Google+ Followers

Tuesday, October 15, 2013‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார், மகாகவி பாரதி.  சமுதாயத்தில் பெரிய மீன் சின்ன மீனை விழுங்குவதை ஒழிக்க வேண்டும், கொத்தடிமை போன்ற தீமைகளை ஒழிக்கவேண்டும், தரகாதிபதிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்ற அதனுடைய உட்கருத்தை புரிந்து கொள்ளாமலேயே ஒரு நூற்றாண்டை ஓட்டி விட்டோம். ஆனால்,அதை பிரசார பீரங்கியாக துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கவில்லை. யுத்த காலத்தில் விதிக்கப்பட்ட ரேஷன் முறை மூலம் பதுக்கும் வியாபாரிகள் கொள்ளையடித்தனர். திடீரென்று அந்த முறையை ரத்து செய்து, அவர்களை ராஜாஜி முடக்கினார். அது பழங்கதை. இன்றும் ரேஷன் அரிசி கடத்தப்படும் செய்திகள் வந்த வண்ணம் உளன. இந்த வருடம் மத்திய அரசு மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கும் மக்கள் நல திட்டத்தை மனித உரிமையாக உயர்த்தி சட்டம் வகுத்துள்ளது, தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில். நலம் தரும் இந்த ஏட்டுச்சுரைக்காய் நடைமுறையில் என்ன என்ன அவதாரம் எடுக்குமோ என்ற கவலை எனக்கு இருக்கிறது.
இன்னம்பூரான்
16 10 2013 


அன்றொரு நாள்: அக்டோபர் 16 உலக உணவு நாள்

Innamburan Innamburan Sun, Oct 16, 2011 at 6:38 PMஅன்றொரு நாள்: அக்டோபர் 16
உலக உணவு நாள்

பசி வேறு;கடும்பசி வேறு; 
பட்டினி வேறு; கொலை பட்டினி வேறு; 
பட்டினிச்சாவு வேறு. 
பசிக்கு உணவு வேறு; ருசிக்கு உணவு வேறு.
நெல்லும் நாற்றும் வேறு; கரும்பும் அஸ்கா சீனியும் வேறு; 
காய்கறி தோட்டம் வேறு; காஃபி, தேயிலை தோட்டம் வேறு. 
நஞ்சை வேறு; புஞ்சை வேறு; தரிசு வேறு. 
பாசன நடவு வேறு; மானம் பார்த்த பூமி வேறு. 
பல்லாயிரம் ஏக்கர் அமெரிக்க ஐயோவா இயந்திர நடவு வேறு; 
காட்டை பொசுக்கி, விதையை வீசி, விளைந்ததை உண்பது வேறு. 

இவற்றையெல்லாம், பொருத்தமான வகையில் பிரித்து பார்த்து, உரிய காலத்தில், உற்ற நடவடிக்கை எடுக்காமல், பொத்தாம் பொதுவாக, ‘விவசாயம் சோறு போடாது.’,‘அரசே அன்னையும், பிதாவும்.’, ‘சருகுக்கும் தரகு உண்டு.’ ‘மரம் வைத்தவன் நீர் ஊற்றுவான்.’ என்று வீண் பேச்சில் ஒரு நூறாண்டு காலம் கழித்து விட்டோம். இந்த தளைகளிலிருந்து விடுபட்டால் தான், வேளாண்மை வளரும். விவசாயம் கெளரதை பெறும். உணவு உற்பத்தி பெருகும். பசி தணியும். வாழ்வு செழிக்கும். இது நிற்க.

அக்டோபர் 16, 1945 அன்று ஐ.நா. வின் பிரிவாக உணவு & வேளான்மை நிறுவனம் (FAO) தொடங்கப்பட்டு நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 1980 லிருந்து இந்த தினம் உலக உணவு நாளாக கொண்டாடப்படுகிறது. வருடாவருடம் ஒரு கோட்பாடு. 1910ம் வருடம் பசி ஒழிப்பதை பற்றி. எனவே, ‘பசியில்’ தொடங்கினோம். வேளாண்மையில் விடை காண விழைவோம். தொட்ட குறை, விட்ட குறையெல்லாம், உங்களுடைய மேலான கருத்துக்களை உள்ளுறையாக்கி அக்டோபர் 17 அன்று (நாளை) விவாதிக்கலாம். அன்று உலக வறுமை ஒழிப்பு நாள்.

