கனம் கோர்ட்டார் அவர்களே [ 24]
இன்னம்பூரான்
13 06 2016
13 06 2016
பிரசுரம்:http://www.vallamai. com/?p=66357
Monday, February 15, 2016, 5:36
சட்டம் இயற்றுவது சட்டசபை; சட்டத்தை நிர்வகிப்பது நிர்வாகம்; சட்டத்தை மேன்மை படுத்துவது நீதிமன்றம். மூன்றும் இணக்கத்துடன் இணைந்து செயல்படுவது, அரசமைப்பு. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. நடைமுறையில் நுட்பங்களும், சிக்கல்களும், வழுக்களும், துணைமன்றங்களும், அவற்றின் நுட்பங்களும், சிக்கல்களும், வழுக்குகளும் ஊடே அமைந்து, கூட்டுறவாகவோ, ஊடுருவலாகவோ செயல்படுவதால், சில சமயம் திகைத்து நிற்கிறோம். அவரவர் அபிப்ராயங்களை கட்டவிழ்த்து ஜல்லிக்கட்டுகிறோம். இது நிற்க.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி. [திருக்குறள் 118]
கோடாமை சான்றோர்க் கணி. [திருக்குறள் 118]
‘சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் -துலாம் போல- அமைந்து ஒரு பால் கோடாமை சான்றோர்க்கு அணி.’ -பரிமேலழகர் உரை: வை.கோவிந்தன் பிரசுரம்.
அத்தகைய சான்றோர் பணி புரிந்தால், நீதிமன்றங்கள் சட்டத்தை மேன்மைப்படுத்த முடியும். நடுவு நிலையில் நின்று பகர்ந்த தீர்வுகள் வாழ்வியலில் நலம் தரும் நடைமுறைகளை சாத்தியப்படுத்த முடியும். பற்பல படிநிலைகளில் நின்று அளித்தத் தீர்வுகளில் குற்றம் காண்பது, மனித இயல்பு. படிநிலை உயர உயர, விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது, தீர்வுகள் மாற்றப்படலாம்; ரத்து செய்யப்படலாம்; மாற்றுக்கருத்துக்கள் தலையெடுக்கலாம்.
இன்றைய பதிவில் இரு கோர்ட்டார்கள் ஆஜர். தீர்வுகளின் சுருக்கத்தைப் படித்து விட்டு, நமது தீர்வுகளை அவரவர் மனதில் உலவ விடலாம். நீதிபதிகள் மீது அவதூறு செய்யக்கூடாது. ஆனால், பழிச்சொற்களை உதறாமல், தீர்வுகளை நாகரீகமாக அலசலாம். விருப்பம் உள்ளவர்கள் அலசுக.
I. தடை.:
பெண்களை தடை செய்வதை நீக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தவர்கள், சட்ட மாணவர்கள். அவர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மிகவும் பிரபலமான பெண்ணிய வழக்கறிஞர்: தாய்க்குலம். அவர் “பெண் பிரம்மச்சாரிகளும் இந்த உலகத்தில் உள்ளனர…அனைத்து ஆசைகளையும் துறந்து வாழ்வது ஆண்களுக்கு மட்டுமே உரியது அல்ல. நமது அரசியல் சாசன சட்டப்பிரிவு 25 அனைத்து மனித இனத்துக்கும் பொதுவான மத ஸ்தலங்களை திறந்து விடுங்கள் என்கிறது. நாங்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களல்லர் என்று கூற வருகிறீர்களா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.
நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்கள் எழுப்பிய வினாக்கள்:
ஆன்மிகம் முழுதும் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதா? மதம் என்ற புலத்தில் பெண்கள் ஆன்மிக நிலையை அடைய லாயக்கற்றவர்கள் என்று கூறுகிறீர்களா?
உங்கள் தாயை கோயிலுக்குள் நுழைய தடை விதிப்பீர்களா?
அவருடைய அறிவுரை: “வழிபாட்டு பண்பாட்டில் ஒரு மையமான குழு இருக்கும். இதில் பிறரை வெளியாட்கள் என்று தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கும். ஆனால் மதம் என்பது முழுமைத்துவத்தை வலியுறுத்துவது, அதுதான் சனாதன தர்மம், பால், சாதி, இன வேறுபாடின்றி அனைவரையும் உள்ளடக்கியதே சனாதன தர்மம்”.
நீதிபதி மிஸ்ரா, “அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்படும் அடிப்படை உரிமையான சமத்துவம் என்பதை மீறி இந்த தடை மரபு நீடித்து நிலைக்கப் போகிறதா? வேதங்களிலும், உபநிடதங்களிலும் பெண்/ஆண் பாகுபாடு இல்லையெனும் போது, வரலாற்றில் எந்த காலக்கட்டத்தில் இந்தப் பாகுபாடு தொடங்கியது என்று கூறுங்கள்” என்று வலியுறுத்தினார்.
