கதை கதையாம்! காரணமில்லையாம்! [1]
- Wednesday, January 1, 2014, 5:15
இன்னம்பூரான்
01 01 2014
புத்தாண்டு மலர்களில் கதைகள் பல வரும், கட்டுரைகளும், கவிதைகளும் கட்டியம் கூற. ஓவியங்களும், நிழற்படங்களும் அழகு சேர்க்கும். இவ்வருடமும் இவை வல்லமை இதழிலும், மற்ற இதழ்களிலும் இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. அவற்றில் எல்லாவற்றிற்கும் ஒரு பின்னணி இருக்கும். கதை அறம் பேசலாம். அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். கற்பனையின் விரிவுரையாக அமையலாம். கட்டுரைகள் கட்டி உரைக்க வேண்டும் என்பதெல்லாம் பழங்கதை ஆகி விட்டது. தற்கால கட்டுரைகள் கட்டில் அடங்கா. யாப்பில்லா கவிதைகள் தான் நடனமாடுகின்றன, தற்காலம். பேசும் சித்திரங்களும், பேசாமல் உரைக்கும் நிழற்படங்களும் நல்வரவு தான். புதிய படைப்புகளில் சுவை இருப்பதும் கண்கூடு. இது நிற்க.
சில கதைகளை மேலோட்டமாக பார்ப்போம். ராமாயணமும், மகாபாரதமும் எத்தனை உபகதைகளை உள்ளடக்கி வைத்துள்ளன? நற்றிணையிலும், கலித்தொகையிலும், சங்கப்பாடல்கள் எல்லாவற்றிலும் ஒவ்வொரு பாடல்களும் கதை சொல்லவில்லையா? சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அருமையான தொடர்கதைகள் அல்லவா? வாசகர்கள் இனி எழுப்பப்போகும் எதிரொலிகளை நான் அறிவேன். சிறுகதைக்கு வா என்கிறீர்கள். வந்தாப்போச்சு. ஆனால் என் போக்கில் தான் போவேன். பேச்சுரிமையை போல் எழுத்து சுதந்திரம் என்று ஒன்று இருக்கிறதே. யாரும் படித்ததாகத் தெரியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது சர்வார்த்த சாதகம்: மவுனம்!
பஞ்சதந்திரம் ஒரு அருமையான கதைத்திரட்டு என்பது மட்டுமல்ல. பட்டுப்போல் மிளிரும் பழமை; நைலான் போன்ற புதுமை. நான் மற்றொரு கட்டுரையில் கூறியபடி இதன் செவி வாய் மரபு தொன்மையானது. புதுமை யாதெனில், கலிஃபோர்னியாவில் இந்த கதைகளை என்னிடம் கேட்க வந்த சிறார்கள் பல நாடுகளிலிருந்து வந்தவர்கள். கதை சொல்லிக்கு நன்றி சொல்கிறேன் பேர்வழி என்று அபாரமாக தினந்தோறும் நடித்துக்காட்டினார்கள். ஒரு நாள் தெனாலிராமனும் வந்தார், தன் குதிரையோடு. கும்மாளம் போட்டார்கள். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் வந்த போது, அடுத்த வீடு கிடுகிடுத்தது. குழலூதி முதலில் எலிகளை அகற்றிய மாயாவி குழந்தைகளையும் மயக்கிய ஜெர்மானிய கதை சொல்லும் போதே, ஒரு மூன்று வயது சிறுவன் கடுதாசியை சுருட்டிக் குழலூத, ஆசிரியக்குழுவும் நானும் வழி நடந்தோம். இப்படியெல்லாம் இருக்கும் போது கதைக்கு என்ன காரணம் வேண்டுமையா, வாசகரையா? அதனால் தான்: கதை கதையாம்! காரணமில்லையாம்!
புரிகிறதா? படி தாண்டி எங்கேயோ போய்விட்டேன்! திரும்பி வந்தனனே!
