Google+ Followers

Thursday, March 27, 2014

தோணித்து! போட்டேன்: இன்னம்பூரான் பக்கம் 7 – அதீதம்

இன்னம்பூரான் பக்கம் 7 –

அதீதர்களே!

அடுத்த வாரம் டிசம்பர் 11 அன்று மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் அவர்களின் ஜன்மதினம். அதை பற்றி நினைத்த மாத்திரம் நான் வலுக்கட்டாயமாக நாம் ‘வீர சுதந்திரம்’ பெறுவதற்கு முன்னால் இருந்த கால கட்டத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டேன். 1930-43 களில் பாரதியாரின் குடியிருப்பு, மாணவர்கள் நாவில் மட்டுமே. அவருடைய பாடல்கள் ஸ்ருதி தான். எளிதில் படிக்கக்கிடைக்காது. சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.

நான் சொல்லப்போவது இன்றைய சூழ்நிலையில் எடுபடாமல் போகலாம். பாரதி போற்றியதெல்லாம் அகக்கண்ணுக்கும், புறக்கண்ணுக்கும் புலப்படவில்லை என்பார்கள் இன்றைய தேசீய தலைவர்கள் என்று ஊடகங்களில் பெரிதும் பேசப்படுகிறது. கரி, வைரம், நீர், ஆகாயம், மலை, இரும்பு, ஏழ்மை எல்லாவற்றிலும் துட்டு பார்க்கிறார்களாம். இந்திய தணிக்கைத்துறை கரடியாக கத்துகிறது. நான் அவ்வப்பொழுது நினைத்துக்கொள்வது உண்டு ~ மஹாகவி இதையெல்லாம் பார்த்தால் என்ன சொல்வார் என்று? என்ன சொல்வார்?
‘என்று தணியும் இந்த பாழுங்காசுக்கு வந்த மோகம்?’ என்று பாடுவார்.

