Monday, April 1, 2013

இதுவும் ஒரு பிருகிருதி: 3


இதுவும் ஒரு பிருகிருதி: 3

நல்ல மனுஷாளும் இருக்காளோல்லியோ! கோடியாத்து சுப்பய்யர் மாமாவும் அப்படித்தான். காலாம்பறவே ஸ்னானபானாதிகள் முடிச்சுட்டு, தெரு பசங்களை, என்ன சொக்குப்பொடியோ போட்டு, ஒக்கார வச்சு, தேவாரம் க்ளாஸ் எடுப்பார். அப்றம் ஒரு திருக்குறள் விளக்கம். அட்டவணை மாறும். புதனும், வெள்ளியும், திருமுறைகளுக்கு பதிலா திவ்யபிரபந்தம் எடுப்பார். இப்போ யாருக்கு புரியாது. சைக்கிள் கட்டு என்று பெயர். தட்டாமாலை வேஷ்டியும் இல்லை. பஞ்ச்க்கச்சமும் இல்லை. ப்ராக்டிக்கலா, சைக்கிள் பெடல்லே சிக்கிக்கொள்ள்ளாத வேஷ்டி கட்டுதல். ஸ்கூலுக்கு பயணம். நாள் பூரா, அங்கே ஆசிரியர் கண்டிப்பு, ஆதரவு, உண்டு, இல்லை எல்லாம் இருக்கும். எல்லா பாடங்களும், எல்லா வகுப்புகளுக்கும் எடுக்கும் ஆற்றல் இருப்பதால், ஹெட் மாஸ்டர் சொன்னார் என்பதற்காக, இவர் தான் பெர்மெனெண்டா, சொல்லிக்காம லீவு எடுக்கறவா க்ளாஸ் எடுப்பார். முணுமுணுப்பை முற்றும் துறந்தவர்.

மத்த வாத்தியெல்லாம் இவரை அசடு என்று கேலி செய்வார்கள். சாமர்த்தியமா, எந்த அதிகபடி வேலை வந்தாலும், இவர் தலையிலே தான். மத்யானம், கொஞ்சம் ஓய்வு உண்டு, டிஃப்ன் சாப்பிட. அப்பத்தான், 'அந்த சந்தேஹம், இந்த பிரச்னை' என்று சில பெற்றோர்கள் வருவார்கள். இவர் தலைலே கட்டிடுவாங்க. ஃப்ர்ஸ்ட் பாயிண்ட்: வந்தவனுக்கு திருப்தியான பதில் உத்தரவாதம். அடுத்தபடியா ஸ்கூலுக்கு நல்ல பெயர். இப்பெல்லாம், இன்ஸ்பெக்டருக்கு எல்லாம் அரசியல் வாதிக்கு வால் பிடிக்கவே நேரமில்லை. அந்தக்காலத்தில் இன்ஸ்பெக்டர் வருவது பெரிய சேலஞ்ச். க்ளாஸ் எடுப்பதை பசங்க்ளோட அமர்ந்தும் பார்ப்பார்கள். கண்ணுக்கு தென்படாமலும் கண்காணிப்பார்கள். கணக்கு, வழக்கு பார்ப்பார்கள். இது, அது என்று இல்லை; புரட்டி எடுத்து விடுவார்கள். ஒரு நாள் இன்ஸ்பெக்டர் நமசிவாயம் முதலியார், ஹெட் மாஸ்டர் கிட்ட சொன்னார். பக்கத்து ஊர்லே -என்ன நாலு மைல் - பள்ளிக்கூடம் சரியாக நடக்கவில்லை. சுப்பய்யர் சார் வாரத்துக்கு இரண்டு நாட்கள் சென்று சில வகுப்புகள் எடுக்கலாமே என்று. ஊதிய உயர்வு பத்து ரூபாய் கொடுக்க தனக்கு அதிகாரம் இருக்கிறது என்றார். ஹெட் மாஸ்டர் முன்னதைச் சொன்னார்; பின்னைதை விட்டு விட்டார். ஒரு பிரதிபலன் எதிர்பார்க்காமல் சுப்பய்யரும் போய்ட்டு வந்தாரே. 

