பனையூர் நோட்ஸ் 2: ‘நான்’ ஒரு விளையாட்டுப்பிள்ளையா?:2
இன்னம்பூரான்
24 07 2014
“... தொலைக்காட்சியில் காணக்கிடைக்கும் மனோநல தலையீடுகளை (அதுவும் பெண்களை ‘ங’ போல் வளைய சொல்பவை) கண்டு அஞ்சுகிறேன். நமது மடலாடலிலும் அது தென்படுகிறது. மனோநலம் என்ற துறை சாமான்யமானது இல்லை...”.
(தொடரும்)
புலன் பெயரும் நிலையில் உள்ள இந்த நீண்ட தொடர் ‘நான்’ என்ற சிந்தனையின்/குழப்பத்தின் வரத்துபோக்குக்களை முன் எடுத்து வைக்க முயலும். முதற்கண்ணாக, மனித இனத்தின் மன அழுத்தம் (depression) என்பதை பற்றி சில வரிகள். அது ஒரு அபூர்வமான மனோவியாதி அல்ல.
எந்த சமூகத்திலும் பத்தில் ஒரு பங்கு மக்கள் இத்தகைய பாதிப்பு அடைந்து இருக்கிறார்கள் என்று சமீபகால (2013) பிரிட்டீஷ் ஆய்வு ஒன்று கூறுகிறது. முதற் பலிகடா வாழ்வின் தரம். அடுத்த படியாக சுற்று வட்டாரத்தில் உள்ள மற்றவர்களை ஏதோ ஒரு வகையிலாவது பாதிக்கிறது. மேலும் ஒரு கொடுமை, அதன் மறைமுகம். ‘நான்’ மன அழுத்தத்தினால் பாதிக்கப்படாதவன் (ள்) என்று தான் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். போதாக்குறைக்கு, anxiety என்று சொல்லப்படும் கவலை/வியாகூலம்/ விசாரம் மன அழுத்தம் என்ற வேடம் பூண்டு வருகிறது. ‘ஏக்கமும்’ (stress) பகுவேடதாரி. பத்து தலை ராவணனைப் போல மன அழுத்தமும், மன அமுக்கமும், கவலையும், ஏக்கமும் ஒன்று கூடி வந்தால், வேறு வினை வேண்டாம். அவை தனித்துத் தனித்து வந்தாலும், ‘மன அழுத்தம்’ ‘கவலையாகவும், ‘கவலை’ ஏக்கமும் ஆக வந்து பாடாய் படுத்தலாம்.
இதையெல்லாம் மேலெழுந்தவாரியாக ‘நான்’ என்ற தனக்கே பூட்டிக்கொள்வது எளிது, Jerome.K.Jeromeயின் கற்பனயில் உதித்த Three men in a Boat போல! இங்கிலாந்தில் முப்பது சதவீத மக்கள் கவலைப்பட்டு, கவலைப்பட்டு மாய்ந்து போகிறார்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது. ஒன்று கெட ஒன்று என்ற சங்கிலித்தொடர் அபாயம் வேறு இருக்கிறது. ஏக்கம் கவலையாக மாறி அது மன அழுத்தமாக உருவெடுத்து , பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக, கொம்பேறி மூக்கன் போல் ஏறி, ஆளைக் குலைத்து விடலாம்.
மனோநல ஆலோசகர் [Psychologist] வாயா வார்த்தையாக குணப்படுத்த முயலுவார்கள். மனோ வியாதியின் குறிகளை, கண்டறிந்தும், கேட்டறிந்தும், அலசியும் தீர்வு காண்பதில் இறங்குவார்கள். சில பயிற்சிகளையும் சொல்லிக்கொடுப்பார்கள். மனோநல வைத்தியரிடம் [Psychiatrist] செல்ல பரிந்துரையும் செய்யக்கூடும். இருவரும் கலந்தாலோசித்தும் நிவாரணம் தரலாம். தரமுயர்ந்த மருந்துகளும் உளன. உதாரணமாக Prozac என்ற மருந்து அதிகம் பேசப்படுகிறது. மற்றும் சில மருந்துகளை பற்றி சொல்ல தயங்குகிறேன். ஏனெனில் மனோநல வைத்தியரின் பரிந்துரை அத்தியாவசியம். இல்லாவிடின் பக்கவிளைவுகள் பாதிக்கலாம். மனோநல உள்ளுறை ஆலோசகர் [Therapist] இந்த வரிசையில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவரிடம் பாதிக்கப்பட்ட நபர், குடும்ப நபர்கள் எல்லாருமே ஆலோசனைக்கு வரவழைக்கப்படுவார்கள். அது தொடர் நிகழ்வாக பல தடவை நடை பெறும். நேரம் பணவிரயமும் அதிகம். ஆனால், பக்க விளைவு இல்லாத வகையில் இதில் பூரண நிவாரணம் கண்டவர்கள் பலர். சொல்லப்போனால், மேல்நாடுகளில் மனோநல உள்ளுறை ஆலோசகரை , யாதொரு விதமான பாதிப்பு இல்லாதவர்கள் கூட அணுகுவது உண்டு.
‘பெண்களை ‘ங’ போல் வளைய சொல்லும் தொல்லைக்காட்சிகள்/ இதழ்களில் உலவும் அத்தைப்பாட்டிகள் (agony aunts)/ அடுத்த வீட்டு அம்மாமி/ எதிர்வாடை எதிராஜ நாயுடு போன்றோர் விளைவிக்கும் அபாயம் பற்றி பிறகு பேசுவோம். ஏனெனில், இது ஒரு இரங்கல் மடல்.
இந்தியாவில் மனோநல உள்ளுறை ஆலோசகர்கள் மிகக்குறைவு. எல்லோரும் மனோநல நிபுணர்களாக உள்ள இந்த பாரதபூமியில் அவர்களுக்கு மவுசு இல்லை. சென்னையில் Emma Gonsalves என்ற மனோநல உள்ளுறை ஆலோசகர் இருந்தார். தனது துறையில் வல்லுனாராக இருந்தவர். பணத்தாசை இல்லாமல் மன நிம்மதியுடன் இருந்து முன்னுதாரணமாக இருந்து திகழ்ந்தவர். செல்லப்பிராணிகளின் மீது ஆசை. அவருடைய பெர்ஸியன் பூனை மிகவும் அழகானவள். எனக்கு நண்பர். என் மகளுக்கு ஆசான். அண்மையில் அவர் (82) தன் அறையில் கழுத்து நெறிக்கப்பட்டுப் பிணமாகக் கிடந்தார். முதலில் இயற்கை மரணம் என்றார்கள். பின்னர் வேலையாள் செய்தது என்றார்கள். அவரது குடியிருப்புக்கு சிறந்த பாதுகாப்பு. அப்படியும் கொலை விழுந்தது. உயில் சம்பந்தமாக உறவினர் கொலை செய்திருக்கலாம் என்ற செய்தியும் உலா வந்தது. இதோ படம்.
ஒரு நாள் அவருடைய நண்பர்கள் கூடி நீலாங்கரையில் அண்மையில் அஞசலி செலுத்தினார்கள். ஊடகமும் அவரை மறந்தது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இதை பதிவு செய்கிறேன்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: காப்புரிமை ஹிந்து & ந்யூ இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
No comments:
Post a Comment