Wednesday, July 9, 2014

புல்லட் ரயில்வே பட்ஜெட் - ஒரு 'சட்புட்' அலசல்












புல்லட் ரயில்வே பட்ஜெட் - ஒரு 'சட்புட்' அலசல்

pastedGraphic.pdf
இன்னம்பூரான் 
புதன், 9 ஜூலை 2014 (13:27 IST)

pastedGraphic_1.pdf
pastedGraphic_2.pdf


யானை வரும் பின்னே. மணியோசை வரும் முன்னே என்பது போல ரயில்வே பட்ஜெட், மத்திய அரசின் வருடாந்திர பட்ஜெட்டின் முள்ளுப் பெருக்கிச் சாமி. வைணவ கோயிலொழுக்குப்படி பெருமாளை எழுந்தருளிப் பண்ணி உலா வரும் முன், சேனை முதலி ஓட்டமும் நடையுமாக பாதையைச் சீர்ப்படுத்துவார். அம்மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அறிவிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட் ஸ்டேஷன் வருவதற்கு முன்னாலேயே, பாதி வழியில் நின்றுவிட்டது. ஜூலை 8, 2014 அன்று புதிய அரசால் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் பற்றியும், புதிய ரயில்களையும் பற்றியும் வந்துள்ள விவரமான செய்திகளை மீள்பதிவு செய்யப் போவதில்லை. 

இந்திய ரயில்வேயின் வரலாறு போற்றத்தக்கது. பாடப் புத்தகங்களில் ஆங்கிலேயக் காலனி அரசு ராணுவ வரத்துப் போக்குக்காக ரயில்வே அமைத்தனர் என்று சொல்லப்பட்டது அரைகுறை உண்மை. பஞ்சம் ஏற்பட்டபோது உணவுப் பொருட்களைப் பெருமளவில் அனுப்பவும், வணிகம் செழிப்புடன் வளரவும், மக்களின் யாத்திரைகள் அதிகரிக்கவும், அதனால் இன பேதம் தணிந்து, கலாச்சாரப் பரிமாற்றம் நடந்ததிலும் ரயில்வேக்குப் பெரும் பங்கு உண்டு. 

கட்டை வண்டி போல மரக்கட்டை கதவுகள் கொண்ட நத்தை வேக பாஸெஞ்செர் வண்டிகளையும், உலகளாவிய துர்நாற்றக் கழிப்பறைகளையும், மாயவரம் டிகிரி காஃபியையும், விஜயவாடா ஆம்சத்தா (மாம்பழச்சாறு கற்றை), லோனாவாலா சிக்கியையும், பாடியாலா லஸ்ஸியையும் (நீர் மோர்), பதான்க்கோட் பரோட்டாவையும் நான் சுவைத்த பின்னரும், உயிரோடு இருக்கிறேன்! சில நாடுகளில் ரயில்வே பயணம் செய்திருக்கிறேன். மூன்று ரயில்வே மாவட்டங்களில் (Zonal Railways) பணி புரிந்திருக்கிறேன். அந்த அனுபவங்கள் இப்போது கை கொடுக்கின்றன. நன்றி: இந்திய ரயில்வே.

முதலில் ஒரு ரயில்வே ஜோக்: 

தென்னிந்திய ரயில்வேயின் ஒலவக்கோட்டுப் பகுதி என்று வைத்துக்கொள்ளுங்கள். நடந்தது என்னமோ மேற்கத்திய ரயில்வேயில். அதற்கு மேல் சொன்னால் வம்பு! 

இளமை வேகம்; திருமணமான அறுபது நாட்களுக்குள்; மோகம். உதவிப் பொறியாளர். ரயில் பாதையில் அத்வானமான காட்டின் நடுவில் ஒரு ரயில்வே பங்களா. ரயில் நிற்காது. அதனால், ட்ராலி வண்டியில் தம்பதி ஜாலி டூர்! பங்களாவைக் காணோம்! திரும்பி வந்து மேலாளரிடம் ‘பொய்க் கணக்கு’ என்று புகார். அவருடைய பதிலைக் கேட்பீர்களாக: 

‘அப்பனே! என்னை கேட்காமல் நீ ஏன் போனாய்? கட்டியதாகக் கணக்கு எழுதினவன் நான். உடனே, அது பாழாக இடிந்துவிட்டதால் அழிக்க வேண்டும்’ என்று திட்டம் கொடு’.  

எப்படி? இது ரயில்வேக்காரர்கள் தங்களுக்குள் கேலி செய்துகொள்வது.

