Wednesday, November 4, 2009

அம்மா சொல்படி ராஜூ: அட்டை:18: ...

அம்மா சொல்படி ராஜூ: (‘...’) பகுதி 18: 3 11 2009

(‘எழுத முடியல்லையே ...’)

(அப்போது என் புருஷன் க்யாம்பு போயிருந்தார் ...) என்ன செய்வது என்று கவலைப்பட்டேன். மறுநாள் வந்து விட்டார். அவர் உடனே டாக்டரை அழைத்து வந்தார். டாக்டர் பார்த்து இது டைபாயிட் மாதிரி இருக்கிறது. ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்வது நல்லது என்று சொன்னார். என் புருஷனுக்கு அந்த ஊர் புதுசு. நாம எப்படி ஆஸ்பத்திரியில் சேர்ப்பது என்று கவலைப்பட்டார். ஆனால், அங்கு ஒரு முதலியார் ஸ்டாம்பு வாங்கி எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருப்பார். அவரிடம் நாங்களும் கவர், கார்ட் எல்லாம் வாங்குவோம். அதனால் அவர் தான் கொஞ்சம் தெரிந்தவர். அவர் எதிர்பாராதபடி பெரிய பையனுக்கு ஜுரம் என்று கேழ்விப்பட்டேன். பார்க்கலாம் என்று வந்தேன் (என்று) எங்கள் வீட்டு மாடிக்கு வந்தார். அவர் பெயர் தெய்வநாயகம் பிள்ளை. அவர் வந்தவுடன் நான் தெய்வநாயகமே84 வந்தாச்சு; கவலையில்லை என்று சொன்னேன். அவர் பார்க்கும்போது மூன்று பேருக்கும் ஜுரம். அதனால் அவர் தான் போய் பாளையங்கோட்டை ஆஸ்பத்திரியில் பெட் இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன் என்ரு சொன்னார். தவிற, எனக்கு தெரிந்த டாக்டர் பரமசிவம் இருக்கிறார். அவரைப் பார்த்து வந்து சொல்கிறேன் என்ரு சொல்லிவிட்டு அவர் ஆஸ்பத்திரிக்கு போய் பார்த்து வந்து சொன்னார். பெட் மூன்று பேருக்கும் இல்லை. ஆனால் போய் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனார். மறுநாள் தான் போவதாக அவர் சொன்னார். அதற்குள் மூன்றாவது பிள்ளைக்கு ஜாஸ்தியாகி மூளையில் செப்டிக் ஆகி உளருகிறான். எனக்குப் பயமாக இருக்கிறது. கவலையாகவும் இருக்கிறது. என் புருஷன் என்ன செய்வார். மறு நாள் தெய்வநாயகம் பிள்ளை வந்து ஆஸ்பத்திரி போகலாமா என்று கேட்டார். உடனே புறப்பட ஏற்பாடு. அவரே போய் இரண்டு மாட்டு வண்டி அழைத்து வந்தார். ஒரு வண்டியில் பெரியவனையும், இரண்டாவது பிள்ளையையும் சேர்த்து கொண்டு போகிறோம். மற்ற ஒரு வண்டி மூன்றாவது, பார்த்தசாரதியைக் கொண்டு ஆஸ்பத்திரியில் கொண்டு போய்ச் சேர்த்தோம். ஏதோ பெருமாளோட அருளால் பெட் கிடைத்தது. மூன்று பேரையும் சேர்த்துத் துணைக்கு என் புருஷன் தான் இருந்தார். நான் போகமுடியாது. ஆனால் குழந்தைகளைப் பார்க்கப் போவேன். அப்போது பெரிய பையனுக்கு தலையில் ஐஸ் வைத்திருந்தார்கள். அடுத்தவன் நினைவு இல்லாமல் தூங்கிக் கொண்டு இருந்தான். மூன்றாவது பையனுக்குத்தான் ரொம்பவும் ஸீரியஸ்ஸாக இருந்தது. அபோது85 நான்

அவனைப் பார்த்துக்கொள்கிறேன் என்று என் புருஷனை வீட்டுக்கு அனுப்பி சாப்பாடு சாப்பிட்டு விட்டு எனக்குக் காப்பி மாத்திரம் (கொண்டு) வாருங்கள் என்று அனுப்பி விட்டு நான் மூன்றாவது பையனை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் பையன் பிழைப்பான் என்று எனக்குத் தோன்றவில்லை. இருந்தாலும் பாலை வாயில் ஸ்பூனால் ஊத்திக்கொண்டிருந்தேன் . வீட்டில் சமையல் காப்பி இதெல்லாம் செய்வதற்கு பெரிய பெண் இருந்தாள் அவளுக்கு 13 வயது இருக்கும். அவள் தான் எல்லாம் செய்து கொடுத்து அனுப்புவாள். ஆஸ்பத்திரிக்கு அதே போல் காலை 6 மணி சுமாருக்கு என் புருஷனிடம் காப்பி கொடுத்து இருந்தாள். நான் சாப்பிட்டுட்டு பிள்ளையிடம் உட்கார்ந்திருந்தேன். ஆனால் பையன் கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை. அதற்கு 7 மணி சுமாருக்கு என்னை என் புருஷன் நீ சாப்பிட்டு வா என்று வீட்டுக்குப் போகச் சொன்னார். நான் வேண்டாம் என்று சொன்னேன். அவர் கேழ்க்கவில்லை. பிறகு நான் வீட்டிற்குள் போவதுற்குள் என் புருஷன் வந்து அவன் இறந்து விடுவான் போலிருக்கிறது என்று சொல்லிவிட்டு காரைக்குடிக்கும், இன்னம்பூருக்கும் தந்தி கொடுத்தார். ஆனால் நான் போய் பார்ப்பதற்குள் பையன் இறந்து விட்டான், அவனை அவர்கள் வெளியில் கொண்டு விட்டு திரை போட்டு விட்டார்கள் ...

(‘...’)

அம்மா சொல்படி ராஜூ: அட்டை:17: எழுத முடியல்லையே

அம்மா சொல்படி ராஜூ: (‘எழுத முடியல்லையே ...’) பகுதி 17: 2 11 2009

(‘படிப்பு தான் முக்யம்’)

(முதலில் குழந்தைகள் படிப்பு தான் முக்கியம்...) ... உன் (புருஷன்) எப்போதாவது வந்து பார்த்துவிட்டு போகட்டும் என்று லட்டர் போட்டார். உடனே என் புருஷன் நான் சாப்பிட்டிற்குக் கஷ்டப்படமுடியாது. நான் போய் ஊர் எப்படி இருக்கிறது என்று லட்டர் போடுகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார். நானும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டையும் காலி செய்து விட்டு சாமான்களை டீ.வி.எஸ்ஸில்79 ஏத்தி காரைக்குடி வரும்படி செய்துவிட்டோம். நானும் காரைக்குடி வந்து விட்டேன். அப்போது எல்லாம் சாப்பாடு கஷ்டம். உடனே என் அப்பா புதுக்கோட்டை போய் பெரிய வீட்டைக் காலி செய்யச்சொன்னார். அவர்கள் வாடகையும் கொடுக்காமல் காலியும் செய்ய மறுத்தார்கள்? ஆனால் வீட்டில் அத்தையுடைய தம்பி இருந்து கொண்டு காலி பண்ண மாட்டேன் என்று சொன்னான். என் பெரிய வீட்டில் இருக்கும் குடியிருப்பவர்கள் பேரில் கேஸ் போட்டுவிட்டார். கேஸ் போட்டதினால் உடனே கோர்ட் மூலம் வீட்டை காலி செய்ய ஏற்பாடு ஆகிற்று. அதன் படி காலி செய்து விட்டார்கள். பிறகு என் அப்பா எங்களை புதுக்கோட்டைக்கு அழைத்து அந்த வீட்டில் நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி சாப்பிட்டோம். அப்புறம் நான் புதுக்கோட்டையில் வந்து ராஜா காலேஜ்80 என்று ஒன்று இருந்ததது. அதில் பெரியவனை சேர்த்தேன். ராணி ஸ்கூலில் பெண்களைச் சேர்த்தேன். அப்போது எனக்கு மூன்று பெண்கள் பிள்ளை மூன்று. எல்லாரையும் படிக்கவைத்துக்கொண்டு 14 வருஷம் இருந்தேன்81 (?) ஆனால் பெரிய வீடு ரொம்ப மோசமாக இருந்தது. அதனால் (ஆனால்?) என் அப்பாவுக்கு அப்போது பணவசதி உண்டு. அவர் வந்து நன்றாக வீடுகளை கட்டிக்கொடுத்து, நிலத்தையும் நன்றாக கவனித்தார். நிலம் இருப்பது கீர்நூர் (கீரனூர்) என்ற ஊருக்கு பக்கத்தில் நாஞ்சூர் என்று இருந்தது, அதற்கு நானும் போய் நெல்லுகள் வீட்டிற்கு வரும்படி குடியானவனிடம்82 சொல்வேன் அவன் கொண்டு வந்து போடுவான். இப்படியாக 14 வருஷம் பெண்கள் குடுத்தனமாக இருந்தேன். ஆனால் இப்படி இருக்கும்போது என் புருஷன் ஊர் நன்றாக இருக்கிறது. நல்ல காலேஜ் ஸ்கூல் எல்லா (ம்) இருக்கிறது. அதனால் இங்கேயே எல்லாரையும் ஸ்கூலில் சேர்த்து விடலாம் என்று நினைக்கிறேன். நானும் சாப்பாட்டுக்கு கஷ்டபடவேண்டாம் நீங்கள் பெரிய லீவுக்கு ஒரு தரம் வந்து விட்டுப் போங்கள் என்று என் புருஷன் லெட்டர் போட்டார். என்ன செய்வது. அவருக்குக் கோபம் வந்து விடுமே என்று என் அப்பாவிடம் சொல்லிவிட்டு கையில் ஏதோ சில பாத்திரங்களை83 எடுத்துபோய் ஒரு மாஸம் லீவுக்கு போய்விட்டு வந்தேன். அப்போது ஆத்தில் குடி வைத்து விட்டுத்தான் போனேன்? அடுத்த வருஷமும் அதே போல் என் புருஷன் லட்டர் நாமெல்லாரும் திருநெல்வேலியில் இருப்போம். அதனால் நீங்கள் வீட்டை வாடகைக்கு வைத்து விட்டு வாங்கள் என்று லட்டர் போட்டு விட்டார். என்ன செய்வது என்று பெரியவன் மற்ற எல்லாரும் திருநெல்வேலி போனோம். உடனே வீடு கிடைக்காமல் ஒரு முதலியார் வீடு வண்ணாத்தங்கரை என்ற இடத்தில் இருந்தது.

