Thursday, December 26, 2013

தீனபந்து: அன்றொரு நாள், டிசம்பர் 25,

அன்றொரு நாள்: டிசம்பர் 25 தீனபந்து


அப்டேட்: 28 12 2013: அடியில்.
சித்திரத்துக்கு நன்றி: http://upload.wikimedia.org/wikipedia/commons/a/af/Gandhi_Rajagopalachari.jpg
இன்னம்பூரான்

அப்டேட் 2013:
மன்னிக்க வேண்டும் 24 மணிக்கு மேல் தாமதம். பல கவலைகள், இன்னா இண்டெர்நெட் உள்பட.
26 பின்னூட்டங்கள் ஓடி ஓடி வந்ததால், பாகம் பாகமாக தான் பிரிச்சு தரணும். இல்லாட்டா யார் படிப்பா? எனக்கும் தலைக்கு மேலே ஜோலி!

யாராவது இந்த கடுதாசை தமிழ்நாட்டு பிரதமர் கிட்ட காட்டுங்களேன். ஹஸ்தினாபுரத்தில் பாண்டவர்கள் வந்திருக்காப்லெ இருக்கு. நமக்கும் சுபிக்ஷம் வேணுமோல்லியோ. Que Sera Sera.
இன்னம்பூரான்
25/26 12 2013



அன்றொரு நாள்டிசம்பர் 25
தீனபந்து
உலகெங்கும் விழாக்கோலம் பூண்டு, நல்லிணக்கம் வழி காட்ட, கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் வேளையில், ஒரு மன அழுத்தம். பெரியவரின் உடல் நிலை கவலை தருகிறது. நினைவு தவறும் முன் ‘வலி ஒன்றும் இல்லை; ஊசிகளை எடுத்து விடுங்கள்; நான் நிம்மதியாக இருக்கிறேன்‘ என்று அவர் சொன்னதை, கிளிப்பிள்ளை மாதிரி, திருப்பித்திருப்பிச்சொல்லி மாய்ந்து போனார், டாக்டர்.சத்யநாராயணா. அந்தக்காலத்தில் பொதுஜனங்களின் போக்குவரத்துக்கு தடை ஒன்றும் ஜபர்தஸ்தாக விதிக்கமாட்டார்கள். ஆஸ்பத்திரியோ சென்னை ஜெனெரல் ஆஸ்பத்திரி. ‘இனி அவருடைய தரிசனம் உனக்கு இருக்காதோ? என்னமோ’ என்று சொல்லி என்னுடைய டீனேஜ் பையனையும் இழுத்துச்சென்றேன். ஒரே கூட்டம். பெரியார் போன்ற பெருந்தலைகளும், என் போன்ற சாமான்யர்களும். மயான அமைதி. ஆங்காங்கே சின்ன சின்ன கூட்டங்கள். மெல்லியகுரலில் பேச்சுகள். டாக்டர்.சத்யநாராயணா வந்து நின்றார், தாரை தாரையாக நீர் வழிய. பேச வாயெடுத்தார். முடியலை. கூட்டம் கலைந்தது. சாயங்காலம் ராஜாஜி ஹாலில் தரிசனத்திற்காக வைத்திருந்தார்கள். லேசாக தூறல் என்று ஞாபகம். காமராஜர் நெரிசலுக்கு மத்தியில். மறு நாள்குடும்பத்தினர் சில சடங்குகளை செய்தபின், முப்படை வீரர்கள் கை கட்டி, வாய் புதைத்து, வலிவிழந்த துப்பாக்கியை உள்பக்கமாக அணைத்து, ராணுவமரியாதையுடன், ராஜாவோல்லியோ, படோடாபமாக, பீரங்கி வண்டியில் வைத்து எடுத்துச் சென்றனர், வல்லிக்கேணி மயானத்திற்கு. ஓட்டமும், நடையுமாக ஒரு பெருங்கூட்டத்தில் நானும், பின் சென்றோம். தீனபந்து அல்லவோ அவர். அதான், எல்லாரும் வாய்க்கரிசி போட்டோம். நன்றாக நினைவு இருக்கிறது. எனக்கு முன்னால் போட்டது திரு. மு.க. பெரியார், கலங்கிய முகத்துடன், ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். ஜனாதிபதி கிரி வந்தார். இந்திரா காந்தி வரவில்லையே என்ற பேச்சு மெல்லியதாக எழுந்தது, மக்களிடையே. தஹனம். பெரிய பிள்ளையால் முடியவில்லை. வயசாயிடுத்தோலியோ. தள்ளாமை. சின்னவர் தான் எல்லாம் செய்தார். வீட்டுக்கு வந்தால், என் தந்தை அழுது கொண்டிருந்தார். எங்கள் தீனபந்துவுக்கு மூன்று தலைமுறை ஸ்நானம் செய்தது. தினம்:25 12 1972. பெரியவர்: ராஜாஜி. வயது:94. இத்தனை வருஷங்களுக்கு பின்னர் நினைவுறும்போது கண் கலங்கத்தான் செய்கிறது. சொல்றதுலெ வெட்கம் என்ன வெட்கம் வேண்டிக்கிடக்கு?
நேற்றைய ஹிந்து இதழில் அவருடைய பேரன் கோபால்கிருஷ்ண காந்தி உருக்கமாக எழுதியிருந்தார். ‘என் உள்மனது உமது ஆதரவை நாடுகிறது’ என்று காந்திஜி தன்னுடைய ‘மனசாட்சியாகிய’ ராஜாஜிக்கு எழுதினாராம். அவர் கொடுக்கலையே. எதையும் உடனடி தியாகம் செய்யும் மனோதிடம் கொண்ட ராஜாஜி அரசியல் துறவு பூண்டு, திருச்செங்கோட்டு வறண்ட பூமியில் ஒரு ஆச்ரமம் அமைக்கிறார். பார்வையிட வந்தவர்களில் ஒருவர் கஸ்தூரி பாய் காந்தி. சரளமாக ஆங்கிலம் பேசாதவர். கதர் ராட்டினம் சுழல்கிறது. துணி நெய்து சாயம் தோய்க்கிறார்கள். ஒரு உரையாடல்:

