
  3. ஆக மொத்தம், எல்லாமே வேண்டும்.
இந்த பட்டியலை எழுதி இரண்டாயிரத்து ஐன்னூறு வருடங்கள் ஆன போதிலும், பிற்காலம் அரிஸ்டாட்டில் வகுத்து, இன்று வரை கோலோச்சி வரும் Nicomachean Ethics V என்ற கிரேக்க ‘அர்த்த சாத்திரத்தின்’ வித்து, இது தான்.
படிப்பவர்களுக்கு தத்துவம் பேசினால் அலுத்து விடுகிறது. அதனால் மெதுவாகத்தான் பயணிக்க வேண்டியிருக்கிறது.
(தொடரும்)



இன்னம்பூரான் பக்கம் ~ 19




இன்னம்பூரான் பக்கம் ~ 19
Innamburan S.Soundararajan Mon, Jul 1, 2013 at 1:39 PM



-=Inline image 1
‘…சாக்ரட்டீஸ் (கி.மு. 470~399) கிரேக்க நாட்டின் பிரதான நகரமாகிய ஏதென்ஸ்ஸின் பொற்காலத்தில் வாழ்ந்தவர். தனக்கு முந்திய தத்துவபோதனைகளை படித்து அவற்றில் இரு குறைகளை கண்டார். பல தத்துவங்களின் கலந்துகட்டியாக இருந்தன, அவை; ரசவாதமொன்றும் இல்லை, அவற்றில். ஒன்றுக்கொன்று முரணாக  அமைந்ததால், குழப்பம் தான் மிஞ்சியது என்றார்…’. (இன்னம்பூரான் பக்கம் ~ 17)

