குட்டிக்கதை☂
அற்பனுக்கு பவிஷு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் என்று ஜோஸஃப் மாணிக்கம் மாமா அடிக்கடி சொன்னாலும், டிசம்பர் 24 இரவு கொட்றமழையிலே மாதா கோவிலுக்குப் போக டிப்டாப்பாக கோட்டும் சூட்டும் பூட்டுமாக கிளம்பினவர், கோச்சு வண்டியிலே ஏறுவதற்கே, அவருக்கு பல வருடப்பணியாளன் என்பதால் அற்பன் எனப்படும் தாமஸ் பிடித்த குடைக்கு அடியில் தான் வந்தேறினார். இந்தக்கதை 1913ம் வருடக்கதை. பலருக்கு புரியாது. ஓரளவு புரியவேண்டும் என்றால், மாயூரம் வேதநாயகம் பிள்ளைவாள் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் படிக்கவேண்டும். அந்தக்காலத்திலேயே கோச்சு, குதிரை இரண்டு வாங்க முடிந்தது, கோச்சோட்டி, பின் நிற்கும் அடிமைகள் என்று ஒரு ஊழியர் சாம்ராஜ்யத்தை அவரால் நிர்வகிக்கமுடிந்தது என்றால் அவர் எப்படிப்பட்ட தனவான் என்று புரிந்து கொள்ளலாம். உங்களுக்கு பல்லாவரம் தோல் பதனிடும் துர்நாற்றம் மூக்கில் மணந்திருக்கிறதோ? முதல் கிரோம் லெதரான் ஐயா அவர் தான். ஜமீன் பல்லாவரத்திலிலிருந்து 17 கிராமங்கள் அவர் சொத்தாம். அதை விடுக.
ஏதோ ஒருபாடாக மாதாகோவில் போய் சேர்ந்தவுடன் பங்குத்தந்தை அப்ரஹாம் ஜியார்ஜ் அவர்கள் ஜோசஃப் ஐயாவுக்கு ஒரு க்விக் சலாம் போட்டு, கைலாகு கொடுத்து, முதல் ப்யூவில் ( சர்ச் பெஞ்ச்) அமரவைத்தார். தாமஸ் ஒரு ஃப்ளாஸ்கிலிருந்து ஒரு கோப்பையில் காஃபி எடுத்துக் கொடுத்தான். பக்கத்தில் அமர்ந்திருந்த ஏசுதாசன் ஐயாவின் கவனம் அதில் சென்றது. அவர் மனதுக்குள். ஓஹோ! விஸ்கியா?’ என்று வியந்து போய் மறு பக்கம் அமர்ந்திருந்த ஜான் சீனிவாசன் ஐயாவின் காதைக்கடித்தார். ஜான் சீனிவாசன் ஆக்சுவலி கிருத்துவ பார்ப்பனன். படிப்பு தான் முக்கியம் என்று மதம் மாறி, மனம் மாறாதவர். உயர்பதவி அரசு அதிகாரி. அவருடைய வீக்னெஸ் வாசனாதி திரவியங்கள். அவர் ஒரு நடமாடும் ஜவ்வாது, புனுகு கிட்டங்கி. கிருஸ்துமஸ் தொழுகை தொடங்கப்போகிறது. அதற்கு பங்குத்தந்தை தலைமையில் அலங்கார உடையில் சிறுவர், சிறுமியர் பாடிக்கொண்டு செல்ல ஒரு ஊர்வலம் வரும். அதன் புறப்பாட்டுக்குப் பின் யாரும் குறுக்கீடு செய்ய முடியாது. அதனால், ஜான் சீனிவாச ஐயர் விடுவிடுவென்று ஓட்டமும், நடையும் ஆக சென்று பங்குத்தந்தையிடம் ‘இது தகுமோ’ என்று கிசுகிசுத்தார். அது பாம்புச்செவியன் தாமஸ் காதில் விழுந்து விட்டது. அவன் ஜோஸஃப் ஐயாவிடம் பக்குவமாக சொல்லிவிட்டான். இதை கூர்ந்து கவனித்த பங்குத்தந்தைக்கு சந்தோஷம் தான். அவரவருக்கு தெரியவேண்டியது அவரவருக்குத் தெரிந்து விட்டது. பரமபிதாவே ரக்ஷது; ஜவ்வாது, புனுகு ரக்ஷது என்று தனிமொழி சொல்லிக்கொண்டே அன்றைய தொழுகையை தொடங்கினார். நிசப்தம். லேசாக ஒரு சின்ன மெலடி ஒத்து ஊதியது.
மழை நின்று போனதால், குடை பிடிக்காமல் கோச்சில் ஏற்றப்பட்டு வீட்டுக்கு வந்து விட்டார், ஜோஸஃப் மாணிக்கம் மாமா. ஒரு உரையாடல்:
தாமஸ்: ஐயாவுக்கு படுக்கை விரிச்சாச்சு. ஃப்ளாஸ்க் வச்சுருக்கேன், ஐயா.
ஜோ: என்னாடா தாமஸ்? இன்னிக்கி சர்ச்சுக்குப் போக வேண்டாமா? எப்படி மறந்தீங்க?
தாமசுக்கு அந்த வீட்டில் ஊழிய உரிமை உண்டு.
தா: ஐயா! நான் கூட கொடை பிடிச்சேனே. நீராகாரம் கொடுத்தேனே. ஐயா நல்லா குறட்டை விட்டுத் தூங்கிப்போய்ட்டீங்க.
ஜோ: அடப்பாவி! அந்த ஜான் சீனிவாச ஐயர் வத்தி வச்சுறப்போறானே.
தா: கவலையை விடுங்க, ஐயா. நான் தான் அவரு கிட்டே போய் சொன்னேன், ‘நேற்று தான் ஐயாவுக்கு சீமை சரக்கு வந்திருக்கு. உங்களை விருந்துக்குக் கூப்பிடணும் என்று சொல்லிக்கிட்டு இருந்தாரு, ஐயா. சீமை ஸெண்ட் கூட வந்திருக்காம்.’ என்று. அவரும் வாரேன் என்று சொல்லிட்டாரு, ஐயா.
பதிலுக்கு: 'குர்! குர்ர்! குற்! குற்ற்!…..
தனக்கும் ஒரு பெக் ஊற்றிக்கொண்டு இடத்தை காலி செய்தான், தாமஸ்.
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.ukhttp://innamburan.blogspot.de/view/magazinewww.olitamizh.com
No comments:
Post a Comment