ஜூலை 21, 2013 அன்று நண்பர்கள் பலர் கூடினோம், சென்னையில். அத்தருணம் பிரபல தமிழ் எழுத்தாளர் கிருஷாங்கினியும், அவரது கணவராகிய பிரபல ஓவியர் அரவக்கோனும் வந்து எம்மைச் சிறப்பித்து ஒரு மூட்டைத்தூக்கி ஆக்கினர். அத்தனைப் புத்தகங்கள் பரிசுகளாக. அவற்றில் ஒன்று: விஷ்ணு சர்மனின் பஞ்சதந்திரம்: தமிழில் அன்னபூர்ணா ஈஸ்வரன் (1958): மறுபதிப்பாளர்: கிருஷாங்கினி. காப்புரிமை கேட்காத நூல். தமிழ் மொழிபெயர்ப்புக்கு பூர்ணபத்திரரின் பிரதியே மூலம். அதற்கு உகந்த காரணங்கள் உண்டு. அது பெரிய கதை.
ஒரு கதை எடுத்து விட்றேன், இப்போதைக்கு. அது மட்டும் முன்னாலே கிடைத்திருந்தால், கலிஃபோர்னியாவில் கதை சொல்லி வரலாறு படைத்திருக்கலாம், தடபுடலாக. கொடுப்பினை அவ்வளவு தான். என்ன சொல்றேள்? அதையும், அடுத்து வரக்கூடியதெல்லாம், இவற்றை தழுவியும் இருக்கலாம்; தழுவாமல் இருக்கலாம். அல்லது பெரிய எழுத்து விக்ரமாதித்யன் கதையிலிருந்தும் வரலாம். அமெரிக்க பழங்குடிகள் கதைகளாகவும் இருக்கலாம். எங்கெங்கிருந்தோ வரலாம். நானே கதை விடலாம். கில்ஜாய் கோமளா மாமி டேக் ஓவர் பண்ணிக்கலாம்! என்ன சொல்றேள்?
அ
கதை கதையாம்! காரணமில்லையாம்! [1]
ஊசித்தட்டான்
“கதை கதையாம் அது ஒரு காரணமாம். காரணவீட்டில் ஒரு தோரணமாம். தோரணம் கட்டி கல்யாணமாம். கல்யாண வீட்டுக்கு சாப்பிடப்போனானாம். எலைக்கடியிலே பாம்பு இருந்ததாம். அந்த பாம்பை அடிக்க நெனச்சு தடி தேடினானாம். தடி சாக்கடை குத்தியதால சேறு பூசி இருந்ததாம். அந்த சேறை கழுவறதுக்காக தண்ணீர் தேடிப் போனானாம். தண்ணீர் நிறைய மீனாக ஓடியதாம். மீனை பிடிக்கலாம் என்று யோசிச்சு வலையெடுத்தானாம். வலையெல்லாம் கிழிந்து பொத்தலாக இருந்ததாம். பொத்தல் தைக்க ஒரு ஊசி எடுத்தானாம். ஊசி கை நழுவி கீழே விழுந்ததாம். அது உடனே ஒரு ஊசிதட்டாம்பூச்சியாக உருமாறி உருண்டு புரண்டு பறந்தே போய் விட்டதாம். பசி ஜாஸ்தியாகி கல்யாண வீட்டுக்கு வந்தானாம். கல்யாணம் முடிஞ்சு கதவை சாத்திக்கொண்டு எல்லாரும் போய் விட்டார்களாம். அவன் தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டானாம். ஒப்பாரி வைத்து அழுதானாம்.”
- பூரணி (2009): செவிவழிக்கதைகள்.சென்னை: சொர்ணவள்ளி பிரசுரம்: பக்கம் 40,41)
வாசகர்களே!
நூறாண்டுகள் வாழ்ந்து அண்மையில் விண்ணுலகம் எய்திய பூரணி அவர்களுக்கு இந்தத்தொடர் சமர்ப்பணம். இந்த சமர்ப்பணம், நாகராஜனுக்கும், கிருஷாங்கினிக்கும் பூரண சம்மதம்.
தொடரும்
பிரசுரம்
Image Credit:http://malaigal.com/wp-content/uploads/2013/02/download-8.jpg
இன்னம்பூரான்
No comments:
Post a Comment