ஏதென்ஸ்ஸின் பொற்காலம் பற்றி எழுத நினைத்தபோது, அருமையான நூல் ஒன்று கிட்டியது. வித்யாதானத்தை பற்றிய சாக்ரட்டீஸ்ஸின் சிந்தனைகள் வரவேற்கப்பட்டதால், அந்த நூலின் வரவு மிகவும் பயனுள்ளதாக அமைந்து விட்டது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தத்துவபோதனைத்துறையின் நுழைவாயிலிருந்த வில் டூராண்ட் (WILL DURANT, PH.D.) என்ற ட்யூட்டர் (instructor) 1917 ல் எழுதிய ‘தத்துவமும் சமூக சிக்கல்களும்’ என்ற நூல், அது. சமூகத்தின் சிக்கல்களை களைவதில் தத்துவம் ஆர்வம் காட்டவில்லை என்ற அந்த நூல் தான் அவருடைய முனைவர் விருதுக்கான ஆய்வு கட்டுரை/ முதல் நூல். பிற்காலம் கலாச்சாரங்களும் நாகரீகங்களும் பிறந்த வரலாறுகள் எழுதி , இன்றளவும் இறவா புகழ் பெற்ற வில் டூராண்ட் அவர்களே, நமக்கு அருமையான நடைமுறை தத்துவங்களை போதித்தவர். என்றாவது ஒரு நாள் அவரை பற்றி எழுதுவது நலம் பயக்கும். ஏதன்ஸ்ஸின் பொற்காலத்தை பற்றி அவர் எழுதியதின் சில அத்யாயங்களின் சாராம்சத்தை மட்டும் கூறி, உசாத்துணையாக, அந்த மின் நூலை தருகிறேன். ஆர்வமுள்ளவர்கள் படித்து பயன் பெறலாம். கட்டுரையையும் அந்த ஒற்றையடி பாதையில், சிறிது காலம் பயணிக்கும்.
சாக்கிரட்டீஸ் காலத்து மறுமலர்ச்சி/ புரட்சிகரமான சிந்தனைகள்/எதையும் புரட்டிப்பார்க்கும் மனப்பான்மை எல்லாவற்றிற்கும் மூல காரணமே, அதற்கு முந்தியகாலத்து சர்வாதிகார அரசியல் போக்கு. தனிமனிதர்களின் ஆதரவை கட்டாயப்படுத்தி ஆளுமை பெற்றுக்கொள்வதால், நீறு பூத்த தணலாக அதை எதிர்க்கும் சிந்தனைகள், மறைமுகமாயினும், வலுத்து வந்தன. வெளிப்படையாக நிலவும் சம்பிரதாயங்களை புறக்கணிக்கும் தனி நபர் போக்கு வலுத்தது.
“நம்மால் ‘உயர்ந்த பழக்க வழக்கங்கள்’ என்று கருதப்படும் எல்லாவற்றையும் குவித்து வைத்து, தீவிர சிந்தனைக்கு பிறகு, அவற்றில் ‘மட்டமானவையை’ கடாசி விட்டால், மிச்சம் ஒன்றுமிருக்காது.” என்ற சிந்தனை கி.மு. நான்காவது நூற்றாண்டிலேயே முன்வைக்கப்பட்டது. காலப்போக்கில் தடபுடலாக (மேலாண்மை ஆதரவு/பிரசாரம்/வற்புறுத்தல் மூலமாக) போற்றப்பட்ட நடைமுறைகள் பகுத்தறிவு என்ற நியாயாலயத்தின் முன்னர் வைக்கப்படும் போது வலுவிழந்து விடுகின்றன.
*
தற்காலம்: இந்திய சூழ்நிலை: குடியரசு, அரசியல் சாஸனம், விடுதலை, சுயாட்சி, தேர்தல் என்ற மந்திரங்களின் மீது ஒரு காலத்தில் இருந்த அசையா நம்பிக்கைத் தளர்ந்து விட்டது. பிரதிநிதிகளின் அணுகுமுறையும், அட்டகாசமும், ஆளுமையும், ஆகாத்தியமும், இற்செறிப்பும் தாங்கமுடியவில்லை. மக்கள் நலம் அம்பேல். அரசியல் சாஸனத்தின் பிம்பம் தணிக்கை. ஆளுமைக்கு அதன் மீது அளவு கடந்த ஒவ்வாமை. ஆரம்பக்கல்வியை மனித உரிமையாக பாராட்டிய அரசியல் சாஸனம், அதை செல்லாக்காசாக ஒதுக்கி வைத்தது. மூன்று தலைமறையாக உறங்கிக்கிடந்த இந்த உரிமையை இழந்து செத்துப்போன இந்தியர்களின் தொகை பல கோடி. இன்றும், இந்த உரிமை அல்லாடுகிறது. சுயாட்சியும், தேர்தலும் எள்ளலுக்கு உரியவையாக ஆயின. நாம் இவற்றையெல்லாம் பகுத்தறிவு என்ற நியாயாலயத்தின் முன்னர் வைக்கவேண்டும். களையறுக்க வேண்டும்.
*
வில் டூராண்ட் தனது ஆய்வில் பட்டியலிடும் சில கிரேக்க காலத்து சிந்தனைகளையும், நடைமுறைகளையும் காண்போம்.
  1. ‘கடவுள் எல்லாரையும் சுதந்திர மனிதனாகத்தான் படைத்தார். (அக்காலம் அடிமைகள் உண்டு; இக்காலம் கொத்தடிமைகள்.)
  2. இயற்கை யாரையும் அடிமையாக படைக்கவில்லை. (ஏழ்மை அடிமைகளை உருவாக்குவதை கண்முன் காண்கிறோம். உலகின் செல்வத்தின் பேர்பாதியின் சொந்தக்காரர்கள் 8% செல்வந்தர்கள் என்று உலக வங்கி ஆய்வு ஒன்று சொல்கிறது: 2013).
  3. போட்ஸ்ஃபோர்த் என்ற வரலாற்றாசிரியர் கிரேக்க சிந்தனையில் உள்ள புரட்சிகரமான சோஷலிஸ்ட் கருத்துக்களை கூறுகிறார்.
  4. பெண்ணுரிமையை பற்றிய முற்போக்குக் கருத்துக்களை Euripides & Aristophanes துணிவுடன் முன் வைக்கிறார்கள்.
  5. அரசின் போக்கை அவர்கள் கண்டிக்க பயன் படுத்திய உவமானம்: சிலந்தி வலையை போல், அது சின்ன பூச்சியை பிடித்து, பெரிய தலைகளை தப்ப விடுகிறது என்று!
*
தற்காலம்: சொல்லியா தெரியவேண்டும்! பல்லாயிரம் கோடிகளை தொலைத்தவர்கள் அல்லவா, நம் மக்கள்.
*
  1. Callicles & Thrasymachus கவலைப்படாமல், அரசு இயந்திரம் மக்களை வாட்டுகிறது என்கிறார்கள்.
இந்த கண்காட்சியை நடத்திய பிறகு தான், வில் டூராண்ட், சாக்கிரட்டீஸ்ஸுக்கு முன் கோலோச்சிய ஸொஃபிஸ்ட்ஸ் (The Sophists) என்ற தத்துவ போதகர்களுக்கு வருகிறார். இந்த கட்டுரையே கனமாகி விட்டது. பிறகு பார்க்கலாம்.
(தொடரும்)

பிரசுரம்: http://www.atheetham.com/?p=5202