Showing posts with label புதுமை பித்தன். Show all posts
Showing posts with label புதுமை பித்தன். Show all posts

Friday, February 14, 2014

PUDUMAI PITHAN [4] KADAVALLUM KANDASAMI PILLAIYUM (2)

PUDUMAI PITHAN [4] KADAVALLUM KANDASAMI PILLAIYUM (2)



இன்னம்பூரான்

Monday, March 11, 2013

அன்றொரு நாள்: நவம்பர் 12 வல்லிக்கண்ணன் (12 11 1920 ~09 11 2006)




அன்றொரு நாள்: நவம்பர் 12 வல்லிக்கண்ணன் (12 11 1920 ~09 11 2006)
1 message

Innamburan Innamburan Sat, Nov 12, 2011 at 1:23 PM
To: thamizhvaasal
Cc: Innamburan Innamburan
Bcc: Muruga poopathi
அன்றொரு நாள்: நவம்பர் 12
வல்லிக்கண்ணன் (12 11 1920 ~09 11 2006)
நெல்லை மண்ணும் அரவணைக்கும் தமிழும் ஒன்றையொன்று அண்டி வாழ்பவை ~மஹாகவி பாரதியார்,புதுமை பித்தன், கு.அழகிரிசாமி, ரசிகமணி, வல்லிக்கண்ணன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசு. வாழ்க்கைக்குறிப்புகள் எழுதுவதில் ஒரு அலாதி பாணியை, வல்லிக்கண்ணன் அவர்களிடம் கண்டேன். சமயத்தில் நினைப்பது உண்டு, அவர் பேசுகிறாரா? எழுதுகிறாரா? என்று.
நிறைந்த வாழ்வு வாழ்ந்து தனது 86வது வயதில் மறைந்தார். அவர் மறைந்த உடனேயே திரு. நா.கண்ணன் அவரை பற்றி எழுத கேட்டுள்ளார், மின் தமிழில் (11 11 2006). எனக்கு தமிழ் இலக்கிய பரிச்சியம் மிகக்குறைவு. ஐந்து வருடம் கழித்து, தனது சதாபிஷேகக் காலகட்டத்தில், திரு. வல்லிக்கண்ணன் அவர்கள் அளித்த அருமையான நேர்காணல்  ஒன்றை ஆறாம் திணையிடமிருந்து, இரவல் வாங்கி அளித்து, என்னால் இயன்ற பணியை செய்கிறேன். அவருடைய நூல்களை நிரந்தரப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டால் நல்லது தான்.
நன்றி,வணக்கம்,
இன்னம்பூரான்
12 11 2011
nilaipetra.jpg

*
வல்லிக்கண்ணன் நேர்காணல்ஆறாம் திணை
பிறந்த நாள் பவள விழா, தனது எழுத்து வாழ்க்கை மணி விழா என கொண்டாடத் தெரியாத எழுத்துலக மார்க்கண்டேயரான வல்லிக்கண்ணனுக்கு எண்பது வயது நடந்து கொண்டிருக்கிறது. தனது வாழ்நாளில் அறுபது ஆண்டுகளை எழுத்து – இலக்கியத்துக்காகவே செலவிட்டவர்.
உங்கள் பூர்வீகம்?
திருநெல்வேலியைச் சேர்ந்த ராஜவல்லிபுரம் என் சொந்த ஊர். நான்12.11.1920-ல் பிறந்தேன்.
எப்பொழுதிலிருந்து எழுத ஆரம்பித்தீர்கள்?
1939- முதல் எழுதத் தொடங்கினேன். 1940-ல் புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘திருமகள்’ பத்திரிகையில் ஆசிரியராகச் சேர்ந்தேன். அங்கு மூன்று மாதங்கள்தான் −ருந்தேன். அடுத்து ‘சினிமா உலகம்’ பத்திரிகையில் பணி. ‘சினிமா உலகம்’ மாதமிருமுறை வெளி வந்தது. அங்கு ஒன்பது மாதங்கள் பணியாற்றிவிட்டு, சென்னைக்கு வந்து ‘நவசக்தி’ பத்திரிகையில் சேர்ந்தேன். சக்திதாசன் சுப்பிரமணியம் என்பவர் ஆசிரியராக இருந்தார். நான் உதவி ஆசிரியர். நவசக்தி திரு.வி.க ஆரம்பித்த பத்திரிகை.