வீடு சின்னது தான். கிணறு கிடையாது. குழாய் கிடையாது. தாம்பரவர்ணிக்குப் போய் குழந்தைகள் குளித்துவிட்டு வருவார்கள். நானும் அங்கு போய் குளித்துக் குடத்தில் ஜலம் எடுத்து வந்து தான் சமையல் செய்யவேண்டும், ரொம்பவும் கஷ்டப்பட்டேன். என் புருஷனிடம் சொன்னேன். வேறு வீடு பாருங்கள். அப்படி கிடைக்காவிட்டால் புதுக்கோட்டை போகிறோம் என்று சொன்னேன். அது கூட அவருக்கு கோபம் தான். அவர் புதுப்பேட்டை தெரிவில் ஒரு வீடு பார்த்து அங்கு போனோம். போய் ஸ்கூல் திறந்தவுடன் பெரியவனிலிருந்து ரகு, பார்த்தசாரதி பெண்கள் எல்லாரையும் ரொம்ப சந்தோஷமாக ஸ்கூலில் சேர்த்து விட்டு வந்தார், என் புருஷன். ஆனால் வீடு எப்படி என்றால், கீழே சமையல் மாடியில் படுக்கை, இப்படியே குழந்தைகளும் ஸ்கூல் போய் வருவார்கள். ஆனால் அங்கும் தண்ணீர் கஷ்டம் தான். வாய்க்கால் ஒன்று போகும். அதில் போய் குழந்தைகள் எல்லாம் குளிக்கவேண்டும். என்ன செய்வது. குடிப்பதற்கு ஐகரெவுண்ட் என்ற பார்க். அதில் போய்த்தான் தண்ணீர் கொண்டு வரவேண்டும். அப்படியும் கஷ்டம் தான். கிணறு இருக்கும் இடத்திற்குக் கயறு வாங்கி எடுத்துப்போய்த்தான் தண்ணீர் கொண்டு வரவேண்டும். என்னோடு லீவு நாளில் சின்னப்பெண் பெரிய பெண் ஆத்தைப் பார்த்துக் கொள்வாள். இப்படியாக இருக்கும்போது ஜூன் ஜூலைகளில் குழந்தைகள் ஸ்கூலுக்குப் போய் கொண்டிருந்தார்கள். (ஒரு) பெரிய பையன் தலைவலி சாப்பாடு வேண்டாம் என்று காலேஜ்ஜிலிருந்து சாப்பாடை எடுத்து வந்து விட்டான். ராத்திரி லேசாக ஜுரமாக இருந்தது. டாக்டரிடம் காண்பித்தோம். அவர் ஏதோ மருந்து கொடுத்தார். மறு நாள் மற்றவர்கள் மற்றவர்கள் ஸ்கூல் போனார்கள். ஆனால் சாயங்காலம் திரும்பி சாப்பிடாமல் தலை வலி என்று வந்து விட்டார்கள். டாக்டரிடம் அவனையும் காண்பித்து ஏதோ மருந்து கொடுத்தார். மூன்றாவது பையன் ஸ்கூலிலிருந்து வந்துவிட்டான். அவனூக்கும் தலைவலி ஜுரம் வந்து வீட்டில் மூன்று பிள்ளைகளும் ஜுரமாக படுத்து விட்டார்கள். அப்போது என் புருஷன் க்யாம்பு போயிருந்தார் ...

79. பெரிய அய்யங்கார் போக்குவரத்து நிறுவனம். இன்று அதன் விழுதுகள் பல.

80. குறுநில மன்னர்கள் செய்த நற்காரியங்களில் ஒன்று.

81. அதில் 4-5 வருடங்கள் நானும் அங்கு இருந்தேன், சிறகு முளைக்கும் வரை.

82. அவர் பெயர் ஸ்டனிஸ்லாஸ். கிருத்துவ ஆதிக்கம். ஒரு நாள் அங்கு இருந்த பங்கு தந்தையிடமிருந்து (கிருத்துவ போதகர்) அராபியன் நைட்ஸ் என்ற நூலை இரவல் வாங்கி படித்து விட்டு, ஒரு கத்தோலிக்க மாதாகோயில் நூலகத்தில் இத்தகைய நூல்கள் இருக்கலாகாது என்று அறிவுரை வழங்கி, அவரிடம் செம்மையாக வாங்கி கட்டிகொண்டேன்.

83. அம்மாவிடம் ஒரு ரயிலடுக்கு என்ற பாத்திர ஸெட் இருந்தது. எல்லாமிருக்கும், சிறிய அளவில்.

(‘எழுத முடியல்லையே ...’)

அம்மா சொல்படி ராஜூ: 16: படிப்பு தான் முக்யம்

அம்மா சொல்படி ராஜூ: (‘படிப்பு தான் முக்யம்’) பகுதி 16: 1 11 2009

(‘நம்பினால் நம்புங்கள்’)

... நானும் ஆறாவது பிரஸவமாகி 3 மாஸத்தில் உசிலம்பட்டி போய்விட்டேன். அங்கு என் நாத்தனார்கள் ரொம்பவும் குழந்தைகளை கவனித்தார்கள். நான் வந்த பிறகு அவர்கள் இருவரும் ஊருக்குப் போய்விட்டார்கள். மைத்துனர் தஞ்சாவூரிலிருந்து புனா போனார். அவருக்கும் இரண்டு பெண். அவருக்கும் புனா போய் ஒரு பிள்ளை பிறந்து அம்மையில் இறந்துவிட்டதாம். பிறகு வெகு நாள் கழித்து என் ஓர்ப்படி77

குழந்தை உண்டாகி இருந்தது தெரியாமல் புனாவிலிருந்து நான் புறப்பட்டு உசிலம்பட்டி வருகிறேன் என்றும், என்னை மதுரை வந்து அழைத்துப் போங்கள் என்று அவள் என் புருஷனுக்கு லட்டர் போட்டாள். ஆனால், அவள் வருவதற்கு முன்பு தீபாவளி அன்று என் புருஷன் குழந்தைகளுக்கு துணிமணிகள் வாங்கி வந்தார். தீபாவளிக்கு நான் ஆத்தில் இல்லை. அதனால் குழந்தைகளுக்கு ஓட்டலில் வாங்கி வந்தார். (அன்றைக்கு). என் பெரிய பிள்ளை கள்ளர் ஹைஸ்கூலில் படிக்கிறான். அவன் தீபாவளி அன்று வாத்தியாரை புதுசு உடுத்திக்கொண்டு நமஸ்காரம் செய்யப்போகிறேன் என்று அதிகாலையில் வெளிச்சம் வருவதற்குள் போனான். அத்தக் கள்ளர் ஸ்கூல் தாண்டித்தான் போகவேண்டும். அதனால் தான் வாத்தியார் வீட்டுக்குப் போய் வரும்போது ஒரு வேப்பமரத்தைப்பிடித்து (கிளையை) இழுத்திருக்கிறான். வழுக்கிக் கீழே விழுந்துவிட்டான். அதில் கையில் நல்ல அடி. அவனோடு இரண்டொரு சிநெகிதன் போயிருக்கிறான். அவர்கள் கொண்டு விட்டார்கள். வாயில் அடிபட்டு ரத்தம் வந்து அவர்கள் நன்றாக வாயை அலம்பிவிட்டு வீட்டிற்கு கொண்டு வந்து விட்டார்கள். உடனே ஆஸ்பத்திரியில் காண்பித்து கையில் பார்த்தால் இரண்டு பிளாச்சு கையில் போட்டு கட்டி விட்டார்கள். ரொம்பவும் கஷ்டப்பட்டான். இரண்டு வாரம் ஆகி கட்டு அவிழ்த்து கைக்கு தூளி போட்டார்கள். ஆனால் அவன் ரொம்ப நாள் சாப்பிடமுடியாமல் கஷ்டப்பட்டான். நான் சாதம் ஸ்பூனில் கொடுப்பேன். இப்படியிருக்கும்போது புதுக்கோட்டை அத்தைக்கு ஸ்ரீகாரம் கொடுத்த அடுத்த வருஷம் அந்த அத்தை மூன்று நாள் ஜூரத்தில் இறந்து விட்டாள் என்றும் அதற்கு என் அப்பா தான் அந்த செலவுகள் செய்தார். ஆனால் அந்த சமயம் ரகுவுக்கு டபிள் நிமோனியா என்ற ஜுரம் வந்ததாம். உடனே எனக்கு லட்டர் வந்தது.