முதலில் கண்ணில் பட்டது: வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் எழுதிய ‘ "ல"கரம் மாறியதால்  விளைநிலம்  விலை நிலமானது!'  என்கிற குறுங்கவிதை [உபயம்: கண்ணன் நடராஜன்]. விளை நிலத்திற்கு என்றும் நல்ல விலை உண்டு. நிலம், நீச்சு நாட்டுடமை. அது குறைந்த விலைக்கு/ இனாமாக/ மான்யமாக தனியாரிடம் போய் விடுகிறது. அதனால் தான் பட்டா,அடங்கல், தண்டல், கிஸ்தி, கிரயம் போன்றவை. இது உலக மரபு. இந்த அடித்தளத்தை குலைக்காமல், விவசாயத்தை மேன்படுத்த முடியும். 

அடுத்த படி கண்ணில் பட்டது: தமிழ்நாட்டு வனத்துறை 1.43 லக்ஷம் ஹெக்டேர் ~ விளைநிலங்களில், 182 கோடி ரூபாய் செலவில், ஐந்து வருடங்களில் 10 கோடி மரங்கள் நடுவார்கள் என்ற அக்டோபர் 16, 2011 செய்தி. ‘காடு வா! வா!’ என்கிறதோ! ஆந்திராவில் புல் வளர்க்கிறேன் பேர்வழி என்று வேலி மட்டும் (ஓட்டைகளுடன்!) போட்டதும், குஜராத்தின் புல் வளர்க்கும் மிஷீனும்[!] தணிக்கை செய்திகள். சொன்னால் அபராதம். பிரதமருக்கு தணிக்கை மேல் ‘முணுக்’ என்று கோபம். இதுவும் நிற்க. 

