Google+ Followers

Sunday, January 31, 2016

நாளொரு பக்கம் II:5

நாளொரு பக்கம் II: 1
இன்னம்பூரான்
31 01 2016

From my grandfather Verus I learned good morals and the government of my temper. [1:1 -Meditations.Marcus Aurelius]

வாழ்க்கை நெறியை பற்றியும், சினத்தை அடக்கியாளும் வழியையும் என் பாட்டன் வெர்ஸ் அவர்களிடமிருந்துக் கற்றுக்கொண்டேன். -மார்கஸ் ஒளரேலியஸ்.
***
திரைகடல் கடந்தும் திரவியம் தேடச்சொன்னார், அவ்வைப்பிராட்டியார். திரைகடல் கடந்து ஞானக்கடல்கள் நம்மை வந்தடைகின்றன. நாம் அவற்றை கண்டும் காணாமல் கோட்டை விட்டு விடுகிறோம். 

அரசியல் நிர்வாகத்தை மிகவும் சிறப்பாக மக்கள் பணியாக செய்த மன்னர்கள் உண்டு, அசோக சம்ராட் போல. சீதாப்பிராட்டின் தந்தையாகிய மன்னரை ஜனகமகரிஷி என்பார்கள். மனித இயலின் மூன்று கூறுகளை நீதி சதகம், வைராக்ய சதகம், சிருங்கார சதகம் என்று பகுத்துக்கூறியவர் பர்த்துஹரி என்ற ராஜரிஷி. மார்கஸ் ஒளரேலியஸ் என்ற ரோமானிய சக்கரவர்த்தியும் ஒரு ராஜரிஷி.

அவர் எழுதிவைத்துள்ள அகசிந்தனை தொகுப்பு இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் சமுதாயங்களை சீரமைப்பு செய்து வந்துள்ளன.

முதல் பொன்மொழியில், ‘வாழ்க்கை நெறியை பற்றியும், சினத்தை அடக்கியாளும் வழியையும் என் பாட்டன் வெர்ஸ் அவர்களிடமிருந்துக் கற்றுக்கொண்டேன்.’ என்கிறார். அது நிரந்தரமான உண்மை என்பதை மனிதப்பிறவிகள் யாவரும் அறிவர். நாம் அவரவது குடும்பத்து பெரியோர்களிடமிருந்து வாழ்க்கையின் நுட்பங்களை கற்றுக்கொள்கிறோம் என்பது கண்கூடு. அவர்கள் வாழும் விதம், நாகரீகம், கட்டுப்பாடு, கொடை, இரக்கம், கல்வி ஆகியவை முன்னுதாரணம் ஆகின்றன. அவர்களின் அனுபவங்களை காணும் போது நமக்கு பல படிப்பினைகள் கிடைக்கின்றன. யாதொரு பிரதியுபகாரம் எதிர்ப்பார்க்காமல், அறிவுரை கூறுவதில், தாத்தா-பாட்டிக்கு இணை யாருமில்லை.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

உசாத்துணை: The Meditations By Marcus Aurelius
++++++++++++++++++++++++++++
நாளொரு பக்கம் II: 2

இன்னம்பூரான்
01 02 2016

சில சமயங்களில் சில ஆர்வங்கள் நம்மை கெட்
டியாகப் பிடித்துகொள்கின்றன. சிலர் அருமையான ஓவியங்கள் வரைந்து மகிழ்வார்கள் (ராஜா ரவி வர்மா); சிலர் சிற்பங்களை படைத்து புகழ் அடைவார்கள் (தனபால்); சங்கீதமும் (பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி) நாட்டியமும் (ருக்மிணி அருண்டேல்) வாழ்க்கையை அலங்காரம் செய்பவை. இலக்கியத்தின் தாக்கம் (கபிலர், பரணர்) நாம் அறிந்ததே. 

தத்துவ விசாரணைகள் ஆயிரக்கணக்கான வருடங்களாக, வாழ்வியலில்  நிரந்தரமாக வசித்துக்கொண்டு வருவது மட்டுமல்லாமல், வாழ்க்கைப்பயணத்துக்கு ராஜபாட்டை போடும் பொறியாளர்களாக அமைந்து விடுகின்றன. நாட்தோறும் ராஜரிஷி மார்கஸ் ஒளரேலியஸ் அவர்களின் அகச்சிந்தனைகளை பகிர்ந்து கொள்வது பல தலைமுறை வாசகர்களுக்கு நலம் பயக்கும் என்று கருதுகிறேன். 

