Monday, July 14, 2014

கன்னா பின்னா சொத்தும் கண்ணாமூச்சி ஆட்டமும்

கன்னா பின்னா சொத்தும் கண்ணாமூச்சி ஆட்டமும்



இன்னம்பூரான் 

திங்கள், 14 ஜூலை 2014 (17:15 IST): பிரசுரம்: 








ஒரு காலத்தில் பீ.ஜீ. கேர் என்ற முதல்வர் இருந்தார், மஹாராஷ்ட்ராவில். பொதுக் கணக்கு மன்றத்தில் தணிக்கை அறிக்கை விவாதிக்கப்படும்போது, ஊழல்கள் அலசப்பட்டால், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளைத் தற்காலிக வேலை நீக்கம் செய்துவிடுவார். அந்த அளவுக்கு லஞ்ச லாவண்யத்தை ஒழிப்பதில் அவருக்கு ஈடுபாடு இருந்தது.



அதே மாநிலத்தில் தற்காலம் நடப்பு என்ன? லஞ்சாதிபதிகளைப் பாதுகாப்பது வழக்கமாகிவிட்டது, அங்கே. ஆதர்ஷ் ஸ்கேமில் அரசியல்வாதிகள் காப்பாற்றப்பட்டனர். நீர்ப் பாசன இலாகாவின் முறைகேடுகளை மூடி மறைத்து விட்டார்கள். அண்மையில் வெளியான சேதி கேளும்.



கிருபாஷங்கர் சிங் என்ற மாஜி அமைச்சர் (மும்பை காங்கிரஸ் தலைமை வேறு) மீது கணக்கில் இல்லாச் சொத்து பத்து சேத்த விவகாரம். நான்கு வருடங்கள் முன்னால் சஞ்சய் திவாரி என்ற பொதுநலம் விரும்பி மேற்படி அமைச்சர், கன்னா பின்னா என்று 300 கோடி ரூபாய்க்கு முறைகேடாகச் சொத்து சேர்த்தார் என்று லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்குப் புகார் செய்தார். அந்தப் பிரிவும் கன காரியமாக, தம்மாத் தூண்டு தான் (11%: முப்பது கோடி) கணக்கில் வரவில்லை என்று சொல்லி மூடி மொழுகி விட்டார்கள்.



திரு.திவாரி லேசுபட்ட மனிதரல்ல. விடாக்கண்டன். பாம்பே உயர்நீதிமன்றத்திடம் விண்ணப்பம் செய்தார், ஆதாரங்களுடன். அந்த நீதிமன்றம் போலீஸை விசாரிக்க உத்தரவு இட்டது. மார்ச் 2012இல்  அவருடைய வீட்டில் சோதனை நடந்தது. அவரும் ப்ரெஷர் தாங்காமல் மும்பை காங்கிரஸ் தலைமையிலிருந்து ராஜிநாமா செய்தார்.



2012 வருடம் டிசம்பர் மாதத்தில், போலீஸ் கமிஷனர் தலைமை தாங்கிய குழுவும் அவரைக் குற்றம் சாட்டி கூண்டில் நிறுத்த அனுமதி கேட்டது. இந்த வழக்கில் அனுமதி தர வேண்டியவர், மாநில சட்டசபை தலைவர் (ஸ்பீக்கர்). அந்தப் பதவியில் இருக்கும் திலீப் வால்ஸே-பாட்டீல் என்பவர் அனுமதி தர மறுத்து விட்டார் என்பது தான் இன்றைய செய்தி. இத்தனைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தக்க சான்றுகளுடன் குற்றம் சாட்டி கூண்டில் நிறுத்த எவருடைய அனுமதியும் தேவையில்லை என்ற உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு கூறியுள்ளது.



கன்னா பின்னா சொத்து சேர்த்துவிட்டு, கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவது, இன்னும் எத்தனை நாளைக்கு?



இதில் மேலும் படிக்கவும் :

மஹாராஷ்ட்ரா

,

பீ.ஜீ. கேர்

,

கிருபாஷங்கர் சிங்

,

சஞ்சய் திவாரி

,

திலீப் வால்ஸே-பாட்டீல்

சித்திரம் பார்க்க வெப்துனியா இணைப்பை க்ளிக்கவும். நமக்கெல்லாம் கிடைக்காத பொருள்!

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment