Google+ Followers

Saturday, June 8, 2013

மனித நேயம் 6: ஒரு பின்னூட்டம்

மனித நேயம் 6: ஒரு பின்னூட்டம்

Innamburan S.Soundararajan Sat, Jun 8, 2013 at 10:38 AM

மனித நேயம் 6: ஒரு பின்னூட்டம்
Inline image 1

ஜூனியர் விகடனின் இன்றைய கட்டுரையின் பின்னூட்டம், இது, என் வலைப்பூவிலும், மின் தமிழ் போன்ற குழுக்களிலும். பல நாடுகளிலிருந்து வாசகர்கள் இருப்பதால், பொது நலம் கருதி. இங்கிலாந்திலிருந்து உடனக்குடன் முன் அனுமதி வாங்க இயலவில்லை, மன்னிப்பீர்களாக.
1970களில் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுடன் தொடர்பு; நீடித்து வருகிறது. சமூகப்பணி சரி. தன்னலத்தை முற்றும் துறந்த முனிவர், டாக்டர் சாந்தா. அந்த நற்பண்பை எல்லா ஊழியர்களிடமும் அவர் வித்திட்டது, அரும்பணி. அவரது நிர்வாகம் போற்றத்தக்கது. மருத்துவப்பணி கடல் போல் அளவற்றது. பதவிகளும், விருதுகளும் அவரால் மேன்மை பெருகின்றன. விரைவில்,‘பாரத ரத்னாவுக்கு’ அந்த பெருமிதம் கிடைக்கட்டும்.
இன்னம்பூரான்
ஜூன் 8, 2013
http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com


காப்புரிமை: நன்றி: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=33309
_____________________________________________________Image Credit:http://www.cifwia.org/aboutus/history/laidstone.jpg
 'நானே நர்ஸ்... நானே டாக்டர்!'
அசத்தும் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்

'அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்’ - பிரபலமான இந்திய மருத்துவமனை களில் ஒன்று. இந்த மருத்துவமனை ஜூன் 3-ம் தேதி 60-வது ஆண்டை நிறைவுசெய் திருக்கிறது.
 இந்த மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா. மாநில அரசின் ஒளவையார் விருது முதல் மத்திய அரசின் பத்மபூஷன் விருது வரை பெற்றவர். இந்தப் புற்றுநோய் மருத்துவ மனையின் சிறப்புக்கு ஆதாரமாக இருக்கும் அவர், இதன் வரலாற்றை விவரிக்கிறார். ''புற்றுநோய்க்காக பிரத்யேகமாகத் தமிழ்நாட்டில் தனி மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கை வைத்தவர் டாக்டர் முத்து லட்சுமி அம்மா. அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும்விதமாக இந்த கேன்சர் இன்ஸ்டிட்யூட் 1954-ம் ஆண்டு உதயமானது.
pastedGraphic.pdf
புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க தமிழ்நாட்டில் தரமான மருத்துவமனை இல்லாத காலகட்டம் அது. பணம் இல்லாத காரணத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற சேவை மனப்பான்மையோடு இது தொடங்கப்பட்டது. அப்போதுதான் நானும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் அடையாறில் 12 படுக்கைகள்கொண்ட குடிசையில் இந்த மருத்துவமனையைத் தொடங்கினோம். நான் காலையில் பொது மருத்துவமனையில் பெண்கள் குழந்தைகள் பிரிவில் நோயாளிகளைப் பார்த்து விட்டு மதியம் இங்கு வருவேன். அதுவரை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பார்த்துக்கொள்வார். உதவி செய்வதற்கு நர்ஸ்கூட இல்லை. நானே நர்ஸ்... நானே டாக்டர். அறுவைசிகிச்சைகளை நாங்கள் இருவருமே இருக்கும் நேரமான மாலை நேரத்தில்தான் வைத்துக்கொள்வோம். சில முக்கியமான அறுவைசிகிச்சைகளின்போது வெளியில் இருந்து மருத்துவர்களை உதவிக்கு வரச் சொல்லி கெஞ்சுவோம். அவர்களாலும் மாலை நேரத்தில்தான் வர முடியும். அந்த மருத்துவர்களுக்கு பணம்கூட கொடுக்க முடியாத சூழ்நிலை. 7 மணிக்கு அறுவைசிகிச்சை தொடங்கினால், முடிவதற்கு இரவு 11 மணி ஆகிவிடும். நான் நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதற்காக இரவு அவர்கள்கூடவே இந்தக் குடிசையில் தங்கிவிடுவேன்.
1956-ல் கனடாவில் தயாரித்த கேன்சர் சிகிச்சைக் கான 'கோபால்ட் 60’ என்ற கருவியை இந்த மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கினர். ஆசியாவிலேயே முதன் முறையாக அந்தக் கருவியைப் பயன்படுத்த ஆரம்பித்தது நாங்கள்தான். அதன் பிறகுதான் இந்தியாவே எங்கள் பக்கம் திரும்பிப் பார்த்தது. குடிசையில் மருத்துவம் பார்க்கும் இடத்தில் இவ்வளவு விலை உயர்ந்த கருவி எப்படி வந்தது என்று எல்லோருக்கும் ஆச்சர்யம். மத்திய அரசில் இருந்து அடுத்த நாளே ஒரு குழு வந்து இங்கு ஆய்வு நடத்திய பின்னர்தான் மக்கள் சேவைக்காக இப்படி ஓர் மருத்துவமனை இயங்குகிறது என அனைவருக்கும் தெரியவந்தது. அரசாங்கமும் உதவி செய்ய ஆரம்பித்தது.
pastedGraphic_1.pdf
இங்கு கேன்சர் சிகிச்சை பெறுபவர்களிடம் அவர்களின் வசதிக்கு ஏற்பத்தான் கட்டணம் வாங்குகிறோம். கேன்சரால் பாதிக்கப்பட்ட ஓர் ஏழையிடம் 'உங்கள் சிகிச்சைக்கு இரண்டு லட்சம் ரூபாய் கட்டுங்க’ என்றால், அவரால் எப்படிக் கட்ட முடியும்? இந்த மருத்துவமனையின் நோக்கமே, ஏழை மக்களுக்குச் சிறந்த சிகிச்சை தர வேண்டும் என்பதுதான்.
பெரியவர்களுக்கு சிகிச்சையளிக்கும் அதே இடத்தில் குழந்தைகளை வைக்க வேண்டாம் என, அவர்களுக்காகத் தனியாக ஒரு பிளாக் தொடங்கினோம். கேன்சருக்காகப் பயன்படுத்தும் மருந்துகள் விலை அதிகமானவை. அவற்றுக்கு 1960 காலகட்டத்தில் அதிக வரி விதித்திருந்தனர். அப்போது நிதி அமைச்சராக இருந்த எஸ்.பி.சவான் சென்னை வந்து இருந்தார். அவரை இங்கு வரக் கேட்டு அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி, இங்கு சிகிச்சை பெற்றுவந்த எல்லாக் குழந்தைகளையும் வரிசையாக நிற்கவைத்து 'இந்தக் குழந்தைகளின் உயிரைக் காக்கும் மருந்துக்கு வரி வேண்டுமா? ரத்துசெய்யுங்கள்’ என்று விண்ணப்பம் வைத்தோம். உடனே, இந்தியா முழுவதும் கேன்சருக்கான மருந்துகளுக்கு வரியை நீக்கினார். அந்த மகத்தான மாற்றம் நடந்த இடம் இதுதான். இன்று மருத்துவமனையோடு ஆராய்ச்சி மையமும் சிறப்பாக நடக்கிறது.
இவ்வளவும் எங்களால் செய்ய முடிவதற்குக் காரணம் ஸ்பான்சர்களும் அரசாங்க உதவியும்தான். இங்கு வேலை செய்யும் டாக்டர் களுக்கு பெரிய சம்பளம் கொடுக்க முடிவதில்லை. டாக்டர்களும் ஊழியர்களும் சேவையாக நினைப்பதால்தான், இவ்வளவு தரமான சிகிச்சை அளிக்க முடிகிறது'' என்றார்.
அதற்குச் சாட்சியாக அவருடன் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் டாக்டர்கள் வசந்தன், லட்சுமணன், செல்வ லட்சுமி, சுவாமி நாதன், சாகர் ஆகியோர் அங்கே  அக்கறையாகப் பணியாற்றுவதைப் பார்க்க முடிந்தது.
சேவை தொடரட்டும்.
- நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: பா.கார்த்திக்
________________________________________________________________________________