1944-ல் இருந்து 1947 வரை திருச்சியில் துறையூரில் இருந்து வெளிவந்த ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் பணி. இதற்கு கு.ப.ரா கெளரவ ஆசிரியராக இருந்தார். திருலோக சீதாராம் ஆசிரியர்.
1950, 1951-ல் ‘ஹநுமான்’ பத்திரிகையில் பணியாற்றிவிட்டுப் பின்னர் சுதந்திர எழுத்தாளனானேன். ‘ஹநுமான்’ பத்திரிகையில் ந. பிச்சமூர்த்தியும், சங்கு சுப்பிரமண்யமும் நிறைய எழுதினார்கள்....
‘சரஸ்வதி’, ‘தீபம்’, ‘தாமரை’ முதலிய பத்திரிகைகளில் நிறைய எழுதி இருக்கிறேன். ஈழம், சிங்கப்பூர் பத்திரிகைகளிலும் எழுதினேன்.
1960 வரை சுதந்திர எழுத்தாளனாக இருப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. அதற்கு அப்புறம்தான் கஷ்ட காலம். என் உடன்பிறந்த அண்ணன் ர.சு. கோமதி நாயகத்தின் உதவியும், அரவணைப்பும் இல்லாமல் இருந்தால் வாடிப் போயிருப்பேன்!
தமிழுக்கு உழைத்துக் கருகிப்போன எழுத்தாளர்கள் பலர்- புதுமைப்பித்தன், கு.ப.ரா., சுப்பிரமணிய பாரதியார், சாலிவாகனன்.... என்று அநேகர். இந்தப் பட்டியலில் நானும் சேர்ந்து விடாமல் இருக்க என் அண்ணனின் அன்பே காத்தது!
தமிழ் இலக்கியத்திற்கு உங்கள் பங்களிப்பு என்ன ?
சிறு கதைகள், நாவல்கள், கவிதைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், நாடகம், வரலாறு என்று என் பங்களிப்பு இன்றும் தொடர்கிறது...
‘பெரிய மனுஷி’ – ‘வஞ்சம்’ ‘ஆண் சிங்கம்’ – ‘சரியான துணை’, – ‘பயந்தவள்’ – ‘அலைகள்’.... முதலிய என் சிறு கதைகள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.
‘நினைவுச் சரம்’, ‘அலை மோதும் கடல் ஓரத்தில்’, ‘வீடும் வெளியும்’ – ‘இருட்டு ராஜா’ முதலிய எனது நாவல்கள் புகழ் பெற்றவை.
‘வீடும் வெளியும்’ – சுதந்திரப் போராட்ட காலத்தைச் சொல்லும் நாவல்.
‘நினைவுச் சரம்’ – ஒரு திருநெல்வேலி நபரின் கதையைச் சொல்கிறது. ஒரு சோதனையான காலகட்டத்தில் ஊரை விட்டு ஓடிச் சென்ற அவர் சுமார் நாற்பது ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார். புற நிலையில் மாற்றங்கள் இருந்தாலும், அக நிலையில் மக்களின் இழி குணங்கள் மாறாமல் இருப்பது கண்டு மனம் நோகிறார்.
‘அலை மோதும் கடல் ஓரத்தில்’ – ஒரே இரவில் நடக்கும் கதை. கடல் புரத்திற்குத் தற்கொலை செய்து கொள்ள வரும் ஒரு ஆணும், பெண்ணும் தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டுப் பேசிக் கொள்கிறார்கள். தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டுவிட்டுப் புது வாழ்வு தொடங்குகிறார்கள்.