கஸ்தூரி பாய்: ‘Rajaji, this colour go?”
ராஜாஜி: “No Ba, this no-go colour.”
இந்த எளிமையான ராஜாஜியை போய் ‘குல்லுக பட்டர்’ என்று திராவிட தமிழ்நாடு எள்ளி நகையாடியது. அவரை ‘சாணக்யர்’ என்றும் சொல்லி குற்றம் காண்பார்கள். ஆம். அவருடைய ராஜ தந்திரம் நிகரற்றது. டில்லியில் கவர்னர்-ஜெனரலாக இருந்த போது, ஸோவியத் தூதர் தன்னுடைய சன்னது சமர்ப்பிவித்து, நட்புரை ஆற்றினார். ராஜாஜியை ‘மாட்சிமை பொருந்தியவரே!’ (‘Your Excellency’) என்று விளித்தார். பிறகு, சம்பிரதாயமான தேநீர் விருந்து. அப்போது உரையாடல்:
ராஜாஜி: ‘என்னை ‘மாட்சிமை பொருந்தியவரே!’ என்று விளித்தீர்கள். அந்த அடைமொழியெல்லாம், 1917ம் வருட புரட்சிக்கு பிறகு ஒழித்துவிட்டீர்கள் என்று நினைத்தேன்.
தூதர் மென்ஷிக்கோவ்: ஆம், ‘மாட்சிமை பொருந்தியவரே!’ அதை புரட்சிக்கு பிறகு ஒழித்தோம். ஆனால், தவறை பின்னால் உணர்ந்தோம்.
ராஜாஜி: எந்த தவறு? புரட்சியை சொல்கிறீர்களா? !
(என்றோ இல்லஸ்றேடட் வீக்லியில் படித்த ஞாபகம்.)
தமிழ்நாட்டு முதல்வரின் அணுக்கத்தொண்டர்களில் சிலர் முக்கியத்துவம் இழந்ததாக நேற்றைய செய்தி. அவரின் திறனை சிலாகித்து, இன்று திரு.’சோ’ ராமசாமி பேசியிருக்கிறார், தள்ளி நின்று. நாட்டுக்கு நல்லதே நடக்கட்டும். தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதையொட்டி, விகடன் டாட் காம் செய்தித் தளத்தில் பிரசுரமான ‘அன்றே சொன்னார் ராஜாஜி! என்ற என் கட்டுரையில் சொன்ன சில விஷயங்களை மீள் பார்வைக்கு இங்கு வைக்கலாம் என்று கருதி, அதை இங்கே தருகிறேன்.
அன்றே சொன்னார் ராஜாஜி!
“ மே 16, 2011... தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றுக்கொண்டார். உடனக்குடனே, அமைச்சர்களும் பதவியில் அமர்ந்ததும் நன்நிமித்தமே.
மக்களின் விருப்பம், வாக்கு, ஆணை எல்லாவற்றையும் ஒரு சொல்லில் அடக்கி விடலாம்: 'அறம்'. அது யாது என்று தமிழ் மொழியின் அமுதசுரபியான மணிமேகலையிடம் கேட்க, அவர் சொல்லுவார்,
"...அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்,
    மறவாது இது கேள்! மன்னுயிர்க்கு எல்லாம்
   உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
   கண்டது இல்..."
உணவும், ஆடையும், தங்குமிடமும் உவமைகள் என்க, நிறைவான வாழ்க்கைக்கு. அதை அளிக்ககூடிய நல்லாட்சியை, அறிவு, ஆற்றல், தன்னலம் இல்லாத ஈகைப் பண்பு, அருள் ஆகிய நல்ல இயல்புகள் அனைத்தும் கொண்ட அரசியல் தலைமை மட்டுமே தர இயலும். அவ்விடம் அறம் தளைத்து ஓங்கும்.
அந்த நல்வழியில் அரசாளுவது, முதல்வரின் கடமை, பணி, தொண்டு. இத்தருணம் அவருக்கு சான்றோரின் ஆலோசனையும், ஆசிகளும், வாழ்த்துக்களும் தாராளமாகக் கிடைக்க வேண்டும். நம் பொற்காலத்து முதல்வரும், மாமேதையும், தர்மபோதகரும் ஆன ராஜாஜி அறிவுரைகளை மதித்து நடந்தாலே, தெளிவு பிறக்கும்; இன்னல்கள் களையும்; நல்ல காலம் பிறக்கும். நாடு விடுதலை அடைந்த பத்தாவது வருடம், ஒரு ரூபாய் விலையில் ஒரு நூல் பிரசுரம் ஆயிற்று - ராஜாஜியின் ஒன்பது கட்டுரைகள். முன்னுரையில் அந்த தீர்க்கதரிசி இரு விஷயங்களை தெளிவுற கூறுகிறார் - 1) அவரது கருத்துக்களை, மக்களை மேய்ப்பர்கள் ஏற்காமல் இருக்கக்கூடும். 2) இந்த கருத்துக்கள் சிந்தித்து, சிந்தித்து எழுதப்பட்டவை; அவசரம் அவசரமாக தன்னிச்சையாக எழுதப்பட்டவை அல்ல.
பல்லாண்டு, பல்லாண்டுகளாக, மக்களை மேய்த்தவர்கள் அவருடைய கருத்துக்களை அசட்டை செய்ததால், மக்களின் துன்பம் கரை கடந்தது. அவருடைய சிந்தனைகள் எக்காலமும் ஏற்புடையவை; அரசை உருப்படியாக நடத்திய தலைவரின் நன்கொடை, அவை. ஐம்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு அவரின் சொல் ஒவ்வொன்றும் கணீரென்று கணீரென்று ஆலயமணி அடிப்பது போலும், கீற்று மின்னல் 'டால்' அடிப்பது போலும், இன்றைய இந்திய சூழ்நிலைக்கு கனபொருத்தமாக இருப்பது, நம் முதல்வரின் கொடுப்பினையே.
'அரசியலின் உள்ளுறைவது, தேர்தலில் எப்படியாவது வெற்றியடைவது என்று தான் அவர்கள் நம்பினார்கள். வரலாற்றில் மறைபொருள் உண்டு. அவர்கள் தேர்தலில் தோற்றல்லவோ போனார்கள்,' என அன்று அவர் விடுத்த எச்சரிக்கையை இன்று காண்கிறோம்.இனி ராஜாஜி நல்லுரையின் முதல் பகுதியின் சுருக்கம்:
1. பற்பல படிநிலைகளில் வசித்து வரும் மக்களிடையே, அரசின் குறிக்கோள்களை பற்றி பெருமளவில் ஏகோபித்த அபிப்ராயம் இருக்கவேண்டும். அப்போது தான், நாடாளுமன்ற பிரதிநித்துவம் என்ற மக்களாட்சி முறை செயல்பாடுகளில் வெற்றி பெற முடியம். 
- அதை மணிமேகலையின் 'அறம்' எனலாம்.
2. நல்லாட்சி அளிக்கக்கூடிய, இரு கட்சிகள் களத்தில் இருக்கவேண்டும். மக்களாட்சியெனில், வலிமையான எதிர்க்கட்சி தேவை. அரசியல் கருத்துக்கள், ஒன்றுக்கொன்று சளைக்காத இரு கட்சிகள் இல்லையெனில், நீர்த்து விடும்... மாற்றுக் கருத்துடையோர் தனியார்களாகவோ அல்லது சின்ன சின்ன குழுக்களாகவோ இருப்பின், அரசு நிச்சியமாக, சர்வாதிகாரம் செய்யத்தொடங்கும்.
- மக்களால், நல்லாட்சி அளிக்கக்கூடிய, இரு கட்சிகளை காண இயலவில்லை. எனவே, நம் முதல்வர் ஆரோக்கியமான மாற்றுக்கருத்துக்கள் தன்னை அடைய வகை செய்து கொள்ளவேண்டும். இது நடக்கக்கூடிய செயல்.
3. ஒரே கட்சியை ஆளுமையில் வைத்தால், அத்தருணம், மக்களாட்சி தராதரத்தை இழந்து விடுகிறது. பார்க்க முடிந்தும், காண முடியாது; ஏற்றதாழ்வுகளை எடை போடமுடியாது; எழும் வின ாக்களின் எல்லா பரிமாணங்களையும் காண இயலாது. 
- இந்த சிக்கலான பிரச்னையை முதல்வர் கவனித்து, நிவாரணங்களை நாட வேண்டும். ஆளுமைத்திறனும், உகந்த அணுகுமுறையும் உடையவ தலைவரால், யதேச்சாதிகாரமும் இயலும்/ நிவாரணங்களும் இயலும்.
4. இந்திய மக்கள் அடி பணிபவர்களாக இருந்தாலும், அவர்கள் களிமண் பொம்மைகள் அல்ல. அவர்களின் வாழ்வியல் இயந்திர கதியில் இயங்கவில்லை. சிக்கலான எண்ணங்களும், உணர்ச்சிகளும், மன உளைச்சல்களும் நிறைந்த வாழ்வில், உரசல்களும், தூக்கிப்போடும் இடைஞ்சல்களும் இருக்கத்தான் செய்யும். பற்பல பற்பல படிநிலைகளில் வாழும் மக்கள் யாவரும் இதன் இலக்கே. நீண்ட கால வரலாறே இதற்கு அத்தாட்சி. இந்த தாக்கங்கள் எங்கோ அத்வானத்தில் நடை பெறவில்லை. வாழ்ந்து வரும் நம்மை தான் அவை குறி வைக்கின்றன.
- ராஜாஜி அன்று சொன்னதை, இன்று கண் கூடாக காண்கிறோம்.
5. ராஜாஜி 'மாற்றம் தரும் வலி' ஒரு எளிய சொற்றொடரை (transition blues) ஒரு சூத்ரமாகவே படைக்கிறார். வரி பளு, வேலையில்லா திண்டாட்டம் ('disemployment'is his word), விலைவாசி ஏற்றம், பதவி மோகம் கொண்டவர்களின் சுரண்டல், வீட்டு வரவு/ செலவு உதைப்பது, இவற்றால் ஏற்படும் உளைச்சல், ('ஹிஸ்டீரியா' என்கிறார்.) தனிமனிதர்களின் இயலாமை என்ற கொடுமை எல்லாமே அந்த சொற்றொடரில் அடக்கம். இத்தகைய மோதல்களால் அவஸ்தை படுபவர்கள் வரவேற்பது யாதெனில், இந்த உரசல்களையும், இடைஞ்சல்களையும், குலுங்கல்களையும் கவனித்து நிவாரணம் தேடும் நாடாளுமன்ற பிரதிநித்துவ கட்சி. 
- இன்று தமிழ்நாட்டில் அந்த பொறுப்பு, அ.தி.மு.க.வுக்கு.
6. அந்த கட்சி, இடதுசாரியை கையாளும் திறனுடன், சட்டமசோதாக்களையும், அன்றாட நிர்வாகத்தையும் சோதித்து, எடை போட்டு, ஆளும் கட்சியின் விவேகத்தை அலசி, ஆளுமையில் உள்ளவர்கள் மக்கள் நலனுக்கு இயங்குகிறார்களா அல்லது 'மாற்றம் தரும் வலி'யை தருகிறார்களா என்று பகுத்தறிந்து, ஏற்புடைய வகையில் அவர்களை பணி செய்ய கட்டாயப்படுத்தும் திறனையும் முன்னிறுத்த வேண்டும். இது தான் நான் கூறும் வலதுசாரி; அத்தகைய கட்சிக்கு பெருமளவு ஆதரவு இருக்கும். 'முன்னேற்றத்தில்' ஓரளவு பழம்பெருமைக்கு (கன்ஸெர்வேட்டிவ்) மதிப்பு உண்டு. அதை விரும்புவோர், மேற்படி முறையில் இயங்கக்கூடிய எதிர்தரப்பை நிலை நாட்ட வேண்டும். இதை ஆளுமை ரகசியம் எனலாம்.

