Friday, December 20, 2013

பெருவெள்ளம்: சிறுதுளி

பெருவெள்ளம்: சிறுதுளி

இன்று ஒரு சிறு துளி. ஒரு பெருவெள்ளத்தைப் பற்றி. மணிக்கொடி காலத்து தமிழிலக்கிய மாமனிதனாகிய ஸ்வாமிநாத ஆத்திரேயன் அவர்கள் 19 12 2013 அன்று தனது 94 வது வயதில் விண்ணுலகம் எய்தினார். தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு ஆகியோரின் நண்பராகிய ஸ்வாமிநாத ஆத்திரேயன் அவர்கள் எழுதிய 28 சிறுகதைகளில் 16 காணக்கிடைக்கவில்லை. செவிக்கு விருந்தாகவும், மனதுக்கு ஆதரவாகவும், ஆவிக்கு நிம்மதியாகவும் விளங்கும் துளசி ராமாயணத்தை தமிழில் மொழி பெயர்த்தார். தியாகையாவின் கீர்த்தனைகளை சுவைபட அருந்திய ஸ்வாமிநாத ஆத்திரேயனின் சமர்த்த ராமதாஸ் சரித்திரமும் ஹனுமார் கோயில் வரலாறும் அருமையான படைப்புகள். சிறு துளி: உமையாள்புரம் ஸ்வாமிநாத பாகவதரின் உபன்யாசங்களில் மாணவன் ஸ்வாமிநாத ஆத்திரேயன் தியாகையாவை பற்றி கேட்ட செய்திகள். பெருவெள்ளம்: ஸ்வாமிநாத ஆத்திரேயன் அவர்களின் இசை/மொழி/இலக்கிய யாத்ரீகம்.
~ இன்றைய ஹிந்து இதழில் ஒரு துளி.
*
தஞ்சை ஸ்ரீ ஸ்வாமிநாத ஆத்ரேயர் ஸம்ஸ்கிருதத்திலும். தமிழிலும் ஆழ்ந்த புலமை உள்ளவர், தியாகராஜரின் இசையில் ஆழ்ந்தவர், தஞ்சை போகும் பொழுதெல்லாம் நான் எனது குருவுடன் சென்று அவரை சந்தித்துப் பயனடைந்திருக்கிறேன், இலக்கிய விஷயங்கள் மட்டுமல்லாமல் இசையின் நுட்பங்களையும் விளக்குவார், “ஸ்ரீரகுவர தாசரதே” என்ற ஆனந்த பைரவி கீர்த்தனையை என் குருவுடன் நானும் பாடம் செய்தேன்.
[1967-இல் தஞ்சை கிருஷ்ணன் கோவில் கச்சேரியில் தஞ்சை வெங்கடேசய்யங்கார் அவர்களுக்குச் செய்யப்படும் மரியாதை. புகைப்படத்தில் பாலக்காடு மணி ஐயர், வயலின் சிக்கல் பாஸ்கரன், எம்பார் விஜயராகவாச்சாரியார், ஸ்வாமிநாத ஆத்ரேயன் (பின்னணியில்) ]
ஸ்ரீ ஆத்ரேயர் அவரது தஞ்சை வீட்டில் (பாலோபா சந்து) ஸ்ரீராமர், ஸீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர் விக்ரகங்களை வைத்து தினமும் பூஜை செய்பவர். ஆண்டு தோறும் ஸ்ரீராம நவமியன்று சிறப்பாகத் திருமஞ்சனம். அலங்காரம் பூஜை எல்லாம் ஆத்மார்த்தமாகச் செய்வார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பிடிக்கும். ஊரிலிருந்தால் ஆண்டு தோறும் எனது குரு அந்த பூஜையின் போது ஸன்னிதியில் தியாகராஜ கிருதிகளைப் பாடுவார். பல ஆண்டுகள் எனக்கும் அவருடன் பாடும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.
என் குருவின் சங்கீதத்தைப் பற்றி ஸ்ரீஸ்வாமிநாத ஆத்ரேயர் கூறிய பாராட்டு என் நினைவில் இன்றும் பசுமையாகவே உள்ளது:
“கோயிலில் பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து, ஆடை அணி ஆபரணங்களுடன் படிப்படியாக எப்படி அலங்காரம் செய்வாரோ அப்படித்தான் அவரது பாட்டும். பால் தேன் தயிர் பன்னீர் என்று பல பொருள்களால் திருமஞ்சனம் செய்து, பலவித ஆபரணங்களாலும் புஷ்ப மாலைகளாலும் அழகுபடுத்தி, பெருமாளை எப்படி தரிசனம் செய்து வைப்பாரோ அப்படியே படிப்படியாக ராக விஸ்தாரம் செய்து, விதவிதமாக நிரவல் செய்து அலங்கரித்து ஸ்வரக் கோர்வை என்ற மலர்களால் அர்ச்சிப்பார்.”
தன்னுடைய மாமனாரின் ஊரான வரகூர் பெருமாளுக்கு என் குரு அலங்காரம் செய்வதை ஊரே பாராட்டும். அந்தவிதத்தில் ஸ்வாமிநாத ஆத்ரேயர் சொல்லியிருக்கும் பாராட்டு வெகு பொருத்தமானதாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.
பெரிய துளி:
தம்புராவின் மெளனம்
மஞ்சரி | இதழ் 46 | 25-03-2011| sourced from Solvanam.
Image Credit:http://i1.ytimg.com/vi/nP8ktqFZCYY/hqdefault.jpg
http://www.youtube.com/watch?v=nP8ktqFZCYY




No comments:

Post a Comment