சில வருடங்கள் முன்னால் தஞ்சை மேலராஜவீதியில் இருக்கும் கொங்கணேஸ்வரர் பாடசாலைக்கு விஜயம் செய்தேன். தலைமை ஆசிரியர் எடுத்துக்கொடுத்த என் மூன்றாம் வகுப்பு பற்றிய பதிவின் நகலை கொடுத்த போது மனம் அலை பாய்ந்தது. எனக்கு பாலு சார் தான் எல்லாம் என்றேன். நான் அவருடைய மகன் என்றார், அருகில் இருந்த நண்பர். அந்த பாலு சார் சொல்லிக்கொடுத்த படி திலகர் திடலில் நான் டிசெம்பர் 11, 1941 அன்று பக்திப்பரவசத்துடன் ஆற்றிய சொற்மாரி கேட்டு ஒரு பெரியவர் சபையிலேயே என்னை கட்டிக்கொண்டு அழுதார். பரிசாக கிடைத்த நூல்கள் இரண்டு: பாரதியாரின் கதைக்கொத்தை யாரோ கொத்திக்கொண்டு போய்விட்டார்கள். என் வாழ்க்கையை வகுத்த பகவத் கீதையை என் பெண் பத்திரமாக வைத்திருக்கிறாள். கலோனிய அரசின் உளவுத்துறை குறிப்பு எடுத்துக்கொண்டதாம். எனக்கு ஒரே பெருமை. அத்தை தான் திருஷ்டி கழித்து விட்டு, என்னை மறைத்து வைத்தாள். இதெயெல்லாம் பாடசாலையின் மாணவர்களுக்கு சொன்னபோது எனக்கு அதீத பெருமை!
ஐந்து வருடங்களுக்குப்பிறகு உசிலம்பட்டி ஜில்லா போர்ட் கள்ளர் ரெக்ளமேஷன் பள்ளி. எந்த கணக்கில் என்னை மாணவர் தலைவனாக தேர்ந்தெடுத்தார்கள் என்று அறியேன். ஆனால், நான்தான் சட்டாம்பிள்ளை! தலைமை ஆசிரியர் ஜனாப் யாகூப் கான் அண்டை வீடு. குடும்ப நண்பர். நான் அவருக்கு செல்லம் வேறு. ஒரு நாள் காலை பிரார்த்தனையில் ‘வந்தே மாதரம்’ பாடச்சொன்னேன். ஒச்சத்தேவனும் பாடினான். தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டு நின்றார். ஆக்ஷேபிக்கவில்லை. மறுநாள் தற்காலிக பதவி நீக்கம். திரு. சிவசுப்ரமண்ய ஐயருக்கு தற்காலிக பதவி உயர்வு. நாங்கள் ஹர்த்தால் செய்தோம். ஐயரோ அப்பாவுக்கு ஆப்த நண்பர். அவர் வந்து கேட்டும் நாங்கள் ஹர்த்தாலை வாபஸ் வாங்கவில்லை, ஜனாப் அவர்கள் பதவிக்குத் திரும்பும் வரை. ஏதோ ஒரு மாதிரியாக என்னை கைது செய்து, உடனுக்குடனே விட்டும் விட்டார்கள்.
இதெல்லாம் தம்மாத்தூண்டு சமாச்சாரங்கள். மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்  ஒரு நாள் தமிழ்த்தென்றல். திரு.வி.க. அவர்களின் தேசபக்தன் இதழ் அலுவலகத்துக்கு வந்தார். உதவி ஆசிரியராக இருந்த பரலி.சு.நெல்லையப்பர் எல்லாரையையும் பக்குவமாக தயார் செய்து வைத்திருந்தார். பாரதி விஜயம் பற்றி மற்றொரு உதவி ஆசிரியரான திரு.வெ.சாமிநாத சர்மா எழுதியிருந்ததை ஒரு நூலுக்காக ஆங்கிலப்படித்தினேன். அதனுடைய தமிழாக்கத்தை யான் ‘‘செய்யுந்தொழிலுன் தொழிலே காண்;…’ என்று இறை வணக்கம் செய்து, ‘பால பருவத்தில் எனக்கு தேசாபிமானம் என்ற அடிசில் ஊட்டி…’ என்று குரு வந்தனம் செய்து,
‘வந்தாரே அமானுஷ்யன்;
சட்டையில் காலரில்லை;
ஆனா டை கட்டி தொங்குதடா,
சீமானே! மனம் போல் திறந்த கோட்டு,
தோளின் மேல் சவாரி,
நீலக்கலரிலே, ஐயா, சவுக்கம் ஒன்று.
முண்டாசு முடிச்சிருக்கான், கரை போட்ட துண்டாலே.
அதற்கு வாலும் தொங்குதடா, ராச மவராசன் போல.
எம்மாம் பெரிசு சோப்புக்கலர் குங்குமப்பொட்டு.
மீசையாவது, ஒளுங்கா, மன்மதனே, கத்திரிச்சிருக்கு.
எத்தனை நாள் பட்டினியோ, தெய்வத்திருமகனே!
கன்னமெல்லாம் ஏண்டாப்பா நசுங்கிப்போச்சு?
உனக்கு வில்லியம் ப்ளேக் தெரியுமோடா?
அவன் பாடின மாதிரி, புலிக்கண்ணோ உந்தனுக்கு?
என் கண்ணெல்லாம் சுணங்குதும்மா;
அப்படி ஜொலிக்கது உன்னோட கண்மலர்கள்!
மஹமாயி!  ஆதி பராசக்தி!
அந்த மணக்குளத்து பிள்ளையாரே!
பாஞ்சாலி மானம் காத்தாய்! நீ
இவனுக்கு சேவகன் இல்லையாடா?
அதெல்லாம் சரி.
அதென்ன ரயில் வண்டி புகை, ‘குப்’,குப்’னு?
ஓ! தொரை உரையூர் சுருட்டுத்தான் பிடிக்கிறாரு!

என்று கவி வந்தனம் செய்து, ‘பராக்! பராக்!’ என்று சல்யூட் அடித்து, அஞ்சலி செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, விடை பெறுகிறேன். உங்கள் யாவரையும் அந்த ஆதிபராசக்தியின் திருவருள் ரக்ஷிக்கட்டும்.

பிரசுரம்: அதீதம் இதழ்
சித்திரத்துக்கு நன்றி: http://bharathiyar.gratussolutions.com/sites/all/themes/bharathiyar/images/bharathiar1.jpg