Google+ Followers

Thursday, July 10, 2014

'புஸ்வாணம்' மத்திய பட்ஜெட் 2014 -15: ஓர் அலசல்

'புஸ்வாணம்' மத்திய பட்ஜெட் 2014 -15: ஓர் அலசல்
பிரசுரம்: http://tamil.webdunia.com/article/union-budget-2014-15/a-quick-review-of-union-budget-2014-15-114071000038_1.html(இன்னம்பூரான், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர்) 

pastedGraphic.pdf


“அத்தையும் செய்யலாம்; இத்தையும் செய்யலாம்; ஐவேஜி இல்லாத்துக்கு என்னத்தைச் செய்யலாம்?” - சர். அமராவதி சேஷையா சாஸ்திரிகள் (1828 –1903), திருவிதாங்கூர் / புதுக்கோட்டை சமஸ்தான திவான். நிகரற்ற நிர்வாகப் புனரமைப்புத் திறனாளி.
இன்று மத்திய அரசின் பட்ஜெட் 2014-15 ஐச் சமர்ப்பித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்களின் பரிதாப நிலையை நூறாண்டுகளுக்கு முந்தைய மேற்படி வினா தயவு தாக்ஷிண்யமில்லாமல் பிரதிபலிக்கிறது. அவரே ‘சவால்’ என்று ஒத்துக்கொண்டு தான் சமாளிக்கிறார். மத்தளத்துக்கு இரண்டு பக்கம் அடி. ஜெட்லிக்கு எல்லாப் பக்கத்திலிருந்தும் இடி, அடி, உதை. 
காங்கிரஸ் கட்சி கூட்டணி கஜானாவைக் காலியாக விட்டுச் சென்றனர். மான்ய துஷ்பிரயோகம் மட்டுமில்லை; கஜானாவையே முழுங்கிய ஊழல்கள் கொள்ளையடித்தன. போதாக் குறையாக, தான்ய குதிரும் காலியாகிவிடுமோ என அச்சம் இருக்கிறது, வருண பகவானின் கருணை இருக்காது என்ற கணிப்பு இருப்பதால். நீரின்றி அமையாது உலகு. 
மூன்றாவதாக, ஈராக் சிக்கலின் எதிர்வினைகள் படாத பாடு படுத்தும். உலகமே ஒரு கிராமம் என்பதால், பன்முனைச் சிக்கல் தோன்றிய வண்ணம் இருக்கும், தற்காலிக முன்னேற்றம் நீடிக்காவிடின். அண்டை நாடுகள் பிரச்னை வேறு. மத்திய அரசின் சீர்திருத்தங்கள், ஆளுமையில் ஊறிப் போனவர்களைப் பாதிக்கும் என்பதால், உள்குத்து, தாக்குதல், கிருத்திரமம் எல்லாம் கைவரிசையைக் காட்டும். இத்தனைக்கும் நடுவில், தங்கமும் தன தான்யமும், தனி மனித ஐஸ்வர்யமும், நாட்டுச் செல்வக் களஞ்சியமும் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை திரு. ஜெட்லி இன்முகத்துடன் இந்திர ஜாலம் செய்து நிறைவேற்றியிருக்க வேண்டும், இந்த பட்ஜெட்டில்! 
1947இலிருந்து எல்லா இந்திய பட்ஜெட்களையும், திரு. நானி பால்கிவாலா அவர்களின் தயவால் புரிந்து, படித்து வந்த எனக்கு என்னமோ ஏமாற்றம் தான். ஒருகால், ஒரு நாள் முன்னால் அறிவிக்கப்படும் பொருளியல் ஆய்வறிக்கையின் துணிவு என் எதிர்பார்ப்பைக் கூட்டி விட்டதோ? அது பல நுட்பங்களை, காரண காரியங்களை, பழங்கதை, புதிய திட்டம், சால்ஜாப்புகள் ஆகியவற்றைக் குறிப்பால் உணர்த்தும். 
ஒரு சூசகம். ஊகங்களும், உண்மை நடப்புகளும் சாமர்த்தியமாகக் கூடி வரும். ஏற்கனவே வெப்துனியாவில் வெளிவந்துள்ள பட்ஜெட் செய்திகளை அரைத்த மாவாக மறுபடியும் பதியாமல், என் உடனடி கருத்துகளை மட்டும் கூறுகிறேன்.  சுங்க வரி பக்கம் போகவில்லை. ஏனெனில் GST (சீர்திருத்தப்பட்ட பொது வரி) விஷயத்தில் பட்ஜெட் தெளிவு தரவில்லை. பட்ஜெட் அனுபந்தங்களைப் படித்த பின் எழுதக்கூடியதை இத்தருணம் தவிர்ப்பது தான் நடுநிலைமை. அதைக் கடைபிடிக்கிறேன்.
என் உடனடி கருத்துகள்:
1. அரசின் கஜானா வரத்து 5.4% -5.9% வரை வளரும் என்றார் ஜெட்லி, நேற்றைய ஆய்வறிக்கையில். அதைத் திரு.ப.சி. வரவேற்றது குறிப்பிடத்தக்கது. அதற்கான சூத்திரத்தைப் பட்ஜெட்டில் எதிர்பார்த்தேன்; ஏமாந்து போனேன்.
2. தங்கத்துக்கு சுங்கம் குறையும். 10% -6%. அதனால் கடத்தல் கட்டுப்படும் என்று நேற்றே ராய்ட்டர் நிறுவனம் ஊகித்தது. அது பொய்த்துப் போனது. சைனாவுக்கு அடுத்த படியாக, இந்தியா தான் தங்கத்தை அதிக அளவு இறுக்குமதி செய்கிறது. தங்கம் வாங்கும் அளவுக்குச் செல்வம் முடக்கப்படும். அதனால் இன்றியமையாத வளர்ச்சிக்குத் துட்டு கிடைப்பது குறைந்து விடும். இது மைனஸ். 
