Thursday, May 23, 2013

தமிழ் இலக்கியம் -1: மையோ!....


ail.com>


தமிழ் இலக்கியம் -1

Innamburan S.Soundararajan Thu, May 23, 2013 at 5:38 PM

தமிழ் இலக்கியம் -1

"மையோ! மரகதமோ!மறிகடலோ!மழை முகிலோ!ஐயோ! இவன் வடிவு! என்பதோர் அழியா அழகு உடையான்!

Inline image 1


கம்பன் இராமனின் அழகை வருணனை செய்ய இயலவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்த ஒரு உத்தியை கையாண்டார், ஒரு மங்கலமிழந்த சொல்லை, கவினுணர்வுடன் ஒரு பொலிவுடன் திகழும் செய்யுளில் புகுத்தி. இனி, யாம் இங்கு கம்பராமாயணத்தை பற்றி பேச போவதில்லை. இங்கு பேசப்படுவது இலக்கிய சுவை, தங்கு தடையின்றி, வரையறை இன்றி. இலக்கியசுவை நடை பழக, புலமை இன்றியமையாத தேவை அல்ல. அது தேவையெனில், இந்த இடுகை இத்தருணமே மட்டுறுத்தபடவேண்டும், மாணவர்கள் எழுத துணிவு கொள்ளலாகாது என்ற கோட்பாட்டின் அடிப்படையில். அப்படி ஒன்று இருக்குமானால், அதை புறக்கணித்து, மேலும் எழுத விழைகிறேன்.

ஏன் எழுதுகிறாய்? யாருக்கு எழுதுகிறாய்? போன்ற வினாக்கள் புதியவை அல்ல. இலக்கியத்தின் உடன்பிறப்பே இவை. புகழ் வாய்ந்த படைப்பாளிகளில் பலர், தனக்காகவே எழுதவதாகவும்/ படைப்பு தன்னிச்சையாக நிகழ்ந்ததாகவும்/ யாவருக்கும் எழுதுவதாகவும் சொல்வதுண்டு. சிலர் எழுதுவதுடன் சரி. அவர்கள் இத்தகைய வினாக்களை பொருட்படுத்துவது இல்லை. அவர்களில் யானுமொருவனோ என்ற ஐயம் எழுந்தாலும், எழுதுவது என்னமோ தொடர்கிறது. அது போகட்டும். இன்று மணிமேகலையை பற்றி சில சிந்தனைகள் வலம் வருகின்றன. 

சிலப்பதிகாரத்தை போல் மணிமேகலைக்கு  ரசிகர் பட்டாளமுண்டா என்றால், இல்லை என்று தான் தோற்றம். இங்கு அவற்றை சிலம்பு என்றும், மேகலை என்றும் குறிப்பிடப்படுகிறது. சிலம்பில் காதல் மலர்ந்தது; மேகலையில் அது உலர்ந்தது. சிலம்பு வாழ்வியல் சார்ந்தது; இன்பத்திலிருந்து துன்பம் சென்றடைவது; காப்பியத்தலைவி பத்தினிப்பெண்; சிலம்பு என்ற அஃறிணைப்பொருள் அதன் தலைப்பு. இளங்கோ அடிகள் என்ற சமணத்துறவியினால் இயற்றப்பட்டது. மதசார்பற்றது என்றும் சொல்லலாம். ''...சமயக்கணக்கர் மதிவழி கூறாது, உலகியல் கூறி பொருளிது வென்ற வள்ளுவன்..." என்றார் கல்லாடர். அது இங்கும் தகும் எனலாம்.

மணிமேகலை துறவியல் சார்ந்தது; இன்ப துன்பங்களை கடந்த கருணைக்கடல்; காப்பியத்தலைவி இளம்பெண்துறவி; அவர் பெயரே தலைப்பு; ஆசிரியர் சீர்த்தலை சாத்தனார் என்ற கூலவாணிகன். அங்கு கவுந்தி அடிகளும், இங்கு அறவாணர் என்ற பெளத்த துறவியும் குருமுகம். அங்கு ஊழ்வினை சுற்றி வருகிறது; இங்கு முன்பிறவி சுற்றி வருகிறது. 