என்ன செய்வது. குழந்தைகளுக்கு சமையல் செய்து விட்டு பியூன் பெரியாண்டியிடம் சொல்லிக் குழந்தைகளை நான் வரும் வரையில் கவனிக்கும்படி செய்து விட்டு நான் போகலாம் என்று இருந்த சமயத்தில் புனாவிலிருந்து நான் வருகிறேன், நீங்கள் மதுரை வந்து அழைத்துப்போங்கள் என்று லட்டர் வந்தது. என்ன செய்வது என்று மதுரை வந்து காரைக்குடி பஸ்ஸில் என்னை ஏத்திவிட்டுட்டு புனாவிலிருந்து வருகிறவர்களை அழைத்துக்கொண்டு என் புருஷன் உசிலம்பட்டி போய்விட்டார். நான் நேராக காரைக்குடி போனேன். அங்கு யாரும் இல்லை. உடனே புதுக்கோட்டை போனேன். அம்மா தான் இருந்தாள். ரகுவிற்கு ரொம்ப ஜூரமாக இருந்ததால் என் அக்கா புருஷன் அத்தை காரியங்களை செய்தார். எனக்குக் கவலையாகப் போய்விட்டது. இதில் என்ன என்றால் என் அத்தைக்கு வேறு ஸ்ரீகாரத்தம்பி இருந்தான். அவனைத் தனக்குத் துணையாக ஆத்தில் ஒரு போர்ஷனில் குடியிருக்கச் சொன்னாள். ஆனால் அவன் கவனிக்கவில்லை. அத்தை இறந்த சமயத்தில் அவனுடைய அக்கா அத்தை பாத்திரம் எல்லாம் எடுத்துவிட்டாள். திருடு போய்விட்டது என்று எங்களிடம் சொல்லிவிட்டாள். ரகுவிற்கு நல்ல டாக்டர் வந்து பார்த்து நன்றாகத் தேவலை. அங்கு நான் ஒரு மாஸம் இருந்து என் புருஷனை வரும்படி லட்டர் போட்டு அவர் வந்து எல்லாம் நடந்தபிறகு ரகுவை என் அப்பா கொண்டு டிவிஷன் (tuition) வைத்து அடுத்த வருஷம் ஸ்கூலில் சேர்க்கலாம் எங்களுக்கு லட்டர் போட்டார்? நான் உசிலம்பட்டிக்கு வந்தால் என் மைத்துனர் ஆம்படையாள் இருக்கிறாள். வீடுகளை சரியாக கவனிக்காமல் குழந்தைகள் சட்டை எல்லாம் தோய்க்காமலும் இருந்ததது, ஏன் இப்படியிருக்கிறது என்று கேட்டால் எனக்கு ஜூரம் வந்து விட்டது என்று சொல்லி விட்டாள். ஆனால் அவள் குழந்தை உண்டாகி இருக்கே அதனால் மசக்கை வந்து ஜுரம் வந்திருக்கலாம் என்று சொன்னேன். ஆனால் அவள் பத்து நாளில் பூனா போய்விட்டாள். நானும் மற்ற குழந்தைகளுடன் இருந்தேன். அப்படியே அத்தை போய் ஒரு வருஷம் ஆகிவிட்டது. அந்த சமயத்தில் என் புருஷனுக்கு சப்ரிஜிஸ்ட்ரார் பெரோமோஷன் பேரில் திருநெல்வேலி மாத்தியிருந்தார்கள். என் புருஷன் என்ன செய்வது என்று கவலைப் பட்டார். நான் என் அப்பாவிற்கு லட்டர் போட்டேன். மாப்பிள்ளையை திருநெல்வேலி மாத்தல் ஆகியிருக்கிறது என்ன செய்வது என்று கவலைப்படுகிறார். குழந்தைகள் வேறு படிக்கவேண்டும். என்ன செய்வது என்று தெரியவில்லை என்று லட்டர் போட்டேன். அவர் லட்டர் பார்த்தவுடன் என் அப்பா, நீ குழந்தைகளை அழைத்துக் கொண்டு காரைக்குடி வந்து விடு. உன் புருஷன் திருநெல்வேலி போய் வேலை பார்க்கட்டும்? புதுக்கோட்டையில் பெரிய வீட்டில் குடியிருப்பவர்களை காலி செய்யும்படி சொல்லியிருக்கிறேன். அவர் காலி செய்தவுடன் குழந்தைகளை படிக்கவைத்துக்கொண்டும் வீட்டையும் நிலத்தையும் கவனிக்கலாம். முதலில் குழந்தைகள் படிப்பு தான் முக்கியம்78 ...

77. கணவனின் சகோதரனின் மனைவி.

78. இது தான், ஏழையோ, பணக்காரனோ, பிராமண குடும்பங்களின் தாரகமந்திரமாக இருந்தது. இந்த இலக்கை அடைவது, பல இன்னல்களுக்கு நடுவே, அவர்களுக்கு வேள்வியாக அமைந்தது.

(‘படிப்பு தான் முக்யம்’)

அம்மா சொல்படி ராஜூ: 15: நம்பினால் நம்புங்கள்

அம்மா சொல்படி ராஜூ: (‘நம்பினால் நம்புங்கள்’)) பகுதி 12: 31 10 2009

(ஸீ. ஈ. ஓ)

... உசிலம்பட்டியில் இருக்கும்போது தஞ்சாவூரிலிருந்து லட்டர் வந்தது. என்னவென்றால் என் நாத்தனார் எழுதி இருந்தார். என் மைத்துனர் வரதாச்சாரியார் தஞ்சாவூர் வீட்டை விற்கப்போவதாகவும்,71 பையன் இருவரையும் நான் வைத்துக் கொள்கிறேன் என்றும், நீ கொஞ்சநாள் ஆனதும் உன்னை வரும்படி எழுதுகிறேன் என்றும் லட்டர் என் புருஷனுக்கு வந்தது. 72 ஆனால் நாத்தனார் மூத்த பிள்ளைக்கு கல்யானம் ஆகிவிட்டது. வீடு வாங்கின பிறகு நீ வரலாம். நீ அது வரையில் உன் அண்ணா வீட்டில் இருக்கலாம் என்று வரதாச்சாரியார் எழுதிவிட்டார். பிறகு நாமு நாத்தனார் பிள்ளையை நாமு நாத்தனார் மைத்துனர் வீட்டில் கொண்டு விட்டார். பிறகு என் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு உசிலம்பட்டிக்கு நாத்தனார் வந்து ஒரு வருஷம் போல் இருந்தார். அப்போது என் பிள்ளை நான்காம் வகுப்பு படித்திருந்தான். அப்போது கல்கத்தா நாத்தனார் வந்திருந்தாள். ஆறாவது பிரஸவத்திற்கு அப்பா வீட்டிற்கு போகவேண்டாம் என்று இரண்டு நாத்தனார்களும் சொன்னார்கள். இது விஷயத்தை என் அப்பா வீட்டிற்கு தெரிவிக்கவில்லை. அந்த சமயம் இரண்டாவது யுத்தம் நடந்து கொண்டிருந்தது. எப்படியோ என் அம்மாவிற்கு தெரிந்து விட்டது. உடனே என் அம்மா வந்து அழைத்துப் போனாள். நான் என் ஐந்தாவது பையனை அழைத்துக்கொண்டு மற்ற குழந்தைகளை இரண்டு நாத்தனாரிடம் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு நான் காரைக்குடி போனேன். போய் பத்து நாள் ஆனதும் பெண் பிறந்தது. ஆறாவது பெண் பிறக்ககூடாது என்று சொல்லுவார்கள். ஆறாப்போகும் நீராய்ப் போனால் போகும் சொன்னார்கள். அதே போல் அந்த பெண் பிறந்து 13 நாளுக்குள் புதுக்கோட்டையிலிருந்து அத்தை வந்து என் அப்பாவிடம் கட்டாயம் உன் பேரனைத்தான் ஸ்ரீகாரம் எடுத்துக் கொள்ளப் போகிறேன் (என்று) சொல்லிவிட்டாள். உடனே என் அப்பா நாள் பார்த்து என்னுடைய மாமாவைப் போய் உசிலம்பட்டியிலிருந்து ரகுவை73 அழைத்து வரும்படி சொல்லி அவர் அழைத்து வந்து விட்டார். ஆனால் நாங்கள் யுத்த சமயத்தில் கிராமத்தில் தான் இருந்தாலும் சாப்பாடு அரிசியே கிடைக்காது. இந்த சமயத்தில் என் புருஷனுக்கும் லட்டர் போட்டு குழந்தை ரகுவை ஸ்ரீகாரம் கொடுக்க நல்லநாள் பார்த்து ஏற்பாடு செய்திருக்கிறேன். அவன் ஜாதகரீதியாக வேறு குடும்பத்தில் போவது நல்லது74 என்று ஜாதகத்தை சரியாகப் பார்த்து செய்கிறோம். நீங்கள் தான் இருந்து கொடுக்கவேண்டும். ருக்மணிக்குக் குழந்தை பிறந்து நாளாகததனால், நீங்கள் இருந்து கொடுப்பது நல்லது. உடனே புறப்பட்டு வரவும். மற்றவை நேரில் பேசிக்கொள்ளலாம் என்று லட்டர் போட்டு அவர் வந்து விட்டார். புதுக்கோட்டைக்குப் போய் குழந்தை பிறந்து கொடுப்பது போல் கொடுக்கும்போது என் அப்பா, அம்மா இவர்களுடன் இருந்து என் புருஷன் ஸ்ரீகாரம் அத்தைக்கு கொடுத்தும் பெயரும் திருமலாச்சாரி என்று நாமகரணம் வைத்தார்கள். எனக்கு விரை தானம் கொண்டு வந்து கொடுத்தார்கள். இது மாதிரி என் அப்பா இரண்டு பெண்கள் குடும்பத்தைப் பொறுப்பாகச் செய்வதால் சிலருக்கு என் அப்பா பேரில் கோபம். தவிற புதுக்கோட்டை அத்தைக்கு ஒரு நாத்தனார் இருந்தாள். அவள் தன் பேரனை ஸ்ரீகாரம் எடுத்துக்கும்படி தொந்தரவு செய்தாள். அத்தை மறுத்து விட்டு என் பிள்ளையை எடுத்துக்கொண்டதில் (என் அப்பா) கோபமாக என் அப்பாவை அடிக்கக் கூட வந்தார்கள். எல்லாவற்றையும் என் அப்பா பொறுத்துக்கொண்டார். அப்போதும் என் தம்பி ஆத்தில் தான் இருந்தான். அப்போது மூன்றாவது ஒரு பெண் பிறந்தது. ஆனால் ஸ்ரீகாரம் கொடுக்கும்போது என் பிள்ளை மூன்றாவது பிள்ளை. அவனுக்கு பத்து வயது. அவனை புதுக்கோட்டை அத்தை தானே வைத்துக் கொண்டு தம்புடு சார் ஸ்கூல்75 என்று ஒன்று இருந்தது. அதில் அவனை சேர்த்து விட்டாள். அவன் நான்காவது படித்தான். இப்படியிருக்கும்போது என் மாமனாருக்கு உங்க பேரனை ஸ்ரீகாரம் கொடுப்பதாக ஏற்பாடு செய்திருக்கிரது. நீங்கள் வந்து நடத்தி குழந்தையை ஆசீர்வாதம் செய்யும்படி என் அப்பா போட்டதற்கு அவர் வரவில்லை. அவருக்கு கோபம்? அதனால் ஸ்ரீகாரம் கொடுப்பதற்கு முன்னாடி என் மாமனார் என் புருஷனுக்கு லட்டர் என்னவென்றால் என் மாமியாருடைய அம்மா இருந்தாள். அவளுக்கு பிள்ளைகள் இருந்தும் அந்த பாட்டி இறக்கும் தறுவாயில் பிள்ளைகள் இல்லை. அதனால் அவருக்கு கருமம் செய்வதென்றால் மூத்தப்பெண்ணுடைய பிள்ளை தான் செய்யவேண்டும். அது விஷயத்திற்கு ஆண்டாளிடமிருந்து லட்டர் வரும். ஆனால் நீ அதைப்போய் செய்யவேண்டாம்? ஏனென்றால் சின்னிக்கும் ஆண்டாளுக்கும்76 தகராறு நடக்கிறது. அதனால் நீ அந்த கருமத்தை செய்யவேண்டாம் என்று எழுதிவிட்டார் என் மாமனார். ஆனால், தன் பேரனை ஸ்ரீகாரம் கொடுப்பதர்கு வரவில்லை. அதற்காக என் புருஷன் கவலைப்படவில்லை. .