7. ஏதோ ஒரு கோட்பாடு, ஏன் ஒரு பொருளற்ற கூப்பாடு (ஸ்லோகன்) கூட, மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடும்; அதன் விளைவாக, தக்கதொரு மாற்றுக்கருத்தின் சார்பில் மக்களை திரட்டி, எதிர்த்தரப்பை உருவாக்க இயலாமல் போகாலாம்... மக்களிடையே, அன்றாட வாழ்க்கைக்கு, அரசின் பரிசில்களும் சிபாரிசுகளும் இன்றியமையாதவையாக ஆகிவிட்டன.
- தேர்தல் இலவச வாக்குறுதிகளை ராஜாஜி ஆரூடம் கூறுகிறார் என்று தான் நினைக்க தோன்றுகிறது. இலவசங்கள் தேவையே இல்லை. ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை, பொதுநலம் நாடி, திருத்தி அமைக்க, ஏற்புடைய இலக்கணம் வகுக்கவேண்டும்.
8. இந்தியாவில் பிராந்திய ஈடுபாடுகள் அரசியல் களத்தில் புகுந்து விளையாடுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு நிலைகளில். எனவே, பிராந்திய ஈடுபாடுகளும், அவற்றால் மக்களின் நலம் நோக்கி எழும் பிரச்னைகளும், மற்றவை எல்லாவற்றையும் அமுக்கி விடுகின்றன. இதற்கு விடை, பிராந்திய உணர்வுகளை புறக்கணிப்பது இல்லை. விடை, மாநிலங்களுக்கு மேலும் அதிகாரம் வழங்குவதில் இருக்கிறது. அவ்வாறு செய்தால், பிராந்திய அளவில் என்ற குறுகிய மனப்பான்மை குறையும். 
- நம் முதல்வருக்கு, இங்கு இருமுனை செயல்பாடுகள்: மத்திய அரசிடமிருந்து பெறுவதும், மாவட்டங்களுக்கும், பஞ்சாயத்துக்களுக்கு கொடுப்பதும்.
9. மத்திய அரசின் ஆளுமையை போற்றுவோர், நாட்டுப்பற்று, ஒருமைப்பாடு என்று கூப்பாடு (ஸ்லோகன்) போடுவர்; மாநில ஆதரவாளர்களோ தங்கள் தங்கள் பிராந்திய தேவைகளுக்கு குரல் கொடுப்பர். இப்படிப்பட்ட ஆரோக்கியமான போட்டாபோட்டிகள், ஜாதி, இனம், போன்ற குறுகிய அரசியலை கடந்து சென்றால், நலம் பயக்கும். நிர்வாகம் நாணயத்துடன் செவ்வனே இயங்கும்.
- ராஜாஜி அறிவுரையை நல்லாட்சியாக இயக்கிக்காட்டும் திறன், நம் முதல்வரிடம் உண்டு என்று யாவரும் அறிவர்.
10. எது எப்படி இருந்தாலும், மக்கள் வேண்டுவதெல்லாம், பாரபட்சமற்ற, நியாயமான, செவ்வனே இயங்கும் அன்றாட நிர்வாகம். குடும்பமும், இனமும் ஆட்சி புரிந்தால், அரசு ஊழியர்களும், அந்த தகாத வட்டங்களில் சிக்கிக்கொள்வர். ஏனெனில், குறுகிய வட்டங்களின் அதிகாரபலம், அவர்களின் தரத்தை குறைத்து விடுகிறது. எல்லா துறைகளிலும் ஆரோக்கியமான வளர்ச்சியும், தகாத செயல்களை ஒழிப்பதும் குறிக்கோள் என்றால், மாநிலங்களுக்கு ஆளுமை கொடுத்தால் மட்டும் போதாது. அரசு பணி செய்பவர்களை - மாநில/மத்திய ஊழியர்கள் - கண்டிப்பான ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும், மத்திய அரசின் நேரடி பார்வையில். அதற்கென்று சீனியர் அதிகாரிகளைக்கொண்ட மத்தியக்குழு ஒன்று தேவை. அக்குழுவின் பணி: எல்லா துரைகளிலும் உயர்ந்த தரம் நிலவ வேண்டும்; அரசியலர்களின் அச்சுறுத்தல், பழி வாங்குதல் போன்றவற்றிலிருந்து அவர்களை காப்பாற்றுவது.
  • இன்று நடப்பதை அன்று சொன்னார், ராஜாஜி! நன்னாளாகிய இன்றைய தினம், நல்லதே நடக்கட்டும் என்று மற்படியும் சொல்லி, விடை பெறுகிறேன்.
இன்னம்பூரான்
25 12 2011

உசாத்துணை:
http://news.vikatan.com/index.php?nid=2070


அப்டேட்

இப்போதைய பின்னூட்டங்கள்.
மற்றவை பின்னர்.
இன்னம்பூரான்
28 12 2014
*****



எண்டிசைக்கும்புகழ் இன்னம்பர்’ (தேவாரம் 3 095 - 01) என்பார் அப்பர் சுவாமிகள் தேவாரத்தில்.

இன்னம்பூராரின் புகழ் எண் திசைக்கும் பரவட்டும். பாரத்ததின் உயரிய நாகரீகத்தை குழந்தை முதல் பெரியோர் வரை ஆழக் கற்றுக் கொள்ள உதவிய பெருந்தகையான மூதறிஞரைப் பற்றிய ஒரு உயர்ந்த கட்டுரை இது

ராஜாஜி பிறந்த தேசத்தில் நாம் பிறந்தோம் என்ற எண்ணமே மகத்தானதாகும்.

ராஜாஜி வாழ்ந்து மறைந்த மண்ணில் அந்தக் கடைசி வருடத்தில் கிடைத்த ஞானோபதேசம், (பின்னாட்களில்தான் அதன் மகத்துவம் புரிந்தது) அவரைத் தரிசித்து மகிழ்ந்த நாட்கள் எல்லாமே நினைவில் நின்றவை. எப்போதும் நிற்பவை.

