Google+ Followers

Thursday, July 23, 2015

கஜானா காலி [2] -சிக்கிமுக்கி...!

கஜானா காலி [2] -சிக்கிமுக்கி...!

இன்னம்பூரான்
23 07 2015

தணிக்கைத்துறையில் நாங்கள் பார்க்காத வினோதங்கள் கிடையா. மிஷினில் புல் வளர்த்தார்கள்! உடையும் எஃகை வளைத்தார்கள்! அம்பாசிடர் காருக்கு டெண்டர் விட்டாங்க! விதி மீறாமல் காண்டிராக்ட்டை பினாமிக்கு கொடுத்துக்கொண்டார்கள்! வடுமாங்காயை தேங்காய் என்று விற்று துட்டு பார்த்தார்கள்! ஓடாத நதிக்கு பாலம் போட்டார்கள்! சற்றே மிகை.தங்கத்திலே தண்ணிக்குழாய் இழுத்தாங்க! ஆண்டவன் விதித்தக் கட்டளைப்படி, எனக்குக் காண கிடைத்தத் துட்டட்டூழியத்துக்கு மணி விழா எடுத்தாச்சு. அந்தோ பரிதாபம்!!!

லஞ்ச லாவண்ய லீலாவினோதங்கள் நடக்காத மாநிலமே இல்லை போலும். அந்த அனுமார் வால் பட்டியலில் சிக்கிமுக்கி முனகுவது மஹராஷ்ட்டிரா சிக்கி விவகாரம், ஆயிரத்தில் ஒன்று. சிக்கி என்றால் கடலை மிட்டாய். மும்பை-பூனே ரயில் பயணத்தில் லோனாவாலா என்ற இயற்கை அழகு சொட்டும் இடத்தில், வாங்கிப்போவது, ஒரு வழக்கம். அதை வாங்கினாங்க ஒரு அம்மா. அவங்க பெயர் பங்கஜ் முண்டே. எக்கச்சக்கமாக ஓட்டு வாங்கி அமைச்சரனாவர், அவர். நல்ல காரியம் தான். அங்கன்வாடி சிறார்களுக்கு போஷாக்கு அளிக்க. ஆனால் பாருங்க. ‘த்ராட்லெ’ நல்லா மாட்டிக்கிணு, சிக்கியை மெல்லவும் முடியாமல், கடிக்கவும் முடியாமல் அவஸ்தை பட்றாங்க.

அரசு பணத்தில், 200 கோடியோ ரூபாய்க்களை அப்பன் வீட்டு சொத்து மாதிரி இரண்டே நாட்களில், டெண்டர், கிண்டர் இல்லாமலெ, அள்ளி வீசி, சிக்கி வாங்கி சிக்கிக்கொண்டார். முக்கி முனகினாலும், சிக்கினது சிக்கினது தான் போலும்! வேண்டப்பட்டவங்க தான் சப்ளையராம்! ஆனால், அவங்க கொடுத்த சிக்கியில் சகதி இருக்காம். [எப்டி வந்திருக்கும் என்று எனக்கு ஊகம் ஒன்று உண்டு. கேட்டா சொல்றேன்.] அவற்றை சாப்பிடலாகாது என்று அரசுடைய ஆய்வு சொல்கிறது என்று, அம்மணி ஆட்சி செய்யும் அரசே உயர் நீதி மன்றத்தில் சாட்சியம் அளித்திருக்கிறது. இந்த சகதி மர்மம் எல்லாம் அவர்களாக வெளிப்படுத்தவில்லை. ஏழை மாணவர்கள் தானே. சிக்கி தின்னு சிக் ஆனால் ஆகட்டும் என்று வாளா இருந்திருப்பார்கள்.

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தது சந்தீப் அஹாரே என்ற பொதுநலவாதி, நம்ம ட் ராஃபிக் ராமசாமி மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன். அவர் பொது நல வழக்குப்போட்டு, இந்த சகதி சமாச்சாரத்தை அவிழ்த்து விடவே, சினம் மிகுந்து, கொலாபாவாலா, கானடே என்ற இரு நீதிபதிகள், வழக்கின் தீவிரம் கண்டு, அரசை உண்மை விளங்க வைத்தார்கள். இந்த மாதிரி 20 வஸ்துக்கள் வாங்கப்பட்டனவாம். டெண்டர், கிண்டர் இல்லாமலெ, இந்த முண்டே அம்மை செய்தது பசங்களை கூண்டோடு கைலாசம் அனுப்பிவிட்டால், யார் பொறுப்பு?

ஆமாம். இந்த மேகி விவகாரம் சூடு பிடித்த போது, இந்திய பரிசோதனை நிலையங்கள் தூக்கி எறிந்த மேகியை சிங்கப்பூரும், இங்கிலாந்தும் நல்லா தான் இருக்கு என்று அனுமதித்தார்கள். நம்ம டெஸ்ட் ரிப்போர்ட்டை காட்டுங்கள் என்றால் காஷ்டமெளனம். அப்படின்னா, இந்த முண்டே புகழ் சிக்கிகளை எங்கே அனுப்பப்போறாங்களாம்????
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://photos1.blogger.com/blogger/4838/1326/1600/DSCN0598.0.jpg

உதவி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com