பல நூலகங்கள் பிடிக்கும் அளவு வேளாண்மையை பற்றி நூல்கள் இருப்பதால், நான் சொல்ல வந்த விஷயத்தை சுருக்கி பட்டியலிட்டு, இது சில துளிகள் மட்டுமே என்று அடக்கத்துடன் கூறி, மேலதிக ஆதாரத்துடன் கூடிய செய்திகளை, அறிவுரைகளை வரவேற்போமாக.
  1. மேல்நாடுகளில் விவசாயிகள் செல்வந்தரே; அங்கும், அவர்களுக்கு மான்யம் கிடைக்கிறது; ஆனால், இந்தியாவை போல் சுற்றி, வளைத்து, தாரதம்யம் தவிர்த்து அல்ல; நாமும் விவசாயத்திற்கு வரி விலக்கு, இலவச மின்சாரம் போன்றவையையும், அவற்றின் துஷ்பிரயோகத்தையும் தவிர்த்து, நேரடி மான்யம்,  ஆங்கிலேயகாலத்து தக்கவி கடன் வழங்குதல் போன்ற முறைகளை பற்றி ஆலோசிக்கலாம்.
  2. தரகர் ராஜ்யம் இந்திய அளவுக்கு எங்கும் பேயாட்டம் ஆடுவதில்லை; அதை முற்றிலும் ஒழித்திடவேண்டும். ஐயம் இருப்போர் மேட்டுப்பாளையம் தேங்காய் மண்டி, கோயாம்பேடு கறிகாய் மண்டி, சேலம் மாம்பழ மண்டி, பண்டார வாடை வெற்றிலை மண்டி, நேந்திரங்காய் வாழைத்தோட்ட அச்சாரம், அரிசி மில்கள் நெல் வாங்கும் வித்தைகள் ஆகியவற்றை பார்வையிடுங்கள். 
  3. இந்தியாவில், ஒரு நூறாண்டாக, ஆண்டையும், நிலச்சுவான்தாரும், ஜமீனும், ஜாகீரும்;, பெரிய/சிறிய/ மைனர் பண்ணைகளும், லேவாதேவியும், தரகும், பார்ப்பன ஆதிக்கமும் இணைந்து, விவசாயியை பெரும்பாலும் வருத்தின என வரலாறு காண்கிறோம். .  ஐயமிருப்போர் சத்யஜீத் ராயின் ‘துக்கி’ என்ற திரைப்படத்தைப் பார்க்கவும். அது கூறுவது உண்மை; அகில இந்தியாவை பிரதிபலிக்கிறது. நல்லவர்களும் இருந்திருக்கிறார்கள், ரசிகமணியின் ‘மரக்கால்’ முதலாளியை போல. இது ஒரு பின்னணி. முடிந்தவரை அடித்தளத்தை மாற்றாமல், சீர்திருத்தங்கள் செய்யலாம்.
  4. அரசின் பொறுப்புகள்: அணைக்கட்டு, நீர்நிலை,கண்மாய், வாய்க்கால் பராமரிப்பு, உரிய காலத்தில் நீர் தருவது, வாராந்தாரி சுழற்றல் நீர் பங்கீட்டை ஆவணப்படுத்துவது, விதை தானியம், உரம், ஆகியவற்றின் தரத்துக்கு உத்தரவாதம், ரோடு, மார்க்கெட், விலை நிர்ணய/ அடிப்படை கூலி மேற்பார்வை, விவசாய சமூக நலன், விவசாய திட்டம், கொள்கை.
  5. பாசனம்: நீர் தருவது பருவகாலத்தை பொறுத்து. கண்மாய்களையும், வாய்க்கால்களையும் பராமரித்தால், நிஜமாகவே பாதிக்கிணறு தாண்டிய மாதிரி. கிராமம் தோறும் இதற்கான விவசாயிகள் அறங்காவலர் குழுக்கள் தேவை. 1947க்கு முன் அவை இருந்தன. மாநில நீர்ப்போர்கள் அசிங்கம். பிறகு தான் அவற்றை பற்றி பேசமுடியும். 1947க்கு முன்னால் வாராவாரம் சுழற்றுமுறை நீர் வினியோகம் நியாயமாக நடந்தது. பிற்காலம் அரசை கைப்பற்றி, அதன் மூலம் ஆண்டையும், நிலச்சுவான்தாரும், ஜமீனும், ஜாகீரும்; பெரிய/சிறிய/ மைனர் பண்ணைகளும் ஆன அரசியல் வாதிகளும், அவர்களின் முள்ளுப்பொறுக்கிகளும் அதை துஷ்பிரயோகம் செய்தனர். இதை தடுக்க மக்கள் மானிட்டர் தேவை. 
  6. அறங்காவலர் குழுக்கள் + மக்கள் மானிட்டர்: எப்படி உருவாக்குவது? ஆங்கிலேயரின் ஆட்சியில், லாரன்ஸ் சகோதரர்களும் (பஞ்சாபில்) ரிப்பன் பிரபுவும், டாட்ஹண்டர், ஜனார்த்தன ராவ் (தமிழ் நாடு) போன்றவர்களும் தொடங்கிய கூட்டுறவு இயக்கம் போன்ற சமுதாயசீர்திருத்தங்கள் அரிது. கள்ளர் புனர்வாழ்வுக்கு இந்த இயக்கம் மந்திரக்கோலாக உதவியது. 1947க்கு பிறகு அரசியல்வாதிகளின் தலையீட்டால், கூட்டுறவு காட்டுத்தனமான துஷ்பிரயோகத்தில் சிக்கியது. 1960 களில் சுட்டு சுண்ணாம்பு ஆகிவிட்டது. வேறு எந்த இயக்கமும் வேளாண்மைக்கு உகந்தது அன்று. இன்றுள்ள துண்டு நில விவசாயம் மாறவேண்டும். கிராமீய ‘ஊர் பெரியவர்கள்’+ பஞ்சாயத்து+ கூட்டுறவு சங்கங்கள் + தன்னார்வக்குழுக்கள் + அரசின் எல்லைக்குள் அமைந்த ஈடுபாடு + சமுதாய விழிப்புணர்ச்சி பிரசாரங்கள் + நில சொந்தக்காரர்களின் நற்குணங்கள் எல்லாம் அமையக்கூடிய ஜங்ஷன்: கூட்டுறவு. அந்த வழியை செவ்வனே அமைப்போமாக.
   இன்னம்பூரான்
   16 10 2011
பி.கு. இது அறிமுகத்தின் முதல் பத்தி; முழுமை இல்லை. அதை பெரிது படுத்தாமல்,ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தருக.
Food+for+the+Future.jpg
Nagarajan Vadivel Sun, Oct 16, 2011 at 7:33 PMசுதந்திர இந்தியாவில் விவசாயத்தில் சில விஷ(ம)ப் பரிசொதனைகள் நடந்ததென்னவோ உண்மை
1. அவரவர் தேவைக்கென்றிருந்த விவசாயத்தை யாருடைய பேராசைக்கோ என்று டில்லி பாபுக்கள் திட்டமிட்டு பசுமைப் புரட்சி என்று தொடங்கி இன்று தொடங்கியவர்களே தவறு செய்துவிட்டோம் அதிக உற்பத்தி என்ற வெறியுடன் வேலை செய்து நிலமகளை நாசப் படுத்திவிட்டோம் என்று இன்று மரண வாக்குமூலம் தரும் நிலை
2. விவசாய வளர்ச்சியை மறந்து தொழில் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி விவசாயியைச் சவலைப் பிள்ளையாக மாற்றிய சாதனை 21 ஆம் நூற்றாண்டின் மகத்தான சாதனை
3. வளமான விளை நிலங்கள் விவசாயிகளிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்டு பன்னாட்டுப் பொருளாதார மண்டலங்களாக மாற்றம் பெற்று உழவனுக்கு உரிய வருவாய் பன்னாட்டு வணிகர்கள் லாபமீட்டி வெளிநாட்டுக்கு அனுப்பும் வேலை வெற்றிகரமாக நடக்கிறது
4. பன்னாட்டு ஈட்டிக்காரர்கள் விவசாயப் பயிர் வளர ஆரம்பிக்கும்போதே சூதாட்டம் ஆடி அடிமாட்டு விலைக்கு விவசாயப் பொருட்களை வாங்கிப் பதுக்கிவைத்து விளையாடும் மங்காத்தா விளையாட்டு அரசு ஆதரவுடன் நடக்கிறது
5. தேனீ போன்று சுறுசுறுப்புடன் வேலைபார்த்த விவசாயத்தொழிலாளர்கள் நூறு நாள் உணவுக்கான வேலையில் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறும் கலையைக் கற்றுக்கொண்டு வருகிறார்கள்
உலக விவசாயக் கழகம் ஊத வேண்டிய சங்கை ஊதிவிட்டது.  உலகெங்கும் உணவுப் பற்றாகுறை என்ற குமிழி பெரிதாகிக்கொண்டே வருகிறது.
இரண்டு பருவமழை பொய்த்தால் ஒளிரும் இந்தியா அமாவாசையாகிவிடும் என்பதில் ஐயமில்லை
நாகராசன்