அன்புடன்

Dhivakar

*
மிக்க நன்றி, திவாகரா! யாருமே பார்க்கவில்லையே, இந்த மீள்பதிவை என்று நினைத்தேன். முதல் தடவையும் உமது பின்னூட்டம் எனக்கு ஹிதமாக இருந்தது. இந்த புத்தாண்டுக்கு முன் கூட்டியே,'’எண்டிசைக்கும்புகழ் இன்னம்பர்’ (தேவாரம் 3 095 - 01)' என்ற உழவாரப்பணியாளராகிய  திருநாவுக்கரசர் சுவாமிகளின்/ திருஞான சம்பந்தரின் அசரீரி ஆசிகள்.  உமது உந்துதலின் அடுத்த கட்டமாக அந்த 26 பின்னூட்டங்களையும் அப்டேட் செய்து, என் திருமணத்துக்கு ராஜாஜி அனுப்பிய வாழ்த்து லிகிதத்தையும் மின்னாக்கம் செய்து வெளியிடுகிறேன்.
இன்னம்பூரான்
*
நேற்றே வாசித்தேன். மீள்பதிவு என்றாலும் மீண்டும் வாசித்து நினைவு கூறத்தக்க நிகழ்வுகள்

சுபா
*
அன்புள்ளஸார்!
தங்கள்தீனபந்துஇடுகையை இன்றுதான் பார்த்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். மூதறிஞர் ராஜாஜியைப் புரிந்துகொண்ட வெகு சிலர்களில் தாங்கள் ஒருவர். அவரைப் புரிந்துகொள்வது மிகக் கடினம். He was always ahead of his time. ஆங்கிலத்தின் உபயோகமாகட்டும், பர்மிட் லைசென்ஸ் ராஜின் கொடூரமாகட்டும், காஷ்மீர் பிரச்னை ஆகட்டும், அவருடைய கருத்துக்களின் ஆழம் இன்று தான் நமக்குப் புரிகிறது.
அணு ஆயுத ஒழிப்பு குறித்து 1962ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகையில் அதிபர் கென்னடியுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தை வரலாற்றுப் புகழ் பெற்றது. இருபது நிமிடங்களே நடக்க வேண்டிய அந்த சந்திப்பினை ஒரு மணிக்குமேல் நீட்டிப்பு செயதார் கென்னடி. சந்திப்பு முடிந்ததும் மிக்க மகிழ்ச்சி கொண்ட கென்னடி "His was one of the most civilizing influences on me" என்று பெருமிதத்துடன் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.  
சான்றோர்களில் ஒருவராக இருந்தாலும் ராஜாஜி எளியவர்க்கு எளியவர். வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் அள்ளிக் கொடுத்த வள்ளல். ’கம்யூனிஸ்டுகள் எனது முதல் பகைவர்கள்என்று பறைசாற்றியிருந்தாலும், உடல் நலம் குன்றிய கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் அவர்களின் ரஷ்ய மருத்துவச் செலவிற்காக நிதி உதவி செய்ததோடுஅதைப்பற்றி நான் சாகும்வரை யாருக்கும் சொல்லக்கூடாதுஎன்னும் உறுதிமொழியையும் பெற்றுக் கொண்டவர் ராஜாஜி.
கொலையாளிகளுக்கான தூக்குதண்டனையை நீக்கக்கூடாது என்று பலமாக வாதம் புரிந்தாலும், அவர் ஆட்சி காலத்தில் ஒரு சில கொலையாளிகளின் மரண தண்டனையைப்  பரிவோடு ரத்து செய்தவர் ராஜாஜி.
அத்தகைய பெருந்தகையை நினைவு கூர்ந்ததற்கு நன்றி
வணக்கத்துடன்

ஸம்பத்



desa bandhu - C.R.DAS
dheena bandhu - C.F.ANDREWS
-------------------------------
https://rsrblog.wordpress.com/disgusting-c-rajagopalachari/
====================================
i need your blog post on Hugo Chavez
Reply
Dear Mr. RS,
You are entitled to your views for expression in your blog, Mine is not on hire for your abusive postings on Rajaji. I allowed this only because of my respect for you. Not any longer. All your postings will go to Spam.
Regards,
Innamburan


Tuesday, December 24, 2013

சிந்தா துளியும் அமைதி பிரவாகமும்



சிந்தா துளியும் அமைதி பிரவாகமும்

Innamburan S.Soundararajan Tue, Dec 24, 2013 at 9:28 PM




சிந்தா துளியும் அமைதி பிரவாகமும்
Inline image 1
சில பெற்றோர்களுக்குப் பொறி தட்டும் போல. குழவிகளுக்கு பொருத்தமாக நாமகரணம் செய்துவிடுவார்கள். நீங்கள் வேண்டுமானாலும் பாருங்கள். உஷத்காலத்தில் செடி, கொடி, மரங்கள் கூட ஒரு அழகிய பெண்ணைப்போல நாணி, கோணி எழில் கூட்டுபவை. மணிவாசகம் என்று ஒட்டிக்கொண்ட பெயரோ சிவ பெருமானுக்கு அத்யந்த ப்ரீதி கொடுப்பது.
2013 வருட கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் சிவனடியார்களுக்கு வந்த கதை கேளும்.
ஆரம்பப்பள்ளி ஆசிரியை திருமதி. ஆர்.உஷா மணிவாசகம் M. Phil. நீரழிவு பாதிப்புக்கு பரிசோதனை செய்ய டாக்டர்.கே.ஜோசஃப் ராஜனிடன் செல்ல, அவர் இவரை மூடிக்கிடக்கும் சிவன் கோயில்களை பற்றி ஆன்மீக ஆய்வுகள் செய்ய உந்துகிறார். முதலில் நாணி, கோணி, மாட்டேன் என்றாலும் அவரால் கைட் ஆர்.காசிராம் அவர்களின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை. இந்த ஆய்வுக்கு கைட் பேராசிரியர் எஸ்.எபெனெசர்.
ஐந்து வருடங்கள் உருண்டோடின. 456 பக்கமுள்ள ஆய்வு நூலுக்கு முனைவர் விருது. முனைவர் ஆர்.உஷா மணிவாசகம் PhD ஹிந்து இதழிடம் சொன்னது:
  • The Veyil Ugandha Vinayagar Temple at Uppur should have been a temple dedicated to Sun God before it became a temple for Lord Vinayagar, she says. The legacy has it that Lord Ram visited the temple before proceeding to Rameswaram. Some 400 years ago, devotees visiting Rameswaram began the ‘theerthavari’ from this temple.
  • The Kariamanickam Perumal Temple at Alambadi in Tiruvadanai taluk has another interesting facet. The 14-foot-tall Perumal granite statue was kept in a tiled-roof shed as it was said to “grow every year.” This myth was buttressed by a story that a Sethupathy king had tried in vain to build a temple. The Archaeological Survey of India (ASI) could explore the site, she suggests.
  • At the 13th century Adhi Rathneswarar Temple at Tiruvadanai, the Siva Lingam was made of ‘Neela Rathina Kal’ and “it’s a scientific marvel that sunlight falls on the lingam for an hour on the last five days of the Tamil month of Masi from 5.30 a.m.,” she says.
  • The Mangalanathaswamy Temple at Thiru Uthirakosamangai is considered the Kasi of the south. The ‘sthala virutcham’ in the temple is about 3,300 years old and this was proved in a research conducted by the State government, she says.
உசாத்துணை & காப்புரிமை & நன்றி