அவன் – அவள் – அவர்கள் என்று மூன்று பகுதிகளைக் கொண்டது இந்த நூல்.
‘இருட்டு ராஜா’ – கதையின் நாயகன் காதல் தோல்வியால் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறான். ஆனால் ஊருக்கு நல்லது செய்யும் பரோபகாரியாக விளங்குகிறான்.
கு.ப.ராவும், ந. பிச்சமூர்த்தியும் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தபோதே நானும் புதுக்கவிதை எழுத ஆரம்பித்து விட்டேன். என் முதல் புதுக்கவிதை 1943-ல் வெளி வந்தது! ‘புத்த பக்தி’ – என்ற என் முதல் புதுக்கவிதைத் தொகுதி 1944-ல் வெளியானது.
‘அமர வேதனை’ என்ற புதுக்கவிதைத் தொகுதியை சி.சு. செல்லப்பா, தன் எழுத்துப் பிரசுரமாக வெளியிட்டார்.
‘பாரதி அடிச்சுவட்டில்’ என்று பாரதியின் ‘காட்சி’ – கவிதையின் பாணியில் ‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் சுமார் ஐம்பது கவிதைகளை எழுதினேன். ந. பிச்சமூர்த்தி படித்துவிட்டு மிகவும் பாராட்டினார்.
1950-ல் நான் எழுதிய நாடகம் ‘விடியுமா?’.... ஓட்டல் தொழிலாளர்கள் இதை மேடையில் நடித்துக் காட்டினார்கள். சமூகப் பிரச்சினைகள் பலவற்றை அதில் சொல்லியிருந்தேன்.
‘நம் நேரு’, ‘விஜயலட்சுமி பண்டிட்’ முதலியவை நான் எழுதிய வரலாற்று நூல்கள். புதுமைப்பித்தன் வரலாற்றையும் எழுதி இருக்கிறேன்.
1. புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும்
2. சரஸ்வதி காலம்
3. பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை
4. தமிழில் சிறு பத்திரிகைகள்
5. எழுத்தாளர்கள் – பத்திரிகைகள் – அன்றும், இன்றும்
6. வாசகர்கள் – விமர்சகர்கள்
7. தீபம் யுகம்
.... முதலியவை எனது ஆராய்ச்சி நூல்கள்.
மேற்கண்ட முதல் நான்கு புத்தகங்களும் தீபத்தில் முதலில் தொடராக வெளிவந்து அப்புறம் புத்தக வடிவம் பெற்றவை.
புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும் – சாகித்ய அகாதமி விருது பெற்றது.
எழுத்தாளர்கள் – பத்திரிகைகள் அன்றும் இன்றும் – தமிழ் வளர்ச்சிக் கழகம் பரிசு பெற்றது.
நா. பார்த்தசாரதி இருபத்து மூன்று வருடங்கள் சிரமப்பட்டு நடத்திய ‘தீபம்’ பத்திரிகையின் இலக்கியப் பங்களிப்பைச் சொல்வது ‘தீபம் யுகம்’.
கார்க்கி கதைகள், கார்க்கி கட்டுரைகள், தாத்தாவும் பேரனும் (அமெரிக்க நாவல்) ராகுல சாங்கிருத்தியாயன், ஆர்மீனியச் சிறுகதைகள், சிறந்த பதிமூன்று கதைகள் – (இந்தியக் கதைகள்) .....இவையெல்லாம் என் மொழிபெயர்ப்பு நூல்கள்...
‘20-ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சி’ – என்ற நூலை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.
12.11.2000 அன்று எனக்கு எண்பது வயது பூர்த்தியானது. அதற்காக என் இலக்கிய ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க என் சுய சரிதையை எழுதி வருகிறேன்.
ஆனால் விமர்சனத்திற்காக எனக்கு நிறையப் பேர் புத்தகங்களை அனுப்புவதால் என் சொந்த எழுத்துப் பணி தடைபடுகிறது. ஆங்கில இலக்கிய நூல்கள் படிக்கவும் எனக்கு நேரம் கிடைப்பதில்லை.
ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்குக் குறையாமல் படிக்கிறேன். அப்படியிருந்தும் விமர்சனத்திற்காக நூல்கள் குவிந்து கிடக்கின்றன.
 இன்றைய தமிழ்க் கவிதை, சிறுகதை, நாவல் பற்றிச் சொல்லுங்கள்.
சராசரி வாசகன் புரிந்து கொள்ள முடியாதபடி பலர் எழுதி வருகிறார்கள். தமிழில் பின் நவீனத்துவ பாணியில் பலர் எழுதும் எழுத்து குழப்பமாக இருக்கிறது!
புதுமைப்பித்தன், கு.ப.ரா – இவர்களுக்கெல்லாம் தனித்துவம் வாய்ந்த நடை இருந்தது. இப்போது எழுதுவோர் பலர் நடை விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. தனித்துவத்திற்காக முயற்சி செய்வதில்லை!
சிறுகதை, நாவல், கவிதை எல்லாவற்றிலுமே புது விஷயங்கள் சொல்லப்படுகின்றன! களங்கள் விரிந்திருக்கின்றன.
இடைக் காலத்தில் 150 பக்கங்கள், 200 பக்கங்கள் என்று நாவல்களின் அளவு குறைவாகவே இருந்தது. இப்போது 700 பக்கங்கள் 1000 பக்கங்களுக்குக் கூட எழுதுகிறார்கள்.
புதுக்கவிதையில் உள் மன உளைச்சல், தனி நபர் பிரச்சினைகள் அதிகம் பேசப்படுகின்றன. இந்தக் கவிதைகளை எங்கோ ஆரம்பிக்கிறார்கள். எங்கோ முடிக்கிறார்கள். இவற்றைப் படித்துப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.
பழமலய் கிராமத்து மாந்தரைத் தன் கவிதைகளில் அருமையாகச் சித்திரிக்கிறார்.
ஹைகூ என்று மூன்று வரிக்கவிதைகள் நிறைய வருகின்றன. மு. முருகேஷ் எழுதும் மூன்று வரிக்கவிதைகள் நன்றாக −ருக்கின்றன. ஆனால் தமிழில் பலர் எழுதும் மூன்று வரிக் கவிதைகள் கவித்துவம் இல்லாமல் வெறும் உரைநடை வரிகளாக இருக்கின்றன...
தமிழ் நாவல் உலகை எடுத்துக் கொண்டால் அரவானிகளைப் பற்றி சு. சமுத்திரம் எழுதிய ‘வாடா மல்லி’ – எய்ட்ஸ் பற்றி அவர் எழுதிய ‘பாலைப் புறா’ முதலியன புதிய முயற்சிகள். சின்னப்ப பாரதி மலைவாழ் மக்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.
யதார்த்த பாணியிலேயே இன்றும் சிறந்த நாவல்களை எழுத முடியும் என்பதற்கு சுந்தர ராமசாமியின்-
குழந்தைகள், பெண்கள், ஆண்கள் – நாவலை உதாரணமாகச் சொல்லலாம்.
மரபுக் கவிஞர்களில் எனக்கு பாரதி, பாரதிதாசன், ச.து.சு. யோகி, தேசிய விநாயகம் பிள்ளை, கம்பதாசன் – இவர்களைப் பிடிக்கும். நாற்பதுகளில் க. அப்புலிங்கம் என்பவர் கலைவாணன் என்ற புனைப்பெயரில் விருத்தப் பாக்களை அருமையாக எழுதினார். தமிழ் ஒளி, கே.சி.எஸ். அருணாசலம் இவர்கள் கவிதைகளையும் ரசித்துப் படித்திருக்கிறேன்.
இன்றும் பலர் மரபுக்கவிதைகளை நன்றாக எழுதி வருகிறார்கள்...
வ.செ. குழந்தைசாமி, குலோத்துங்கன், நெல்லை. சு. முத்து... இவர்கள் சிறந்த மரபுக் கவிஞர்கள்.
