Google+ Followers

Sunday, June 16, 2013

வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் 5
வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் 5
Innamburan S.Soundararajan Sun, Jun 16, 2013 at 11:55 AM

வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் 5
Inline image 1Police behavior,
‘காவல் துறையிலிருந்து காததூரம் தள்ளி நில்.’ எனப்படும் வேதவாக்கு ‘அறம் செய விரும்பு.’ எனப்படும் பொன்வாக்கையும் மிஞ்சியது என்க.
டைம்லைன்: 16 06 2013 செய்திகள்:
  1. ‘இனாமாக மூன்று வேளையும் சோறு போடு’ என்று சில சிற்றுண்டி ஹோட்டல்களை என்று வற்புறுத்திய போலீசார் இருவரிடமிருந்து 2 1/2 லக்ஷம் ரூபாய் அபராதம் வசூலிக்க பரிந்துரை செய்தது, மாநில மனித உரிமை கமிஷன். பாவம். தண்டச்சோறு போட்டார்கள். நிறுத்தியும் விட்டார்கள். வெகுண்டெழுந்த போலீஸ் அவர்களுடைய ஊர்திகளின் ஆவணங்களை கேட்டார்களாம். அவற்றை கிழித்தெறிந்து விட்டு மறுபடியும் அவற்றை கேட்டார்களாம்! முணுமுணுத்தற்கு பலத்த அடி; நோ சிகிச்சை; தாணாவில் ரிமாண்ட். ஊர்திகள் பறிமுதல். எல்லாமே சட்டவிரோதம், போலீஸ் சால்ஜாப்பு நம்புவதற்கில்லை என்கிறது, கமிஷன்.[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/shrc-orders-cops-to-pay-relief-to-restaurateurs/article4819205.ece]
  2. ‘எப்படி ஓடினரோ’ என்ற தொடரில் உடன்போக்கு சென்ற பெண்ணை மீட்க சென்ற போலீஸ், வண்டிச்சாவிகளை பிடுங்கிக்கொண்டார்கள். சட்டவிரோதம் தான். சட்டம் அவர்கள் கையில் சிக்கிய பூமாலை. என் செய்வது? அந்த மாதிரி, Section 19: MV Act படி இயங்காமல், ஒரு பஸ் டிரைவரின் உரிமத்தை பறிமுதல் செய்தது சட்டவிரோதம் என்று உயர் நீதி மன்ற தீர்ப்பு. முந்தைய வழக்கின் அத்து மீறலை இது உறுதிபடுத்துகிறது. 
  3. மும்பையில் ஒரு முதியவரை வஞ்சித்து ரூபாய் 45 லக்ஷம் கொள்ளையடித்த போலீஸ் அதிகாரி.  கேடிகளுடன் அவரது உறவாடல் என்று புகார். (http://www.dnaindia.com/mumbai/1848818/report-flat-promise-ats-officer-among-5-held-for-duping-senior-citizen)
டைம்லைன்: 1942:நினைவலை:
தஞ்சை. ஒரு தேசபக்தனை (ஶ்ரீனிவாசய்யர் என்று ஞாபகம்) கைது செய்ய போலீஸ் மேலராஜவீதியில் குவிந்தது. தாங்கொண்ணா பொதுமக்கள் கொந்தளிப்பு. திடீரென்று ஒரு தாணாக்காரர் தன் சட்டையை கிழித்துக்கொண்டார். ‘கடமை செய்வதைத் தடுக்கிறார்களே’ என்று பொருள்பட குரல் கொடுத்தார். லத்தீ சார்ஜ். மக்கள் சிதறி ஓடினர். எதிர்பாராத திருப்பம். இதை திரு. ஶ்ரீனிவாசய்யர் கண்டித்து, வெள்ளைய உயர் அதிகாரியிடம் பிரஸ்தாபித்தார். அவர் உடனே, அந்த தாணாக்காரரை ஒரு ஜட்காவில் (அக்காலம் போலீஸ் வண்டிகள் மிகக்குறைவு) பேக் செய்து பேரக்சுக்கு (டேராவுக்கு; அது தண்டனை) அனுப்பி விட்டார். லத்தீ சார்ஜ் நின்றது. திரு. ஶ்ரீனிவாசய்யரும் ஜெயிலுக்குப் போனார். மங்கலான நினைவு.