சாக்ரடீஸ், ப்ளேடோ, அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க தத்துவவாதிகளுக்கோ, செனகா போன்ற ரோமானிய வாதிகளுக்கோ, அத்ரி, ப்ருகு, குத்ஸர் போன்ற முனிபுங்கவர்களுக்கோ, திருவள்ளுவர் போன்ற தமிழ் ஞானிகளுக்கோ ராஜரிஷி மார்கஸ் ஒளரேலியஸ் இணையில்லை என்று வாழ்நாள் முழுதும் வாதப்ரிதிவாத, விதண்டாவாதப்பிரயோகங்கள் செய்வது எளிது; பயன் யாதுமில்லை என்பதும் தெளிவுச்.

ராஜரிஷி மார்கஸ் ஒளரேலியஸ் வாதத்துக்கும், சர்ச்சைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல்,  அவரவர் தமது வாழ்நெறியை தனித்துவத்துடன் அமைத்துக்கொள்வதற்கு வழி வகுத்தார். அதனால் தான் எனக்கு அவருடைய அகசிந்தனைகளில் ஆர்வம் ஏற்பட்டது.
அடுத்து நாளை வருவது:  அவரிடமிருந்து தான் மிருதுவான ஸ்வபாவத்தையும், அடங்கி வாழ்வதையும் கற்றுக்கொண்டேன்.
LONG, A. A. அவர்களின் 'Epictetus, Marcus Aurelius' நல்லதொரு படைப்பு.

FARQUHARSON, A. S. L., The Meditations of the Emperor Marcus Antoninus, Edited with Translation and Commentary, 2 vols (Oxford: Clarendon Press, 1944 என்ற நூல் ஆழ்ந்து படித்து உள்ளுறை அறிந்து கொள்ள , பெரும் உதவியாக அமைந்து இருக்கிறது.
-#-

சித்திரத்துக்கு நன்றி: http://36.media.tumblr.com/10bec2a9a0091c5c9f870ddf3ec6f51a/tumblr_n1ipalqu7p1s6xd49o1_500.png

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நாளொரு பக்கம் II: 3
இன்னம்பூரான்
02 02 2016

From the reputation and remembrance of my father, modesty and a manly character. [1: 2-Meditations.Marcus Aurelius]
or
From the fame and memory of him that begot me I have learned both steadfastness and manlike behaviour. [1: 2-Meditations.Marcus Aurelius]

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. புகழ்பெற்றவர்கள் பலரின் வரலாற்றுக்களை படிக்கும்போது, அவர்களின் வாழ்க்கையை நிர்ணயித்தவர்கள் - மூதாதையரும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், மற்றும் சில சான்றோருகளும் வந்து போகிறார்கள்.  அவரவர்களுக்கு முதல் பிரத்யக்ஷ தெய்வம் தந்தை. அடுத்த பதிவில் அது தாய் என்பேன். ஓடோடி வந்து ‘முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறீர்களே’ என்று மிரட்டக்கூடாது. முரண் யாதுமில்லை. தந்தையும் தாயும் முன்னறி தெய்வம். 

மார்க்கஸ் ஒளரேலியஸ் மூன்று வயதில் தன் தந்தையை இழந்தவர். அவரது தந்தை ஒரு பிரபல அரசியலராக இருந்தவர். அவருடைய கீர்த்தியும், அவரை பற்றி மற்றவர்களிடம் இருந்த நினைவலைகள் மட்டுமே, மார்க்கஸ் ஒளரேலியஸ்ஸுக்குக் கிடைத்திருக்கிறது எனலாம். அவற்றின் மூலமாக, இந்த ‘ஏகலைவ சிஷ்யன்‘ தான் திடமான மனப்பான்மையையும், ஆண்மை இயல்பையும் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார். இது நிற்க,

வாசகர்கள் இத்தகைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளாவிடின், இப்படு எடுத்துரைப்பது வியர்த்தமாகப்போய்விடும். உதாரணம் ஒன்று. என் தந்தை அரசு இயந்திரத்தின் கடைசி அச்சாணி. மேற்பார்வை தேவையில்லை. அவரும், சகஊழியர்களும் அவரவது பொறுப்புகளை கண்ணும் கருத்துமாக நிறைவேற்றினர். மேலதிகாரிகள் வந்து போவார்கள். அன்றாட வேலைகளில் தலையிடமாட்டார்கள். இந்தப்பாடம் எனக்கு உயர்பதவி அதிகாரத்தை நல்வழியில் பயன் படுத்த சொல்லிக்கொடுத்தது. 

