Google+ Followers

Friday, October 9, 2015

நோபெல் விருது: 2015: 5

நோபெல் விருது: 2015: 5இன்னம்பூரான்
அக்டோபர் 9, 2015

சில சமயங்களில் பாரதியாரின் ‘கண்ணன் என் சேவகன்’ எங்கிருந்தோ வந்து
 ‘ எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்செல்வம்,இளமாண்பு,சீர்,சிறப்பு,நற்கீர்த்தி,கல்வி,அறிவு,கவிதை,சிவயோகம்,தெளிவே வடிவாம் சிவஞானம்,என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்!’ 
என்று மனமுருக பாடியதைப் போல, இவ்வருட சமாதான நோபெல் பரிசு இந்தியர்களான நமக்கு பாடம் கற்றுக்கொள்ள வகை செய்கிறது. இது ஆனந்தமே. நான் இந்தியாவில் புரட்சி ஏற்படுவதற்கான ஹேதுகள் பல என்று சில வருடங்களாகக் கூறி வருகிறேன். நடந்து முடிந்துள்ள ஒரு மல்லிகை புரட்சியின் (ட்யூனிஷியா: 2011) பின்விளைவாக நிகழ்ந்தது அந்த நாட்டின் கொடுப்பினையே. நான்கு குழுக்கள் (தொழிற்சங்கம், தொழிலக கூட்டமைப்பு, வாணிகம், கைவினைப்பொருள் ஆகியவற்றின் அமைப்பு, ட்யூனிஷியாவின் மனித உரிமை அமைப்பு, வழக்காளர்களின் இயக்கம்) ஆகியவை ஒன்று சேர்ந்து, நாம் கனவு காணாத ஒற்றுமையுடன் Tunisian National Dialogue Quartet என்ற கூட்டணி அமைத்து, இசையின் இலக்கணமாக திகழும் ஒரு ‘தாளவாத்தியகச்சேரி’யை 2013ல் துவக்கி, சக்கை போடு போட்டு, நாட்டின் மேலாண்மையை உன்னதமான நிலைக்கு உயர்த்தி, அரசியல் கொலைகளை கட்டுப்படுத்தி, பரவியிருந்த சமுதாய சீர்கேடுகளை ஒழித்து, உள்நாட்டு யுத்தம் நடக்க இருந்த சூழ்நிலையை விலக்கி, எந்த விதமான பாலியல்/அரசியல் கோட்பாடு/மத நம்பிக்கை பொருட்டு பேதங்களை ஒழித்து, சமாதானம் பேணும் அரசியல் இலக்கணத்தை வகுக்கும் அரசியல் சாஸனத்தை வைர வரிகளால் எழுதியதும் அதற்காக, இரண்டே வருடங்களில் அந்த கூட்டமைப்புக்கு நோபெல் சமாதான விருது கிடைத்ததற்கு, உலகம் முழுதும் விழா எடுக்கவேண்டும். இந்த கூட்டமைப்பு மக்கள், அரசியல் கட்சிகள், மேலாண்மை தளங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்ந்து தேசீயம் வளர்க்க வகை செய்தது. சில சாதனைகள்:
  1. வன்முறை, அச்சமில்லாததால், ஆதரவு இல்லாததால், இறங்குமுகம் கண்டது;
  2. இது ஆல்ஃப்ரெட் நோபெலின் இலக்கை அடைவதாக அமைந்தது, குறிப்பிடத்தக்கது;
  3. பென் அலி என்ற சர்வாதிகாரியின் கொட்டதை அடக்கியது;
  4. இஸ்லாமிய அமைப்புகளும், மதசார்பற்ற அமைப்புகள் இணைந்து இயைவதை நிரூபித்துக்காட்டியது;
  5. சமாதான பேச்சுகளின் செயல்பாடுகளையும், நாட்டுப்பற்றையும் இணைத்தது;
  6. மக்கள் இயக்கம், அமைப்புகள், விழிப்புணர்ச்சி, ‘திருமங்கலமற்ற’ மங்களமான தேர்தல்கள், ஆளுமை பகிர்வுகள், எல்லாவற்றையும் நேர்த்தியாக நிகழ்த்திக்காட்டியது இந்த Tunisian National Dialogue Quartet.
  7. மல்லிகை புரட்சி வீணாகவில்லை; ஒரே காரணம்: Tunisian National Dialogue Quartet.
பின், வேறு யாருக்குத் தான் நோபெல் விருது அளிக்கப்படும்?
சொல்லுமையா, சிவனாரே!
பாரத மாதாவே! இந்தியாவுக்கு Tunisian National Dialogue Quartet போன்ற அமைப்பு தலையெடுக்க வரம் அருள்வாயாக.
-#-
சித்திரத்துக்கு நன்றி:https://pmchollywoodlife.files.wordpress.com/2015/10/nobel-peace-prize-lead.jpg?w=600

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com