உத்தரவு 1: தடைக்கு ஆதரவான ஆயிரமாண்டு கால நிரூபணத்தை ஆறு வாரங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
உத்தரவு 2: இந்த வழக்கிற்கு சட்ட, அரசியல் சாசன மற்றும் ஆன்மீக தளங்களில் ஆழமான ஆய்வு தேவைப்படுகிறது என்பதால் மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் என்பவரை நீதிமன்ற நடுநிலை அறிவுரையாளராக நியமனம் செய்கிறேன்.
யான் கூற விழைவது: இப்போது பம்பா நதியின் நட்டாற்றில் நிற்கிறோம்.
கேள்விக்கு என்ன பதில்?
-#-
கேள்விக்கு என்ன பதில்?
-#-
II. உடை:
அடுத்து வருவது:
ராமநாதபுரம் மாவட்டம், உத்தர கோசமங்கையில் 3,300 ஆண்டுகள் பழமையான மங்களநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் மூலவர் மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்புடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஆருத்ரா தரிசனம் அன்று மட்டும் மரகத நடராஜர் சந்தனக் காப்பு இல்லாமல் காட்சியளிப்பார்.
வழக்கறிஞர்கள் இல்லாமல் வழக்கா? ராமநாதபுரம் வழக்கறிஞர் முருகன் அவர்களுக்கு ஒரு வேட்கை [இன்னம்பூர் ஶ்ரீநிவாசர் கட்டாரி அணிந்துள்ளாரா? என்று தூக்கம் தொலைத்த சம்பத்துப் போல!]: இந்த நடராஜர் சிலை உண்மையில் மரகதத்தால் செய்யப்பட்டதா? இல்லையா? என்று அவர் தூக்கத்தைத் தொலைத்தது மட்டுமல்லாமல், [கண்ணகி சிலம்பை உடைத்தது போல]சிலையை உடைத்து மரகதமா இல்லையா? என்பதை ஆய்வு செய்ய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், வழக்குத் தொடர்ந்தார்.
இதை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
“அனைத்து மத நம்பிக்கைக ளையும் அறிவியலை பயன்படுத்தி ஆராய்ந்து கொண்டிருக்க முடி யாது. சில நம்பிக்கைகளை நம்பிக்கையாகவே இருக்க விடுவது நல்லது. மனுதாரர் மரகத நடராஜர் சிலை உண்மையில் மரகத்தால் செய்யப்பட்டது என நம்பினால் நம்பலாம். அவருக்கு அந்த நம்பிக்கை இல்லாவிட்டால், அவர் கோயிலுக்கு செல்வதை நிறுத்திக்கொள்வது நல்லது.
மனுதாரர் மரகத நடராஜர் சிலையை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் ஒரு சிலையை உடைக்காமல் அந்த சிலை குறித்து ஆய்வு செய்ய முடியாது. அப்படி சிலை உடைக்கப்பட்டால் அந்த சிலை வழிபாட்டுக்கு தகுதியற்றதாகி விடும். மனுதாரர் இப்படிப்பட்ட தவறான உள்நோக்கத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
உத்தரகோசமங்கை கோயி லுக்கு கோடிக்கணக்கான பக் தர்கள் வருகின்றனர். அவர்களின் நம்பிக்கையை கெடுக்கும் செயல்களை செய்வது சரியல்ல. மரகத நடராஜர் ஆண்டுதோறும் சந்தனக் காப்பில் இருப்பதை பெரிய பிரச்சினையாக்கி, அதை சரிசெய்ய சிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது.
இந்த மனுவை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால், சுய கட்டுப்பாடு காரணமாக மனுதார ருக்கு அபராதம் விதிக்காமல் விட்டுவிடுகிறோம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது “
இனி உங்கள் பாடு, மரகத நடராஜர் பாடு, முருகன் பாடு. அவர் உச்சநீதி மன்றத்துக்கு விண்ணப்பம் செய்வாரானால், அவருக்கு நீங்கள் பரிந்துரை செய்யும் வாதங்கள் யாவை?
என் தம்பிடி கருத்து: கனம் கோர்ட்டார் அபராதம் சிறிதளவாவது விதித்திருக்கவேண்டும்.
-#-
உசாத்துணை, இரவல் நன்றி, காப்புரிமை நன்றி: தி இந்து: 12 02 2016
-#-
உசாத்துணை, இரவல் நன்றி, காப்புரிமை நன்றி: தி இந்து: 12 02 2016
சித்திரங்களுக்கு நன்றி:
இன்னம்பூரான்
No comments:
Post a Comment