Thevan Sun, Oct 16, 2011 at 11:25 PM


ஐயா, 
ஐநாவுக்கும் உலக நாடுகளில் ஏற்படும் பசிக் கொடுமைக்கும் சம்பந்தம் உள்ளதா, குறிப்பாக சோமாலியாவில் உணவில்லாமல் லட்சக்கணக்காக மக்கள் இறந்து வருவதில் ஐநாவின் பொறுப்பு என்ன என்று எழுதுங்களேன்.  Innamburan Innamburan Mon, Oct 17, 2011 at 5:16 PM


ஐயா, 

ஐநாவுக்கும் உலக நாடுகளில் ஏற்படும் பசிக் கொடுமைக்கும் சம்பந்தம் உள்ளதா, குறிப்பாக சோமாலியாவில் உணவில்லாமல் லட்சக்கணக்காக மக்கள் இறந்து வருவதில் ஐநாவின் பொறுப்பு என்ன என்று எழுதுங்களேன்.  


~ நண்பர் தேவனுக்கு, 
சோமாலியா மக்களுக்கு நீங்கள்/உங்கள் சுற்றம்/சின்ன சமூகம்/
 பெரிய சமூகம்/மும்பை/மஹராஷ்ட் ரா/இந்தியா செய்த உதவிகளை சொல்லுங்கள், முதலில். 
உமது வினாவுக்கு
விடையளிக்க உதவும்.


இன்னம்பூரான்Thevan Mon, Oct 17, 2011 at 8:25 PMஐயா,
கேள்வியின் மூலம் நல்ல பதிலை கொடுத்ததற்கு நன்றி. 
நான் கூட ஐநா என்பது என்னையும், என் சமூகம், மும்பை, மஹராஷ்டிரா, இந்தியாவை விட பெரியது என்று நினைத்து விட்டேன்.
Innamburan Innamburan Tue, Oct 18, 2011 at 12:06 AM

என்ன அருமையான பதில், தேவன்! எனக்கு நீங்கள் நுட்பம் உணர்ந்ததைக்கண்டு,மிக மகிழ்ச்சி. இன்றைய கட்டுரையை நோக்கி, கருத்து எழுதுக. சில நிமிடங்களில் வரும்
அன்புடன்,