வேறுபாடுகள் இவ்வாறு இருப்பினும், சிலம்பை போல் மேகலைக்கு  ரசிகர் பட்டாளம் இல்லை என்பதற்கு அவை காரணமாக இருக்கலாம் என்றாலும், சிலம்பின் தொடர்பே மேகலை. சிலம்பின் தலைவன் மகளே மேகலையின் தலைவி. இரு ஆசிரியர்களும் சம காலத்தவர்; நண்பர்கள். மேகலையின் ஆசிரியரின் உந்துதலால் தான், சிலம்பு படைக்கப்பட்டது. எங்கு சிலம்பு முடிகிறதோ, அங்கு மேகலை தொடர்கிறது. 

மூலம் ஒன்று; மொழிந்த கதை இரண்டு. அமைப்பிலும் ஒப்புமை உண்டு. இரண்டும் முப்பது காதைகளைக் கொண்டவை. அகவலால் ஆனவை. இரண்டும் விழாவில், முறையே மணவிழா, இந்திரவிழாக்களில் தொடங்குகின்றன. குடிமக்கள் காப்பியங்கள், ஊழ், இயற்கை இகந்த நிகழ்ச்சிகள் இரண்டிலும் உண்டு. வரிகள், சொற்றொடர்கள் ஒப்புமை கொண்டுள்ளன. சிலம்பின் சிறு கூற்றுக்கு  பெரு விளக்கம் தருகிறது மேகலை; அது போல் மேகலை செய்திக்குகட்கு சிலம்பு சான்றாக நின்றது... இங்ஙனம் இரண்டும் இணைந்தும், பிணைந்தும் செல்கின்றன. [மது.ச. விமலானந்தம்:2003: தமிழ் இலக்கிய வரலாறு:சென்னை: அபிராமி: ப: 85]

இவ்வாறு இருந்தும், சிலம்பை போல் மேகலைக்கு  ரசிகர் பட்டாளம் இல்லை என்பதற்கு காரணம் மேகலையின் அறிவுரையோ என்றும் வியப்பு தோன்றுகிறது. அதையும் பார்த்து விடுவோம். 
   
   "...அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்,
    மறவாது இது கேள்! மன்னுயிர்க்கு எல்லாம்
   உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
   கண்டது இல்..."

இத்தகைய ஈகையும், கொடையும் பாடாண்திணை இலக்கியத்தில் மட்டும் தான் பொருந்தும், அன்றாட வாழ்க்கையில் இயலாது என்று மேகலையின் இலக்கிய சுவையையும், மறுக்க இயலாத மனிதநேயத்தையும் கண்டு ஒதுக்கி விட்டோமா என்ன?

இது ஒரு புறமிருக்க,  "மையோ! மரகதமோ!மறிகடலோ!மழை முகிலோ!ஐயோ! இவன் வடிவு! என்பதோர் அழியா அழகு உடையான்!
என்பதற்கு ஆங்கிலத்தழுவல் தேடினேன். தேடினேன். தேடிக்களைத்தேன். எனக்குத் தோன்றியது, சைலஜா:
"A thing of beauty is a joy for ever."
(இது முற்றுப்பெறவில்லை.)

இன்னம்பூரான்
24 04 2010
_____________________________________________________________________________________________________________மூன்று வருடங்களுக்கு முந்திய பதிவு ஆயினும், இதற்கு புதிய உயிர்மை பெற அவா. மணிமேகலையை பற்றி என் மாணவப்பதிப்புக்கு பிறகு
அந்த பெருங்காப்பியத்தை பற்றிய முனைவர் ராஜத்தின் அருமையான தொடரொன்று  மின் தமிழில் பதிவானது; மரபுவிக்கியில் சேகரம் செய்யப்பட்டது.
சித்திரத்துக்கு நன்றி:http://poetryinstone.in/wp-content/themes/aspire-10/stampfinal-full.jpg

இன்னம்பூரான்
23 05 2013

No comments:

Post a Comment