இதற்கு எதிர்வினையாக முடக்கப்பட்ட ஐவேஜு அந்த அளவுக்குப் பணவீக்கம் அதிகரிப்பதைக் குறைத்திருக்க வேண்டும். போன நிதி ஆண்டில் அரசு செல்வ நிலையில் 20இல் ஒரு பங்கு இவ்வாறு முடக்கப்பட்டது: $54 பிலியன்:1017 டன். அது நடக்கவில்லையே. இப்படிப் போனால் அப்படி. அப்படிப் போனால் இப்படி! இந்தப் பிரச்னையை திரு.ஜெட்லி அணுகவேயில்லை.
3. அவரது உரையை உன்னிப்பாகக் கவனித்துக்கேட்டேன். எனக்கு என்னமோ கவலையுடன் திருமதி. இந்திரா காந்தியின் ‘கரீபி ஹடோ’ (ஏழ்மையை விரட்டு) முழக்கங்கள் தான் நினைவுக்கு வந்தன. காற்றாலை, சூரிய ஒளி மின் உற்பத்தி, வேளாண் துறைக்குப் பல முக்கிய திட்டங்கள், தேசிய அளவில் வேளாண் சந்தைகள், விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம், மண் வள அட்டை வழங்க ரூ.100 கோடி, நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5,000 கோடி, பாசன வசதிகளை மேம்படுத்த 1000 கோடி போன்றவை அறிவிப்புகளாக தென்பட்டனவையே தவிர, திட்டமிட்டு வரையறைகள் வகுத்த பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகளாகத் தென்படவில்லை. இந்த வைராக்யமெல்லாம் காற்றோடு போய்விடுமோ என்ற அச்சம் எழுகிறது.
4. ஏன்? பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, வரவு செலவில் துண்டு விழுவதைச் சமாளிப்பது, செல்வம் கூட்டுவது, கடன் அடைப்பது ஆகியவற்றைப் பற்றி அவர் ஆற்றிய உரையில் தெளிவு காண முடியவில்லை.
5. பட்ஜெட் என்றால் எல்லாரும் வருமான வரி பற்றித் தான் முதலில் கவனிப்பார்கள். சம்பளம் / ஓய்வூதியம் வாங்குபவர்கள் தான் வருமான வரியை ஒழுங்காகக் கட்டுகிறார்கள். அதன் பொருட்டு, ஒரு காலத்தில் சிறிய சலுகை ஒன்று இருந்தது. அதை ஆவலுடன் மத்திய வர்க்கம் எதிர்பார்த்தது. ஏமாந்து போனார்கள். பசு மாட்டைக் கறக்காமல் விடுவாரோ, ஜெட்லி?
6. தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.2.5 லட்சமாகவும் / முதியோர்களுக்கு ரூ. 3 லட்சமாகவும் உயர்த்தியது பேருக்குத் தான். டோகனிஸம். இது ஒரு கண்துடைப்பு தான். சேமிப்புக்கான சலுகையை ரூ.1.5 லட்சமாக உயர்த்தியது, பொருளியலை அசட்டை செய்வது. நியாயமாக அதை ரூ.3 லட்சம் என்று நிர்ணயித்திருந்தால், அரசுக்கும் பல செலவுகளுக்கு முதலீடு கிடைத்திருக்கும். தனி மனிதனும் ஆதாயம் பெற்றிருப்பான். அதுவும் போச்சு. கிசான் விகாஸ் சேமிப்பு பத்திரங்களால் கணிசமான சலுகை கிடைக்கவில்லை.
7. பல கோடி வருமானத்துக்கும், சில லட்ச வருமானத்துக்கும் ஒரே விகிதத்தில் வரி. இது தகுமோ? ஒரு 40% ஸ்லாப் வரவேண்டும். நான் ஒரு சிறிய முன்னேற்றமாவது எதிர்பார்த்தேன். கிட்டவில்லை. அம்பானியும் அம்பி மாமாவும் ஒரே விகிதாச்சாரத்தில் வரி கட்டுகிறார்கள்! 
8. சுருங்கச் சொல்லின், முக்கியமாக மும்முனை மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன - பொருளியல் சிக்கல்களை, அரைவேக்காடாக தனித் தனியாக அலசாமல், பொதுவான, முழுமையான அணுகுமுறை செயல்படுத்தப்படும் என்றது ஆய்வறிக்கை. அடுத்தபடியாக, தரகர்களை விலக்கி, வேளாண்மைக்கும், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வருவாய்க்கும் ஆதாரமான நவீன சந்தை அணுகுமுறை செயல்படுத்தப்படும் என்ற ஆய்வறிக்கையிலும் விவரம் போதாது; பட்ஜெட்டும் மூடி மெழுகி விட்டது. 
9. எல்லா விதமான நிலக்கரிக்கான சுங்கவரி ஒன்றே என்று அவர் 12:57 மணியில் சொன்னது எனக்குத் தூக்கி வாரி போட்டது. பின்னணி கொஞ்சம் கூட கூறப்படவில்லை.

10. பல வருடங்களாகப் பேசப்படும் நேரடி வரித் திட்டம் (Direct Tax code) பற்றி, மேலும் பேசப்படும் என்கிறார்!
ஆக மொத்தம் எனக்கு ஏமாற்றம் தான். இந்த ஏமாற்றத்தைப் போக்க, மேலும் ஆக்கப் பூர்வமான திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine


www.olitamizh.com