இன்னம்பூரான் பக்கம் 5: 29: கனம் கோர்ட்டார் அவர்களே! 29
இழுபறி வைத்தியம்
இன்னம்பூரான்
13 11 2016
கலோனிய அரசு கெடுபிடிகள் பல காட்டினாலும், திலகரின், காந்திஜியின், பாரதியாரின் எழுத்துரிமையும், பேச்சுரிமையையும் முச்சூடும் பறிக்கவில்லை. தடா போட்டுப் பார்த்ததுடன் சரி. காந்திஜியுடன் வைஸ்ராய் இர்வின் பிரபு பேச்சு வார்த்தை நடத்தினார். நீதித்துறை தன் பெருமையை காத்துக்கொள்வதில் கவனம் செலுத்தும் என்பார்கள். ஆனால், மதராஸ் ஹைகோர்ட்டில் ஒரு ஜட்ஜை வழக்கறிஞர் ஒருவர் நாய் என்று பொருள்பட நகைத்தார். சிரித்துக்கொண்டு விட்டு விட்டார்கள். ஏனெனில், அது பூடகமான நகைச்சுவையாக இருந்தது. சினம் பொங்க, ஒரு ஜட்ஜ் ‘நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்று தெரியுமா?’ என்ற வினவ, பழம் தின்னி கொட்டை போட்ட வக்கீல் ஐயா, ‘ஆஹா! தெரியுமே! ஒரு ஒல்லிப்பிச்சான் [puisne] ஜட்ஜிடம் பேசுகிறேன்.’ என்றார். எல்லாரும் கமுக்கமாக சிரித்துக்கொண்டார்கள், ஜட்ஜ் உள்பட.
அத்தகைய அலாதி உறவு எல்லாம், சுதந்திர இந்தியாவில் பறி போகத் தொடங்கின, கொஞ்சம், கொஞ்சமாக.
எனக்கு ஒரு கெட்ட வழக்கம். இங்கிலாந்தில் படித்து வந்த காலகட்டத்தில் உயர் நீதி மன்ற (ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்) தீர்ப்புகளை தினம்தோறும் படிப்பேன். கறாரில் மையக்கரு நகைச்சுவையிலும், அலட்டிக்கொண்ட தீர்ப்பில் தர்மமும் இருக்கும். எல்லாம் பாடமே. இந்திய அரசியல் சாஸனத்தில் நீதித்துறைக்கு மவுசு அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பீல் என்ற சட்ட நடவடிக்கை இருப்பதே, நீதிபதிகள் தெய்வாம்சம் கொண்டவர்கள் அல்ல, ஒருவர் அளித்த தீர்ப்பை மேலா ரத்து செய்யலாம் என்பதால், தீர்ப்புகளை விமர்சனத்துக்கு உட்பட்டவை என்பதை குறிக்கிறது. அதே விமர்சனத்தை மக்களில் ஒருவர் செய்வது வரவேற்கபடுவதில்லை. அப்படி செய்தாலும், கவனமாக நீதிபதியை கொஞ்சம் வெளிப்படையாக விமர்சித்தால் கோர்ட்டை அவமதித்தாக எடுத்துக்கொண்டு, ஆறு மாதம் ஜெயிலில் போடலாம்.
அந்த நிலைப்பாட்டுக்கு அஸ்திவாரமே சற்றே தடுமாற்றம் தான். வில்மாட், வில்மாட் என்று ஒரு ஜட்ஜ் 1765ல் ‘கோர்ட்டை அவமதிப்பது குற்றமே’ என்று ஒரு நிருபர் மேல் எழுந்த வழக்கில் ஒரு தீர்ப்பில் எழுதி இருந்தாலும், டெக்னில் காரணங்களால். அது குறைப்பிரசவம் ஆனது வில்மாட்டின் மைந்தர் காலம் சென்ற தந்தையின் படைப்புகளை பதிவு செய்த போது, சட்டத்தை அணுகாத அந்த கருத்து ஒரு மரபு ஆகி விட்டது. அப்பறம் என்ன? நீதி அரசர்கள், நீதி மன்னர்களானர்கள், சில இடங்களில் நீதி தேவர்களும் ஆனார்கள் -இந்தியாவில். இங்கிலாந்தில் மரபை பதிவு செய்து விட்டு, காமன் சென்ஸ் படி நடந்து கொண்டார்கள். பொதுவாக சொன்னால், அங்கே நீதிபதிகள் அமரிக்கையாக இருந்தார்கள்.
மேல்நாட்டு ஊடகங்கள் எந்த உத்தமபுத்திரனையும் உச்சாணிக்கிளையில் அமர்த்தி மெய்கீர்த்தி பாடமாட்டார்கள். தடாலடியை எல்லாம் இறக்கி வைத்து வேப்பிலை அடிப்பார்கள். பல வருடங்களுக்கு முன்னால் [1989?] நீதிபதிகளின் தலைமை போன்ற டெம்பிள்டன் பிரபு, பிரபல வழக்கறிஞர்களும், நீதிபதிகளின்புடை சூழ, இந்தியா வந்திருந்தார். அப்போது, ‘ ஊடகங்களின் எழுத்துரிமை ‘கனம் கோர்ட்டாரை அவமதித்தால்..!?.’ என்ற பட்டி மன்றம் நடந்தது. அப்போது அவர் 1987ல் உலகெங்கும் பேசப்பட்ட ஸ்பைகேட்சர் புத்தகம் பற்றிய தீர்ப்பில், அந்நூலின் ஆசிரியர் பீட்டர் ரைட் வாக்கு மீறி அரசு ஒற்றர்களின் ரகசியங்களை (ஒரளவு லீக் ஆனவை தான்) பிரசுரம் செய்யக்கூடாது என்று தானும், இரு சக ஜட்ஜ்கள் மெஜாரிட்டி தீர்ப்பு கொடுத்ததை ஊடகங்கள் பரிகசித்தன. மூவரின் படங்களை தலை கீழாக மாட்டி, ‘மூன்று முட்டாள்கள்’ என்ற தலைப்பை டைலி டெலிக்ராஃப் பிரசுரம் செய்தது. ஐயா அவர்கள் உடனே நடவடிக்கை எடுத்தார். என்ன? அதை தன் வரவேற்பு அறையில் அலங்காரமாக மாட்டி விட்டு, தினம் அதை பார்த்து சிரித்துக்கொண்டார்.
[தொடரும்]
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
No comments:
Post a Comment