இன்றைக்குள்ள வெகுஜனப் பத்திரிகைகள் எப்படி இருக்கின்றன?
அவர்களுக்கு லட்சியங்கள் முக்கியமில்லை. லட்சங்கள்தான் முக்கியம். தமிழ் சினிமாவும், வணிகப் பத்திரிகைகளும் தமிழரின் ரசனையைக் கெடுத்திருக்கின்றன. இன்றைய தமிழ் சினிமாக்களில் கதை அம்சமே இல்லை. தொழில் நுணுக்க அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்.
தமிழில் நாடகங்கள் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றிச் சொல்லுங்கள்.
1930-களில் பள்ளி மாணவனாக இருந்தபோது கன்னையா பிள்ளை கம்பெனி நாடகங்களைப் பார்த்திருக்கிறேன்.
நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும், டி.கே.எஸ். சகோதரர்களும் எனது நெருங்கிய நண்பர்கள். எங்கெல்லாம் நவாப் கம்பெனி முகாமிட்டிருக்கிறதோ அங்கெல்லாம் என்னை வந்து தங்கி நாடகம் பார்க்கும்படி நவாப் பணம் கொடுத்து அனுப்புவார். கோட்டயம், திருவனந்தபுரம், கொல்லம், கல்லிடைக்குறிச்சி – இங்கெல்லாம் சென்று தங்கி, நாடகம் பார்த்து, நவாப் கம்பெனி நாடகங்களைப் பற்றி விமர்சனம் எழுதியிருக்கிறேன்.
‘கிராம ஊழியன்’ பத்திரிகையில் நான் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, டி.கே.எஸ். சகோதரர்கள் திருச்சியில் முகாமிட்டிருந்தனர். டி.கே.சண்முகம் பணம் அனுப்பி, அழைப்பு விடுத்தார். திருச்சி சென்று தங்கி, பல நாடகங்களைக் கண்டுகளித்தேன்.
வித்யாசாகர், ஒளவையார், சிவலீலா, ராஜா பத்ரஹரி, பில்ஹணன், உயிர் ஓவியம், முள்ளில் ரோஜா, தமிழ் முழக்கம் – முதலிய டி.கே.எஸ். நாடகங்கள் இன்றும் என் நெஞ்சில் பசுமையாக நிலைத்திருக்கின்றன.
கோமல் சுவாமிநாதன் என்னை அழைத்துச் சென்று, தன் நாடகங்கள் சிலவற்றைக் காட்டினார். தற்கால சபா நாடகங்கள் பலவற்றை நான் பார்க்கவில்லை.
தமிழிலக்கியத்திற்கு சிறு பத்திரிகைகளின் பங்களிப்பு எந்த அளவில் இருந்தது , இருக்கிறது ?
தமிழ் இலக்கியம் வளர்ச்சி அடைய சிறு பத்திரிகைகள்தான் பெரிதும் உதவியிருக்கின்றன.
பாரதியார் நடத்திய ‘இந்தியா’ வ.வே.சு. ஐயரின் ‘பால பாரதி’....
1933ல் இருந்து 34 வரை வந்த ‘மணிக்கொடி’ பத்திரிகை அளவில் வெளிவந்தது. அது தேச விடுதலைக்காகப் போராடியது. 1935, 36-ல் வெளிவந்த ‘மணிக்கொடி’ புத்தக வடிவில் வெளியாயிற்று. அப்போதுதான் தமிழுக்குப் பல அருமையான சிறுகதைகள் கிடைத்தன!
வீ.ர. ராஜகோபாலன் என்பவர் ‘கலா மோகினி’ என்ற பத்திரிகையை நடத்தினார். இவர் சாலிவாஹனன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுவார். 1942-ல் இருந்து 1948 வரை ‘கலா மோகினி’ வெளி வந்தது. ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களும் இதில் எழுதினார்கள். மாதம் இருமுறை வெளி வந்தது.