இதெல்லாம் இருக்கட்டும். அப்போ காந்தி மஹான் மேலே எல்லாருக்கும் ரொம்ப மதிப்பு. அவர் சொல்லுக்குக் கட்டுபட்டு, ஊருக்கு ஊர் ஹிந்தி க்ளாஸ். சார் வாரத்துக்கு நாலு நாள், சாயங்காலம் ஹிந்தி சொல்லிக்கொடுப்பார். மூணு நாள் ஸ்லோகங்கள், சம்ஸ்கிருத ஸுபாஷிதங்கள் சொல்லிக்கொடுப்பார். எப்போ போனாலும் அவரை பார்க்கலாம். மாமி கர்நாடகம் தான். புடவையை மூணு சுத்து சுத்திண்டு தான் , வாசபக்கமே வருவா. "ஏண்டா! மாமாவை இப்படி படுத்தறா, படுத்தறேள்?" என்று மாமி கேட்டதில்லை. உத்தமி. தெரிஞ்சவாகிட்ட மாமி குசலம் விஜாரிக்கறது ஆச்சரியமா இருக்கும். வம்பு, தும்பு பேச மாட்டா. ஆனா, மென்மையான விஷயங்களை கிரஹிச்சுண்ட்றுவா. ஒரு நாள் அம்மா அப்பாகிட்டே சொன்னது காதிலே விழுந்தது: 'ஏன்னா! அந்த சங்கரன் ஆம்படையாளை தள்ளி வச்சுட்டான்னோல்லியோ. மாமி கிட்ட சொல்லிருக்கா. அவ என்ன பண்ணா தெரியாது. அவன் சேத்துண்டுட்டான். அந்த பொண்ணை கோயில்லை பாத்த்தேன். அவ தான் சொன்னா: சங்கரன் ஆத்துக்கு வந்து, அவளொடா அப்பா, அம்மாவை சேவிச்சிட்டு, அவளை அழைச்சுண்டாட்டானாம். அந்தரங்கமா சொன்னானாம், ''சுப்பய்யர் சார் உப்பை நான் சாப்பிடல்லைடி. அவர் ரத்ததை குடிச்சிருக்கேன். நாமா யாருமே மனுஷாளா பிறக்கறதில்லை. வெறும் சிசு. சார் மாதிரி இருக்கறவா தான் குயவன் மாதிரி நமக்கு உரு கொடுக்கறா. மாமி எங்கிட்ட ஒரு வார்த்தை தான் சொன்னா, அவளோட குடித்தனம் பண்ணுடா என்றாள்". அந்த பொண் மாமி தான் சிவகாமி அம்மன் என்று சொல்லி தாரை தாரையா ஜலம் விட்டது'. 

இதெல்லாம் அவ்வளாவா புரிய வயசு இல்லை எனக்கு. இருந்தாலும் அந்த தம்பதியை போற்றணும்னு புரிஞ்சது. சொன்னா நம்ப மாட்டேள். பல வருஷம் கழிச்சு அவாத்துக்கு போறேன். இரண்டு பேரும் அசக்தம். வாசல்லே கொஞ்சம் கூட்டம். சார் மடிலே மாமி. மெல்ல, மெல்ல, அவளோட ஆத்மா பிரிஞ்சுண்டுருக்கு. அந்தக்காலத்து அக்ரஹாரம் தான்.  ஆயிரம் கட்டுப்பாடு. ஆனா, சேரி பூரா வாசல்லெ நின்னுண்டு அழறது. ஆளாளுக்கு ஒரு நன்றிக்கதை, குழறி குழறி சொல்றா.

எனக்கு ஒரு சந்தேஹம். இவாளுக்கெல்லாம் கொடுக்கப்படாத 'பாரத ரத்னா' வாங்கிக்க, மத்தவாளுக்கு என்ன அருகதை இருக்கு?

இன்னம்பூரான்
20 12 2010

பி.கு. பின்னூட்டங்களுக்கு நன்றி. மனசு கொஞ்சம் அழறது. என்னை விட்றுங்கோ.
Tthamizth Tthenee 
12/20/10
to thamizhvaasal
”, ''சுப்பய்யர் சார் உப்பை நான் சாப்பிடல்லைடி. அவர் ரத்ததை குடிச்சிருக்கேன். நாமா யாருமே மனுஷாளா பிறக்கறதில்லை. வெறும் சிசு. சார் மாதிரி இருக்கறவா தான் குயவன் மாதிரி நமக்கு உரு கொடுக்கறா. மாமி எங்கிட்ட ஒரு வார்த்தை தான் சொன்னா, அவளோட குடித்தனம் பண்ணுடா என்றாள்". அந்த பொண் மாமி தான் சிவகாமி அம்மன் என்று சொல்லி தாரை தாரையா ஜலம் விட்டது'.  “
எங்க சார் இருக்கா  இது மாதிரி  மனுஷா எல்லாம் இப்போ ?
யோசிச்சுப் பாத்தா   நாமெல்லாம்  அடைஞ்சதை விட  இழந்தது  அதிகம்னு  தோண்றது
உண்மையா  ,ஆத்மார்த்தமா  இருக்கற மனுஷாளப் பாத்தே ரொம்பக் காலமாச்சு
அன்புடன்
தமிழ்த்தேனீ
LK 
12/20/10
to thamizhvaasal
என்ன ஒரு மனுஷா ? இப்படி இருக்காளா இன்னும் ??
shylaja 
12/20/10
to thamizhvaasal
ரொம்ப எதார்த்தமா இருக்கு...நெகிழ்ச்சியாவும்.

No comments:

Post a Comment