உண்மையில், மற்ற துறைகளை விட ரயில்வேயில் நாணயம் அதிகம்; லாவண்யம் குறைவு. ஆனால், போன வருடம் காங்கிரஸ் கட்சி ரயில்வே அமைச்சரகத்தில் 1942 ரயில்வே கழிப்பறை துர்நாற்றம். தலைமை முதல் அடியாள் வரை ரயில்வே போர்டில் லஞ்ச வாவண்யம். அமைச்சரின் பெயர் அடிபட்டது. ராஜிநாமா செய்து தப்பிவிட்டார். அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ தான் அநாகரீகமாக, அசிங்கமாக, இன்றைய ரயில்வே அமைச்சரின் பெயர்ப் பலகையைப் பிடுங்கி எடுத்து மிதித்தார். வெட்கக்கேடு! சீப்பை ஒளித்து வைத்தால், கல்யாணம் நின்று விடுமா? என்ன? ஆனாலும், மறைமுகமான லஞ்சம், வீணடிப்பில் ஆதாயம், அபாரச் சலுகைகள், அறுசுவை உண்டி எல்லாம் ரயில்வேயின் பிதுரார்ஜித சொத்துகள்! எல்லாம் அளவோடு இருக்கும், அந்தக் காலத்தில்!

இந்தப் பின்னணியில் புல்லட் ரயில்வே பட்ஜெட் அலசல்:

1. லஞ்சத்தை ஒடுக்கும் வகையில் அறிவிப்பு இல்லை; ஆனால், எல்லாம் வெளிப்படையாக இருக்கும் என்றது பட்ஜெட். இது போதாது.

2. நேருவின் சோஷலிஸம் வந்த போது தனியார் மயம் காசு செலவழிக்கத் தயாராக இல்லை. ஏகப்பட்ட திரவியம் வேண்டியிருந்தது: உதாரணம்: ரூர்க்கேலா எஃகு உற்பத்தி சாலை. அப்போது அரசு வாரியங்கள் / கம்பெனிகள் தலையெடுத்தன. இப்போது, தனியார் கை இங்கும், எங்கும் ஓங்கி உலகை அளக்கின்றன: உதாரணம்: அம்பானி.  ஸ்விஸ் வங்கிகளிலும் கோடிக்கணக்காகத் துட்டு! இந்தப் பின்னணியில் ரயில்வே பட்ஜெட் தனியார் / அன்னிய முதலீடு நாடுவது சரியே. ஆனால், கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு கண்காணிக்க வேண்டும். தணிக்கைத் துறைக்கு வழி விட வேண்டும். 2ஜி, நிலக்கரி, கச்சா எண்ணெய் ஜாம்பவான்கள் ஜொள்ளு விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்!

3. புல்லட் ரயில் வகையறா நல்வரவு. பயிற்சி, பாதுகாப்பு, மராமத்து ஆகியவற்றில் முழுக் கவனம் தேவை.

4. பங்குச் சந்தை சிங்கியடித்ததைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அது தனி உலகம்.

5. கணினி மய ஏற்பாடுகள் கன ஜோர்.

6. பிரதமர் சொன்ன மாதிரி இது மக்கள் நலம் நாடும் பட்ஜெட். அதனால் தான் தமிழ்நாட்டு முதல்வரும், கருணாநிதியும் (ஓரளவு!) வரவேற்பு கூறியிருக்கிறார்கள். மற்ற புகார்கள் எல்லாம் சென்னை பாஷையில் ‘வேலைக்கு ஆவாது!’.

7. நாடாளுமன்றத்தில் அமளி செய்தது, சில எதிர்க் கட்சிகளின் பலவீனத்தின் வெளிப்பாடு. 

இன்னும் பேசிக்கொண்டே போகலாம். அவசியமானது மட்டுமே இடம் பெறுகிறது. அடுத்து 'சட்புட்' சடுதியில் பாயும் மத்திய பட்ஜெட்டைப் பார்க்கலாமா?

===================
ஒரு பின்னுரை:

வெப்துனியா தளத்தில் நாம் யாவரும் விழிப்புணர்வுடன் அறிந்துகொள்ள வேண்டிய பல துறைகளைச் சார்ந்த தகவல்கள் / செய்திகள் / வரலாற்றுச் சம்பவங்கள் / கருத்துக் களம் பற்றித் திறனாய்வு / விமரிசனம் செய்ய தருணம் கிட்டியதைப் பற்றிய என் மகிழ்ச்சியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்தத் தொடர், எல்லா விஷயங்களையும் நடுவுநிலையிலிருந்து, ஆக்கப்பூர்வமாக, விழிப்புணர்ச்சியை இலக்கு வைத்து அமையும். மக்கள் நலம், நீதிமன்றத்தார், கண்காணிப்பு, சமுதாயத்தின்/ அரசியலின் ராஜ பாட்டைகள், திக்குத் தவறிய ஒற்றையடிச் சந்துகள், குறுக்குப் பாதைகள், தணிக்கையின் தன்மையும், பயன்பாடும், மேலாண்மை, தன்னார்வம், ஐ ஏ எஸ் படிப்பு, மற்றும் பல எல்லாமே கலந்து வரும், வாசகர் விருப்பப்படி. கணகணப்பு இருக்கும்; ஆனால் புண்படுத்தாது. வெப்துனியாவில் பண்புடன் வரும் பின்னூட்டங்களும், மாற்றுக் கருத்துகளும், அளவளாவுதலும் நல்வரவே. பதில் அளிக்கப்படும்.

- இன்னம்பூரான்
===================

pastedGraphic_3.pdf

இதில் மேலும் படிக்கவும் :  


No comments:

Post a Comment