வாத்ஸல்யம்
Monday, February 11, 2013, 7:03
இன்னம்பூரான்
“நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை
நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார் சோலைக்
காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே.’
(பெரிய திருமொழி 2-5-2)
சென்னைக்கு அருகே ஒரு பெருமாள் கோயில். பெருமாளோ பக்தவத்ஸலன். தாயாரோ ‘என்னைப்பெற்ற தாயார்’. அகஸ்மாத்தாக, என் தங்கையும், அவளுடைய குடும்பமும், நானும் ஒரு நாள் சாயரக்ஷையில் திருநின்றவூர் போயிருந்தோம். அற்புதமாக தரிசனம் கிட்டியது. எல்லாருக்கும் தான். என் மனம் இந்த தெய்வீக திருநாமங்களையும், அவற்றில் குடி கொண்டிருக்கும் கனிவுக்கும், அன்புக்கும், பிரேமைக்கும் ஊற்றுக்கண்ணாகிய வாத்ஸல்யத்தில் லயித்தது. பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தாலும், சாவகாசமாக தரிசித்து, அர்ச்சானாதி பிரசாதங்களை பெற்று அனுபவிக்க முடிந்தது. அமைதியும், மன நிறைவும், சந்துஷ்டி என்பார்களே அந்த பூரணத்துவமும் எம்மை ஆட்கொண்டபடியால், லெளகீக சமாச்சாரங்கள் ( வண்டி ஓட்டுனர் தேநீர் அருந்தினாரா?/ காலணிகள் பத்திரமா? வீட்டுச்சாவி யாரிடம்?/ஓய்வூதியம் வங்கிக்கணக்கில் வந்திருக்குமா?/ அலமாரியை பூட்டினோமா? இத்யாதி) மனதை விட்டு விலகியிருந்தன. தரிசனம் முடிந்தபின் சற்று நேரம் அங்கே அமர்ந்து விட்டு வருவது ஒரு சம்பிரதாயம். நாங்களும் அவ்வாறே செய்தோம். என்ன தோன்றியதோ, தெரியவில்லை. என் தங்கை ஒரு கேள்வி கேட்டாள். பதில். அடுத்த கேள்வி. பேசிக்கொண்டே, அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றால், ஒரு இனிய அனுபவம். பெருமானின் பெயர்: ஹிருதயாலீஸ்வரர்; அம்பாளோ மரகதாம்பிகை. கொஞ்சம் அசந்து தான் போய்விட்டோம். இப்படி ஒரு பொருத்தமா என்று. அந்த ஊரில் குடி புகுந்து விடலாமா என்று கூட ஒரு எண்ணம் உலா வந்தது. அங்கு சிறிது நேரம் அமர்ந்த பின், எங்கள் உரையாடல் தொடர்ந்தது. இப்படி, நேரம் போனது தெரியாமல் ஒரு அரை மணி நேரம் கழிந்து விட்டது. சில நிமிடங்களில் ஒரு கூட்டமே சேர்ந்து விட்டது, தாமதமாகத்தான் எங்களுக்குத் தெரிந்தது, முடிவில். அதுவும் எப்படி? முன்பின் தெரியாத மூத்த நபரொருவர், ‘நல்ல வேளை. நானும் கலந்து கொண்டேன். நீங்கள் யாரும் ஆக்ஷேபிக்கவில்லை. எல்லாம் ஆத்மார்த்தமாக நடந்து விட்டது. எல்லாம் அவனுடைய வாத்ஸல்யம்’ என்று சொல்லி மனமுருகி விடை பெற்றுக்கொண்டார். அப்போது தான் புரிந்து கொண்டோம், ஒரு கோஷ்டி பிரவசனம் நடந்து முடிந்திருக்கிறது என்று. கிட்டத்தட்ட பத்து/பதினைந்து பேர், அடக்கி வாசிக்கும் குரலில், சம்பாஷித்ததில் யார் யார் என்ன என்ன சொன்னார்கள் என்பது முக்கியம் அல்ல. கேள்வி தான் முக்கியம்; சாராம்சம் தான் முக்கியம். என் தங்கை கேட்ட கேள்வி, “ ஏன் இங்கு இன்று எதிர்பாராமல் கிடைத்த மனசமாதானத்தை நம்மால் மற்ற இடங்களில் இருக்கும்போது பெற முடியவில்லை?
