Sunday, June 1, 2014

[2] காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370~

காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370~[2]


இன்னம்பூரான்
01 06 2014

1947ல் காஷ்மீரில் நடந்தது என்ன? லெப்டினண்ட் ஜெனெரல் ஶ்ரீ ராஜராஜஸ்வர் மஹாராஜாதி ராஜா ஶ்ரீ ஸர் ஹரிசிங் இந்தர் மஹீந்தர் பகதூர் ‘ப்ளா ப்ளா’ கலோனிய அரசின் விசுவாசி. எட்டு வயதில் கர்ஜான் பிரபுவின் கெளரவ எடுபிடியாக அமர்ந்து, 20 வயதில் காஷ்மீர் தளபதியாக (நம்மூர் ஸ்டாலின் மாதிரியில்லை; சீருடை, மெடல் எல்லாம் உண்டு!) பதவி உயர்த்தப்பட்டு, சொகுசு வாழ்க்கை அனுபவித்தவர். அவருக்கு காங்க்ரஸ்ஸும் பிடிக்காது; முஸ்லீம் லீக்கும் பிடிக்காது. சர்தார் படேலின் சமஸ்தான அணுகுமுறையும் பிடிக்காது. தன்னை மட்டும் பிடிக்கும். இழுபறி ‘ராஜதந்திரம்’ செய்து வந்தார். அக்டோபர் 1947ல் பாகிஸ்தான் ராணுவ உந்தலுடன் பாகிஸ்தானிய புஷ்டூன் பழங்குடி மக்கள் + காஷ்மீர் மீது படையெடுத்தார்கள். அவர்கள் அன்று லபக்கிய பகுதிகள் இன்றும் அவர்கள் கையில். தொடை நடுங்கிய ஹரி சிங் இந்தியாவிடம் ராணுவ உதவி நாடினார்.‘சரி தான். இந்தியாவுடன் சேரப்போவதாக உடன்படிக்கைப் போட்டால் தானே, அது முடியும் என்றார், மவுண்ட்பேட்டன். வேறு வழியில்லை என்று அக்டோபர் 26, 1947 அன்று தன்னுடைய நாட்டை ((including Jammu, Kashmir, Northern Areas, Ladakh, Trans-Karakoram Tract and Aksai Chin) அதில் கையொப்பமிட்ட ஹரி சிங்குக்கு மறுநாளே அளித்த பதிலில் மவுண்ட்பேட்டன் பிரபு எழுதிய முக்கிய வாசகம்: ‘படையெடுத்தவர்களை விரட்டி அடித்து, சகஜ நிலை திரும்பிய பின், மக்கள் கருத்தறிந்து செயல்படவும். இது எமது அரசின் விருப்பம்’. அதற்கிணங்க இந்திய அரசும் மக்களிடம் கருத்தறியும் தேர்தல் நடத்த தயார் என்றது. மற்ற எல்லா ஸமஸ்தானாதிபதிகளிடம் போடாத வழுக்கு மரம் இங்கே. அதனால் காஷ்மீருக்கு ஒரு திரிசங்கு நரக வாழ்க்கை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பகை. சென்னை செண்ட்றல் நிகழ்வு வரை பயங்கரவாதிகள் தாக்கம். நாம் இந்திய அரசை வசை பாடுவதற்கு இல்லை. சர்தார் படேலின் தீர்க்கதரிசனத்துக்கு முட்டுக்கட்டை போட்ட ஹரிசிங்குக்கு தேசாபிமானமும் இல்லை. சுய அபிமானமும் இல்லை. தீர ஆலோசித்துத் தான் ஒருமித்த கருத்துடன் நேருவும் படேலும் இயங்கினர். அவர்களின் அறிவுரை படி, படி இறங்கினார், ஹரி சிங், திருமகனார் கரன் சிங்கை படியேற்றிவிட்டு. கரன் சிங் தங்கமான மனிதர். ஆன்மீகவாதி, காங்கிரஸ் விசுவாசி. ஆனால், காஷ்மீர் விஷயத்தில் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த தொடரில் ஒரு ஆவணத்தை இணைத்து, இந்த உடன்படிக்கை ஆவணம் காணாமல் போன கதையை சொல்லி, இப்போதைக்கு நிறுத்தி, பிறகு தொடருகிறேன். ஷரத்து 370 ஐ இத்தனை விவரம் சொல்லாமல், ‘ஏனோ தானோ’ என்று விவரித்தால். குண்டுச்சட்டியில் குதிரை ஓட்றமாதிரி! அதான்...
தொடரும்

சித்திரத்துக்கு நன்றி:http://aim4u.ch/wp-content/uploads/2014/04/imagesGRWM55QQ-150x150.jpg

பல உசாத்துணைகளில் படிக்க வேண்டிய ஒன்று: http://www.hindu.com/op/2005/09/18/stories/2005091800161400.htm

No comments:

Post a Comment