இன்னம்பூரான்

Monday, December 23, 2013

குட்டிக்கதை☂



குட்டிக்கதை☂

Innamburan S.Soundararajan 23 December 2013 21:44



குட்டிக்கதை☂

Inline images 1

அற்பனுக்கு பவிஷு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் என்று ஜோஸஃப் மாணிக்கம் மாமா அடிக்கடி சொன்னாலும், டிசம்பர் 24 இரவு கொட்றமழையிலே மாதா கோவிலுக்குப் போக டிப்டாப்பாக கோட்டும் சூட்டும் பூட்டுமாக கிளம்பினவர், கோச்சு வண்டியிலே ஏறுவதற்கே, அவருக்கு பல வருடப்பணியாளன் என்பதால் அற்பன் எனப்படும் தாமஸ் பிடித்த குடைக்கு அடியில் தான் வந்தேறினார். இந்தக்கதை 1913ம் வருடக்கதை. பலருக்கு புரியாது. ஓரளவு புரியவேண்டும் என்றால், மாயூரம் வேதநாயகம் பிள்ளைவாள் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் படிக்கவேண்டும். அந்தக்காலத்திலேயே கோச்சு, குதிரை இரண்டு வாங்க முடிந்தது, கோச்சோட்டி, பின் நிற்கும் அடிமைகள் என்று ஒரு ஊழியர் சாம்ராஜ்யத்தை அவரால் நிர்வகிக்கமுடிந்தது என்றால் அவர் எப்படிப்பட்ட தனவான் என்று புரிந்து கொள்ளலாம். உங்களுக்கு பல்லாவரம் தோல் பதனிடும் துர்நாற்றம் மூக்கில் மணந்திருக்கிறதோ? முதல் கிரோம் லெதரான் ஐயா அவர் தான். ஜமீன் பல்லாவரத்திலிலிருந்து 17 கிராமங்கள் அவர் சொத்தாம். அதை விடுக.

ஏதோ ஒருபாடாக மாதாகோவில் போய் சேர்ந்தவுடன் பங்குத்தந்தை அப்ரஹாம் ஜியார்ஜ் அவர்கள் ஜோசஃப் ஐயாவுக்கு ஒரு க்விக் சலாம் போட்டு, கைலாகு கொடுத்து, முதல் ப்யூவில் ( சர்ச் பெஞ்ச்)  அமரவைத்தார். தாமஸ் ஒரு ஃப்ளாஸ்கிலிருந்து ஒரு கோப்பையில் காஃபி எடுத்துக் கொடுத்தான். பக்கத்தில் அமர்ந்திருந்த ஏசுதாசன் ஐயாவின் கவனம் அதில் சென்றது. அவர் மனதுக்குள். ஓஹோ! விஸ்கியா?’ என்று வியந்து போய் மறு பக்கம் அமர்ந்திருந்த ஜான் சீனிவாசன் ஐயாவின் காதைக்கடித்தார். ஜான் சீனிவாசன் ஆக்சுவலி கிருத்துவ பார்ப்பனன். படிப்பு தான் முக்கியம் என்று மதம் மாறி, மனம் மாறாதவர். உயர்பதவி அரசு அதிகாரி. அவருடைய வீக்னெஸ் வாசனாதி திரவியங்கள். அவர் ஒரு நடமாடும் ஜவ்வாது, புனுகு கிட்டங்கி. கிருஸ்துமஸ் தொழுகை தொடங்கப்போகிறது. அதற்கு பங்குத்தந்தை தலைமையில் அலங்கார உடையில் சிறுவர், சிறுமியர் பாடிக்கொண்டு செல்ல ஒரு ஊர்வலம் வரும். அதன் புறப்பாட்டுக்குப் பின் யாரும் குறுக்கீடு செய்ய முடியாது. அதனால், ஜான் சீனிவாச ஐயர் விடுவிடுவென்று ஓட்டமும், நடையும் ஆக சென்று பங்குத்தந்தையிடம் ‘இது தகுமோ’ என்று கிசுகிசுத்தார். அது பாம்புச்செவியன் தாமஸ் காதில் விழுந்து விட்டது. அவன் ஜோஸஃப் ஐயாவிடம் பக்குவமாக சொல்லிவிட்டான். இதை கூர்ந்து கவனித்த பங்குத்தந்தைக்கு சந்தோஷம் தான். அவரவருக்கு தெரியவேண்டியது அவரவருக்குத் தெரிந்து விட்டது. பரமபிதாவே ரக்ஷது; ஜவ்வாது, புனுகு ரக்ஷது என்று தனிமொழி சொல்லிக்கொண்டே அன்றைய தொழுகையை தொடங்கினார். நிசப்தம். லேசாக ஒரு சின்ன மெலடி ஒத்து ஊதியது.

மழை நின்று போனதால், குடை பிடிக்காமல் கோச்சில் ஏற்றப்பட்டு வீட்டுக்கு வந்து விட்டார், ஜோஸஃப் மாணிக்கம் மாமா. ஒரு உரையாடல்:

தாமஸ்: ஐயாவுக்கு படுக்கை விரிச்சாச்சு. ஃப்ளாஸ்க் வச்சுருக்கேன், ஐயா.

ஜோ: என்னாடா தாமஸ்? இன்னிக்கி சர்ச்சுக்குப் போக வேண்டாமா? எப்படி மறந்தீங்க?

தாமசுக்கு அந்த வீட்டில் ஊழிய உரிமை உண்டு.

தா: ஐயா! நான் கூட கொடை பிடிச்சேனே. நீராகாரம் கொடுத்தேனே. ஐயா நல்லா குறட்டை விட்டுத் தூங்கிப்போய்ட்டீங்க.

ஜோ: அடப்பாவி! அந்த ஜான் சீனிவாச ஐயர் வத்தி வச்சுறப்போறானே.

தா: கவலையை விடுங்க, ஐயா. நான் தான் அவரு கிட்டே போய் சொன்னேன், ‘நேற்று தான் ஐயாவுக்கு சீமை சரக்கு வந்திருக்கு. உங்களை விருந்துக்குக் கூப்பிடணும் என்று சொல்லிக்கிட்டு இருந்தாரு, ஐயா. சீமை ஸெண்ட் கூட வந்திருக்காம்.’ என்று. அவரும் வாரேன் என்று சொல்லிட்டாரு, ஐயா.

பதிலுக்கு: 'குர்! குர்ர்! குற்! குற்ற்!…..

 தனக்கும் ஒரு பெக் ஊற்றிக்கொண்டு இடத்தை காலி செய்தான், தாமஸ்.


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, December 22, 2013

கஷ்டோபனிஷத்: 1 ~ 4


அப்டேட்: 22 12 2014
1996லிருந்து 2010 வரை தமிழ்த்தாய்க்கு என்ன என்ன புகழாரம் சூட்டினார்கள், அவளுடைய பக்த சிகாமணிகள் என்பதை நிரக்ஷரக்குக்ஷியான யான் அறியேன். ஆனால், சங்கக்காலத்திலிருந்து வரலாறு காணாத கின்னஸ் ரிக்கார்ட் டான்சு ஒன்று ராஜபேரிகைக்கொட்டி ஆராவாரித்தது.


௵1996: மே 13: அனைத்து நிலையிலும் படிப்படியாகத் தமிழை ஆட்சிமொழியாக உயர்த்திடும் முயற்சியின் உயர்நிலைப்பணியாக தமிழ் ஆட்சிமொழித்துறை தனி அமைச்சக‌மாக உருவாக்கப்பட்டது.

ஒரு பேக்டேட் & ஒரு அப்டேட்:
பேக்டேட்: கிஞ்சித்து இப்போது. மிஞ்சியது பிறகு.
அப்டேட்:
நண்பர் டோக்ராஜி ஐ.பி.எஸ் என்னமா தமிழ் எழுதுறார்!
இன்னம்பூரான்
14 12 2013



அன்றொரு நாள்: டிசம்பர் 27: ஒரு நூற்றாண்டு விழா: கி.பி. 2056


அன்றொரு நாள்: டிசம்பர் 27:
ஒரு நூற்றாண்டு விழா: கி.பி. 2056
தமிழ்ப்பற்று இல்லாதவர்கள் இங்கு வந்திருக்கப்போவதில்லை. எனவே, அறிஞர் அண்ணாவை போல் நான் கடுஞ்சொற்கள் வீசாவிடினும், என்னுடைய கருத்துக்கள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அவர்களிடம் நான் வேண்டுவதெல்லாம், ஆக்கப்பூர்வமான கருத்துக்களும், ஆதாரத்துடன் என் கருத்துக்களுக்கு விமர்சனமும்:கண்டனமும் நல்வரவு, ஆதரவும் நல்வரவு. தாய்மொழியின் ஆளுமை நமது உயிர்நாடி. தயை செய்து, இந்த நீண்ட இழையை கவனமாக படியுங்கள். ஒரு விஷயம். ஆட்சிமொழியை வழி நடத்துவதில் எனக்கு அனுபவம் உண்டு; நற்பெயரும் கிட்டியது. மேலும், 1966ல் நான் குஜராத்தில் பணி செய்ய சென்றபோது, அங்கு இயல்பாகவே குஜராத்தி ஆட்சிமொழியாக பீடுநடை போட்டது. உயர் அதிகாரிகளில் பலர், தமிழர். சரளமாக, குஜராத்தி பேசினர்,எழுதினர். முதலில் தவித்தேன். ஆனால், பொது மக்கள் என்னை விட முக்கியம் என்பதும்,  தாய்மொழி ஆட்சி புரிவது முக்கியம் என்பதும் கண்கூடாகத் தெரிந்தது. காந்திஜி முதலில் குஜராத்தியில் தான் எழுதினார். ஓரளவுக்கு, அம்மொழியை கற்று மறந்தேன். இனி கஷ்டோபனிஷத்.
தமிழன் வரலாற்றுப்பிரியன். செவி வாய் வரலாறு என்றால் கரும்புச்சாறு. சுவை மிகுந்தால், அது வெல்லப்பாகு. ஆதாரஸ்ருதியில்லை இல்லாதது ஒரு பொருட்டு அல்ல. ‘கல் தோன்றி, மண் தோன்றா’ மரபு. ஆகவே, பயபக்தியுடன்,சொரணைமிக, நூற்றாண்டு விழாக்கள் எடுத்து,விறலியோரும்,பாணர்களும் மெய்கீர்த்தி பாடும்போது, திண்டுகளில் சாய்ந்து, அதை கேட்டு, களிப்புத்தேறலில் மயங்கி துயில் கொள்வோரின் தயவில், ‘தமிழன்னை அரியாசனம் அமர்ந்த திருவிழா’வின் நூற்றாண்டுவிழா தினத்தை 27 12 2056 அன்று கொண்டாடுவோமாக! Do you understand, Mr.Tamil Evangelist? பாதிக்கிணறுக்கு மேல் தாண்டிவிட்டோம். வடமொழியில் ‘திரிசங்கு சுவர்க்கம்’ என்பார்கள். ஒரு கால அட்டவணையிட்டு, அதை புகழ்வோம், கண்டு  மகிழ்வோம், இகழ்வோம், தலை குனிவோம்.
காலத்தின் கோலமடா, தம்பி!
௵2056: டிசம்பர் 27: ‘தமிழ் ஆட்சி மொழி’ மசோதா(த.நா.சட்டம்‍ 39/1956) சென்னை மாநில சட்டமன்றத்தின் இறுதிக் கூட்டத்தில் நிறைவேறிய தினத்தின் நூற்றாண்டு விழா. 
கற்பனை 1: விழா மொழி தனித்தமிழ்: 
கற்பனை 2: விழா மொழி செந்தமிழ்: 
கற்பனை 3: விழா மொழி இயல்பாக வடமொழி/ஆங்கிலம்/ ஹிந்தி கொஞ்சமாகக் கலந்த எளிய தமிழ்: 
கற்பனை 4: விழா மொழி தங்க்லீஷ்:
கற்பனை 5: விழா மொழி: ஹிந்தி:
கற்பனை 7: விழா மொழி ஆங்கிலம்.

பொது கற்பனை: தாரை/கொம்பு/பறை காணாமல் போனதால் கேரள செண்டு மேளம் + நாதமுனி பேண்டு வாத்தியம் + ஷெனாய். விழா நடனம்: டப்பாங்குத்து; விழா இசை: லதா மங்கேஷ்கரின் வாரிசு: விழா வீரவிளையாட்டு: இழுபறியாட்டம்: விழா பந்தல் காண்ட்றாக்ட்: முதல்வரின் மாப்பிள்ளையின் சகலையின் வளர்ப்பு மகள். விழா நிதி: ஆட்சி மொழி அமைச்சரின் மெய்க்காப்பாளரின் ஆசைநாயகியின் கையில் ஆடிய வரிப்பணம்.

ஏகோபித்தத் தீர்மானங்கள்: ஓரம் கிராமத்தில் குடிகொண்டிருக்கும் தமிழன்னை சிலைக்கு வைரமூக்குத்தி; அடுத்த நூற்றாண்டு விழாவுக்கு ஒரு அமைச்சரகம்; தழிழில் எழுதுவதற்கும், பேசுவதற்கும் தடையேதுமில்லை என்றதோர் அன்புக்கட்டளை; ஐ.நா.வில் தமிழில் தான் பேசுவோம் என்ற வீராப்பு.

௵2011: "ஆட்சி மொழி" என்றால் அரசாணைகள் மொழி...1947 ஆகஸ்ட் 15 வரை ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்தில்தான் ஆட்சி புரிந்தனர். அதன் பின் கூட பல வருடம் ஆங்கிலம் தான் ஆட்சி மொழி, இப்பொழுதும் கூட பல அரசு ஆவணங்கள் ஆங்கிலத்தில் தான் கிடைக்கின்றன. தமிழ்நாடு அரசு சைட்டுக்கு சென்று பாருங்கள் தெரியும்...” (உசாத்துணை: மின் தமிழர் விஜயராகவன்: 09 08 2011)

௵2010:சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழை சேர்ப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது...சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விரைவில் தலைமை நீதிபதி நியமிக்கப்பட உள்ளார். அதன் பிறகு தமிழை வழக்கு மொழி ஆக்குவதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும். என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார். (உசாத்துணை: மின்தமிழர் தாரகை: 31 05 2010: தினமணியிலிருந்து)
௵2010: மே 8: தமிழில் எழுதப்படாத பெயர் பலகை அகற்றப்படும்!..இந்த மாதம் 31-ந்தேதிக்குள் தமிழில் எழுதவேண்டும் என்று கெடு...தமிழில் எழுதப்படாத பெயர் பலகை அகற்றப்படும்! (உசாத்துணை: நக்கீரன் இதழ்)
௵2010: தமிழ்நாட்டு அரசின் இணையதளங்களில் பெரும்பாலும் ஆங்கிலப்பக்கங்கள்;தமிழ் பக்கங்கள் சரிவர இல்லை. சான்றாக, கிராமங்களின் எல்லை வகையறா ஆங்கிலத்தில் மட்டும். வாங்கும் ஊதியத்திற்கு உழைக்காமல், மற்றவர்கள் மீது தெளிவற்ற உரிமைவேட்டல் தேவையா? இதெல்லாம் ஒரு பலிகடா பாவ்லா! (உசாத்துணை: மின் தமிழர் விஜயராகவன்: 31 03 2010)