71. போன வருடம் அந்த வீட்டை பார்க்கபோனேன். இப்போதைய இஸ்லாமிய வீட்டுக்காரர், வரதாச்சாரியார் அவர்களிடம் தான் கிரயம் செய்து வீட்டை வாங்கியதாக சொன்னார். என்னை வெகுவாக உபசரித்தார்.

72. அத்தைக்கு வந்த கடிதத்தின் நகல் என்று நினைக்கிறேன்.

73. என் தம்பி.; இப்போது அவன் இல்லை.

74. ‘நம்பினால் நம்புங்கள்’: கிரகங்களை ஏமாற்றுவது கடினமோ? முதல் ஐந்து குழந்தைகள் போய்விடுமோ என்று எங்கள் குடும்பம் தவித்த சோகக்கதையை சொல்லி மாளாது. அப்பா நிலைகுலைந்து போனார். அம்மா ஸ்த்திப்ரதிங்க்ஞையாக இருந்தாள், வாசகர்கள் விரும்பினால், விவரம் வரும். ஒளித்து மறைக்க ஒன்றுமில்லை. நீண்ட கதை.

75. மூன்று தலைமுறைக்கு ஆசிரியர் என்றால், குலபதி என்ற பட்டம். இவரும், புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர் அவர்களும் நடத்திய நரஸிம்ஹ ஜயந்தி உலப் பிரிசித்தம். பாலையா ஸார் மற்றொரு குலபதி.. இவர்களின் மாணவர்கள் உலகம் எங்கும் உள்ளனர்.

76. என் பாட்டியின் சஹோதரிகள்.

(‘நம்பினால் நம்புங்கள்’)

அம்மா சொல்படி ராஜூ: 14: ஸீ.ஈ.ஓ

அம்மா சொல்படி ராஜூ: (ஸீ. ஈ. ஓ) பகுதி 12: 30 10 2009

(அந்த நாளும் வந்திடாதோ!)

... நாதன் கம்பெனியும் நடந்து கொண்டிருந்தது. இதிலும் இன்கம்டாக்ஸ் ஆஃபீஸ் வேலையை என் அப்பா விடவில்லை. குமாஸ்தா ஆராவமுது இருந்து கொண்டிருந்தார். (அடித்தல் திருத்தல்) என்னை ஊருக்கு கொண்டு விடுவதென்றால், அவர் தான் கொண்டு விடுவார். இதோடு நிற்கவில்லை. என் அப்பா ரோடு கண்டார்க்ட் எடுத்தார். தவிற நம் ஆசாரியர் ஒரு முக்கூர் ஆண்டவன் என்கிறவரை என் அப்பா அவரை அரியக்குடியில் ஒரு வருஷத்திற்கு மேலாக வைத்து காலக்ஷேபங்கள் நடத்தினார். நான் ஐந்தாவது பிரஸவத்திற்கு வந்த சமயத்தில் என் பெரிய நாத்த்னார் பெண்ணுக்கு கல்யாணம். அதற்கு நிறை மாஸத்தோடு போய்விட்டு வந்து ஒரு வாரத்தில் எனக்குப் பிள்ளை பிறந்தது. ஆனால் பிள்ளைகள் மூன்று, பெண்கள் அப்போது இரண்டு தான் ? பிரஸவம் ஆகி, மூன்று மாஸம் ஆனதும் நான் உசிலம்பட்டி போய்விட்டேன். இப்படி இருக்கும்போது என் புருஷனை மதுரைக்கு மாத்தலாகி இருந்தது. அவர் மதுரையில் இருந்தார். நான் மாத்திரம் குழந்தைகளை வைத்துக்கொண்டு தனியாக இருந்தேன். அப்போது என் பெரிய பையனை வரும்படி என் புருஷன் தஞ்சாவூருக்கு லட்டர் போட்டு வந்து விட்டான். அவரும் இல்லாத சமயத்தில் என் ஐந்தாவது பையனுக்கு வயது ஐந்து இருக்கும். அப்போது குழந்தைகளுக்கு ஏதாவது தின்பதற்கு வேணும் என்று தட்டை என்ற பக்ஷணம் செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் என் புருஷனுடைய ஆஃபீஸ்காரர் விஸ்வநாத பிள்ளை என்கிறவரும் சுப்பையா என்கிறவரும் வாசலில் வந்து உட்கார்ந்து கொள்வார்கள். என் ஐந்தாவது பையன் அவர்களுக்கு தாகத்திற்கு தண்ணீர் கொடுப்பான். ஆனால் அவன் ரொம்பவும் விஷமம் ஜாஸ்தி. பாத்திரம் எல்லாம் கிணற்றில் போட்டு விடுவான். அவ்வளவு விஷமம். நான் பக்ஷணம் செய்யும்போது அடுப்பில் எண்ணையில் போட்டு எடுக்கும்போது என் கையில் இருக்கும் துடுப்பைத் தட்டிவிட்டான். அந்த எண்ணைய் அப்படியே அவன் உடம்பில் ஒரு பாகத்தில் கொட்டிவிட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால், அந்த சமயம் அந்த ஆஃபீஸர் இருவரும் வாசலில் இருந்தார்கள். அவர்களுக்கும் பக்ஷணம் அவனே கொண்டு கொடுத்து வந்தான். என் தோளைப் பிடித்தான். அப்போது அவன் உடம்பில் எண்ணைய் கொட்டிவிட்டது. ஆனால் என் புருஷனுக்குத் தெரியாது. மதுரைப்பக்கம் கள்ளர் ரெக்ளமேஷனில் கோவப்ரேட்டிவ் இன்ஸ்பெக்டர் ஆக இருந்தார். அதனால் போலீஸ் கான்ஸ்டேபிள் ஹேட் உள்பட எனக்குத் துணை வைத்து விட்டுத் தான் என் புருஷன் மதுரை போனார். ஆனால், அவருக்கு குழந்தை பையனுக்கு எண்ணைய் கொட்டினது தெரியாது. அவருடைய ஆஃபீஸர் யாரோ சொல்லிவிட்டார். அவர் பையனை நான் பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லி வரவில்லை.65 ஆனால் அந்த ஆஃபீஸர்களும், ப்யூன் பெரியாண்டியும்66 சேர்ந்து ஆஸ்பத்திரிக்குப் போய் உடம்பில் கட்டுப் போட்டுக்கொண்டு வந்து விட்டார்கள். எனக்கு பயமாக இருந்தது. என்ன செய்வது. ஆனால் அன்று ராத்திரி பூராவும் பியூன் பெரியாண்டியும், மற்ற கிராமத்து கள்ளர்களும் விசிறிக்கொண்டும் இருந்தார்கள். 67 மறு நாள் காலையில் என் புருஷன் வந்து விட்டார். அவருக்கும் என்ன செய்வது என்று கவலையாக இருந்தது. மாத்தலாகி இருக்கிறதே என்று சாமான்கள் எல்லாம் பாக் செய்து இருந்தேன். ஆனால் என் புருஷன் கணக்குகள் பார்ப்பதற்கு என்று ஒரு தெலுங்கு அய்யர் இருந்தார். அவர்கள் வீட்டில் (இருந்து) தான் எங்களுக்கு சாப்பாடு வரும். பிறகு நான் என் புருஷனிடம் சொன்னேன். கவலைப் படவேண்டாம். என் அப்பாவிற்கு தந்தி கொடுங்கள். யாராவது வந்து என்னை அழைத்துப் போவார்கள். அதன்படி செய்யுங்கள் என்று சொன்னதின் பேரில் தந்தி கொடுத்துவிட்டார். ஆனால் என் அப்பா வீட்டில் என்ன ஆச்சரியம் என்றால் என் அக்கா தனியாகத்தான் இருந்தாள். அவளுக்கு ஐந்து பெண்களுக்கு பிறகு அபூர்வமாக பிள்ளை பிறந்து இருக்கிறது. புண்யாவசனம்68 செய்கிறார்கள். அதற்கு மாப்பிள்ளைக்கு வேஷ்டி வாங்கிக்கொண்டு அங்கு போயிருக்கிறார்கள். அந்த சமயத்தில் நாங்கள் கொடுத்த தந்தி போயிருக்கிறது. அப்போது அப்பா வீட்டில் இருந்திருக்கிறார். அவர் உடனே என் அம்மாவையும், ஆராவமுது என்கிற குமாஸ்தாவையும் அனுப்பி வைத்தார். என் தம்பிக்கு இரண்டாவது குழந்தை எட்டு மாஸத்தில் பிறந்து போயிற்று. என் அம்மாவுடன் நான் குழந்தையையும், மற்ற குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு காரைக்குடி வந்தேன். வந்தால் ஆத்தில் ஒருவரும் இல்லை. நான் இந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு அக்கா வீட்டிற்குப் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். இது அக்காவிற்குத் தெரிந்து (தால்) பரவாயில்லை. அவனை அழைத்து வாருங்கள் என்று சொன்னதின் பேரில் அக்கா வீட்டிற்குப் போனேன். நான் மாடியில் வைத்துக்கொண்டேன். மறுநாள் காலை என் அப்பா வீட்டிற்கு வந்தேன். உடனே என் அப்பா டாக்டரை ஆத்திற்கு வரும்படி செய்து வீட்டிலேயே அவனுக்கு ட்ரீட்மெண்ட் நடந்தது. ஆனால், கைவிரல் எல்லாம் ஒன்றாகப்போய்விட்டது. பிறகு டாக்டர் கைவிரல்களை கட் பண்ணி நன்றாக ஆகிவிட்டது. ஆனால் எண்ணைய் கொட்டின தழும்பு மாறவில்லை. என்ன செய்வது என்று டாக்டரை கேட்டோம். அவர் சமுத்திரத்தில் இருக்கு சோழியை எலுமிச்சம்பழச்சாற்றில் தேய்த்துத் தடவச்சொன்னார். 69 அதே போல் தடவி வந்தேன். மதுரையில் வீடு பார்த்து உன்னையும், குழந்தைகளையும் அழைத்துப் போகிறேன் (என்று) என் புருஷன் எனக்கும் என் அப்பாவிற்கும் லட்டர் போட்டார். ஆனால், மதுரை டவுனில் வீடு கிடைக்கவில்லை. டவுனைத் தள்ளி ஷெனாய் நகர் ஒரு காலனியில் தனி வீடு பார்த்து விட்டது. உங்கள் பெண்ணையும், குழந்தைகளையும் அனுப்பி வைக்கவும். பெரிய பையனை தஞ்சாவூர் யார் போகிறார்களோ அவர்களோடு என் தங்கை வீட்டில் கொண்டுவிடச் சொல்லவும் என்று என் புருஷன் லட்ட்ர் போட்டு விட்டார். பிறகு அப்பா என் செய்வார். ஆராவமுதுவோட என் அம்மாவையும் என்னோடு மதுரைக்கு அனுப்பி வைத்தார். அங்கு கொஞ்சநாள் இருந்துவிட்டு, மறுபடியும் செக்காணூரணிக்கு என் புருஷனை மாத்திவிட்டார்கள். அதனால் நாங்கள் அங்கு கொஞ்சநாள் இருந்தோம். 6 மாசம் ஆனதும், என் புருஷனை உசிலம்பட்டிக்கு மாத்திவிட்டார்கள். அங்கு இருந்தோம். அப்போது என் ஐந்தாவது பிள்ளைக்கு ஐந்து வயது இருக்கும். அப்போது ஆறாவது உண்டாயிருந்தேன். அப்போது என் அக்காவிடைய புருஷன் சைக்கிள் கடை நஷ்டமாகி விட்டது. அதனால், அவருடைய சொத்திற்குக் கட்டவேண்டிய கடனை கட்டிவிட்டு அவருக்கு செளகரியம் செய்தார் (என் அப்பா). சைக்கிள் கடையை வித்து விட்டார். ஆனால் என்ன செய்தார் என்றால், மாப்பிள்ளையுடைய நிலத்தில் வரும் அரிசியை தான் வாங்கிக் கொண்டு அதற்குள்ள பணத்தையும் மற்ற அரிசியை வித்து பணமாக ப்யாங்கில் போட்டார். அக்காவிற்கு சாப்பாட்டிற்கு அரிசி கொடுப்பார். இப்படியெல்லாம் பெண்களுக்கு உதவி செய்வார்… 70

