Monday, March 24, 2014

நட ராஜா! ஹே! நடராஜா!நட, வந்து விடு.

நட ராஜா! ஹே! நடராஜா!நட, வந்து விடு.


அற்புதமான கலைவண்ணங்களை திருடுவதும், அவற்றை மேல்நாட்டு ம்யூசியங்கள் எக்கச்சக்கம்மாக விலை கொடுத்து வாங்குவதும் வாடிக்கையாகி விட்டது. சென்னை யில் சிறைப்படுத்தப்பட்ட சுபாஷ் கபூர் என்ற சிலாபகரண சிகாமணியிடமிருந்து $ 50 லக்ஷத்துக்கு ஆஸ்ட்ரிலியாவின் தேசீய கலைக்காட்சியகம் நடராஜர் சிலையை வாங்கியதை பற்றி இன்றைய ஹிந்து இதழில் மேலதிகத்தகவல்:
அந்த நாட்டு கலைத்துறை அமைச்சரும், அரசு வழக்காடும் துறைத் தலைவரும் ஆன திரு. ஜியார்ஜ் ப்ரேண்டிஸ், தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்ட இந்த ஆயிரமாண்டு தொன்மையான நடராஜர் சிலையை ஆஸ்ட்ரிலியாவின் தேசீய கலைக்காட்சியகம் வாங்கிய கவனக்குறைவான விதத்தைக் கண்டித்துப்பேசியிருக்கிறார். சந்தேகங்கள் இருந்தன; மழுப்பி விட்டார்கள் என்கிறார். அதை தமிழ்நாட்டுக்குத் திருப்பி விட வேண்டும் என்பதை பற்றி அயல்நாட்டு அமைச்சரிடம் பிரஸ்தாபித்து இருக்கிறார். அந்த கலைக்காட்சியகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.நாகஸ்வாமியிடம் கலந்து ஆலோசித்தப்பின்னர் தான் வாங்கினோம் என்று சொன்னதை டாக்டர் ஆர்.நாகஸ்வாமி மறுத்திருக்கிறார். அது மட்டுமல்ல. ஷேன் சிம்ப்ஸன் என்ற மரபு ஆராய்ச்சி சார்ந்த வழக்கறிஞர் ‘சான்றுகள் ஒன்றும் பெரிதாக இல்லை; விசாரணை போதாது; இந்த சிலை எங்கிருந்து வந்தது என்ற விவரம் இல்லை; இது கோயிலிலிருந்துத் திருடப்பட்டது என்ற வலுவான ஐயம் எழுகிறது’ என்று 2008லியே எச்சரிக்கை விடுத்தார். அதை ஆஸ்ட்ரிலியாவின் தேசீய கலைக்காட்சியகம் கண்டு கொள்ளவில்லை. 
இதே மாதிரி தான் சிவபுரம் நடராஜர் சிலை லண்டன் ஓல்ட் பெய்லி கோர்ட்டில் சமத்தாக மூலையில் நின்று கொண்டிருந்தார். கோயில் அர்ச்சகர் சாக்ஷி அளிக்க வந்த போது, சிலையாக பிரத்யக்ஷமாக நின்ற நர்த்தனசுந்தரரை தழுவி அணைத்து, ‘உனக்கு இங்கு காயம் செய்து விட்டானே. அங்கு கீறல் என்று அழுதார். வியந்த ஜட்ஜிடம் ‘ எனக்கு தெரியாதா? நான் எத்தனை வருஷம் அவனுக்கு நீராட்டம் செய்திருக்கிறேன் என்று தேம்பினார். நிச்சியம் இவர் சிவபுரத்து வாசி தான் என்று, அதை திருப்பிக்கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். நடராஜரும் நம் ஹை கமிஷனுக்கு வந்து சேர்ந்தார். அவரை அங்கு 1990ல் தரிசித்தேன்.
தமிழகம் ஆஸ்ட்ரிலியாவிலும், உலகெங்கும் உளது. நாம் மற்ற அரட்டைகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, ஒருசேர திரண்டு, ‘நட ராஜா! நட, வந்து விடு’ என்று அவனை மேளதாளத்துடன் அழைத்து வர வேண்டாமா?
அன்புடன்,
இன்னம்பூரான்

24 03 2014
Image Credit: http://www.radioaustralia.net.au/international/sites/default/files/imagecache/ra_article_feature/images/2012/08/3/4175840-4x3-700x525.jpg

No comments:

Post a Comment