௵1996: மே 13: அனைத்து நிலையிலும் படிப்படியாகத் தமிழை ஆட்சிமொழியாக உயர்த்திடும் முயற்சியின் உயர்நிலைப்பணியாக தமிழ் ஆட்சிமொழித்துறை தனி அமைச்சக‌மாக உருவாக்கப்பட்டது.
௵1971:டிசம்பர் 2: அரசுச் செயலகத் துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டது.
௵1971: மே 28: அரசு நிருவாகம் முழுவதிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்குடன் தமிழ் வளர்ச்சி இயக்கம் எனத் தனி ஒரு அலுவலகம் உருவாக்கப்பட்டது.
௵1969: நவம்பர் 13:சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சார்நிலையில் அமைந்திருக்கின்ற அனைத்து நீதி மன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும்,நீதிமன்ற சாட்சியங்களை 14.01.1970 முதல் ் தமிழில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆணையிடப்பட்டது.
௵1969:ஸெப்டம்பர் 27: அரசின் ஒரு துறையிலிருந்து பிற துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
௵1967: தி.முக. பதவியேற்பு.‘சென்னை மாநிலம்’ என்பதை அறிஞர் அண்ணா 'தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்தார். ‘பல்வேறு தமிழ் வளர்ச்சிப் பணிகள் தமிழ் ஆட்சி மொழிப் பணிகளாக மேற்கொள்ளப்பட்டன.’ என்று முனைவர்.மு.வளர்மதி சொல்கிறார். ஆதாரம், தகவல்கள் ஒன்றும் அவர் அளிக்கவில்லை. பல நற்செய்திகள் கூறியிருக்கிறார். நன்றி. ஆனால்,எனக்கு தெரிந்தவரை,பேச்சுடன் சரி. வாய்ச்சொல்லில் வீரரடி.
௵1966: முன்னாள் முதலமைச்சர் திரு. பக்தவத்சலம் அவர்கள் தலைமையில் ஆட்சி மொழி தமிழ் என்பதைச் செயற்படுத்தும் வகையில் ஆட்சி மொழிக்குழுவின் தொடக்க விழா!
௵1956: டிசம்பர் 27: சட்டமன்றத்தின் இறுதிக் கூட்டத்தில் ‘ஏகமனதாக’ (!) நிறைவேறிய ‘தமிழ் ஆட்சி மொழி’ மசோதா. (த.நா.சட்டம்‍ 39/1956) காமராசர் ஆட்சி. முன்மொழிந்த நிதி மந்திரி சி.சுப்ரமணியம்இந் நன்னாளைத் ‘தமிழன்னை அரியாசனம் அமரும் திருவிழா’வாகக் கருதும்படி கேட்டுக்கொண்டார். உணர்ச்சிவசப்பட்டு அவர் கூறியது:

‘... “இந்த மசோதாவை இந்தச் சபைமுன் வெகு மகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கிறேன். இந்த மசோதாவை, இந்தச் சபைமுன் கொண்டுவரக் கூடிய ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பற்றியே நாம் எல்லாரும் மகிழ்ச்சியடைய வேண்டும். தமிழ்மொழி நம்முடைய தாய்மொழியாகவும், நாட்டு மொழியாகவும் இருந்தாலும்கூட, ஒரு காலத்திலே ஆட்சிமொழியாக இருந்திருந்தாலும்கூட, மத்திய காலத்திலே ஏற்பட்ட அடிமை வாழ்வின் காரணமாக அந்த மொழிக்கும் ஓர் அடிமை வாழ்வு ஏற்பட்டுவிட்டது. அரசியாக வீற்றிருப்பதற்குப் பதிலாகப் பணிப்பெண்ணாக இருந்து பணியாற்றி வரக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. மறுபடியும் அந்த அரசுரிமையைத் தமிழன்னைக்கு நாம் அளிக்கிறோம் என்றால், நாம் மற்றத் துறைகளில் பெற்றிருக்கக் கூடிய சுதந்திரத்திற்கு இதுவும் ஒரு சின்னமாகவே அமைந்திருக்கிறது என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன்”
பின்னர், ப.ஜீவானந்தம், முத்துராமலிங்கத் தேவர், பி.ராமமூர்த்தி, கே.விநாயகம், பி.ஜி.கருத்திருமன் முதலானோர் பேசி, மசோதாவிற்கு ஒருமித்த ஆதரவு கொடுத்தனர். மேலவையில், “இப்போது தமிழை நன்றாக வளர்ப்பதற்காக நாம் ஒரு சிறு விதையைப் போடுகிறோம். ஒரு ‘மாஸ்டர்ட் ஸீட்’டைப் போடுகிறோம். இந்தச் சிறு விதை, பறவைகள் தங்கும் பெரிய ஆலமரமாகி, அதன்கீழ் தமிழ் மக்கள் தங்கிச் சுகமாக இருக்கவேண்டும்...” என்று முதன்முறையாக தமிழில் நீண்ட உரையாற்றித் தம் ஆதரவை வெளிப்படுத்தினார், வி.சக்கரை செட்டியார்.
தொடர்ந்து, டி.எம்.நாராயணசுவாமி பிள்ளை, “குறைகளை எல்லாம் நீக்கி, மறுபடியும் தமிழ் அன்னை அரசு புரியும்படியாகச் செய்வதற்கு இந்த மசோதா ஒரு நல்ல துணையாகவும் தூண்டுதலாகவும் உயிர் கொடுப்பதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை! நமது சர்க்கார் கொண்டுவந்திருக்கும் திட்டங்களின் மூலம், விவசாயத்தையும் தொழில்களையும் அபிவிருத்தி செய்கிறார்கள். அபிவிருத்தி மட்டும் போதாது! அந்த அபிவிருத்திக்கு அடிப்படையாகவும் ஆதரவாகவும் தமிழ்மொழி நன்றாக வளரவேண்டும். தமிழ் – சபைகளில் எழுந்து முழங்கவேண்டும். இந்தச் சபை, ‘காபினெட்’, ‘செக்ரடேரியட்’ முதலிய இடங்களில் எல்லாம் தமிழ் முழங்கவேண்டும். இதைச் செய்தால், ஜனநாயகத்தில் மக்களுக்கு நல்ல பங்கு கிடைக்கும். மக்களுக்கு அரசாங்கத்துடன் நல்ல தொடர்பு ஏற்படும். அப்படிப்பட்ட தொடர்பு ஏற்படுவதால், அவர்களுக்கு உள்ளம் எழுச்சி ஏற்பட்டு, அதன் விளைவாக அரசாங்கத்தில் நல்ல பங்கெடுத்துக் கொள்வார்கள்; தங்கள் உரிமைகளை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வார்கள்; கலையும் உயரும். தமிழ்மொழி வளர்ச்சியுறுவது மிகவும் முக்கியமானது. மொழி வளர்ந்தால்தான் மக்களுடைய திறமை நன்றாக உயரும் என்பதில் சந்தேகமில்லை. மக்களுடைய திறனை ஒருவிதத்திலே நோக்கிப் பார்த்தால், இது முக்கியமாக இருக்கிறது. நாம் அடிமைகள் அல்ல! விடுதலைபெற்ற மக்கள்! வீரம் உள்ள மக்கள் என்ற முறையில் தாராளமாக நாம் முன்னோக்கிப் போகவேண்டும். நாம் வெகு வேகமாகப் பல மொழிகளில் உள்ள நல்லவைகளை எல்லாம் நம்முடையதாக்கிக் கொண்டு முன்னேறினால், வேற்றுமைகள் எல்லாம் மறைந்து ஒழிந்துவிடும். அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டு, தமிழனுக்கு இருக்கக்கூடிய பண்புகளெல்லாம் மேலும் வளர்ந்து, உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. இதைக் கொண்டுவந்ததற்காகச் சர்க்காருக்கும், கனம் மந்திரி ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களுக்கும் மக்கள் சார்பாக வாழ்த்து கூறிப் பாராட்டுகிறேன்” என்று கூறினார். வி.வி.ராமசாமி பேசும்போது, “இனி இந்த ராஜ்ஜியம், தமிழ்நாடாக மலரவேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை.. இந்த ராஜ்ஜியம் ஓராண்டுக்குள் ‘தமிழ்நாடு’ என்ற பெயருடன் மலர்ந்துவிடும் என்று எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது” எனப் பேசி, அலுவலகங்களில் தமிழைக் கையாளச் சில வழிமுறைகளையும் கூறினார். என்.அண்ணாமலை பிள்ளை பாராட்டிப் பேசும்போது, “இங்குப் பல வருஷங்களுக்குமுன் ஆங்கிலேயர் சட்டசபை நடத்திய காலத்தில் ஸ்ரீ பி.வி.நரசிம்ம ஐயர் அவர்கள் சட்டசபையில் முதன்முதலாகத் தமிழிலேயே பேசுவதற்கு ஆரம்பித்த காலத்தில், சபையில் உள்ளவர்கள் அவரை ஏளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்... தமிழை ஆட்சிமொழியாக அரியாசனத்தில் அமர்த்தும்போது, மற்ற மொழிகளைப் புறக்கணிக்காமல், தமிழுக்கு உதவக் கூடிய எல்லா மொழிகளுக்கும் பூரண ஆதரவு கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
தமிழ் ஆட்சிமொழியாகும்போது, மற்ற பரிவாரங்களும் சூழ நாம் ஆட்சி நடத்தவேண்டுமே தவிர, மற்றெல்லாவற்றையும் ஒதுக்கிவிட வேண்டுமென்று விரும்புவது தவறு. இந்த மசோதாவை ஏகமனதாக நிறைவேற்றுவதற்காக என்னுடைய மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் என் நன்றியையும் எல்லாருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி விவாதத்தை நிறைவுசெய்து வைத்தார்.
சட்டப் பேரவையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி குறித்து ‘தினமணி’ (29.12.1956) நாளேடு:“சி.சுப்ரமணியம் தமது உரையை முடிக்கும்போது, ‘வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித் திருநாடு!’ என்ற பாரதியாரின் பாடலைச் சொல்லி, ‘வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்நாடு!’ என்று மும்முறை முழங்கியபோது, சபை முழுவதும் அவருடன் உற்சாகத்துடன் இணைந்து முழக்கமிட்டு ஆரவாரம் செய்து களிப்புற்றது!”
௵1956: நவம்பர் ஒன்று: மொழி வாரி மாநிலங்கள் அமைந்ததால் அந்நாள் முதல் தமிழ் வழங்கும் பகுதி தனி மாநிலமாகச் 'சென்னை மாநிலம்" எனத் தோன்றியது.
௵1956: அக்டோபர் ஏழு: குளித்தலையில் தமிழ் ஆட்சி மொழி மாநாடு.
௵1955:"கஜபதி நாயக்கர்" தமிழக சட்டசபையில் ஆட்சித் தமிழ் குறித்து நீண்டதொரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். 
௵1940 நவம்பர் 3:”தமிழ் நாட்டைப் போல் வேறு எந்த நாட்டிலும் அந்த நாட்டின் மொழியல்லாத வேறு மொழியிற் சங்கீதம் பாடுவதைக் கேட்கமுடியாது. ஒவ்வொருவரும் தங்கள், தங்கள் தாய் மொழியிலேயே எல்லா கலைகளையும் வளர்ச்சி செய்து வருகின்றனர். இல்லாத கலைகளையும் புதிதாக ஆக்கி வருகின்றனர். தமிழரைப் போல, தாய் மொழிக் கலை உணர்ச்சியற்றவர்களை எந்த நாட்டிலும் காண முடியாது. ~ அறிஞர் அண்ணா (தமிழரின் மறுமலர்ச்சி - 03.11.1940)
௵1851: சில தாலுக்காக்களில் அலுவல்கள் மராட்டிக்கு/பாரசீக மொழிகளில் நடைபெற்றன.  பதிலாக, உள்ளூர் மொழியை கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகம் அமைத்தது.
௵1800: ௵ கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகம் கலெக்டர், நீதிபதி, காவல்துறை அதிகாரிகள் போன்றோர் உள்ளூர் மொழியைக் கற்க வேண்டும்; அதற்கான தேர்வுகளில் தேர்ச்சி பெறவேண்டும் என்று ஆணையிட்டது.
*
௵1800 ~ ௵2056: இது ஒரு 256 வருட சகாப்தம். ஆங்கிலேயரின் நடவடிக்கையில் குறை காண இயலாது. 18ம் நூற்றாண்டில் துரைத்தனத்தாரால் உயர்நிலை பள்ளிகளில் படிக்க அமைத்த தமிழ் பாடபுத்தகம் ஒன்றை த.ம.அ.வுக்காக, மின்னாக்கம் செய்துள்ளேன். தற்கால பட்டப்படிப்பின் தரம் அங்கு தென்படுகிறது. 1940ம் வருடத்திய அண்ணா அவர்களின் மனவலி எனக்கு புரிகிறது. அவருடைய தம்பிகளுக்குத்தான் புரியவில்லை. அதனால், இன்று நிலைமை இன்னும் மோசம். விடுதலை பெற்று பத்து வருடங்களுக்கு பிறகு தான் ஆட்சி மொழி சட்டம்!  தொடக்க விழாவுக்கு மேலும் பத்து வருடம்! அடுத்த வருடம் தி.மு.க. பதவியேற்பும், நகாசு வேலையும்! 1969 வருட ஆணை 2011 வரை கிடப்பில். இந்த அழகில் போன வருடம் வீரப்ப மொய்லி அவர்கள் இரண்டுங்கெட்டான் மொய் எழுதியிருக்கிறார். எல்லாரும் கை தட்டி இருக்கிறார்கள்!  25 வருடங்கள் கழித்து, 1971ல் தனி அலுவலகம். மேலும், 25 வருடங்கள் கழித்து 1996ல் தனி அமைச்சகம்.  எல்லாம் டபிள் மாமாங்கம்! 15 வருடங்கள் கழித்து 2010ல் பலிகடா பாவ்லா! அசட்டுத்தனமான முரண்டு கெடுபிடி. எனக்கு நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல இருக்கிறது. மற்றவர்களை பற்றி பேச எனக்கு உரிமை இல்லை.
நன்றி, வணக்கம், வெட்கம்.
இன்னம்பூரான்
27 12 2011
lordtamilannai.jpg