65. !

66. உசிலம்பட்டிலே பெரியாண்டி, செக்காணூரணீயிலே மாயாண்டி. பேருக்குத்தான் ப்யூன். இருவருமே ‘எங்கிருந்தோ வந்தானின்’ இனம். எங்கள் குடும்பம் இவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. இருபது வருடங்களுக்கு பிறகு மதுரைக்கு போன சமயம், இவர்களையும், என் மெய்க்காப்பாளர் ரவணப்பனையும் (ஹெட் கான்ஸ்டபிள்: வேங்கையை சுட்டவர்: என்னை காங்கிரஸ் மீட்டிங்க் போகவிடாமல் தடுப்பது அவர் கடன்.) ஹெட்மாஸ்டர் யாகூப்கான் அவர்களையும், மரியாதை நிமித்தம் பார்த்துவிட்டு வந்தேன். மேலதிகாரிகள் என்னை பவ்யமாக விளித்ததும், மாயாண்டியும், பெரியாண்டியும் உரிமையுடன் ஒருமையில் விளித்ததும், படா தமாஷ்.

67. பிரமலைக்கள்ளர்களின் உயர்பண்புகளுக்கு இணையில்லை, மனித நாகரீகத்தில்.

68. குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா.

69. கீதா, கமலம், சுகுமார்ன் நோக்குக.

70. தாத்தா ஒரு ஸீ.ஈ.ஓ.

(ஸீ. ஈ. ஓ)

அம்மா சொல்படி ராஜூ: 13. அந்த நாளும் வந்திடாதோ?

அம்மா சொல்படி ராஜூ: (அந்த நாளும் வந்திடாதோ!)

பகுதி 12: 29 10 2009

(இடி விழுந்தது)

... அப்போது என் முதற்பிள்ளைக்கு 4 வயது இருக்கும். 55,56 பிறகு ஒரு பெண் எனக்கு 57, அந்த பெண்ணை என் அம்மாவிடம் விட்டு இருந்தேன். நாங்கள் போய் என்ன செய்வது. ஆனால் நாத்தனாருக்கு நிறைய நகை 58 போட்டிருந்தார் அவர் புருஷன். என் நாத்தனார் சொன்னாள். உனக்குப் பெண் இருப்பதால் நீயே எடுத்துக்கொள் என்று சொன்னாள். ஆனால் என் புருஷன் வரதாச்சாரியாரை கேட்காமல் நான் வாங்கிகொள்வது தப்பு என்றும் சொல்லிவிட்டார். ரொம்ப நல்லதாகப்போச்சு. 59 இப்படியிருக்கும் போது நான் நாலாவது பிரஸவத்திற்கு போனேன், என் அப்பா வீட்டிற்கு. அப்போது எனக்குப் பெண் பிறந்தது. 60 அதே மாஸத்தில் என் அப்பாவிற்கு (அடித்தல், திருத்தல்)... அப்போது செட்டியார் வீட்டு வேலை விட்டு விட்டார். நாதன் கம்பெனி என்று பிஸினஸ் நடத்தினார். அந்த சமயத்தில் தான் 60வது கல்யாணம் நடந்தது. ரொம்ப நன்றாக நடந்தது. அரியக்குடியிலிருந்து யானை மேல் பூர்ணகும்பத்துடன் புடவை வேஷ்டி எல்லாம் என் அப்பாவிற்கு வந்தது. 61 அதிலிருந்து எனக்கு ஆறாவது குழந்தை பிறக்கும் வரையில் செழிப்பாக இருந்தது. என் தம்பி சரியாக படிக்கிறதில்லை. இருந்தாலும், அவனுக்கும் கல்யாணமாகி இரண்டு குழந்தை பிறந்து இறந்தது.