1942-ல் இருந்து 1947 மே முடிய ‘கிராம ஊழியன்’ பத்திரிகை வெளியாயிற்று. தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அமிர்தம்’ இதில்தான் வெளி வந்தது.
எம்.வி. வெங்கட்ராம் ‘தேனீ’ என்று ஒரு பத்திரிகை நடத்தினார். ‘சரஸ்வதி’ பத்திரிகை 1955-ல் ஆரம்பிக்கப்பட்டுத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் நடத்தப்பட்டது. தொ.மு.சி. ரகுநாதன் நடத்திய ‘சாந்தி’. சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ போன்ற பத்திரிகைகளும் −ருந்தன. செல்லப்பா சுமார் பனிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார் பல சிரமங்களுக்கிடையே! தீபம், நடை, கசடதபற, தாமரை, வானம்பாடி, ·, சதங்கை, காலச்சுவடு, நவீன விருட்சம், கனவு, சொல் புதிது, ஆரண்யா, புதிய விசை, கோடு, கணையாழி.... என்று இந்தப் பட்டியல் இன்று வரை நீள்கிறது!
சுப மங்களா, புதிய பார்வை – இவை இடைநிலைப் பத்திரிகைகளாக இருந்தன.
 தமிழில் சோதனை முயற்சிகள்....
டி.கே. துரைசாமி என்கிற ‘நகுலன்’ நிறையச் சோதனை முயற்சிகள் செய்திருக்கிறார். புதுமைப்பித்தனின் சிறுகதை- ‘கயிற்றரவு’. க.நா.சு.வின் ‘அசுர கணம்’ – ‘ஒரு நாள்’ முதலிய நாவல்கள். அசோகமித்திரனின் ‘ஒற்றன்’. நகுலனின் ‘நினைவுப் பாதை’ நாவல் போன்றவைகளெல்லாம் சோதனை முயற்சிகள்தான்.
அப்துல் ரகுமான், அபி, சிற்பி, சேலம் தமிழ்நாடன், பிரமிள், தரும சிவராம், ஆத்மாநாம் – இவர்கள் கவிதைகள் பல சோதனை முயற்சிகள். ஆத்மா நாம் தற்கொலை செய்து கொண்டது தமிழ் இலக்கியத்திற்குப் பேரிழப்பு!
வெளிநாட்டு சோதனை முயற்சிக் கவிதைகள் பலவற்றை பிரம்மராஜன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்!
 தமிழ் வாசகர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வாசகர்கள் வளரவில்லை. தரம் உயரவில்லை. சக்தி. வை. கோவிந்தன் குறைந்த விலையில், உயர்ந்த புத்தகங்களை வெளியிட்டார். எட்டணா விலையில் தந்தார்! தமிழில் மலிவுப் பதிப்புகளுக்கு அவர்தான் முன்னோடி. பாரதியார் கவிதைகள் ஒரு ரூபாய். திருக்குறள் ஒரு ரூபாய். மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி – இரண்டும் சேர்த்து ஒரு ரூபாய்க்கு – என்றெல்லாம் வெளியிட்டார்!
ஆயிரம் புத்தகங்கள் போட்டால் விற்க நான்கு ஆண்டுகள் ஆகின்றன என்று சக்தி கோவிந்தன் சொன்னார்.
இன்றும் அதையே இன்றைய புத்தக வெளியீட்டாளர்கள் சொல்கிறார்கள். இது தமிழின் துரதிர்ஷ்டம்!
க.நா.சு செத்துப் போவதற்கு முன்னால் என்னைச் சந்தித்துப் பேசியபோது சொன்னார்-
‘’ஒரு இலக்கியப் பத்திரிகை ஆரம்பித்தால் நூற்றைம்பது பேர்தான் சந்தாதாரர்களாகச் சேர்கிறார்கள். அன்றும் அப்படித்தான். இன்றும் அப்படித்தான்.’’
சந்திப்பு: எஸ்.குரு


உசாத்துணை
மீள்பதிவு: http://aim.blogsome.com/2006/11/10/p10/