Google+ Followers

Thursday, March 27, 2014

சொன்னால் விரோதம்: 2

 - innamburan@gmail.com - Gmail

சொன்னால் விரோதம்: 2
Inline image 1
‘கரையானை ஒரு நாள் மருந்து அடித்துக் கொல்ல முடியாது. அடித்தளம் புகுந்து வேரொடு களைய வேண்டும்...எத்தனை நாட்கள் தான் நாம் சால்ஜாப்பில் காலம் தள்ளமுடியும்? பெண்களை தாழ்த்தும், இழிவு படுத்தும் வன்முறைகளை தடுக்க நாம் என்ன தான் செய்ய வேண்டும்? ...I have thrown the guantlet. You do what you like.’ என்று 13 நாட்களுக்கு முன் எழுதியதற்கு பதிலாக, ‘பெற்றோர்கள் ஆண்பிள்ளைகளை வளர்க்கும்போதே பெண்களை மதிக்கணும் என்பதை கற்றுக்கொடுக்கணும். ‘ என்றார் ஒருவர்; அயோத்தி தாசப் பண்டிதர் சிந்தனைகளை முன்வைத்து  ‘பகுத்தறிவு வாதத்தை கற்றோர் மத்தியில் பரப்பாமல் குமுகத்துன் கடைக்கோடியில் வாழும் எளிய மனிதர்கள் தங்கள் தாழ்வுக்கான காரணத்தை அறிய ஒரு அறிவாயுதமாக அளிக்க வேண்டும்.  குறிப்பாகப் பெண்கள் தங்களின் தாழ்வுக்கான காரணத்தை உய்த்துணர அறிய கடந்த கால வரலாற்றைத் திரிக்காமல் தொன்மம் புனைவில்லாமல் அறிய வாய்ப்பளிக்க வேண்டும்’ என்றார் உளவியல் நன்கு அறிந்து, தெளிவுடன் செப்பும் மற்றொருவர். மற்றபடி மெளனம் அனர்த்த சாதகமாக பரிமளித்தது. இதற்கு நடுவில் ஒரு practising forensic psychiatrist உடன் ஆக்கப்பூர்வமான உரையாடல் நடந்தது. அது எல்லாம் நிற்க. ஒரு அமெரிக்க நடவடிக்கையையும், இந்திய புள்ளி விவரமும் பார்த்தோம். இப்போது ஜப்பானை பார்ப்போம்.
ஜப்பானில் பெண்களின் மேல்படிப்புக்கு அரசும், சமுதாயமும் மற்ற உலகநாடுகளை விட அதிகமாக முன்னுரிமை கொடுக்கிறது. ஆனால், அத்தனையும் வீண். சம்பளத்துக்கு ஊழியம் செய்பவர்களில் 63% தான் பெண்கள்; அது மேன்னாட்டு சதவிகிதத்தை விட மிகக்குறைவு. முதல் குழந்தை பிறந்தவுடன் அவர்களில் 70% வேலைக்குப் போவது இல்லை, பெரும்பாலும் நிரந்தரமாக; அமெரிக்காவில் அது 30%.
ஜப்பானிய பிரதமர் திரு. ஷின் ஜோ ஏப் நாட்டின் செல்வநிலையை பெருக்க பெண்கள் மிளிரவேண்டும் என்கிறார். ஆணும் பெண்ணும் சரி சமானமாக வேலைச்சந்தைக்கு வந்தால், 80 லக்ஷம் ஊழியர்கள் அதிகரிப்பார்கள், நாட்டின் செல்வம் 15 % அதிகரிக்கும் என்று ஒரு உலகப்புகழ் நிதி நிறுவனம் சொல்வதை ஆதரிக்கிறார். மழலைகள் மையம், தாய்ப்பால் பிரச்னை என்று நுட்பமான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டி, பிரச்சாரம் செய்கிறார். இத்தனைக்கும் 2005ல் அவர் பழமை வாதி தான். பெண்கள் முன்னேறினால் கலாச்சாரம் பாதிக்கப்படும் என்று கூட சொன்னார். அவருடைய கட்சியின் சிகாமணி ஒருவர், ‘பெண்கள் குடும்பத்தலைவியாக இருப்பது தான் சாலத்தகும். மழலைகள் பெருகும். காலாகாலத்தில் அதிகப்படி ஊழியர்கள் கிடைப்பார்கள்’ என்று ஜெர்மனியின் ப்ஃரெட்ரிக் தெ க்ரேட் மாதிரி திருவாய் மலர்ந்து அருளினார். ப்ஃரெட்ரிக் தெ க்ரேட் அவர்களின் திரு வாசகம், ‘நிலா காய்கிறது. 20 வருடங்களுக்கு பிறகு நமக்கு சிப்பாய்கள் பலர் கிடைப்பர்!’ ஜப்பானில் நடந்தது என்னமோ எதிர்மறையாக. கிட்டத்தட்ட பெண்ணொருத்திக்கு ஒரே பிள்ளை என்ற சராசரி வந்தது. 2050 வாக்கில் வேலைக்கு ஆள் கிடைப்பது 40% டவுன் என்ற ஞானோதயம் ஏற்பட்டது. எளிதான, நியாயமான தீர்வுகளை புறக்கணித்தால், இது தான் கதி. (இந்தியா சம்பந்தப்பட்டவரை குடும்பக்கட்டுப்பாடு முக்கியம். அது தளர்வதுக்குக் காரணம் ஆண்களும் என்று சொல்லலாம்.)
மேலும் சொல்லப்போனால், ஊழியமும் பிள்ளைப்பேறும் ஒன்றுக்கொன்று முரண் அல்ல. மேல்நாடுகள் அதற்கு உதாரணம். ஜப்பானிய/ இந்திய கிராமீய வாழ்க்கை அதற்கு உதாரணம். 2000 ஆண்டு காலகட்டத்தில் திரு. ஷின் ஜோ ஏப் அவர்களின் பெண்ணிய அமைச்சரான திருமதி. யோகோ காமிகாவா, பெண்கள் முன்னேற்றம் தென்படவில்லையே என்று திகைத்துப்போனதாக சொல்கிறார்.
இது எல்லாம் ஒரு பீடிகை தான். சொல்ல நிறைய விஷயம் உளது. பார்க்கலாம். ஒரு வினா:
“இந்தியாவில் குடும்பத்தலைவிகள், அதுவும் குழந்தைகள் காலேஜ் போன பிறகு, தன்னாரவப்பணியில் அசகாய வேலைகள் செய்யலாம். தற்காலத்தில் அப்படி இயங்குபவர்களின் வரலாறு இருக்கிறதா? சென்னையில் இருப்பவர்கள், கூப்பிட்டு பயிற்சி அளிக்கப்பட்டால் வருவார்களா?
நன்றி, வணக்கம்.
உசாத்துணை:
சித்திரத்துக்கு நன்றி:http://www.noolulagam.com/book_images/1742.jpg
பி.கு. என் வலைப்பூவில் இது தொடரும்.