டைம்லைன்: 1850 காலகட்டம்:வரலாறு:
இந்தியாவில் ‘தக்’ எனப்படும் கொலை/கொள்ளைக்கூட்டம். பெரிய கதை. அவர்களை அடக்கி, ஒடுக்கி, சந்ததியை புணருத்தாரணம் செய்தவர் சர். வில்லியம் ஸ்லீமென். அவருடைய வரலாற்றில் கூறப்பட்டது: ‘கிராமங்களில் சண்டை சச்சரவு நிகழ்ந்தால் டரோகாவை (டரோகா பாமர வரலாறு சுவையானது. டரோகா என்றால் போலீஸ் அதிகாரி, இன்றைய சொல்வழக்கிலும்.) வரவழைக்கமாட்டார்கள்; பஞ்சாயத்து நடக்கும். ஏனெனில் போலீஸ் வந்தால், நாட்கணக்கில் டேரா போட்டு, இரண்டு பக்கமும் பணம் வாங்கிக்கொண்டு, ஆடுமாடு, கோழிக்குஞ்சு எல்லாவற்றையும் சப்ஜாடா ஜீரணம் செய்து விடுவார்கள்.
என்னடா! ஒரேடியாக போலீஸ் கண்டனம் என்று பார்க்கிறீர்களா?
புறனடை
1.ஒரு கறார் போலீஸ் இன்ஸ்பெக்டர். யோக்கியன். திடீரெனெ அவர் வீட்டுக்கு வந்த ஆங்கிலேய அதிகாரி, ‘நீர் சம்பாதித்தது எவ்வளவு?’ என்று கேட்கிறார். ‘சற்றே பொறும்’ என்று உள்ளே சென்றவர் தன் மழலைச்செல்வங்களை அழைத்து வந்து, ‘இது தான்’ என்று காண்பித்தாராம். அப்பா சொன்ன நிஜ சம்பவம். மதுரை மாவட்டம். அப்பாவின் நண்பர். அவருடைய பெயர் சுப்ரமணிய பிள்ளை. அவருடைய சந்திதியை சந்திக்கவேண்டும் போல் இருக்கிறது. 
2.டாக்டர். பி. சுப்பராயன் என்று அக்காலத்து காங்கிரஸ் தலைவர். குமாரமங்கலம் ஜமீன். அவருடைய மகன் மோஹனும், பேரனும் அமைச்சர்களாக இருந்த கம்யூனிஸ்ட்கள். வேனிற்காலத்தில் இங்கிலாந்து சென்று விடும் டாக்டர். பி. சுப்பராயன் திருச்சி சிறையில் வாடுகிறார், சுருட்டுப்பிடித்துக்கொண்டு. ஜெயிலில் பீடிக்கு மட்டும் தான் அனுமதி. அந்தப்பக்கம் வந்த ஆங்கிலேய அதிகாரி, “நல்ல சுருட்டு மணம். டாக்டர். பி. சுப்பராயன் ஈஸ் என்ஜாயிங்க். என்று சொல்லிவிட்டு, திரும்பி விடுகிறார்.

3.வேதாரண்யம் உப்பு சத்யாக்ரஹம். ராஜாஜியை கைது செய்ய வந்த போலீஸ் மரியாதையாக நடந்து கொள்கிறார்கள்.

மேலும் சொல்லப்போனால், எத்தனையோ மேன்மையும், பக்குவமும், கடமையுணர்ச்சியும் உள்ள போலீஸாரும் உளர். அவர்களும் மனிதர்கள் தானே. எதற்கும், ‘காவல் துறையிலிருந்து காததூரம் தள்ளி நில்.’. என்ன? நான் சொல்றது சரி தானே.
இது எஃப்.ஐ. ஆர். எனப்படும் பிரம்மாஸ்திரத்துக்கு/புஸ்வாணத்துக்கு ஒரு பீடிகை. கதை சொன்னால் நம்மருமை வாசகர்கள் படிப்பார்க்ளோ என்ற அல்பாசை. 
இன்னம்பூரான்
16 06 2013