பிறந்து இறந்துவிட்டது. அப்பா தான் என்ன செய்வார்? இப்படியிருக்கும்போது, என் அப்பா மாஸம் ஒரு தரம் ஸ்ரீரங்கம் வருவார். அப்போது வீட்டில் கார் இருந்தது. டைரவர் நாரயணன் என்று இருந்தான். அவன் தான் ஒரு தரம் ஸ்ரீரங்கம் அழைத்துப் போனான். அப்போது பெருமாள் சேவித்து விட்டு திரும்பும்போது ஒண்ணுக்குப் போகலாம் என்று காரை நிறுத்தச்சொல்லி, இறங்கி அங்கு ஒரு இடத்தில் ஒண்ணுக்கு போய்விட்டு எழுந்தார். அப்போது காலில் முள்ளு தைத்துவிட்டது என்று ஊருக்கு வந்துவிட்டார், ஒரு வாரம் ஆனதும் காலில் பெரியதாக வீங்கிவிட்டது. வலி தாங்காமல் டாக்டர் நாராயனசாமி என்கிறவர் எங்கள் குடும்ப டாக்டர். அவர் வந்து பார்த்து ஆபரேஷன் செய்தாராம். அது நன்றாகத் தேவலை. ஆனால், ஏதோ ஒரு உடம்பு வந்து ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டாராம். 62 அப்போது எல்லாம் நான் என் புருஷனுடன் உசிலம்பட்டி என்ற ஊர் மதுரை அருகில் இருக்கிறது. அங்கு தான் இருந்தேன். என் அப்பா உடம்பு விஷயம் பற்றி எனக்கு லட்டர் வரும். நான் வருகிறேன் என்றால் வரவேண்டாம் என்று போடுவார்கள். இப்படியிருக்கும்போது தான் நான் ஐந்தாவது உண்டாகியிருக்கிறேன். என்ன செய்வது? ஆனால் முதல் குழந்தை பிறக்கும்போது எனக்கு 17 வயது? இரண்டு வயது வித்யாஸமாக எனக்கு குழந்தை பிறக்கும். என் மாமியாரும் இல்லாததினால் என் அப்பாவே கவனிக்க முடிய ஆயிற்று. என் மாமனார் மாத்திரம் இன்னம்பூரில் இருக்கிறார். இப்படியிருக்கும் போது தஞ்சாவூரில் இருந்த நாத்தனார் லட்டர் போட்டார். என்ன என்றால், என் மைத்துனர் இரண்டு பையன்களையும் தான் படிக்க வைத்துக்கொள்வதாகவும், உன் பிள்ளை பெரியவனை என்னிடம் விட்டால் என் பிள்ளை இருவருடன் நன்றாகப் படிக்கலாம். தவிர, கல்கத்தாவிலிருந்து நாமு என் பிள்ளையை நீ வைத்துக்கொண்டு படிக்க வை; நான் பணம் அனுப்புகிறேன் என்று லட்டர் போட்டிருக்கிறாள். நீ என்ன சொல்கிறாய் என்று அந்த நாத்தனார் லட்டர் போட்டாள். அதற்கு பதில் போட்டுவிட்டார். பிள்ளையை அனுப்பி வைக்கிறேன் என்று. எனக்கு மூன்றாவது பிள்ளை பிறக்கும்போது தான் என் மைத்துனருக்குக் கல்யாணம். அவர் கல்யாணத்தை தஞ்சாவூர் மாப்பிள்ளை செய்து வைத்தார். அவர் திடீரென்று இறந்து விட்டதால், நாத்தனார் தனியாக இருக்க வேண்டாம் என்றும், என் புருஷன் தன் பிள்ளையை தஞ்சாவூருக்கு அனுப்பிவைத்தார். அதே போல் நாமு என்கிற நாத்தனாரும் அவள் பிள்ளையை அனுப்பிவைத்தாள். இவர்களையும், தம்பியையும் வைத்துக்கொண்டு63 நாத்தனார் கொஞ்ச நாள் தஞ்சாவூரிலேயே இருந்தாள். பிறகு, நான் மூன்றாவது குழந்தை பிறந்து 3 மாஸத்தில் உசிலம்பட்டி போய்விட்டேன். அப்போது எல்லாம், என் அப்பா நன்றாக இருந்தார். நல்ல பணம் சம்பாத்தியம் உண்டு. இப்படி காலம் போய்க்கொண்டிருந்தது. இப்படியிருக்கும் போது நான் ஐந்தாவது உண்டாகியிருந்தேன். அப்போது என் அப்பாவிற்கு ஏதோ கொஞ்சம் தேவலை. என்னைக் கவலைப்படவேண்டாம். ஆராவமுதுவை அனுப்பிவைக்கிறேன். அவனோடு ருக்மணியை அனுப்பி வையுங்கள் என்று என் அப்பா லட்டர் போட்டார். அதே போல் நான் ஒன்பதாவது மாஸம் என்னிடம் இருக்கும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிரஸவத்திற்கு காரைக்குடி வந்தேன். அந்த சமயத்தில் என் அப்பா நடத்துகிற அரியக்குடி உத்ஸவ வேத பாராயணமும் நடந்து கொண்டிருந்தது. 64 அதோடு நம்ம ஆசாரியன் ஆக்கூர் ஆண்டவனை ஒரு வருஷம் வைத்து ஆராதனை நடத்தினார்...

(அந்த நாளும் வந்திடாதோ!)

55. அன்று:

தஞ்சாவூர் ஸ்டேஷனில் இஞ்சின் தண்ணி குடித்ததை வியப்புடன் பார்த்ததும், படியேறி ஜட்கா வண்டி பிடித்ததும், வீடு பூரா நான் அத்திம்பேரின் சடலத்தைத் தேடியதும் நினைவில் இருக்கிறது. அன்று மதியம் மச்சிலிருந்து பெரும்கூச்சல் கேட்டு ஊரெல்லாம் ஓடி வந்தது. (என்னடா என்று தும்பி - அவரின் இரண்டாவது மகன் - கேட்டான். மச்சிலே போட்டிருக்குன்னு சொன்னான். ஏறி தேடியிருக்கிறேன். இறங்கத்தெரியவில்லை. சடலம் எழுந்தா வம்புன்னு கூச்சல். செக்காணூரணிப்பாட்டி மோர் காச்சி கொடுத்து, கட்டி கொண்டாள். (அவள் என் அம்மாவுக்குப் பாட்டி. எனக்கு காவல் தெய்வம். காரைக்குடி முத்தூரணீக்கரை திண்ணைப்பள்ளிக்கூடத்தில் வித்யாப்யாஸம். ... வாத்தியார் [பேர் வேண்டாம் - பாஸ்வெர்ட்] அடிச்சார். பாட்டிட்டே சொன்னாள். அவரை வைதாள், “... கட்டேலே போக! குழந்தை மேல கை வச்சே, கண்டங்கண்டமா வெட்டி குளத்தலே போட்ருவேன்.” அப்பறம் ஐயா தான் ஹீரோ!).

56. இன்று:

அக்கால வரதக்ஷிணைக்கொடுமைக்கு பலியானார், என் அத்தை என்ற வ்யாகூலம். ஆயுசுக்கு கண்ட கண்ட இடங்களில் பிள்ளைப்பேறுக்கு உதவி, என் பெண் பிறந்தபோது கூட. அவள் பெண் தெய்வம். சுயகல்விக்கு அவருக்கு ஈடு கிடையாது. எப்படியோ இருக்கவேண்டியவள் எங்கள் நல்ல குடும்பத்திலேயே, இன்னல்களுக்கு இரையானார் என்று வருந்துகிறேன். ஆறுதல்: அவருக்கு பக்கபலம் வஸந்தா, என் மனைவி.

57. அவள் ஜெம்பகம், என் உயிர்த்தோழி. இப்போது இல்லை.

58. அதன் மேல் எத்தனை பேருக்கு கண்!

59. ஆண்கள் முடிவு எடுப்பார்கள். பெண்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்வார்கள்.

60. கமலா. அவள் வீட்டில் தான் வாழ்கிறேன். இன்று சில நண்பர்களைத்தவிர, என்னை ‘டா’ போட்டு அழைக்கும் உரிமை, அவளுக்கு.

61. எனக்கு நினைவு இருக்கிறது. அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் கச்சேரி. ரொம்ப நாளுக்கு பிறகு தான் தெரியும், அவரும், நாடகச்சக்கரவர்த்தி நவாப் ராஜமாணிக்கம் அவர்களும் தாத்தாவுக்கு நண்பர்கள் என்று.

62. செய்வினையோ என்று பேசிக்கொண்டார்கள் என்று நினைவு.

63. இதில் ஒரு நுட்பம். அத்தைக்கு வருமானம் இருக்க ஒரு உத்தி, இது.

64. உத்ஸவம்னா, பசங்களுக்கு கொண்டாட்டம். மேற்பார்வை கிடையாது. விடியல் காலத்திலே, தேசாந்திரி மாதிரி, கோயில்லே தோசை; குளத்திலேயே வாசம்; தாத்தா உபயதாரர் என்பதால், வெள்ளித்தடி ஒன்று தாங்கி வருவார், பெருமாள் ஊர்கோலம் வரச்ச. அதை பிடுங்கிண்டு, நானும், என் தம்பியும், பேண்ட்மாஸ்டர் மாதிரி, சுழுற்றிண்டு வருவோம். அப்பப்போ தேவதாசிகள் மேலே ஒரு கண்ணு. புரியாது; ஆனா புரியும். வேத பாராயாணகோஷ்டியோட நடந்து தாகசாந்தி. உடனே ஓடிப்போய், பின்னாலே வரும் திவ்யபிரபந்தகோஷ்டியோட தாகசாந்தி.. அந்த நாளும் வந்திடாதோ!

அம்மா சொல்படி ராஜூ: 12. இடி விழுந்தது.

`அம்மா சொல்படி ராஜூ: (இடி விழுந்தது) பகுதி 11: 27 10 2009

(வந்தனன்! வந்தனன்!)

குழந்தை பிறந்து மூன்றாம் மாஸம் என்னை சீர் செய்து திருமங்கலம் கொண்டு வந்து விட்டாள். அம்மாவும் உடனே ஊருக்குப் போய் விட்டாள். (அடித்தல், திருத்தல்) என் மைத்துனரும் திருமங்கலம் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தார். இன்னம்பூரில் என் மாமனார் மட்டும் தானே சமையல் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் கூப்பிட்டும் வரமாட்டார். எங்களுக்குக் கஷ்டமாக இருக்கும். மாமியார் இறந்து கொஞ்சநாள் ஆனதும், கல்கத்தா நாத்தனார் கல்கத்தா போய்விட்டாள். என் கல்யாணத்தின் போது என் மைத்துனருக்கும் பூனூல் போட்டார்கள். என் புருஷன் வீட்டில் எனக்கு யாரும் இல்லாததால் என்னுடைய குடும்பத்தை என் அப்பாவே கவனிக்க முடிய ஆயிற்று. ஆனால், என் அக்காவுக்கும் என் அப்பா தான் கவனிக்க முடிய ஆயிற்று. (அடித்தல், திருத்தல்). என் அக்காவுக்கு இரண்டு பிறந்து மூன்றாவது பிரஸவத்திற்கு என் அப்பா வீட்டிற்கு வந்திருந்தாள். அந்த சமயத்தில் தான் எனக்குப் பிள்ளை பிறந்த்தது? அக்காவிற்கு பெண் பிறந்ததது. ஒரே வீட்டில் இரண்டு பிரஸவம் நடந்ததது. எனக்குப் பத்து வயதுக்கு பிறகு என் அப்பாவிற்கு நல்ல பணம் சம்பாத்தித்து நன்றாக இருந்தோம்.

