சாக்யமுனியோ, சோக்ரதரோ, வள்ளுவரோ, வள்ளலாரோ, ஒரு சமயத்தை சமைப்பதில் முனையவில்லை. அவர்கள் மனித சமுதாயத்திற்கு வாழ்நெறியொன்று அமைப்பதில் ஆர்வம் கொண்டு, அவரவர்களுக்கு அருளப்பட்ட ஞானப்பிரகாசத்தின் நல்வரவாக, புதியபாதைகள் வகுத்தனர். எனவே, அவை நலிவதில்லை. பிரபஞ்சத்தில் நிரந்தரம் என்று ஒன்று உண்டு எனினில், அவை, இவை போன்ற பாட்டைகளே. நடவுக்காகக் காத்திருக்கும் நாற்றுகள் அழைக்க, வரம்பின் மேல் விரையும் குடியானவன் எவ்வாறு சருக்கியும், வழுக்கியும், வீழ்ந்தெழுந்து காரணநடையை தவறவிட வில்லையோ, அவ்வாறே மனித இனம் தனக்குகந்த வாழ்நெறியிலிருந்து விலகாமல் இருக்கமுடியும்.
சாக்யமுனியின்(கெளதம புத்தர்) உபதேசங்களோ, அவரின் இடைவிடாத பயணங்களில், அவர் அருளிய எடுத்துக்காட்டுக்கள், பொன்மொழிகள் (‘தம்மபாதா’ என்ற தொகுப்பு), குட்டிக்கதைகள் எல்லாமே, எளிய மொழியில், விமர்சனத்தேவையற்றதாக அமைந்தன. பாமரமக்களே அவரது இலக்கு. பெளத்தம், ஒரு மதம் இல்லை, வாழ்நெறியே என்று தான் அவர் கூறினார். மேலும் இது பிக்ஷுக்களுக்கு மட்டுமல்ல, உனக்கும், எனக்கும் என்று தான் அவரது நேரடிநிலை. ‘மணிமேகலையில்’ இந்த வாழ்நெறியைப்பற்றி, அடிக்கொரு விளக்கம் கிடைக்கிறது. மணிமேகலை தொன்மையான தமிழ் இலக்கியம். ஒரு தொடர்கதையின் இரண்டாம் பாகம். அதன் காலம், சாக்யமுனியின் காலத்தை ஒட்டியது. ஒட்டுப்போடப்படாதது.
‘தம்மபாதா’ வின் முதல் செய்யுள், ஒரு உளவியல் ஆய்வு. மனநிலைகளை உந்துவது, அவற்றின் தலைவனாகிய மனம் என்றும், தூயமனம் இல்லை எனின், பேச்சும், செயலும், வண்டிமாட்டின் சுவடுகளை பின்பற்றும் வண்டிச்சக்கரத்தைப் போல, மாசுபடுத்ததாக அமையும், என்று அது தொடங்குவதே, புதியதொரு,நலிவில்லா வாழ்நெறியே.
No comments:
Post a Comment