மற்றவர்கள் பங்கு கொள்ளாத வரை இது அரைகுறைப் பதிவு தான்.
-#-

சித்திரத்துக்கு நன்றி: http://eng331epicrooks.weebly.com/uploads/1/8/5/7/18573842/3676688.jpg
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

+++++++++++++++++
நாளொரு பக்கம் II: 4


இன்னம்பூரான்
03 02 2016

From my mother, piety and beneficence, and abstinence, not only from evil deeds, but even from evil thoughts; and further, simplicity in my way of living, far removed from the habits of the rich. [1:3 -Meditations.Marcus Aurelius]

சிரத்தை மிகுந்த பக்தியையும், நல்வழியையும், தீய செயல்களை மட்டுமில்லாமல், தீய எண்ணங்களை ஒழித்து வாழ்வதையும் கற்றுக்கொண்டேன். அது மட்டுமல்ல. செல்வந்தர்களைப் போல் அல்லாமல், எளிய வாழ்க்கையில் பயணிக்கக் கற்றுக்கொண்டேன்.

அன்னை அரவணைப்பாள். பத்து மாதம் அடை காத்து உயிர்பிச்சை போட்டது, அன்னையே. வாழ்நாள் முழுதும் அர்ப்பணித்த வாழ்க்கை வாழ்வது அன்னைமார்களே. சங்க இலக்கியங்களிலும், வடமொழி சாகித்யங்களிலும் மிளிர்வது தாயார் தான். வைணவ சித்தாந்தப்படி தாயார் தான் பகவானை அடைய முதற்படி. 

என் அனுபவத்தில், மார்கஸ் ஒளரேலியஸ்ஸின் அன்னை போல எனக்கும் அன்னை அமைந்ததும், என் வாழ்நெறியை முளையிலேயே வகுத்தவர் என்பது என் கொடுப்பினை. அவரில்லையெனில், நான் இதை எழுதியிருக்க முடியாது.
-#-
சித்திரத்துக்கு நன்றி: https://s-media-cache-ak0.pinimg.com/236x/db/70/c5/db70c532f9e3bccb340aa4fdb32695f7.jpgஇன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


_______________________________

நாளொரு பக்கம் II: 5

இன்னம்பூரான்
04 02 2016

From my great-grandfather, not to have frequented public schools, and to have had good teachers at home, and to know that on such things a man should spend liberally. [1:3 -Meditations.Marcus Aurelius]

மார்கஸ் ஒளரேலியஸ் தன்னுடைய கொள்ளுப்பாட்டனிடமிருந்து கற்றுக்கொண்ட நுட்பம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறார். பள்ளிக்கு சென்று படிப்பதை விட வீட்டிலேயே நல்லாசிரியர்களை அமர்த்தி கற்பது சாலத்தகும்; அதற்காக தாராளமாக செல்வு செய்யலாம். என்கிறார். இதை நாம் அக்காலத்துப் பின்னணியில் உற்று நோக்கினால், அந்த பெருமிதம் புரியும். குருதேவ் ரவீந்தரநாத் அப்படிப் படித்து வந்து உலகப்புகழ் எய்தியவர் தான்.

கற்றுக்கொள்வது மாணவனின் சாமர்த்தியம். அடிமையிடமிருந்து அபார சகிப்புத்தன்மையை கற்றுக்கொள்ளலாம். விவசாயிடமிருந்து அசராத உழைப்பைக் கற்றுக்கொள்ளலாம். குதிரை காஸ்தாரியிடமிருந்து புரவியின் துரிதம் பற்றி அறியலாம். நல்லதொரு கோனாரிடமிருந்து பசுங்கன்றின் பராமரிப்பு கற்றுக்கொள்ளலாம். இதற்கெல்லாம் அளவேயில்லை.

எனக்குக் கொள்ளுத்தாத்தா மாதிரி இருந்தவர் என் அத்தையின் கணவரின் அண்ணன். திருச்சியிலிருந்து தஞ்சைக்கு வருவதானால், மதிய உணவுக்கு வருகிறாரா? இல்லை அதற்கு பின்னாலா? என்று தந்தி அடிப்பாராம். அதை அத்தை எனக்குச் சொல்லி 78 வருடங்கள் ஆயின. பாடம் என்னவோ பசுமராத்தாணி போல் பதிந்து விட்டது. விளைநிலத்துக்கு வேண்டிய மழை மொட்டைமாடியில் ஏன் பெய்கிறது போன்ற கேள்விகள் கேட்பேனாம், அவருடைய படுக்கையில் படுத்துக்கொண்டு. அவரும் பொறுமையுடன் பதில் சொல்வாராம். எனக்கு இப்போது ஒரு பெருமை. அவர் பெயர் தான் எனக்கும்!
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://media.dinamani.com/2015/07/25/25sm11.jpg/article2940097.ece/binary/original/25sm11.jpg