இரண்டு வருஷத்துக்கு ஒரு தரம் பிரஸவத்திற்கு அப்பா வீட்டிற்கு போய்விடுவேன். இப்படியிருக்கும் போது அக்காவும் என்னைப் போல் பிரஸவத்துக்கு வருவாள். அவளுக்கு பெண் பிறக்கும். எனக்கு பெண்ணும், பிள்ளையுமாக கலந்து பிறக்கும். ஆனால் அக்காவிற்கு நாலு பெண் பிறந்து விட்டது. அக்கா கவலைப்பட்டு பிறகு பிரஸவத்திற்கு வருவதில்லை. இருந்தும் பிறகும் ஒரு பெண் ஆக ஐந்து பெண் பிறந்தது. அதனால் அவள் பிரஸவத்திற்கு அப்பா வீட்டிற்கு வருவதில்லை. நான் தான் போய் வருவேன். நான் பிரஸவத்திற்கு வந்து அப்பா வீட்டில் இருப்பேன். நான் பிரஸவமாகி ஊருக்கு போகும் வரை என் புருஷன் ஓட்டலில் தான் சாப்பிடுவார். ஆனால் என் அப்பா இன்கம்டாக்ஸ் கணக்கு வேறு பார்த்துக்கொண்டிருந்தார். தனியாக ஆபீஸ் வைத்துக் கொண்டார். இருந்தாலும் பழய செட்டிமார் வீட்டு வேலையை விடவில்லை. தனக்கு குமாஸ்தாவாக அய்யங்கார் பையன் ஆராவமுது 54 என்று அவனை வைத்துக்கொண்டார். திடீரென்று தஞ்சாவுரிலிருந்து என் நாத்தனார் புருஷன் இறந்துவிட்டார் என்று தந்தி வந்தது. ஆனால் முன்னடியே பேப்பரில் அவர் போன செய்தி தெரிந்தது.

என் புருஷன் படித்துவிட்டு ரொம்பவும் வருத்தப்பட்டார். மறு நாள் லட்டர் வந்தது. ஆனால், இந்த கஷ்டத்தைப் பார்க்க என் மாமியார் இல்லை. இன்னம்பூரிலிருந்து என் மாமனார் வந்துவிட்டார். நாங்கள் பிறகு தான் போனோம். நாத்தனாரைப் பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது.

54. ஜப்பானீஸ் லாயல்டி . தாத்தா காலம் வரை, அவர் நீடித்து அந்த ஊழியத்தில் இருந்தார். தாத்தாவை விட, பாட்டியிடம் தான் அவருக்கு பயம். வபையாப் பிடித்து விடுவாள்.

(இடி விழுந்தது)

அம்மா சொல்படி ராஜூ: 11. வந்தனன்! வந்தனன்!

`அம்மா சொல்படி ராஜூ: (வந்தனன்! வந்தனன்!) பகுதி 11: 27 10 2009

(சுழன்ற காலச்சக்கரம்... )

... உடனே என் அப்பா என்ன செய்வார். உள்ளூரில் என் சின்ன அத்தை இருந்தாள். அவள் புருஷனைக் கூப்பிட்டு என்னை மெட்றாஸ் கொண்டுவிடும்படி சொன்னார். அதன்படி அவர் மெட்றாஸ் என்னை கொண்டு விட்டுட்டு அவர் ஊருக்குப் போய்விட்டார். ஆனால் என் புருஷன் முன்னாடியே போய் காரியங்கள் நடந்ததது. கல்கத்தாவிலிருந்து நாமு வரவில்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு ரூமில் உட்கார்ந்து கொண்டிருப்பேன். 3 நாள் கழித்து கல்கத்தா நாத்தனார் வந்து விட்டாள். தஞ்சாவூரிலிருந்து கடைசி நாத்தனார் பத்து நாள் முன்னாடியே வந்திருக்கிறாள். நான் தான் மாமியாரை பார்க்கமுடியவில்லை. அதுவும் மெட்றாஸ்ஸில் பெரம்பூரில் என் மாமியாருடைய தங்கை இருந்தாள். அவள் வீட்டில் தான் என் மாமியார் இறந்ததது. மற்ற காரியங்கள் நடந்ததது.. அதற்கு எனக்குச் சீர் செய்யவேண்டுமாம். அதற்கு என் மாமியாருடைய அம்மா எனக்கும் பாட்டி. அவர் என்னிடம் என்ன சொன்னார் என்றால் உனக்கு சீர் செய்யவேண்டும். அதற்குப் பதிலாக பணமாக அனுப்பும்படி உன் அப்பாவிற்கு எழுது என்று சொன்னார். ஆனால் எனக்கு நடக்கிறெதெல்லாம் தெரியும். 51 அதனால் நான் என் அப்பாவிற்கு லட்டரில் சீர் செய்வதற்குப் பதிலாகப் பணமாக அனுப்பினால் செளகரியமாக இருக்கும் என்று லட்டர் போட்டேன். அதற்குப் பதில் நான் நேரில் வந்து பார்த்துக்கொள்கிறேன் என்று என் புருஷனுக்கு லட்டர் போட்டு விட்டார். அடுத்த வாரம் என் அப்பா வந்து எல்லா செலவுகள் எல்லாம் தானே பார்த்துவிட்டு சீர் வரிசையும் செய்து விட்டு காரியங்களை முடித்து விட்டு என்னையும் என் புருஷனையும் திருமங்கலம் கொண்டு போய் விட்டுட்டு அவர் காரைக்குடி போய்விட்டார். 52 பிறகு மாமனாரும் கல்கத்தா நாத்தனார் மைத்துனர் எல்லாரும் திருமங்கலம் வந்தார். மாமியார் இறந்த சமயம் நான் தீர்த்தாமாடாமல் இருந்தேன். அது புரட்டாசி மாஸம்.

இப்படியிருக்கும்போது மாமனார் நான் ஊருக்குப் போகிறேன் என்ரு போய்விட்டார். நாங்கள் சின்னவர்களாக இருக்கும்போதே என் மாமியார் இறந்து விட்டார். அவருக்கு வயது ரொம்ப ஆகவில்லை. 43 வயது தான். நாங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். அதற்கு பிறகு என் புருஷன் வீட்டில் யாரும் இல்லை. நாத்தனர்கள் அவர் புருஷனோடு இருந்து விட்டார்கள். ஆனால் கடைசி நாத்தனாருடைய புருஷன் யார் என்றால் மெட்றாஸ்ஸில் ஹைக்கோர்ட் வரதாச்சாரியாரின் தம்பி. தஞ்சாவூரில் பெரிய வக்கீல். அவர் என் மாமியார் வைத்தியச்செலவு செய்திருக்கிறார். இப்படியிருக்கும் போது எனக்கு மாஸம் ஆகி, என்னை பிரஸவத்திற்கு என்னை என் அப்பா அழைத்துப் போய்விட்டார். ஆனால், என் மாமியாருக்கு மாசியம், ஜோதகும்பம், எல்லாவற்றிக்கும் சமையல் செய்ய என் அப்பா தளிகை செய்கிறவரை போட்டார். நான் பிரஸவத்திற்குப் போனபிறகு நம்ப ஜாதி மாமி செய்து போட்டாள். என் மாமியார் இறந்து (அடித்தல், திருத்தல்) பத்து மாஸம் ஆவதற்குள் எனக்குப் பிள்ளைக்குழந்தை பிறந்ததது. குழந்தை ரொம்பவும் சின்னக்குழந்தையாக இருந்ததது. மூன்று மாஸம் ஆனபிறகு தான் குழந்தை தெளிந்து விளையாடிற்று. 53

51. எல்லாம் பாத்துண்டு இருக்காளோல்லியோ!

52. அதான் தாத்தா!

53.. கொஞ்சம் ட்யூப் லைட்டோல்லியோ!

(வந்தனன்! வந்தனன்!)

அம்மா சொல்படி ராஜூ: அட்டை: 10: சுழன்ற சக்கரம்

அம்மா சொல்படி ராஜூ: (சுழன்ற காலச்சக்கரம் ...) பகுதி 10: 26 10 2009

(வந்தே மாதரம்...)

... உடனே என் அப்பா என்னை திருமங்கலம் கொண்டு விட்டு விட்டு காரைக்குடி போய்விட்டார். நானும், கடசி நாத்தனாரும், என் புருஷனோடு இருந்தோம். அந்த சமயத்தில் என் மாமியாருடைய கடைசித்தங்கை பிள்ளைகள் இரண்டு பேர் 44 லீவுக்கு எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். இரண்டு வாரம் இருந்தார்கள்.

திடீரென்று, என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை என்றும் லட்டர் போட்டு என்னை வரச்சொன்னார்(கள்). ஆனால், என் மாமியாருக்கு உதவி யார். என் நாத்தனார் இருந்தார். ஆனால், நாமு என்ற நாத்தனார் கல்யாணம் ஆகி கல்கத்தா போய்விட்டார். உடனே என் புருஷன் என்னை வந்திருக்கும் பையன்கள் கூட அனுப்பி வைத்தார். அவர்களுடன் நான் இன்னம்பூர் போனேன். மாமியாருக்கு நான் போனது ரொம்ப சந்தோஷம். ஆனால் மாமியார் உடம்பு சரியில்லாமல் படுக்கையாக இருந்தார். அவருக்கு உதவி 45 என் மாமனார் செய்து கொண்டிருந்தார். இப்படியிருக்கும்போது கடைசி நாத்தனாருக்கு தஞ்சாவூரிலிருந்து வரன் வந்தது. அதை முடிக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த வரன் இரண்டாம் தாரமாக இருந்தது. மாமியாருக்கு இஷ்டமில்லை. மாமனார் தான் முடிக்கலாம் என்று சொன்னார். மாமியாருக்கு உடம்பு வேறு சரியில்லை. வேறு எந்த வரனைப் பார்ப்பது என்று தஞ்சாவூர் வரனுக்கு 46 நிச்சியம் செய்து விட்டார். தஞ்சாவுரில் என் மாமனாருடைய அக்கா பிள்ளை ஆஸ்பத்திரியில் மானேஜராக 47 இருந்தார். அவர் அந்த வரனை கொடுத்தார். பிறகு என்ன செய்வது என்று தஞ்சாவூர் வரனுக்கே கடைசி நாத்தனாரை கல்யாணம் செய்து வைத்தது. ஆனால் என் மாமியாரால் உட்கார்ந்து கன்னிகாதானம் செய்யமுடியவில்லை. அதனால் என் புருஷனுக்கு லட்டர் 48 போட்டு அவர் வந்து அவரும் நானும் தான் கன்னிகாதானம் செய்தோம். பிறகு மாமியாரை மெட்(ரா)ஸ் போய் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். ஆனால், நானோ, என் புருஷனோ போகவில்லை. கல்யாண நாத்தனார் அவள் புருஷன் வீட்டில் இருந்து விட்டாள். அவள் என்ன செய்யமுடியும். இரண்டாம் தாரமாக கொடுத்தாயிற்று. மூத்தாளுக்கு நாலு பிள்ளைகள் 49 எல்லாம் சின்னக்குழந்தைகள். அதைப்பார்த்துகொள்ளவேண்டுமே என்று அம்மாவுக்கு உதவிக்குப் போகவில்லை. என் மைத்துனர், மாமனார், என் மாமியாருடைய «õÁ¡ 50, þÅ÷¸ள் ¾¡ý ±ý Á¡Á¢Â¡Õ¼ý ¯¾Å¢ìÌ ¦ÁðÈ¡Š §À¡É¡÷¸û. அப்போது எனக்கு 16 வயது. என் புருஷனுக்கு 21 வயது தான். ஆனால், நாங்கள் நாத்தனார் கல்யாணம் ஆனதும் நேராக திருமங்கலம் என் புருஷனுடன் போய்விட்டேன். ஆனால், மாமியார் சொன்னார், ‘நான் பிழைக்கமாட்டேன். என்ன செய்வது. நீ ஊருக்குப்போ’ என்று என் புருஷனிடம் சொல்லிவிட்டார். நாங்கள் ஊருக்குப்போய் என் மாமனாருக்கு அம்மாவிற்கு உடம்பு எப்படியிருக்கிறது என்று லட்டர் போட்டோம். அவர் உள்ளதை சொல்லாமல் தேவலை என்று லட்டர் போடுவார். ஆனால், என் புருஷனுக்கு கோபம் வரும். என்ன செய்வது? கவலைப்படுவார். என்னை என் அம்மாவாத்தில் வந்து அழைத்துப் போனார்கள். அங்கு கொஞ்ச நாள் இருக்கலாம் என்று நான் அங்கு இருந்தேன். நவராத்திரிக்குப் போனேன். அந்த சமயத்தில் திடீரென்று தந்தி வந்தது. என் மாமியார் இறந்துவிட்டார் என்று வந்தது.

