Google+ Followers

Wednesday, June 4, 2014

[4] காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370

[4] காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370

இன்னம்பூரான்
04 06 2014
(தொடரும்)...[3]...
தஞ்சாவூரான் திரு. என்.கோபாலசாமி அய்யங்கார், மூடி மெழுகாமல் உகந்த பதில் அளித்தார். அது என்ன?

அவருடைய பதிலை கூறுவதற்கு முன்னால், எல்லா துறைகளிலும் புகுந்து தீர்வு காணும் பொறுப்பு உள்ள அமைச்சர்-Minister without Portfolio - என்றால் என்ன என்பதை விளக்க வேண்டும். அது ஒரு அருமையான ஏற்பாடு. அத்தகைய அமைச்சர் பிரதமருக்கு அடுத்தபடி எனலாம். அல்லது சமமானவர் என்று கூட சொல்லலாம். அல்லது பிரதமரின் பிரதிபலிப்பு என்றும் சொல்லலாம். எல்லா துறையிலும் தலையிட்டு தன் கருத்தை/ தீர்வை பதிவு செய்யும் உரிமை அவருக்கு உண்டு. அத்தகைய பதவி வகித்தவர்களில் ராஜாஜியையும், திரு. என்.கோபாலசாமி அய்யங்காரையும் குறிப்பிடலாம். அப்படி ஒருவர் இருந்திருந்தால், 2ஜி விவகாரம் கருவிலேயே தடை செய்யப்பட்டிருக்கும். இனி திரு. என்.கோபாலசாமி அய்யங்காரின் பதிலுக்கு வருவோம்.

‘... இந்தியாவின் மற்ற சமஸ்தானங்களை போல் அல்லாமல், காஷ்மீர், விடுதலை பெற்ற இந்தியாவுடன் இணைவதற்கு தயாரான நிலைமையில் இல்லை. இந்தியாவும் பாகிஸ்தானும், ஜம்மு காஷ்மீர் பொருட்டு போர் களத்தில் இறங்கிவிட்ட தருணம். ஒரு தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், ஒரு அசாதாரண சூழல் உருவாகிவிட்டது; நாட்டின் சில பகுதிகள்  புரட்சியாளர்/ விரோதம் பாராட்டும் நாடு ஆகியோரின் கையில் இருக்கிறது. ஐ.நா.வின் தலையீடு மற்றொரு சிக்கல். காஷ்மீரின் உள்நாட்டு பிரச்னையை தீர்த்தால் அந்த சிக்கலை அவிழ்க்கமுடியும். எப்படியும் ஜம்மு & காஷ்மீர் அரசியல் சாஸன மன்றம் மூலமாக மக்கள் கருத்து தான் தீர்மானிக்கவ வேண்டிய முடிவு, இது. ஏனெனில், அமைதி நிலவும் போது மக்கள் எடுக்கும் முடிவை மதிக்க வேண்டும். சுருங்கச்சொல்லின், ஹரிசிங்கின் ஆபத்சஹாய உடன்படிக்கையை கூடிய சீக்கிரம் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது...’.

நேருவுக்கும், படேலுக்கும் சம்மதமான அறிவிப்பு தான், இது. சர்தார் படேல் ஷரத்து 370 ஐ எதிர்க்கவில்லை. நேரு காஷ்மீரை ஒரு அழகிய பெண் என்றார். ரொமாண்டிக் நோஷன். சர்தாரோ உள்ளதை உள்ளபடி பார்த்து, வெளிப்படையாக இதை ஆதரித்தார்; இந்த ‘திரிசங்கு நரகாசுரர்களை’ அடக்கி ஆண்ட சர்தார் தடாலடி பிரிவினை வாதிகளுக்கு இடம் கொடுக்க விரும்பவில்லை. நேருவின் அனுமதியுடன் ஷேக் அப்துல்லா, மிர்ஜா அஃப்ஜல் பெக், மெளலானா மஸூடி ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தியதற்கு சர்தாரின் சம்மதம் இருந்தது. இத்தனைக்கும் பல கோணங்களில் அவருடையை அவநம்பிக்கையும், அதனுடைய பிரதிபலிப்பும் கண்கூடு. ஒரு காலகட்டத்தில் ஷேக் அப்துல்லாவுக்கும், திரு. என்.கோபாலசாமி அய்யங்காருக்கும் அபிப்ராய பேதம் அதிகரிக்க, திரு. என்.கோபாலசாமி அய்யங்கார் அரசியல் சாஸன அசெம்ப்ளியிலிருந்து ராஜிநாமா செய்யும் அளவுக்கு அபிப்ராய பேதம் வலுத்தது.

(தொடரும்)

சித்திரத்துக்கு நன்றி:http://www.indiaelections.co.in/wp-content/uploads/2009/11/shiekh_abdullah.jpg

பி.கு. ஷரத்து 370 எல்லா மாநிலங்களுக்கும் வேண்டும் என்று ஒரு நண்பர் எழுதியிருந்தார்.

இந்தியாவின் ஒருமைப்பாட்டை அது குலைத்து இருக்கும் என்பது என் கருத்து. இன்று தெலிங்கானா பிறந்த கதையை பாருங்கள். தேசீயம் என்பதற்கு இரு முனைகள் உண்டு.