Tuesday, January 28, 2014

ஒரு வாய் தண்ணி!

ஒரு வாய் தண்ணி!
Inline image 1

“...அரசு இயந்திரமோ/ அதன் உருப்படியோ, அரசியல் சாஸனமிட்ட ஆணைக்கு அடி பணிந்து மக்களுக்கு அளித்து வரும் குடிநீர்/அதன் தரக்கட்டுபாடு உணவு பாதுகாப்பு சட்டத்திற்கும், தேசீய சுத்தீகரண நீதி ஆணையத்துக்கு உட்பட்டது அல்ல. எனவே, அரசு சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான நீர் வழங்க வேண்டும் என்று மனுதாரர் கோருவது தவறு, விஷமமானது..”
- அரசின் உருப்படியான அகில இந்திய உணவு தரம்/பாதுகாப்பு நிலையம் அளித்த சாக்ஷியம்.

“...தரக்கட்டுப்பாடு மையத்தின் முத்திரை இல்லாமல் யாருமே நீர் குடுவைகள், படா குடுவைகள் ஆகியற்றை தயாரிக்கவும் கூடாது/ விற்கவும் கூடாது...”
  • - அரசின் உருப்படியான அகில இந்திய உணவு தரம்/பாதுகாப்பு நிலையம்.

பேஷ்! இன்றைய காலகட்டத்தில் தருமமிகு சென்னையிலும், சுற்று வட்டாரங்களிலும், தொலை மக்கள் தொகைகளிலும், கொசுவை விட அதிபயங்கர ஆபத்து, தண்ணி. கிணறுகள் வற்றின. கேணிகள் உலர்ந்தன.
குளங்களில் ப்ளாஸ்டிக் குப்பை. ஊருணிகளை அடைத்து மச்சு வீடுகள். மதுரையில் சாமி தண்ணியில்லாதக் குளத்திலே தப்புத்தப்பா தெப்போத்ஸ்வம் பண்ணிக்கிறார். பாரபக்ஷமற்ற கார்ப்பரேஷன் குழாய்கள் சாக்கடையையும் குடிநீரையும் சரிசமமாக கலந்து வினியோகிக்கின்றன. தண்ணீர் குடுவை வியாபாரிகள்/ குறிப்பாக படா குடுவை வியாபாரிகள் கண்ட தண்ணியை பாக் பண்ணி விக்றாங்களாம். கேட்டா அடி உதை, ஷ்டிரைக்கு. தண்ணி சப்ளை செய்யாத காலத்திலேயே, தண்ணி வரியும், தண்ணி விலையும் வசூலிச்சாங்க, இந்த மெட்ரோ வாட்டர் நிர்வாகம்.  ஆற்றோரம் போய் அள்ளிக்குடிச்சா தண்ணி நிசம்மா இலவசம். அதை ராக்ஷஸ மோட்டார் போட்டு, உறிஞ்சி ராக்ஷஸ குழாய்களில் கொண்டு போய் கன்னாபின்னா என்று வரிப்பணத்தை கரியாக்கி க்ளாரிஃப்ளாக்குலேட்டர், வடிகட்டி, ரசாயனம், சுத்திகரிப்பு நிலையம் என்றெல்லாம் கோடிக்கணக்கில் செல்வௌ செய்து ‘இது குடி நீர்; ஆனால் தரம் உத்தரவாதமே இல்லை’ என்று முரசு கொட்டுவது எந்த வகையில் நியாயம்? இது ஒரு புறம் தாகசாந்தி அளிக்காமல் உருண்டு பிரள:

மற்றொரு புறம் கண்ட இடங்களில் இறைத்த, சாக்கடையை அடுத்த குழாயில் நிரப்பிய அழுக்கே உருவான படாகுடுவை வியாபாரிகள், ஆட்டோரிக்ஷாக்காரர்களை போல நம்மை ஆட்டிப்படைக்கின்றன. 

இந்த அழகில் முக்காலே மூணு பங்கு வியாதிகள் சுத்திகரிக்கப்படாத நீரை பருகுவதால் என்று அரசு உடுக்கடிக்கிறது. மேல்நாடுகளில் குழாய் தண்ணீர் குடித்தால் சாகமாட்டோம். 



இன்னம்பூரான்

No comments:

Post a Comment