கூரம் கிராமம்: தமிழன்னை கோயிலில், தமிழன்னை சிலை.
உசாத்துணை: 
Guide to Records, Coimbatore District, pg.139
Salem District Gazetteer - Richards, Volume - 1 Page.93 
Madras Legislative Debates, ‘The Madras Official Language Bill| Dated: 28.12.1956, Pages: 393 to 422)

‘காமராஜ் ஒரு சகாப்தம்’ என்ற நூல்: தேசீய முரசு ஜூன் 2010.

Dhivakar 27 December 2011 16:43


முதலிலேயே இதைச் சொல்லிவிட்டு பிறகு இந்த விஷயத்துக்கு நிதானமாக வருகிறேன். படித்தால் நிதானமாக படிக்க வேண்டும். அரைகுறையாக மேலோட்டமாகப் படிப்பது என்னிடம் கிடையாது :)
நான் முதலிலேயே சொல்ல வந்தது இதுதான் : 2056 எனக்கும் நூற்றாண்டு 



Geetha Sambasivam 27 December 2011 20:18


௵1956: நவம்பர் ஒன்று: மொழி வாரி மாநிலங்கள் அமைந்ததால் அந்நாள் முதல் தமிழ் வழங்கும் பகுதி தனி மாநிலமாகச் 'சென்னை மாநிலம்" எனத் தோன்றியது. //


ஒருதரத்துக்கு இரண்டு தரம் படிச்சேன்.  இந்த மொழிவாரி மாநிலங்கள் பிரிப்புத்தான் இன்றைய அநேகப் பிரச்னைகளுக்கும் காரணம் எனத் தோன்றுகிறது.  மற்றபடி தமிழுக்கு யாரும் எதுவும் செய்யவில்லை என்பது என்னமோ உண்மை.  நீங்கள் 18-ஆம் நூற்றாண்டுப் பாடப் புத்தகம் பற்றிக் கூறி உள்ளீர்கள்.  உண்மைதான்.  ஆறுமுக நாவலரின் பாலபாடங்களின் தரத்தைப் பார்த்தால் இன்றைய பட்டப்படிப்பிலே கூட இத்தனை இருக்குமா எனத் தோன்றியது.  நிச்சயமாக நானெல்லாம் படிக்கையில் கூட இவ்வளவு தரம் இல்லை.  நான் படித்தபோது இருந்த தரம் கூட இன்றைய புத்தகங்களில் காணப்படவில்லை. :(((((((

2011/12/27 Innamburan Innamburan <innamburan@gmail.com>