நான் வளைய வரும் மற்றொரு குழுவாகிய 'மின் தமிழில்'தன்னுடைய முகநூல் [தெய்வ சுந்தரம் நயினார்.] மூலம் தமிழறிஞர்களை அறிமுகம் செய்து வைக்கும் பேராசிரியர் தெய்வசுந்தரம்
அவர்கள் அவற்றை மீள்பதிவு செய்வதுடன், மற்றவர்கள் அவற்றை தாராளமாக அவரரது தொடர்புகளில் மீள்பதிவு செய்யலாம் என்று சொல்லியதுடன், எனக்கும் தனிப்பட்ட முறையில் சம்மதம் தெரிவித்துள்ளார். அவருக்கு நகல் அனுப்பியுள்ளேன்.
அவருக்கு நன்றியும் வணக்கமும் தெரிவித்து இங்கு பதிவு செய்யும் இரண்டாவது இழை, இது.
அன்புடன்,
இன்னம்பூரான்
ஜூன் 5, 2015
பேராசிரியர் சுப. திண்ணப்பன் … அகவை 80. தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல், மொழிபயிற்றல் ஆகியவற்றில் வல்லவர் கடந்த பல ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் நாடறிந்த தமிழ் மற்றும் மொழியியல் பேராசிரியராக விளங்குகிறார். தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பி. ஏ. தமிழ் ( ஹானர்ஸ் – 1959 ) பட்டம் பெற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் பட்டயம் பெற்றார். 1960 – 67 –இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றினார். 1965 – இல் பழமொழி நானூறு மொழிநடைபற்றி ஆய்வு மேற்கொண்டு, எம்.லிட், பட்டம் பெற்றார். 1967 –இல் மொழியியல்துறையில் இணைந்தார். பின்னர் சீவகசிந்தாமணி மொழிநடைபற்றி ஆய்வேட்டை அளித்து, முனைவர் பட்டம் (1978) பெற்றார். 1970 – 73 – இல் மலேசியாவில் கோலாலாம்பூர் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வுக்கான ஆசிரியராகப் பணியாற்றினார். 1973 –இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திரும்பி , இணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். மீண்டும் 1979 – 82 வரை மலேசியாவில் பணியாற்றினார். 1982 முதல் இன்றுவரை சிங்கப்பூரில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் (NUS) தெற்காசிய ஆய்வியல் நிறுவனம், நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (NTU) தேசியக் கல்வியியல் நிறுவனம் (NIE), சிம் பல்கலைக்கழகத்தின் (SIM) தமிழ்மொழிப் பிரிவு ஆகியவற்றில் பல்வேறு பணிகளில் அமர்ந்து பணியாற்றி வருகிறார். பல்வேறு மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயராய்வு மேற்கொண்டுள்ளார். 1989 –இல் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகம், 1990 –இல் இங்கிலாந்து இலண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆய்வுப்பணியை மேற்கொண்டார். சிங்கப்பூர் குடிமகனாகவே இன்று ஆகிவிட்டார். அங்குத் தமிழ்மொழிப் பாடத்திட்டக்குழு, பாடநூல் உருவாக்கம் ஆகியவற்றில் அங்குள்ள கல்வி அமைச்சகத்தின் குழுக்களில் மிக முக்கியமான பங்கை ஆற்றிவருகிறார். கருத்துப்புலப்படுத்தநோக்கில் தமிழ்க்கல்வி, கணினிவழித் தமிழ்க்கல்வி ஆகியவற்றில் ஏராளமான கட்டுரைகளும் நூல்களும் எழுதியுள்ளார். இவரது கல்வி மற்றும் தமிழ்ப்பணிகளைப் பாராட்டி, பல்வேறு நிறுவனங்கள் இவருக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1973-75 – இல் எனக்கு வரலாற்று மொழியியல் கற்றுக்கொடுத்த பேராசிரியர். மாணவர்களுக்கு இனிய பேராசிரியர். சிங்கப்பூர் செல்கிற தமிழகத்துத் தமிழ்ப்பேராசிரியர்கள் இவரது விருந்தோம்பலைப் பெறாமல் தமிழகம் திரும்பமுடியாது.
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com