(சுழன்ற காலச்சக்கரம்... )

44. அவர்களில் கோபால் சித்தியா தொடர்பில் இருக்கிறார். அவரது தந்தை மற்றொரு சிங்கம். அதுவும் அழகிய சிங்கம். சித்தியா கடற்படை, விமானப்படை, காலாட்படை எல்லாவற்றிலும் பணி புரிந்து, பிறகு போலீஸ். மூன்று தலைமுறை உயர் போலீஸ் அதிகாரிகள், அந்த திங்களூர் குடும்பம். கோபால் தலைமையில், சடகோபன், கண்ணன், கோபால் II, நான் ஆகியோர், ஆடுதுறை பாட்டி வீட்டில் செய்த ரகளைகளும் கின்னஸ் புத்தகத்தகுதி பெற்றவை. வீரசோழனாற்றின் பாலத்தில் ரயில் வண்டியைக்கூட நிறுத்தியிருக்கிறோம்! பாடி முன்னால் பெட்டிப்பாமு என்பதால், அவர் புகார்களை புறக்கணிப்பார்! சித்தியா தான் முதலில் சுய சரிதம் எழுதியவர், அதன் என்னுரையில், “... என் அண்ணன் மகனும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.&ஏ.எஸ் அதிகாரியுமான திரு. எஸ்.செளந்தரரஜன் அவர்கள் ஆங்கில புலமை பெற்ற இனிய பண்பாளர். ஆங்கிலத்தில் நான் எழுதிய பக்கங்களை முழுதுமாகப் படித்து பிழை திருத்தி தந்தார். ஓய்வு பெற்றாலும் பல்வேறு பணிகளின் அழுத்ததிற்கிடையே இதற்கு நேரம் ஒதுக்கிய அவரது பண்புக்கு என் நன்றி.... “வசிஷ்டர் வாயாலே பிரம்ம ரிஷி ! தற்காலம், ஒரு அமைப்புக்கு நான் போஷகர். அவர் உப தலைவர்.

45. இப்படி அப்படி இல்லை. அணுக்கத்தொண்டு. துணி தோய்த்து, வீடு பெருக்கி, சமையல் செய்து ஊழியனாக செயல்பட்டாராம். நாமு அத்தை சொல்வாள். இதுவல்லவோ மாறாக்காதல்!

46. அவர் பெரிய வக்கீல். அதுவும் வறுமையால் முந்திய தலைமுறையில் புலன் பெயர்ந்த குடும்பம். சகோதரர்கள் சுயமுயற்சியால் முன் வந்து உயர் பதவிகள் வகித்தனர். ஒருவருக்கு ‘ஸர்’ விருது கூட.. தற்கால தலைமுறையுடன் தொடர்பு உள்ளது.

47. அவர் தான் ‘அத்தான்’. அவருக்குக் கோபம் வந்தால், அண்டமெல்லாம் கிடுகிடுக்கும், மகன் ‘தம்பி’ யைத்தவிர! சமீபத்தில், அவனது சதாபிகேஷேத்துக்குப் போயிருந்தேன். இன்னம்பூருக்கும், ஈராக்கின் பாஸ்ரா நகருக்கும் ஏதொ ஒரு தொடர்பு! தேசிகன் என்ற பெரியவர், முதல் உலக மகா யுத்தத்தின்போது, அங்கு ராணுவப்பணி புரிந்தார். இரண்டாம் யுத்ததில், ‘அத்தான்’. தற்காலம், என் திருமகன்!

48. அந்த லட்டரைப் படித்து என் தந்தை அழுதாராம்.

49. எல்லாரும் படிப்பில் புலி. உயர் பதவிகள் வகித்தார்கள். தலைமகனை நாங்கள் ‘பெரியவர்’ என்று பவ்யமாகக் கூப்பிடுவோம். அவரது மகனும் நானும் இன்றளவுக்கு நண்பர்கள்.

50. இவர் தான் ஆடுதுறைப்பாட்டி. அறியாப்பருவத்தில், நான் அவரிடம், ‘உன் பெண் செத்துவிட்டாளே. ¿£ ²ý º¡¸Å¢ø¨Ä’ ±ýÚ §¸ð§¼É¡õ! (²§¾¡ …£É¢Â¡Ã¢ðÊ ¸½ìÌ!) ¦º¡øÄ¢î¦º¡øÄ¢ Á¡öóÐ §À¡வாள்.

அம்மா சொல்படி ராஜூ: 9: வந்தே மாதரம்

அம்மா சொல்படி ராஜூ: (வந்தே மாதரம்...) பகுதி 9: 25 10 2009

(ஆனா பின்ன இருக்காதா...? )

... மறுபடியும், என் மாமனார் லட்டர் போட்டுவிட்டார். உடனே பெண்ணைக் கொண்டு போய் விடுங்கள் என்று எழுதிவிட்டார். அப்பா உடனே என்னையும் அம்மாவையும் திருமங்கலம் அனுப்பி வைத்தார். ஆனால், அம்மா உடனே காரைக்குடி வந்து விட்டாள். நானும் நாத்தனாரும் இருந்தோம் அந்த சமயத்தில் நான் பெரியவளாகிவிட்டேன். (அடித்தல் திருத்தல்) உடனே இன்னம்பூருக்கு தந்தி கொடுத்து, காரைக்குடிக்கும் தந்தி கொடுத்து என் மாமியாரும் என் அம்மாவும் வந்து அந்த ஃபன்க்ஷ்னை (function) செய்துவிட்டு என்னையும் அழைத்துக்கொண்டு என் அம்மாவுடன் காரைக்குடி போய்விட்டேன். பிறகு ஆறு மாஸம் ஆனபிறகு என் மாமியார் பெண்ணை வீட்டுக்கு நல்ல நாள் பார்த்து அழைக்கப்போகிறோம். அதற்கு முன்னாடி லட்டர் போடுகிறோம்; நீங்கள் அதற்கு தகுந்ததாப்போல் வரலாம் என்று லட்டர் போட்டார். என் மாமானார் தேதியும் தெரிவித்தார். அதற்குள் எனக்குத் தலைதீபாவளி வந்தது. அதற்கு என் மாமானார் எல்லாருக்கும் என் அப்பா லட்டர் போட்டார். அதே சமயத்தில் என் அக்காவிற்கு மூன்றாவது பெண் பிறந்திருந்தது. ஆனால், என் அக்காவிக்கு என் அப்பா வீட்டில் தான் குழந்தை பிறந்தது. அப்போது எல்லாம் என் அத்திம்பேருக்குக் கோபம். அவர் ஸ்வீகாரம் போனதால், அவருக்கு சொத்து உண்டு. அதின் பேரில் கடன் வாங்கு (கி) சைக்கிள் கடை வைத்து நடத்தினார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். எனக்கு நினைவு இருக்கிறது. அக்காவுக்கு சாமான்கள் எல்லாம் நான் தான் வாங்கி தருவேன். இப்படியிருக்கும் போது என்னை நாள் பார்த்துக்கொண்டு விடும்படி லட்டர் வந்தததை பார்த்து, என்னைக் கொண்டுவிட ஏற்பாடு நடந்தது. எனக்கு வெள்ளிப்பாத்திரம், ஈயம், இலும்பு, பித்தளை உள்பட புடவை, மாப்பிள்ளைக்கும் பட்டு, வெல்வெட் மெத்தை, தலைகாணி உள்பட எல்லாம் தைத்து, எல்லாச்சீர்களுடன் எல் லாரும் இன்னம்பூர் போய்ச் சேர்ந்தோம். அந்த ஃபன்ஷனும் நன்றாக நடந்ததது...44

(வந்தே மாதரம்,,,)

44. வெள்ளந்தியாக இருந்தாலும், என்னே நுட்பம் ஒரு ஆங்கிலச்சொல்லை ரத்னமாக பொதித்து !

“ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே ... அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே ... அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

சிறந்ததும் இந்நாடே ...இதை

வந்தனை கூறி மனதில் இருத்தி, என்

வாயுற வாழ்த்தேனோ ...இதை

‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’

என்று வணங்கேனோ”

- மஹாகவி சுப்ரமணிய பாரதியார்

(வந்தே மாதரம்...)