Sunday, August 2, 2009

சென்னைபட்டின உலா

June 30, 2009

சென்னைபட்டின உலா

வீ.ஆர். கிருஷ்ணையர் ராகுல் காந்திக்கு ஹிந்து பத்திரைக்கையில் கடிதம் வரைந்த்தது போல,

இக்கடிதம் எனது ஆப்தநண்பர் ஒருவருக்கு, மின் - தமிழ் தொடரில் வரையப்பட்டிருக்கிறது. எனக்குரிய தன்னடக்கத்துடன் சொன்னால், மயில் ராவணன் கதையைப் போல, ‘பத்து தலைகளை சுற்றி மூக்கை தொட்ட’ காதையாகும்; உண்மை விளம்பினால் ‘ஆயிரம் தலைகளை சுற்றோ என்று சுற்றி மூக்கை தொட்ட அபூர்வ சிந்தாமணி’ யின் காப்பியமாகும்.

இன்னம்பூரான்

(தொடரும்)

June 31, 2009

சென்னைபட்டின உலா

நேற்று, நாடு கடந்து, காடு கடந்து, வரை கடந்து, திரை கடந்து வாழ்ந்த நான், சென்னை நகர வலம் வரும் அரிய வாய்ப்பை பெற்றேன். நானும், நண்பரும் ரோஜா முத்தையா மன்றத்தில் ஒரு அரிய நிகழ்ச்சிக்காக, தனி தனியே வெவ்வேறு பேட்டைகளிலிருந்து பயணித்தோம். ஒருவரை ஒருவர், முன்னும் பின்னும் பார்த்திருக்கவில்லை என்பதால் (அதனால் தான், நாம் யாவரும் சந்திக்கவேண்டும் என முன்பு கூறியதை நினைவு கூர்க.), நாங்கள் தடுமாறியது சுவையான கதை.

ஒரு சமூக சேவைக்கு, முன்கூட்டியே ஒரு வீ.ஐ.பியின் அலுவலகத்தில் சந்திப்பதாக முன்னேற்பாடு. அங்கு ஐயாவைக்காணாமல், மற்றொருவரிடம், நான் கேட்கப்போய், அவர் தான் ‘முனைவர் முத்தைறையானார்’ என பதிலளித்து, மீசை படபடக்க முறைத்தார். சளைத்தவனா, என்ன? முடியா வழக்காகிய, ‘வாலிவதம் நியாயமானதா?’ என்று வினவினேன். அவரோ, ‘எனது 1962ம் ஆண்டு ஆய்வு “சங்ககாலத்திற்கு முந்திய தமிழும், மெஸபடோமியாவின் பழகு ஆங்கிலமும்” என்று பகர்ந்து, ‘வாலி தற்கால கவிஞராமே’ என்றார். உமது ‘கிணறு’ எந்த ஊரிலிருக்கிறது? என்று கேட்க தயங்கி, நானும் லாகவமாக ஜகா வாங்கினேன். நிகழ்ச்சியில் சில சலசலப்புக்களுக்கு பிறகு, இருவரும் இனம் கண்டு கொண்டோம். இது நிற்க.

நிகழ்ச்சியும் இனிதே நிறைவேற, வீடு திரும்பும் நல்லெண்ணம் மேலோங்க, நான் போட்ட தப்புக்கணக்கு யாதெனில், ‘8.73 கிலோமீட்டர் வருவதற்கு, பஸ்ஸில் 37 நிமிடம் பிடித்தது; ஐயாவோ புத்தம் புதிய காரில், இருக்கை அளித்தார், தோதான இடத்தில் இறக்கிவிடுவதாக. சத்திய பிரமாணம் செய்தார். 21 நிமிடத்தில் வீடு என்று இறுமாந்தேன்.

உலா தொடங்கியது, கம்பராமாயணத்தில், இராம-இலக்குவனர் ஆச்சா மரங்களும், ஏலமரங்களும், சந்தனமலர்களும், பூகுன்றங்களும், ஊசலாடும் வானர அழகிகளும் நிறைந்த கிட்கிந்தை மலையில், தேன் வழுக்கிய தடங்களில் நடந்த்து போல! முதல் தோதான இடத்தில், மின்பாடி வண்டி தடுக்க, அதற்கு பின், ஒன்றன்பின் ஒன்றாக, தடுப்பு சுவர்களும், மொஹஞ்சதாரோ-ஹாரப்பா அகிழாய்வு போன்ற அரைகுறை மேல்/கீழ்/பக்கவாட்டு/எதிர்பக்க/அடையாளமற்ற/குழப்பும் பாலங்களும் பயமுறுத்த, சிக்னல்கள் மின்னலடிக்க, மாடமாளிகைகள், கூடகோபுரங்கள், உப்பரிகைகள், சேரிகள், இல்லாத நடைபாதையிலும் வசிப்பவர்கள், நெய்யும் துணியின் பாவு போல ஓடியாடும் ஆட்டோக்களும் படுத்திய பாட்டில், ஐயாவால், வண்டியை நிறுத்தமுடியவில்லை. இடைவிடாத பேச்சினால், சில இடங்களை கோட்டை விட்டோம். நான் அமைதி காத்தால், அவரது கைப்பேசி பேசித்தீர்த்துவிடும். கிண்டி பார்த்தோம்; கண்டு கொள்ளவில்லை. கத்திப்பாராவில், நான் கத்தவில்லை, இறக்கிவிடு என்று; ஈக்காடு தங்கலில், யாம் தங்கவில்லை; அஷோக் பில்லரில், வழி தவறினோம்; ஐயா இல்லை என்பார்; கோயாம்பேட்டில் கோட்டை விட்டோம்; ‘டக்’ என்று ஒரு பொறி தட்ட, ‘சட்’ என்று நிறுத்தினார். கைலாகு கொடுத்து, என்னை ரோடு கடத்தினார். இரு பஸ்கள் மாறி வீடு சேர்ந்தேன் - 47 கிலோமீட்டரை 274 நிமிடங்களில் விரைவாக கடந்த அனுபவம் புதிது.

இன்னம்பூரான்

பி.கு. இடம், பொருள், ஏவல் மாற்றியுள்ளேன்; ஊரும், பேரும் சொல்லவில்லை; ஏன்? மரபு காக்க. எப்படியும், துணிவு இருந்தால், ஐயா குட்டை உடைக்கமாட்டாரா, என்ன?

No comments:

Post a Comment