அன்றொரு நாள்: ஏப்ரல் 5
லிபியானந்தம்
ஒலி, ஓசை, ஓவியம், அசை,இசை, சங்கேதம், சின்னம், படம், லிபி எனப்படும் எழுத்து எல்லாம் ஒரு மொழியின் வளர்ச்சியின் படி நிலைகள். ‘ஆம்பல்’ என்ற இதழில்,’... தமிழ்மொழியானது 2400 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தின் படஎழுத்து, கருத்தெழுத்து, அசையெழுத்து ஆகிய மூன்று நிலைகளையும் கடந்து வரியெழுத்து நிலையாகிய நான்காவது நிலையை அடைந்திருந்தது. இதனை தொல்காப்பியம் எமக்கு அறியத்தருகின்றது...’ என்று படித்தேன். பிராமி, வட்டெழுத்து, கிரந்தம், தேவநாகிரி, பாலி என்ற சர்ச்சைகளில் புகாமல், எழுத்து என்ற சொல் ஏற்கனவே பழக்கத்தில் உள்ள பொருள் செறிந்த ஒலிகளை குறிக்கிறது என்றும், அவற்றிற்கு உரிய வரி வடிவத்தை இயக்குகிறது என்றும், அந்த வரி வடிவம் மேற்படி கூறப்பட்ட நான்காவது நிலை என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதற்கான முறைமை நாளாவட்டத்தில் இலக்கண நூல்களில் வகுக்கப்படுகிறது. தமிழ் இலக்கண நூல்களில் அந்த முறைமை, விதிகள், வழுவமைதி, அணி ஆகியவை அருமையாக பதிவாகியுள்ளன.
‘...கி.மு நான்காம் நூற்றாண்டளவில், வணிகத்தினதும், நிர்வாகத்தினதும், சிக்கல்தன்மை, நினைவாற்றலின் வலுவையும் தாண்டி வளர்ந்தபோது எழுத்து, வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கான நம்பத்தகுந்த ஒரு நிரந்தர வடிவமாக உருவானது. சுருங்கக் கூறின், சொல் என்பது 'ஒலியின் வரி வடிவமே' ஆகும். வையகத்தில் உள்ள பெரும்பாலான ஒலிகளுக்கு எழுத்துக்கள் உள்ளன. பல ஒலிகளுக்கு எழுத்துக்களே இல்லை எனலாம் (உம். யானையின் பிளிரல்)...’ என்று இரண்டு நாட்களுக்கு முன் திருத்தப்பட்ட விக்கிபீடியா இதழ் கூறுகிறது. யானையின் பிளிரல் என்ன? குழவியின் மழலை ஒலிகளுக்குக்கூட எழுத்து இல்லை.
எனக்கு இந்த ‘எழுத்து, வணிகப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்வதற்கான நம்பத்தகுந்த ஒரு நிரந்தர வடிவமாக உருவானது.’ என்ற கருத்துடன் உடன்பாடு இல்லை. எழுத்தும், எண்ணும் என்றோ தோன்றிவிட்டன, பரிவர்த்தனை வணிகம் ஆவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னால். சான்றாக, 112 வருடங்களுக்கு முன் ஏப்ரல் 5, 1900 அன்று லீனியர் பி (Linear B) என்ற பட எழுத்தை (hieroglyphic) கிரேக்க நாட்டில் உள்ள ஒரு பகுதியில் (Knoss, Crete) தொல்லியல் நிபுணர்கள் களிமண் பலகைகளில் பதித்திருப்பதைக் கண்டு ஆய்வு செய்தனர். அந்த பட எழுத்து கிரேக்க எழுத்துக்களை விட பல நூற்றாண்டுகள் முந்தியது. (தற்கால நூற்றாண்டுக்கு 3500 வருடங்கள் முந்தியது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த காலத்துக்கு மைசீனியன் கிரேக்கம் என்று பெயர். அதற்கும் முந்திய லீனியர் ஏ, மினோவன் மொழியை சார்ந்தது. 1961 ஆண்டில் விஸ்கன்ஸில் நிகழ்ந்த ஆய்வு மாநாட்டிலும், 2011 வரை நிகழ்ந்த ஆய்விலும், அந்த லீனியர் பி எண்களும், எழுத்துக்களும் படஎழுத்துடன், கருத்தெழுத்தையும் தெரிவிக்கன்றன என்றும், பொருட்களை பற்றிய எழுத்துக்களும், சொற்களும் உபயோகத்தில் இருந்தன என்று கூறப்படுகிறது.
ஒரு உபரி செய்தி: உங்களுக்கும் ‘லிபியானந்தம்’ ஏற்படவேண்டும் என்ற நினைக்க நான் யார்? உமக்கு அலுப்பு தட்டலாம். ஆனாலும், என் பிடிவாதத்தின் காரணம், ஸர் ஆர்தர் ஈவான்ஸ் அவர்களுக்கு நன்றி செலுத்த. அவர் தான் லீனியர் பீ நிபுணர். 1884லியே, உலகப்புகழ் வாய்ந்த ஆக்ஸ்ஃபோர்ட் ஆஷ்மோலியன் ம்யூசியத்தின் பொறுப்பு வகித்தவர். 1998ல் அங்கு சென்று, ஒரு நாள் கழித்தோம். அவருடைய மகத்தான பணியை கண்டு வியந்தோம். மறுபடியும், சில நாட்கள் முன்னால் அங்கு போனபோது, மின் தமிழர்களுக்கும், பேசாமடந்தை தமிழ்வாசகர்களுக்கும் போர் அடித்தாலும், இதை எழுதி விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டேன். இப்போதைக்கு, உங்களுக்குத் தற்காலிக விடுதலை.
இன்னம்பூரான்.
05 04 2012
Sir Arthur Evans' Transcription of Linear A from Minoan Cup Interior
உசாத்துணை:
|