சாராம்சம்: முனைந்தால் அது நமக்குக் கிட்டும். முனிவர்களும், சாதுக்களும் பெறவில்லையா? முனைவது என்பதே ஒரு அப்பியாசம். அப்போது அப்பியாசத்தில் லயிக்கும் மனம் லெளகீகத்தில் தான் உழல்கிறது. வாசற்படி தாண்டி பக்தி மார்க்கத்தில் பயணிப்பதில்லை. அதனால் என்ன? ஆன்மீகமும் பயிற்சியினால் தானே படிப்படியாக கோபுரம் ஏறுகிறது. அதை செய்து பார்ப்போம். அம்மா! பக்திக்கு முன் ஆன்மீகம் எம்மாத்திரம்? ‘என்னைப்பெற்ற தாயாரின்’ கருணாசாகரத்திலோ, பக்தவத்ஸலனின் அன்புப்பிடியிலோ, ஹிருதயாலீஸ்வரரின் மனோபாவ கவர்ச்சியிலோ, மரகதாம்பிகையின் கனிவு பிரவாகத்திலேயோ, ஆன்மீகமா ஆட்சி புரிகிறது? லெளகீகத்திலிருந்து தற்காலிக விடுதலை பெற ஆன்மீகம் உதவலாம். தற்காலம் பெரிதும் பேசப்படும் ஆன்மீகம் வேறு. ஞானமார்க்கம் வேறு. நாமோ ஆன்மீகத்தையே லெளகீகத்தின் படி நிலையாக வைத்து குப்பை கொட்டுகிறோம். பக்தி மார்க்கமே உகந்தது. அதற்குதவத்தான் பெருமாளின் வாத்ஸல்யம். தாயாரோ பெற்றெடுத்த அன்னையானாள். அன்றொரு நாள் பிரம்மபுரத்தில் ‘பிள்ளையாருக்கு’ அடிசல் கொடுத்த அம்மை, இங்கே தாயார். நீங்கள் கொஞ்சம் தயங்கினால் கூட, உமது மனோபாவத்தைக் கொள்ளை கொள்ள மரகதாம்பிகா சமேத ஹிருதயாலீஸ்வரர் வந்து விடுவார். தெய்வ சன்னிதானம் நம் மனதில் தான். பக்குவம் வந்தால், என் அம்மா சொன்னமாதிரி, அவரே நம்மை தேடி வருவார். பக்தவத்ஸல பெருமாள் கடல்மல்லைத் தலசயனம் சென்று தானே, திருமங்கையாழ்வாரிடம் பாசுரம் பெற்று, மங்களாசாஸனம் செய்து கொண்டார். இப்படியாக ஒரு நல்ல நாள் கழிந்தது. நல்லெண்ணம் தொடர்ந்து ஆட்கொண்டவண்ணம் உளது.
இப்படியாக சம்பாஷணை நடந்து கொண்டபோது, என் மருமான் கேட்டான், ஒரு உதாரணம் சொல்லு என்று. 1964ல் அக்காலத்து ஆடிட்டர் ஜெனெரல் ஏ.கே.ராய் அவர்களுடன் திருமலைக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டியது. வீ. வீ.ஐ.பி. ஏற்பாடு. தேவஸ்தானத்துத் தலைவர் எங்களை அழைத்துச் சென்றார். அந்த ‘ஜருகண்டி’ சன்னிதானத்தில், கருவறை தலைவாயிலில் இரண்டு மணி நேரம். ஸஹஸ்ரநாம அர்ச்சனை. எங்கள் இருவருக்கும், அவருடைய காரியதரிசி தேசிகனுக்கும் இந்த அரிய வாய்ப்பு. திருமலை வெங்கடேசனின் பக்தியில் மூழ்கிக்கிடந்தோம். அங்கு நுழையும் முன், திரு. ராய், ‘ராஜூ! என் கூட வா.’. (ராஜூ வண்டி ஓட்டுனர்.) தெய்வ சன்னிதானத்திலும் லெளகீகம் நடை போடுவது, அவருக்குத் தெரியாத சமாசாரமா? ராஜுவுக்கும் அந்த அரிய வாய்ப்பு. சென்னை வந்த பின் ராஜூ என்னிடம் சொன்னார், ‘நான் இரண்டு தெய்வங்களை தரிசித்தேன்.’
சித்திரத்துக்கு நன்றி:
நன்றி: வல்லமை இதழ்: http://www.vallamai.com/literature/articles/31844/
***
இப்படி மனதைக் கவரும் ஒரு கோயிலைப் பார்த்து விட்டால் எனக்கும் சில முறை சில இடங்களில் தோன்றியதுண்டு. :-) ...
சாராம்சம்: முனைந்தால் அது நமக்குக் கிட்டும். முனிவர்களும், சாதுக்களும் பெறவில்லையா? முனைவது என்பதே ஒரு அப்பியாசம்.
உண்மை.
அப்போது அப்பியாசத்தில் லயிக்கும் மனம் லெளகீகத்தில் தான் உழல்கிறது. வாசற்படி தாண்டி பக்தி மார்க்கத்தில் பயணிப்பதில்லை. அதனால் என்ன? ஆன்மீகமும் பயிற்சியினால் தானே படிப்படியாக கோபுரம் ஏறுகிறது. அதை செய்து பார்ப்போம். அம்மா! பக்திக்கு முன் ஆன்மீகம் எம்மாத்திரம்?
அழகானச் சொல்லியிருக்கின்றீர்கள்.
சுபா
..
இப்படியாக சம்பாஷணை நடந்து கொண்டபோது, என் மருமான் கேட்டான், ஒரு உதாரணம் சொல்லு என்று. 1964ல் அக்காலத்து ஆடிட்டர் ஜெனெரல் ஏ.கே.ராய் அவர்களுடன் திருமலைக்கு செல்லும் வாய்ப்புக் கி..~சுபாஷிணி ட்ரெம்மல்.
***
வழக்கம் போக வாத்சல்யமான எழுத்து இ சார் சென்னை வரும்போதெல்லாம் திரு நின்றவூர் போய் இந்த இரண்டு
ஆலயங்களையும் தரிசிக்க நினைப்பேன் என்னவோ வேளை வரவில்லை... ஷைலஜா
*
சில ஆண்டுகளுக்கு முன் இங்கே போய் வந்தோம். ஹ்ருதயாலீஸ்வரரைப்பற்றி அப்போது தெரியலை.
ஆனால் எட்டடி ராமரை தரிசிக்க முடிஞ்சது.
விவரங்கள் இந்த இரண்டு சுட்டிகளில்.
. நேரம் இருந்தால் பாருங்கள்.
துளசி கோபால்
சித்திரத்துக்கு நன்றி: https://lh4.googleusercontent.com/-Qjj3ekzLcbo/S-a78EBh35I/AAAAAAAAAOA/D6oRF62-i5o/s640/DSCN0482.jpg
No comments:
Post a Comment